Home தேசிய national tamil ஒரே சமயத்தில் இரு ஆண்களால் கர்ப்பமான பெண் – 2 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடித்தது எப்படி?

ஒரே சமயத்தில் இரு ஆண்களால் கர்ப்பமான பெண் – 2 ஆண்டுக்கு பிறகு கண்டுபிடித்தது எப்படி?

13
0

SOURCE :- BBC NEWS

கர்ப்பிணி பெண்

பட மூலாதாரம், David Zorrakino/Europa Press via Getty Images

தன்னுடைய இரண்டு வயதான இரட்டை ஆண் குழந்தைகளின் தந்தை யார் என்பதை உறுதி செய்வதற்காக, 2018-ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள மக்கள்தொகை மரபியல் மற்றும் அடையாள ஆய்வகத்துக்கு சென்றார்.

அந்த ஆய்வகம் அப்பெண்ணுக்கு அதற்கான வழக்கமான பரிசோதனையை செய்தது, பின்னர் மீண்டும் அச்சோதனையை மேற்கொண்டது.

அதன் முடிவு மிகவும் ஆச்சர்யமாக இருந்ததால், அதை முற்றிலும் உறுதிப்படுத்திக்கொள்ள அவர்கள் விரும்பினர். அந்த இரட்டை குழந்தைகளுக்கு ஒரே தாய், ஆனால் இருவேறு தந்தைகள்.

இது மிகவும் அரிதான ஹெட்டிரோபெட்டர்னல் சூப்பர்ஃபெக்குண்டேஷன் (heteropaternal superfecundation – இரட்டைக் குழந்தைகள் ஒரே தாய்க்குப் பிறந்தாலும், வெவ்வேறு தந்தையருக்குப் பிறப்பது) எனப்படுகிறது. உலகம் முழுவதிலும் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் இத்தகைய அரிதான கருவுறுதல் நிகழ்வுகள் சுமார் 20 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

அப்பல்கலைக்கழகத்தில் உள்ள நிபுணர்கள் இது கோட்பாட்டளவில் சாத்தியமானது என அறிந்திருந்தாலும், இதுபோன்ற ஒன்றை அவர்கள் நேரடியாக அறிந்ததில்லை. இது உடனடியாக அவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டியது.

பரிசோதனைக்காக அமர்ந்திருக்கும் கர்ப்பிணி பெண்

பட மூலாதாரம், Drs Producoes via Getty Images

எப்படி கண்டறிந்தனர்?

அக்குழந்தைகளின் தந்தை யார் என்பதை பரிசோதிக்க, கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள மரபியல் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மைக்ரோசாட்டிலைட் மார்க்கர்ஸ் (microsatellite markers) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.

எளிய வார்த்தைகளில் சொல்வதானால் குழந்தை, தாய் மற்றும் தந்தையாக கருதப்படுபவர் ஆகியோரின் டிஎன்ஏவின் சிறுபகுதிகளை ஆய்வு செய்து ஒப்பிடுவதாகும்.

“ஒவ்வொருவரிடமிருந்தும் நாங்கள் டிஎன்ஏவை எடுத்து, மைக்ரோசாட்டிலைட்டுகள் எனப்படும் 15 முதல் 22 பகுதிகளை ஆய்வு செய்து, அவற்றை ஒவ்வொருவரின் டிஎன்ஏவுடனும் ஒப்பிடுவோம்,” என, அந்த ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் வில்லியம் உசாக்வென் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

டிஎன்ஏவை சக்திவாய்ந்த நுண்ணோக்கியின் கீழ் வைப்பதைவிட, இந்த செயல்முறை மிகவும் சிக்கலானதாகும்.

விரலில் இருந்து ரத்த மாதிரிகளை பெற்ற பின்னர், மற்ற கூறுகளிலிருந்து சிறு அளவிலான டிஎன்ஏ பகுதியை பிரிக்க வேதியியல் செயல்முறையை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.

எலெக்ட்ரோஃபோரெசிஸ் செயல்முறை

பட மூலாதாரம், Getty Images

அதன்பின், அவர்கள் அந்த டிஎன்ஏவை பெரிதுபடுத்துவதற்கான சிறப்பு உபகரணம் ஒன்றில் வைக்கின்றனர்.

இதன் விளைவாகக் கிடைக்கும் திரவமானது, பகுப்பாய்வு செய்யப்படும் 15 முதல் 22 மைக்ரோசாட்டிலைட் பகுதிகளை குறிப்பதற்காக, ஒளிரும் சாயங்களுடன் கலக்கப்படுகிறது.

அது பின்னர், ஒவ்வொரு மாதிரியிலும் உள்ள மைக்ரோசாட்டிலைட்டுகளை ஆராய்வதற்கான மற்றொரு இயந்திரம் வாயிலாக கடந்து சென்று, அவற்றை ஒரு எண் வரிசையாக மாற்றுகிறது. இந்த செயல்முறை மின்பகுப்பு (எலெக்ட்ரோஃபோரெசிஸ்) எனப்படுகிறது.

இறுதியில் அந்த எண் வரிசையை பயன்படுத்தி, பரிசோதிக்கப்பட்ட ஆண் அக்குழந்தையின் தந்தையாக இருப்பதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிகின்றனர்.

குழந்தையின் மரபணு விவரங்கள், தாயுடன் பாதியளவும் தந்தையாக கருதப்படுபவருடன் பாதியளவும் பொருந்தும்போது, தந்தை அவர்தான் என்பது உறுதி செய்யப்படும்.

அசாதாரணமான முடிவு

கொலம்பியாவை சேர்ந்த அந்த இரட்டைக் குழந்தைகளை பொறுத்தவரை அக்குழந்தைகள், தாய் மற்றும் தந்தையாக கருதப்படுபவரின் டிஎன்ஏக்களின் 17 மைக்ரோசாட்டிலைட்டுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

அதில், தந்தையாக கருதப்படுபவரின் டிஎன்ஏ ஒரு குழந்தையுடன் பொருந்திய நிலையில், மற்றொரு குழந்தையுடன் பொருந்தாத அசாதாரண முடிவு கிடைத்தது.

“நான் 26 ஆண்டுகளாக இந்த ஆய்வகத்தின் இயக்குநராக உள்ளேன். இப்படியொரு அரிய உயிரியல் நிகழ்வை முதன்முறையாக பார்க்கிறேன் – (இங்கு) இதுவரை நிகழ்ந்த ஒரேயொரு நிகழ்வு இது,” என்கிறார் உசாக்வென்.

“இப்படி நடப்பது குறித்து மற்ற பதிவுகளின் வாயிலாக நாங்கள் அறிந்துள்ளோம், ஆனால் உலகளவில் மிகவும் குறைவாகவே அப்படி நடந்துள்ளது,” என மரபியல் நிபுணரும் கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தின் மரபியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரியா கசஸ் கூறுகிறார்.

தவறுகள் அல்லது மாதிரிகள் கலப்பு போன்ற எந்தவொரு குறைகளும் இதில் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, நெறிமுறைகளின்படி அக்குழு இந்த பரிசோதனையை ஆரம்பத்திலிருந்து மீண்டும் செய்துள்ளது. அப்போதும், முடிவு அதேபோன்று வந்துள்ளது.

குழந்தைகள்

பட மூலாதாரம், andipantz via Getty Images

ஏன் இது அரிதானது?

2014-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பால்டிமோர் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இத்தகைய 39,000 பரிசோதனைகள் குறித்த தரவுகளில், மூன்று மட்டுமே ஹெட்டிரோபெட்டர்னல் சூப்பர்ஃபெக்குண்டேஷன் என பதிவாகியுள்ளது.

இது ஏன் அரிதானது என்பதை உசாக்வென் விளக்குகிறார்.

“முதலில், ஒரு பெண்ணுக்கு இரண்டு துணைவர்கள் இருக்க வேண்டும். இரண்டாவது, அந்த இரண்டு ஆண்களிடமும் மிக குறுகிய கால இடைவெளியில் அப்பெண் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். மேலும், பாலிஓவுலேஷன் நடைபெற வேண்டும்,” என்கிறார் அவர்.

பாலிஓவுலேஷன் என்பது, ஒரு மாதவிடாய் சுழற்சியில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட கருமுட்டைகள் வெளியேறுவது.

“இறுதியில் அந்த இரு கருமுட்டைகளும் கருவுற வேண்டும்,” என்கிறார் உசாக்வென்.

“இத்தனை அரிதான விஷயங்கள் ஒன்றாக நடந்திருக்கின்றன”

வெவ்வேறு தந்தைகள் மூலம் பிறந்த இரட்டைக் குழந்தைகள், ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள் என்பதும் முக்கியமானது, ஏனெனில் ஒரே கருமுட்டை மற்றும் விந்தணுவின் மூலம் மட்டுமே அத்தகைய இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றனர்.

இரு ஆண்களுடன் பெண் ஒருவர் நிற்கிறார்

பட மூலாதாரம், Getty Images

தனிப்பட்ட வாழ்க்கை

பல உயிரியல் நிகழ்வுகளில் பெண் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை வெளியிட்டு, அதில் ஒன்று கருவுற்றால், மற்றொரு கருமுட்டை அல்லது கருமுட்டைகள் விரைவாக முதிர்ச்சியடைந்து, செயலிழந்துவிடும்.

அதனால் தான் சூப்பர்ஃபெக்குண்டேஷன் அரிதானதாக உள்ளது. இதில், கருவுறாத முட்டை செயலிழப்பதற்கு முன்பாகவே கருத்தரித்தல் நடைபெற வேண்டும்.

அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தின்படி, வெளியேறிய பிறகு ஒரு கருமுட்டை 24 மணிநேரத்துக்கும் குறைவாகவே உயிருடன் இருக்கிறது.

எனினும், அந்த கருமுட்டைகள் ஒரே சமயத்தில் வெளியேறியிருக்க வேண்டிய அவசியமில்லை என, ஆண்ட்ரியா கசஸ் விளக்குகிறார்.

“சில சமயங்களில் கருப்பையிலிருந்து ஒரு கருமுட்டை வெளியான இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகே மற்றொரு கருமுட்டை வெளியாகிறது,” என்கிறார் அவர்.

இதனால், வெவ்வேறு நேரங்களில் கருத்தரிப்பு நிகழ்வதற்கான சாத்தியக்கூறு அதிகரிக்கிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.

மேலும், பெரும்பாலானவர்கள் குழந்தைகளின் தந்தை யார் என்பதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள மாட்டார்கள் என்பதுவும் மிக குறைவாகவே இத்தகைய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம்.

மரபியல் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், “தற்போது மூலக்கூறு பரிசோதனை முறைகள் அதிகமாக கிடைப்பதாலும் இத்தகைய பரிசோதனைகள் அதிகளவில் பிரபலமடைந்து வருவதாலும்” இந்த அரிய நிகழ்வுகள் எதிர்காலத்தில் அரிதானதாக இல்லாமல் இருக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.

இத்தகைய அரிதான கர்ப்பம் ஏற்படுவதற்கான சூழல்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆர்வம் கொண்டிருந்தாலும், இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேட்பதை ஆராய்ச்சி நெறிமுறைகள் அவர்களை தடுக்கின்றன.

“அதிகபட்ச நேர்மை மற்றும் தனியுரிமையின் மீதான மரியாதையுடனேயே இத்தகைய பரிசோதனைகள் எப்போதும் மேற்கொள்ளப்படுகின்றன,” என உசாக்வென் விளக்குகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU