Home தேசிய national tamil இரான்: ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி ஏன் பொதுவெளியில் காணப்படுவதில்லை?

இரான்: ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி ஏன் பொதுவெளியில் காணப்படுவதில்லை?

7
0

SOURCE :- BBC NEWS

ஜெனரல் அகமது வாஹிதி தற்போது ஐஆர்ஜிசியின் உயர்மட்டத் தளபதியாக உள்ளார்.

பட மூலாதாரம், FARS

இரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அகமது வாஹிதி, மார்ச் தொடக்கத்தில் இருந்தே ஊடகங்களில் தென்படவில்லை.

மார்ச் மாதத்தில்தான் அவர் ஐஆர்ஜிசியின் இந்தப் உயரிய பதவியில் நியமிக்கப்பட்ட செய்தி வெளியானது.

அவர் கடைசியாக பிப்ரவரி 11 அன்று பொதுவெளியில் காணப்பட்டார். அப்போது தெற்கு நகரமான ஷிராஸில் 1979 புரட்சியின் 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த பேரணியில், இரானுக்கு எதிராக எந்தவொரு தவறான கணக்கீடுகளையும் செய்ய வேண்டாம் என்று ‘எதிரிக்கு’ அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மார்ச் 1 அன்று சில செய்தி இணையதளங்கள், வாஹிதி ஐஆர்ஜிசியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டன.

இருப்பினும், இந்த இணையதளங்கள் முக்கியமான அரசு நிறுவனங்களோ அல்லது ஐஆர்ஜிசி சார்ந்த அமைப்புகளோ அல்ல.

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் மற்றும் பல மூத்த தளபதிகள் கொல்லப்பட்ட ஒரு நாளைக்குப் பிறகு இந்த செய்திவெளியானது.

அந்த செய்தியின்படி, நியமனத்திற்கு முன்பு வாஹிதி ஐஆர்ஜிசியின் துணைத் தலைமைத் தளபதியாக இருந்தார்.

இதுவரை தெரிந்தது என்ன?

இரான் அரசியலமைப்பின் படி, மூத்த ராணுவ அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் அதி உயர் தலைவரிடம் உள்ளது.

மார்ச் 8 அன்று, ஆயத்துல்லா அலி காமனெயி-யின் வாரிசாக மொஜ்தபா காமனெயி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது உண்மையாக இருந்தால், வாஹிதியின் நியமனம் அதி உயர் தலைவரின் மறைவுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இடைக்கால தலைமை கவுன்சிலால் செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஏற்பாட்டின் கீழ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மொஜ்தபா காமனெயி கூட நியமனத்திற்குப் பிறகு பொதுவெளியில் காணப்படவில்லை.

இருப்பினும், அவர் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர் தான் வாஹிதியை நியமித்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வாஹிதியின் பெயரில் கடைசி செய்தி மார்ச் 19 அன்று வெளியானது. அதில் தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் பாசிஜ் (Basij) அமைப்பின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் குலாம்ரேசா சுலைமானி கொல்லப்பட்டதற்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

அந்த நேரத்தில் இரானிய ஊடகங்கள் அவரை ஐஆர்ஜிசியின் தலைமைத் தளபதி என்று குறிப்பிட்டன.

ஏப்ரல் 22 அன்று, ஐஆர்ஜிசி-யுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், தற்காலிக உளவுத்துறை அமைச்சர் ‘பாதுகாப்புப் படை தினத்தில்’ (Guard Corps Day) வாஹிதிக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்தி வெளியிட்டது.

இந்த அறிக்கையில்அவர் தற்காலிக தலைமைத் தளபதி என்று குறிப்பிடப்பட்டார். இருப்பினும், உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதீப்பின் இடத்தை எந்த அதிகாரி பிடித்தார் என்று கூறப்படவில்லை.

ஐஆர்ஜிசியின் பிற மூத்த அதிகாரிகளுடன் ஒப்பிடும்போது வாஹிதி காணப்படாமல் இருப்பது வித்தியாசமாகத் தெரிகிறது.

பெசெஷ்கியன் மற்றும் காலிபாஃபுடன் கருத்து வேறுபாடு என செய்திகள்

இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் பகர் காலிபாஃபுடன் வாஹிதிக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்பட்டது.

பட மூலாதாரம், Iranian Parliament Speaker Office/ Handout/Anadolu via Getty Images

விண்வெளிப் படைத் தலைவர் மஜீத் மௌசவி தொடர்ந்து பேரணிகளில் காணப்படுகிறார் மற்றும் சமூக ஊடகங்களிலும் தீவிரமாக உள்ளார்.

ஏப்ரல் 19 அன்று வெளியான வீடியோவில், அவர் ஒரு நிலத்தடி ஏவுகணை வசதியைப் பார்வையிடுவதைக் காண முடிந்தது.

ஏப்ரல் 23 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானில் உள்நாட்டு மோதல்கள் இருப்பதாகக் கூறியபோது, இரானிய அதிகாரிகளும் ராணுவத் தலைவர்களும் ஒற்றுமைச் செய்தியை வெளியிட்டனர்.

இருப்பினும், வாஹிதி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

1994-ல் அர்ஜென்டினாவில் யூத சமூக மையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் வாஹிதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த எதிர்க்கட்சி சேனலான ‘இரான் இன்டர்நேஷனல்’ அவரது நியமனத்திற்குப் பிறகு பல தகவல்களைக் தெரிவித்துள்ளது.

அவற்றில் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் போர்க்கால முடிவுகள் மற்றும் பொருளாதார மேலாண்மை குறித்து அவருக்கு இருந்த கருத்து வேறுபாடுகளும் அடங்கும்.

மேலும், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரின் செல்வாக்கைக் குறைக்க வாஹிதி முயன்றதாகவும் கூறப்படுகிறது.

ஏப்ரல் 24 அன்று சிஎன்என் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க ராணுவத் திட்டமிடுபவர்கள் இரானிய ராணுவத் தலைவர்களைக் குறிவைப்பதற்கான பட்டியலை தயார் செய்துள்ளதாகத் தெரிவித்தது. இந்தப் பட்டியலில் வாஹிதியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தி கூறியுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU