Home தேசிய national tamil “என்ன நடந்தது என்றே தெரியவில்லை” – டெல்லி கேபிடல்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்.சி.பி.

“என்ன நடந்தது என்றே தெரியவில்லை” – டெல்லி கேபிடல்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆர்.சி.பி.

11
0

SOURCE :- BBC NEWS

ஆர்சிபி அபார பந்துவீச்சு - 75 ரன்களுக்கு டெல்லி கேபிட்டல்ஸ் ஆல் அவுட்

பட மூலாதாரம், ANI

27 ஏப்ரல் 2026, 13:50 GMT

புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 39வது போட்டியில் இன்று (ஏப்ரல் 27) டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி.

இந்த சீசன் இவ்விரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது. பெங்களூருவில் நடந்த அந்தப் போட்டியில் 1 பந்து மீதமிருக்கும்போது 175 ரன்களை சேஸ் செய்தது கேபிட்டல்ஸ்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. டெல்லி அணிக்காக கைல் ஜேமீசன் மற்றும் சஹில் பரக் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். துஷ்மந்தா சமீராவும் அந்த அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது தலையில் காயமடைந்த லுங்கி எங்கிடி இந்தப் போட்டியில் விளையாடவில்லை.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ், ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 75 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆர்சிபி பௌலர்கள் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி 6.3 ஓவர்களிலேயே இலக்கை சேஸ் செய்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பவர்பிளேவிலேயே பதுங்கிய கேபிட்டல்ஸ்

3.3 ஓவர்கள் பந்துவீசிய ஜாஷ் ஹேசில்வுட் 12 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

பட மூலாதாரம், ANI

முந்தைய போட்டியில், இதே டெல்லி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து 264 ரன்கள் எடுத்திருந்தது கேபிட்டல்ஸ். அதை பஞ்சாப் கிங்ஸ் சேஸ் செய்திருந்தது. அதனால், இந்தப் போட்டியிலும் ரன் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ அதற்கு நேர்மாறானது.

டெல்லி அணிக்கு ஓப்பனராகக் களமிறங்கிய சஹில் பரக்கை ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே போல்ட் ஆக்கி வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார். கடந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல், ஹேசில்வுட் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார் சமீர் ரிஸ்வி. 8 பந்துகளிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது கேபிட்டல்ஸ்.

மூன்றாவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் முதல் பந்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸையும், நான்காவது பந்தில் அக்‌ஷர் பட்டேலையும் வெளியேற்றினார். 2.4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது கேபிட்டல்ஸ். அதன் காரணமாக, 16 பந்துகள் மட்டுமே முடிந்திருந்த நிலையில் இம்பேக்ட் வீரரைக் களமிறக்கியது அந்த அணி. சஹில் பராக் பதிலாக அபிஷேக் பொரெல் களமிறக்கப்பட்டார்.

அடுத்த 6 பந்துகள் விக்கெட்டுகள் வீழாமல் இருந்த நிலையில், நான்காவது ஓவரின் 5வது பந்தில் ஒரு அதிவேக பவுன்சர் வீசி நித்திஷ் ராணாவை வெளியேற்றினார் ஹேசில்வுட். அதன்பிறகு ஜோடி சேர்ந்த மில்லர், பொரெல் இருவரும் கொஞ்ச நேரம் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அதனால் பவர்பிளேவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து 13 ரன்கள் எடுத்தது டெல்லி கேபிட்டல்ஸ். 19 வருட ஐபிஎல் வரலாற்றில் இதுதான் குறைந்தபட்ச பவர்பிளே ஸ்கோர்.

பவர்பிளேவுக்குப் பிறகு ரஷிக் தார் மற்றும் ரொமாரியோ ஷெபர்ட் ஆகியோர் வீசிய 3 ஓவர்களில் 30 ரன்கள் கிடைத்தது. ஆனால், 9வது ஓவரின் கடைசிப் பந்தில் மில்லர் விக்கெட்டை வீழ்த்திய ரஷிக் தார்.

அடுத்து வந்த கைல் ஜேமிசனை (12 ரன்கள்) குருனால் பாண்டியாவும், குல்தீப் யாதவை (3 ரன்கள்) சுயாஷ் ஷர்மாவும் வீழ்த்தினார்கள். இந்த இரு விக்கெட்டுகள் மட்டும்தான் ஸ்பின்னர்களுக்கு கிடைத்தது. கடைசி வரை போராடிய அபிஷேக் பொரெல் 30 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.

அதனால் 16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது டெல்லி கேபிட்டல்ஸ். ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

3 ஓவர்கள் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் புவனேஷ்வர் குமார்

பட மூலாதாரம், ANI

ராயல் சேலஞ்சர்ஸ் எளிய வெற்றி

அடுத்து விளையாடிய ஆர்சிபி அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தார் ஜேக்கப் பெதெல். ஜேமீசன் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய பெதெல், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசினார். ஆனால், இன்னொரு பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து ஜேமீசன் வீசிய அந்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார் அவர். அவர் தூக்கி அடித்த ஷாட்டை, மிட் ஆன் திசையில் இருந்து பின்னால் பவுண்டரி எல்லை வரை ஓடிச் சென்று, எல்லைக்கோட்டை மிதிக்காமல் ‘பேலன்ஸ்’ செய்து அதை கேட்சாக்கினார் நடராஜன்.

அடுத்து களமிறங்கிய படிக்கல், வழக்கம்போல் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் அடித்தார் அவர். சமீரா வீசிய அந்த ஓவரில் இன்னொரு பவுண்டரியும் அடித்தார் படிக்கல். ஜேமீசன் வீசிய ஆட்டத்தின் 5வது ஓவரில் தன் அதிரடியை அவர் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். அந்த ஓவரில் 2 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசினார் அவர். அதனால், 4.3 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்தது ஆர்சிபி.

ஒருபக்கம் அதிரடியாக பவுண்டரிகள் வந்துகொண்டிருக்க, விராட் கோலி சற்று நிதானமாகவே தன் இன்னிங்ஸைத் தொடங்கினார். இந்தப் போட்டியில் 11 ரன்கள் எடுத்திருந்தபோது 9000 ஐபிஎல் ரன்களைக் கடந்தார் கோலி. 9000 ஐபிஎல் ரன்களைக் கடக்கும் முதல் வீரர் என்ற சாதனையும் படைத்தார் அவர்.

முதல் 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி, அடுத்த 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசி ஆட்டத்தை முடித்துவைத்தார். 6.3 ஓவர்களிலேயே 77 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி. கோலி 23 ரன்களுடனும், படிக்கல் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

8 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஆர்சிபி அணிக்கு இது 6வது வெற்றி. 12 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி 2வது இடத்தில் நீடிக்கிறது. ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்திருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இது ஒட்டுமொத்தமாக 5வது தோல்வி.

“என்ன நடந்தது என்றே தெரியவில்லை”

இந்தப் போட்டியின் தோல்விக்குப் பிறகு பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் அக்‌ஷர் பட்டேல், “என்ன நடந்தது என்று எனக்கே தெரியவில்லை. அதனால்தான் கிரிக்கெட்டில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த போட்டியைத் தாண்டி நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். இன்றைய பார்வையில் இது பாதிப்பை ஏற்படுத்தியது என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் திரும்பிப் பார்த்தால், அந்த கேட்சுகளை பிடித்திருந்தாலோ அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த ஒரு ரன்னை எடுத்திருந்தாலோ, ‘மொமன்டம்’ நம்மிடம் இருந்திருக்கும்.

இந்த விளையாட்டில் ‘இப்படி இருந்திருந்தால்’ அல்லது ‘ஆனால்’ போன்ற கேள்விகளுக்கு இடமில்லை. நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும், இன்று நமக்கு ஒரு மோசமான நாள், கடந்த 5-6 போட்டிகளில் இருந்த சாதகமான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆர்சிப் பந்துவீச்சைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை, அவர்கள் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள், எல்லா மைதானங்களிலும் பந்தை ஸ்விங் செய்யக்கூடியவர்கள். ஆனால் எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் அல்லது முன்வரிசை வீரர்கள் அவர்களை எதிர்கொண்டு ஆடியிருந்தால், முடிவு வேறாக இருந்திருக்கலாம்.” என்று கூடினார்.

டாஸில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், “இந்த மைதானம் அதிக ரன்கள் குவிக்கக்கூடிய ஒரு இடம். இதில் பெரிய வித்தியாசம் ஏதும் இருக்காது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர்களை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிப்போம். வெவ்வேறு போட்டிகளில் வெவ்வேறு வீரர்கள் சிறப்பாக செயல்படுவது தான் மிக முக்கியமான விஷயம். நாங்கள் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளோம், அதே உத்வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.” என்று கூறினார்.

டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் அக்‌ஷர் பட்டேல், “டாஸ் வென்றிருந்தால் நானும் பந்துவீச்சைத்தான் தேர்ந்தெடுத்திருப்பேன். மைதானத்தின் எல்லைகள் சிறியவை, ஆடுகளமும் நேரம் செல்லச் செல்ல பேட்டிங் செய்ய சாதகமாக மாறும். அதனால் நாங்களும் இலக்கைத் துரத்தவே விரும்பியிருப்போம். ஐபிஎல் தொடரில் 264 ரன்கள் எடுத்தும் தோல்வி அடைய நேரிடுகிறது, ஆனால் இது ஒரு நீண்ட தொடர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும். நீங்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கள் அணியின் மிகச்சிறந்த ஃபீல்டர்கள் கூட கேட்சுகளைத் தவறவிடுகிறார்கள். அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லை என்றாலும், அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது.” என்று கூறினார்.

டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது

பட மூலாதாரம், ANI

பிளேயிங் லெவனில் யார்?

டெல்லி கேபிட்டல்ஸ்

இந்தப் போட்டிக்கான கேபிட்டல்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யபப்ட்டிருக்கின்றன. கடந்த போட்டியில் காயமடைந்த எங்கிடி, முகேஷ் குமார் மற்றும் பதும் நிசன்கா ஆகியோருக்குப் பதிலாக ஜேமீசன், சமீரா மற்றும் சஹில் பரக் ஆகியோர் சேர்க்கபப்ட்டிருக்கின்றனர்.

18 வயதான சஹில் பராக் மஹாராஷ்டிராவை சேர்ந்த இடது கை ஓப்பனர். அவருக்கு இதுதான் முதல் ஐபிஎல் போட்டி. அவர் இதுவரை மொத்தமே 2 டி20 போட்டிகளில் தான் விளையாடியிருக்கிறார்.

பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சஹில் பரக், நித்திஷ் ராணா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அக்‌ஷர் பட்டேல் (கேப்டன்), குல்தீப் யாதவ், டி.நடராஜன், துஷ்மன்தா சமீரா, கைல் ஜேமீசன்

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், ஆகிப் நபி, திரிபுரணா விஜய், அபிஷேக் பொரெல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்தப் போட்டிக்கான ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பிளேயிங் லெவன்: விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் (கேப்டன்), டிம் டேவிட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, ஜாஷ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், ராசிக் தார், சுயாஷ் ஷர்மா.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர், மங்கேஷ் யாதவ், ஜேக்கப் பெதெல், ஜோர்டான் காக்ஸ், விக்கி ஓஸ்ட்வால்.

இது , பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU