Home தேசிய national tamil டெல்லியில் விட்டதை பெங்களூருவில் பிடித்த மில்லர்; ஆர்சிபி-யை வீழ்த்தியது கேபிட்டல்ஸ்

டெல்லியில் விட்டதை பெங்களூருவில் பிடித்த மில்லர்; ஆர்சிபி-யை வீழ்த்தியது கேபிட்டல்ஸ்

11
0

SOURCE :- BBC NEWS

டெல்லியில் விட்டதை பெங்களூருவில் பிடித்த மில்லர். ஆர்சிபி-யை வீழ்த்தியது கேபிட்டல்ஸ்

பட மூலாதாரம், ANI

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் தங்களின் 100வது ஐபிஎல் போட்டியை விளையாடிய ஆர்சிபி, அதை வெற்றிகரமாக மாற்றத் தவறியது. அந்த அணி சின்னசாமியில் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடியதும் இதே ஏப்ரல் 18 (2008ம் ஆண்டு) தான். அந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் தோற்றிருந்தது.

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து 2 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் டெல்லி பேட்டர் டேவிட் மில்லர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியை வென்று கொடுக்ககூடிய வாய்ப்பு இருந்தும், அதைத் தவறவிட்டிருந்தார் மில்லர். அவர் ஒரு ரன் ஓட நிராகரித்தது அப்போது பெரும் விவாதப்பொருளானது. அந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருந்த மில்லர், இந்தப் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் தன் திறமையைக் காட்டி தன் அணிக்கு 2 புள்ளிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை சேஸ் செய்த சன்ரைசர்ஸ், ஒரு பந்து மீதம் வைத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மிடில் ஓவர்களில் தடுமாறிய ஆர்சிபி

38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார் ஃபில் சால்ட்

பட மூலாதாரம், ANI

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதனால் ஆர்சிபி பேட்டர்கள் தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடித்தாலும், தடாலடியான ரன்ரேட்டில் அவர்களால் ஆட முடியவில்லை. விராட் கோலி 19 ரன்களில் அவுட்டாக, பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்தது அந்த அணி.

தொடக்கம் சிறப்பாக இருந்தாலும், மிடி ஓவர்களில் ஆர்சிபி அணியால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. சீரான இடைவெளியில் அந்த அணி பேட்டர்கள் தொடர்ச்சியாக வெளியேறினார்கள். படிக்கல் 18 ரன்களிலும், கேப்டன் பட்டிதார் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக விளையாடி இந்த சீசனில் தன்னுடைய இரண்டாவது அரைசதத்தைப் பூர்த்தி செய்திருந்த ஃபில் சாட்ல் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஆர்சிபி அணியால் தங்கள் ரன்ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை. குறிப்பாக இந்தத் தொடரில் தொடர்ந்து தடுமாறிவரும் ஜித்தேஷ் ஷர்மா 20 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஓரளவு போராடிய டிம் டேவிட் கூட 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதனால் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி ஓவரில் வென்ற கேபிட்டல்ஸ்

ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்த ஸ்டப்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்

பட மூலாதாரம், ANI

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கோ தொடக்கமே மிகவும் கடினமாக அமைந்தது. புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் டெல்லி பேட்டர்கள் வரிசையாக வெளியேறிக்கொண்டிருந்தனர். பதும் நிசன்கா (1 ரன்), கருண் நாயர் (5 ரன்கள்), சமீர் ரிஸ்வி (2 ரன்கள்) ஆகியோரை தன் முதல் இரு ஓவர்களிலேயே வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருந்தாலும், மறுபக்கம் கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார். அவரோடு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சேர்ந்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தார். இந்த ஜோடி 7.2 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்தது. 34 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ராகுல் ஆட்டமிழந்தார்.

கடைசி 6 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. கையில் 6 விக்கெட்டுகள் இருந்ததாலும், ஸ்டப்ஸ் – அக்‌ஷர் பட்டேல் இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்ததாலும் டெல்லி அணி எளிதில் வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. ஆனால், ஆர்சிபி பௌலர்கள் மெல்ல சவால் கொடுக்கத் தொடங்கினார்கள்.

15வது ஓவர் வீசிய குருனால் பாண்டியா 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரிலும் 5 ரன்களே வந்தது. அதுமட்டுமல்லாமல், அக்‌ஷர் பட்டேல் காயம் காரணமாக வெளியேறவேண்டிய சூழலும் ஏற்பட்டது. ஹேசில்வுட் வீசிய 17வது ஓவரிலோ இன்னும் குறைவாக 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.

கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவை என்ற நிலையில், புவனேஷ்வர் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் ஸ்டப்ஸ். அந்த ஓவரில் அவர் தன் அரைசதத்தையும் நிறைவு செய்தார்.

கடைசி 2 ஓவர்களில் 25 ரன்கள் தேவை. ராசிக் தார் 19வது ஓவரில் 10 ரன்கள் மட்டுமே கொடுக்க, ஆர்சிபி வெற்றி பெறும் நிலைக்கு வந்தது.

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. ரொமாரியோ ஷெபர்ட் வீசிய அந்த ஓவரின் முதலிரு பந்துகளிலும் தலா 1 ரன்னே எடுக்கப்பட்டன. 4 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இருந்த மில்லருக்கு நெருக்கடி அதிகரித்தது. ஆனால், அடுத்த 2 பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பினார் மில்லர். ஐந்தாவது பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பி, தன் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தார்.

இதன் மூலம் இந்த சீசனில் தங்களின் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU