Home தேசிய national tamil தோல்வியே கண்டிராத ஹிட்லரின் தளபதியை இந்த பிரிட்டிஷ் ஜெனரல் சாதுர்யமாக வீழ்த்தியது எப்படி?

தோல்வியே கண்டிராத ஹிட்லரின் தளபதியை இந்த பிரிட்டிஷ் ஜெனரல் சாதுர்யமாக வீழ்த்தியது எப்படி?

35
0

SOURCE :- BBC NEWS

எல் அலமெய்ன் யுத்தம், மான்ட்கோமெரி - ரோமெல், ஹிட்லர், நாஜி ஜெர்மனி, பிரிட்டன், சர்ச்சில்

பட மூலாதாரம், Getty Images

ஃபீல்ட் மார்ஷல் பெர்னார்ட் “மான்டி” மான்ட்கோமெரி 50 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

கடந்த 1968ஆம் ஆண்டில், பிபிசியிடம் அவர் எல் அலமெய்ன் யுத்தம் மற்றும் அவரது ஜெர்மன் எதிரியான “பாலைவன நரி” என்று அழைக்கப்பட்ட எர்வின் ரோமெல் பற்றிப் பேசினார்.

“தோல்வியின் போது வீழ்த்த முடியாதவர். வெற்றியின் போது தாங்க முடியாதவர்” என வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய இந்த ஒரு கருத்து, 1942 நவம்பரில் நடந்த இரண்டாவது எல் அலமெய்ன் யுத்தத்தின் புகழ்பெற்ற வெற்றிக்கு மூளையாகச் செயல்பட்ட ஃபீல்ட் மார்ஷல் பெர்னார்ட் மான்ட்கோமெரியின் திறமையை வெளிப்படுத்தியது.

இரண்டாம் உலகப் போரின் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும் வட ஆப்பிரிக்காவில் நடந்த இந்த யுத்தம், சர்ச்சிலின் மற்றொரு புகழ்பெற்ற மேற்கோளைக் கூற காரணமாக அமைந்தது.

“இப்போது, இது முடிவல்ல. இது முடிவின் தொடக்கம்கூட அல்ல. ஆனால், ஒருவேளை இது தொடக்கத்தின் முடிவாக இருக்கலாம்” என்பதுதான் அந்தக் கூற்று.

கடந்த 1976 மார்ச் 24 அன்று தனது 88 வயதில் காலமானபோது, அலமெய்னின் லார்ட் மான்ட்கோமெரி ஒரு நீண்ட மற்றும் சில நேரங்களில் சர்ச்சைக்குரிய ஓய்வு காலத்தை அனுபவித்திருந்தார்.

பிரச்னைகளுக்கு அஞ்சாத ஒரு கறாரான மனிதரான அவர், தனது சுயசரிதையில் தனது பழைய உச்ச தளபதியும் பிற்கால அமெரிக்க அதிபருமான ஜெனரல் டுவைட் டி. ஐசன்ஹோவரை பற்றித் தனது வழக்கமான ஆணவத்துடன், “நல்ல மனிதர். ஆனால் வீரர் அல்ல” என்று நிராகரித்தார்.

ஒரு தருணத்தில் சுய விழிப்புணர்வுடன் அவர் நகைச்சுவையாகக் கூறுகையில், “உங்களுக்குத் தெரியும், எனது வேலை சண்டையிடுவதுதான். ஜெர்மானியர்களுடன் அல்லது சண்டையிட விரும்பும் வேறு யாருடனாவது சண்டையிடுவதுதான்” என்றார்.

ஜூலை 1942இல் பிரிட்டிஷ் எட்டாவது படைப் பிரிவுக்கு புதிய தலைவராக மான்ட்கோமெரி எகிப்துக்கு வந்தபோது, ​​நேச நாடுகள் பல முனைகளில் சிக்கலில் இருந்தன.

பசிபிக் பகுதியில், ஜப்பானியர்கள் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பலத்தைப் பலவீனப்படுத்தி, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரை கைப்பற்றியிருந்தனர். அட்லாண்டிக்கில், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டனை பட்டினி போட்டு அடிபணிய வைக்கப் போவதாக அச்சுறுத்தின.

ஐரோப்பாவின் பெரும்பகுதியை வென்ற ஜெர்மன் ராணுவம் எகிப்தில் தலைநகர் கெய்ரோவையும் கைப்பற்றிவிடும் நிலையில் இருந்தது.

எல் அலமெய்ன் யுத்தம், மான்ட்கோமெரி - ரோமெல், ஹிட்லர், நாஜி ஜெர்மனி, பிரிட்டன், சர்ச்சில்

பட மூலாதாரம், Getty Images

லிபியாவில் இருந்த தங்களது இத்தாலிய நட்பு நாடுகளைப் பாதுகாப்பதற்காக முந்தைய ஆண்டு வட ஆப்பிரிக்காவிற்கு வந்த அவர்கள், ஒரு பெரிய வெற்றியைக் குறிவைத்திருந்தனர்.

பிரிட்டிஷ் ராணுவத்தை வீழ்த்தி, எகிப்து மற்றும் மத்திய கிழக்கைக் கைப்பற்றவும், பிரிட்டிஷ் போருக்குத் தேவையான எரிபொருளை வழங்கும் எண்ணெய் விநியோகத்தைக் கைப்பற்றவும் அவர்கள் தங்களின் சிறந்த தளபதிகளில் ஒருவரான ஃபீல்ட் மார்ஷல் எர்வின் ரோமெலை அனுப்பியிருந்தனர்.

ஜெர்மனியின் உயரடுக்குப் படைப்பிரிவான ‘ஆப்பிரிக்கா கார்ப்ஸின்’ தளபதியாக ரோமெல் மிகவும் திறம்படச் செயல்பட்டதால், அவருக்கு ‘பாலைவன நரி’ என்று புனைப்பெயர் வழங்கப்பட்டது. 1968ஆம் ஆண்டில், பிபிசியின் கிளிஃப் மிச்சல்மோர் மான்ட்கோமெரியை நேர்காணல் செய்தார்.

தனது பரம எதிரியை முறியடிக்கத் திட்டம் தீட்டியபோது எகிப்திய பாலைவனத்தில் அவர் பயன்படுத்திய அதே கேரவனில் இந்த நேர்காணல் நடந்தது.

தான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க உதவுவதற்காக, மான்ட்கோமெரி தனது நடமாடும் தலைமையகத்தின் சுவரில் ரோமெலின் புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தார்.

“நான் அதைப் பார்த்துவிட்டு, ‘அவர் என்ன மாதிரியான நபர்? நான் இதைச் செய்தால், அவர் என்ன செய்யக்கூடும்?’ என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொள்வேன். ஏதோ ஒரு விசித்திரமான வழியில் இது உதவியது. நிறைய பேர் எனக்குப் பைத்தியம் என்று நினைத்தார்கள். ஆனால், நான் அடிக்கடி பைத்தியமாகக் கருதப்பட்டதால், இப்போது அதை ஒரு பாராட்டுதலாகவே கருதுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

மான்ட்கோமெரி வட ஆப்பிரிக்காவிற்கு வருவதற்கு முன்பு, பிரிட்டிஷார் மத்தியில் ரோமெல் ஒரு வலிமையான பிம்பத்தைக் கொண்டிருந்தார். அவரை ஒரு ராணுவ மேதையாக அவர்கள் சித்தரித்திருந்தனர்.

எல் அலமெய்ன் யுத்தம், மான்ட்கோமெரி - ரோமெல், ஹிட்லர், நாஜி ஜெர்மனி, பிரிட்டன், சர்ச்சில்

பட மூலாதாரம், Getty Images

சர்ச்சில் ஒருபடி மேலே சென்று நாடாளுமன்றத்திலேயே அவரைப் பற்றிக் குறிப்பிட்டார்.

“நமக்கு எதிராக மிகவும் துணிச்சலான மற்றும் திறமையான எதிரி இருக்கிறார். போரின் பேரழிவுகளுக்கு மத்தியில், அவர் ஒரு சிறந்த தளபதி என்பதையும் நான் கூற விரும்புகிறேன்” என்றார்.

வரலாற்றாசிரியர் முனைவர் நியால் பாரின் கூற்றுப்படி, இந்த பிம்பம் “பாலைவனத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தின் பல தோல்விகளின் தாக்கத்தைக் குறைக்க உதவியது. எல்லாவற்றுக்கும் மேலாக, பிரிட்டிஷ் குறைகளை எதிர்கொள்வதைவிட, எதிரியின் பலத்தை முன்னிலைப்படுத்தி பல தோல்விகளுக்கு விளக்கம் அளிப்பது எளிதாக இருந்தது.”

ரோமெல் பற்றி மிச்சல்மோர் கேட்டபோது, மான்ட்கோமெரி “பலர் நினைத்ததைவிட முற்றிலும் மாறுபட்டவர்” என்று கூறினார்.

அவரை ஒரு “பிரின்ஸ் ரூபர்ட் போன்ற ஓர் ஆளுமை” என்று அழைத்தார். அதாவது தலைமையகத்தில் இருந்து படைகளை வழிநடத்துவதைவிட, தனது வீரர்களுடன் முன்னணியில் இருக்க விரும்பும் ஒரு துடிப்பான தளபதி என அவரை அழைத்தார்.

ரோமெலின் வீரர்கள் “அவரை நேசித்தார்கள் மற்றும் அவர் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்தார்கள்” என்றாலும், இந்த அணுகுமுறை உயர்மட்டத் தலைமைப் பதவிக்கு ஏற்றதல்ல என்று மான்ட்கோமெரி கூறினார்.

“போரில் மிக முக்கியமான ‘நிர்வாகத்தை’ ரோமெல் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். முன்னால் நான் எதைச் சாதிக்க விரும்புகிறேனோ, அது பின்னால் இருக்கும் எனது நிர்வாகத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். இல்லையென்றால், உங்களால் அதைச் செய்ய முடியாது” என்றார் அவர்.

எல் அலமெய்ன் யுத்தம், மான்ட்கோமெரி - ரோமெல், ஹிட்லர், நாஜி ஜெர்மனி, பிரிட்டன், சர்ச்சில்

பட மூலாதாரம், Getty Images

மான்ட்கோமெரி முதன்முதலில் பாலைவனத்திற்கு வந்தபோது, அவர் ஒரு அறிமுகமில்லாத நபராக இருந்தார்.

பிரிட்டனில் இருந்து அனுப்பப்பட்ட வெளிர் நிற மக்களைக் கிண்டல் செய்ய முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் “வெள்ளை முழங்கால்கள்” என்ற சொல்லால் அவர் அழைக்கப்பட்டார்.

ஆனால், தனது துணிச்சலான தன்னம்பிக்கையால் அவர் உடனடியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

“வட ஆப்பிரிக்காவில் உள்ள அச்சு நாடுகளின் படைகளை அழிப்பதே பிரதமரிடம் இருந்து நமக்குக் கிடைத்துள்ள கட்டளை. இதைச் செய்ய முடியும், எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி இது செய்யப்படும்” எனத் தனது வீரர்களிடம் அவர் கூறினார்.

மன உறுதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய தனது பார்வையைத் தெளிவுபடுத்துவதற்காக, மான்ட்கோமெரி முடிந்தவரை பல ராணுவப் பிரிவுகளைச் சந்திக்க முயன்றார். இனி பின்வாங்கல் கிடையாது என்பதே அவரது முக்கியச் செய்தியாக இருந்தது.

“நாம் இங்கே நின்று போராடுவோம். நம்மால் இங்கே உயிரோடு இருக்க முடியாவிட்டால், இங்கேயே இறப்போம். கெட்ட காலம் முடிந்துவிட்டது என்பதை அனைவருக்கும் உணர்த்த விரும்புகிறேன். அவை முடிந்துவிட்டன” என்று அவர் குறிப்பிட்டார்.

எல் அலமெய்ன் யுத்தம், மான்ட்கோமெரி - ரோமெல், ஹிட்லர், நாஜி ஜெர்மனி, பிரிட்டன், சர்ச்சில்

பட மூலாதாரம், Getty Images

போரின் மூன்று கட்டங்கள்

பின்னர் பிபிசியிடம் பேசிய அவர், “எனது யோசனைகளையும் எதிர்காலம் பற்றிய எனது எண்ணங்களையும் அவர்களிடம் சொன்னேன். என்னைப் பார்த்து, இவர் வந்த வேகத்திலேயே இவ்வளவு பெரிய ஆளாகப் பேசுகிறாரே என்று ஒருவேளை அவர்களில் சிலர் நினைத்திருக்கலாம். நான் பாலைவனத்திற்கு வந்து 12 மணிநேரத்திற்கும் குறைவாகவே ஆகியிருந்தது.

அதற்குள் நான் வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தது போல மிகுந்த நம்பிக்கையுடன் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தேன். எது எப்படியோ, ஒன்று மட்டும் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டது. இனி எதைப் பற்றியும் எந்த நிச்சயமற்ற நிலையும் இருக்காது” என அச்சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார்.

எல் அலமெய்ன் கிராமம் ஒரு பக்கம் மத்திய தரைக்கடல் கடற்கரைக்கும், தெற்கே கடக்க முடியாத உப்பு சதுப்பு நிலங்களுக்கும் இடையில் அமைந்துள்ளது.

ஜூலை மாதம் நடைபெற்ற முதல் எல் அலமெய்ன் யுத்தத்தில் இருந்து, எட்டாவது படைப்பிரிவு அங்கே முகாமிட்டு, கெய்ரோவை நோக்கிய ரோமெலின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி வந்தது.

பல மாதங்களாக மான்ட்கோமெரி தனது பிரமாண்டமான திட்டத்தில் பணியாற்றிய அதே வேளையில், தனது வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதையும் அவர்களுக்குப் புதிய உபகரணங்களை வழங்குவதையும் தொடர்ந்தார்.

அவர் தனது வீரர்களிடம் பேசுகையில், “இப்போது, இந்தப் போர் பற்றிய எனது கணிப்பு என்னவென்றால், இதில் மூன்று தெளிவான நிலைகள் இருக்கும். முதலில், உள்ளே புகுதல். பிறகு, நேரடி மோதல். இந்த நேரடி மோதல் ஒரு கடுமையான உயிரைப் பறிக்கும் போராக மாறும் என்றும் அது 10 அல்லது 12 நாட்கள் நீடிக்கும் என்றும் நான் நம்புகிறேன்” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

எல்லா நிகழ்வுகளும் கடைசி வரை திட்டமிடப்படும் என்று அவர் தனது வீரர்களுக்கு உறுதியளிக்க விரும்பினார். “எதிரி நிலைகுலைவார். பின்னர், ஊடுருவல் நிகழும், அது ஆப்பிரிக்காவில் ரோமெலின் முடிவுக்கு வழிவகுக்கும்.”

அக்டோபர் 23ஆம் தேதிக்குள் அவர் தாக்குதலுக்குத் தயாராக இருந்தார். இது முதல் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய பிரிட்டிஷ் பீரங்கித் தாக்குதலுடன் தொடங்கியது.

அந்தப் போரில் தானும் கடுமையாகக் காயமடைந்து அதன் பேரழிவைக் கண்டு மனம் நொந்துபோன அவர், தேவையற்ற உயிரிழப்புகளைத் தவிர்க்கத் தீர்மானித்திருந்தார்.

வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் ஹோம்ஸின் கூற்றுப்படி, இந்த பீரங்கித் தாக்குதல், “முடிந்தவரை மனித சதைகளுக்குப் பதிலாக உலோகத்தைக் கொண்டு தனது வேலையைச் செய்து முடிக்க வேண்டும்” என்ற மான்ட்கோமெரியின் விருப்பத்தைப் பிரதிபலித்தது.

ஜெர்மானியர்களின் ஆழமான கண்ணிவெடிப் பரப்புகளின் வழியே பாதைகளைத் தோண்டி, நேச நாடுகளின் பீரங்கிகள் கடந்து செல்ல பொறியாளர்கள் வழிவகுத்தனர்.

எல் அலமெய்ன் யுத்தம், மான்ட்கோமெரி - ரோமெல், ஹிட்லர், நாஜி ஜெர்மனி, பிரிட்டன், சர்ச்சில்

பட மூலாதாரம், Getty Images

டாங்கிகளின் எடை ஜெர்மானியர்களால் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்திருக்கும் என்றாலும், வீரர்கள் அந்தப் பகுதியைக் கடக்க முடிந்தது.

மான்ட்கோமெரி தனது திட்டத்தின் இந்தப் பகுதிக்கு ‘ஆபரேஷன் லைட்ஃபுட்’ என்று பொருத்தமான பெயரிட்டார். இரு தரப்பிலும் இழப்புகள் வேகமாக அதிகரித்தன. ஆனால் ஜெர்மானியர்களும் இத்தாலியர்களும் எண்ணிக்கையில் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் குறைவாகவே இருந்தனர்.

தங்களின் விநியோகக் கிடங்குகளில் இருந்து வெகு தொலைவில் இருந்த ரோமெலின் பீரங்கிகளுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது.

நவம்பர் 1 முதல் 2 வரையிலான இரவில், தாக்குதலின் இரண்டாம் கட்டமான ‘ஆபரேஷன் சூப்பர்சார்ஜ்’ தொடங்கியது. பிரிட்டிஷ் கவசப் படைப் பிரிவுகள் அச்சு நாடுகளின் பாதுகாப்பின் இறுதி அடுக்கைத் தாண்டி முன்னேறின.

இந்த முன்னேற்றம் அப்போதும் எளிதானதாக இருக்கவில்லை. நவம்பர் 3ஆம் தேதி, ஒன்பதாவது கவசப் படைப்பிரிவு அதன் 128 டாங்கிகளில் 102ஐ இழந்தது.

போருக்குப் பிறகு, மான்ட்கோமெரி தனது வெற்றிகரமான எட்டாவது படைப் பிரிவை வட ஆப்பிரிக்காவின் 2,000 மைல் தூரம் வழிநடத்திச் சென்றார். ரோமெல் 500 டாங்கிகளுடன் தொடங்கினார். முதல் கட்டத்தின் முடிவில் அவரிடம் 100 டாங்கிகள் மட்டுமே இருந்தன.

கடைசி நாளில் நடந்த ஒரு மாபெரும் டாங்கி போருக்குப் பிறகு, அவரிடம் பயன்படுத்தக்கூடிய நிலையில் வெறும் 30 டாங்கிகள் மட்டுமே இருந்தன.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

ரோமெல் படைகளின் ஒரு பகுதி தப்பிச் செல்ல முடிந்தது, ஏனெனில் மான்ட்கோமெரி, தனது வழக்கமான பாணியில், பின்தொடர்ந்து செல்லாமல் இருந்துவிட்டார்.

அப்படி இருந்தும், அவர்களின் பெரும்பாலான காலாட்படை வீரர்கள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். மே 1943க்குள், வட ஆப்பிரிக்காவில் எஞ்சியிருந்த அச்சு நாட்டுப் படைகள் சரணடைந்தன. போரின் முடிவைக் காண ரோமெல் உயிரோடு இல்லை என்றாலும், அவர் போர்க்களத்தில் கொல்லப்படவில்லை.

கடந்த 1944இல் ஹிட்லரை கொல்லத் தீட்டப்பட்ட சதியில் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தங்களின் புகழ்பெற்ற தளபதியை பகிரங்கமாக விசாரணைக்கு உட்படுத்தும் அவமானத்தைத் தவிர்க்க, அவருக்குத் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பை நாஜிக்கள் வழங்கினர்.

ரோமெல் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

சிலர் அவரை ஒரு லட்சியம் கொண்ட, ஆனால் அடிப்படையில் அரசியல் சார்பற்ற, நேர்மையாக போரை நடத்திய தளபதியாகப் பார்க்கிறார்கள்.

மற்றவர்களோ, அவரது பணியும் புகழும் நாஜிக்களின் கொடூரமான மற்றும் கொலைவெறி பிடித்த ஆட்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளதாக வாதிடுகின்றனர்.

எல் அலமெய்ன் வெற்றி பிரிட்டிஷ் போர்க்கள முயற்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய மன உறுதியை அளித்தது.

எல் அலமெய்ன் யுத்தம், மான்ட்கோமெரி - ரோமெல், ஹிட்லர், நாஜி ஜெர்மனி, பிரிட்டன், சர்ச்சில்

பட மூலாதாரம், Getty Images

இனி அறிமுகமில்லாத ஒரு ஜெனரல் அல்ல என்ற நிலையை அடைந்த மான்ட்கோமெரி, இப்போது தனது படைகளுக்கும் தனது நாட்டு மக்களுக்கும் “மான்டி” என்னும் ஹீரோவாக மாறினார். நான்கு நேச நாட்டு ராணுவங்களைத் தனது தலைமையின் கீழ் கொண்டு ‘டி-டே’ தரையிறக்கத்தை வழிநடத்த அவர் திரும்பினார். அந்த நார்மண்டி போரிலும் வெற்றி பெற்றார்.

கடந்த 1987ஆம் ஆண்டு பிபிசியின் ‘மான்டி: இன் லவ் அண்ட் வார்’ என்ற ஆவணப்படம், அவருடன் பணியாற்றிய பலரின் சாட்சியங்களைத் திரட்டியது.

அவர்களின் கருத்துகள் பரவலாக வேறுபட்டன, அவை அவரது குணநலனின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்தின.

அமெரிக்க ராணுவ ஜெனரல் பில் கார்ட்டர் கூறுகையில்: “எங்களுக்கு மான்ட்கோமெரி மீது எவ்வித மரியாதையும் இல்லை. அவர் ஒரு பாசாங்குக்காரர், முரட்டுத்தனமானவர், அவர் தனது நட்பு நாடுகளை மதிக்கவில்லை. அவர் ஒரு முழுமையான அரசியல்வாதி” என்றார்.

மான்ட்கோமெரியின் கனேடிய உதவியாளர் மற்றும் தனிப்பட்ட உதவியாளரான லெப்டினன்ட் கர்னல் ட்ரம்பல் வாரன் கூறுகையில், “அவரை நன்கு அறிந்தவர்கள் மற்றும் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர்கள் அவரைப் பெரிதும் போற்றினார்கள் என்று நான் நினைக்கிறேன். அவரைப் பற்றித் தெரியாதவர்களில் பலர் அவரை வெறுத்தார்கள் என்று கூறுவேன். அவர் சரியான நேரத்தில் வந்த சரியான நபராக இருந்தார். அவருக்குச் சரியான வாய்ப்புகள் கிடைத்தன. மான்ட்கோமெரி போன்ற ஒருவர் நமக்குத் தேவைப்பட்டார்” என்றார்.

பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரி பிரிகேடியர் சர் எட்கர் வில்லியம்ஸின் கூற்றுப்படி, “அவர் ஒரு நல்ல மனிதர் அல்ல, ஆனால் நல்ல மனிதர்கள் போர்களில் வெற்றி பெறுவதில்லை.”

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU