Home தேசிய national tamil யார்க்கர்களால் அசத்திய சூப்பர் கிங்ஸ் – ஹாட்ரிக் வெற்றி பெறுவதற்கான இலக்கு 195

யார்க்கர்களால் அசத்திய சூப்பர் கிங்ஸ் – ஹாட்ரிக் வெற்றி பெறுவதற்கான இலக்கு 195

16
0

SOURCE :- BBC NEWS

பவர்பிளேவின் கடைசி 2 பந்துகளில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் முகேஷ் சவுத்ரி

பட மூலாதாரம், ANI

18 ஏப்ரல் 2026, 13:52 GMT

புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 27வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்த இரண்டு அணிகளுமே இந்த சீசனில் தங்களின் மூன்றாவது வெற்றியைக் குறிவைத்துக் களமிறங்கின.

ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் வீரர்கள் அபிஷேக் ஷர்மா, ஹெய்ன்ரிக் கிளாசன் இருவரும் தலா 59 ரன்கள் எடுத்தனர். சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

அபிஷேக் கொடுத்த அதிரடி தொடக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். அகீல் ஹொசைனுக்குப் பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்ட முடிவு சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கைகொடுக்கவில்லை. ஷார்ட் வீசிய ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் அபிஷேக் ஷர்மா 3 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் விளாசினார். அதன்மூலம் அவர் 15 பந்துகளிலேயே தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிவேக ஐபிஎல் அரைசதம் இது.

பவர்பிளேவில் நல்ல தொடக்கம் கிடைத்திருந்தாலும், அதன் கடைசி 2 பந்துகளில் கம்பேக் கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். முகேஷ் சவுத்ரி வீசிய ஆறாவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் டிராவிஸ் ஹெட் (23 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் (டக் அவுட்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 75/2 என்ற நிலையில் பவர்பிளேவை முடித்தது சூப்பர் கிங்ஸ்.

15 பந்துகளில் அரைசதம் அடித்தார் அபிஷேக் ஷர்மா

பட மூலாதாரம், ANI

தடுமாறிய சன்ரைசர்ஸ், கரைசேர்த்த கிளாசன்

சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் வழக்கமாக நடப்பது இந்த விஷயம் தான் – அதிரடியாகத் தொடங்குவார்கள், வேகமாக விக்கெட்டுகள் இழப்பார்கள், அதன்பிறகு நிதானமாக விளையாடி கிளாசன் அந்த அணியை மீட்பார், மறுபடியும் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை இழப்பார்கள். இந்தப் போட்டியிலும் இதே புளூ பிரின்ட் படித்தான் சன்ரைசர்ஸ் பேட்டிங் அமைந்தது.

அரைசதம் அடித்திருந்த அபிஷேக் ஷர்மாவும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 59 ரன்கள் எடுத்த அவர், ஓவர்டன் பந்துவீச்சில் அவர் எட்டாவது ஓவரிலேயே அவுட் ஆனார். அதன்பிறகு வந்த வீரர்கள் அதே வேகத்தில் வெளியேறினார்கள். ஆனால், கிளாசன் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று விளையாடி 59 ரன்கள் எடுத்தார். அவர் 18வது ஓவரில் கம்போஜ் பந்துவீச்சில் போல்டானார்.

எதிர்பார்த்ததை விடக் குறைவான ரன் எடுத்திருந்ததால் அந்த இன்னிங்ஸிலேயே இம்பேக்ட் வீரராக லிவிங்ஸ்டனைப் பயன்படுத்தியது சன்ரைசர்ஸ். ஆனால், அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் தொடர்ச்சியாக யார்க்கர்கள் மற்றும் ஸ்லோயர் பால்களை சரியாக வீச எந்த சன்ரைசர்ஸ் பேட்டராலும் ரன் குவிக்க முடியவில்லை. அதனால் சன்ரைசர்ஸ் இன்னிங்ஸ் 194 ரன்களில் முடிவுக்கு வந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

டாஸில் என்ன நடந்தது?

சன்ரைசர்ஸுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், ANI

டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட், “நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். இது பார்க்க ஒரு சிறந்த ஆடுகளமாகத் தெரிகிறது. பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்பதால் இலக்கைத் துரத்த விரும்புகிறோம். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டாவது போட்டியிலிருந்தே நாங்கள் அடிப்படை விஷயங்களைச் சரியாகச் செய்யத் தொடங்கிவிட்டோம். நிதானமாகவும் சீராகவும் செயல்படுவதே வெற்றிக்கான வழி. கடந்த போட்டியில் நூர் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார், அவர் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்தது நல்லது; அன்ஷுல் கூட கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசுகிறார். இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் போலத் தெரிகிறது, ஆனால் நாங்கள் அதற்கேற்ப விளையாட வேண்டும்.” என்று கூறினார்.

சன்ரைசர்ஸ் கேப்டன் இஷான் கிஷன், “நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்திருந்தோம். இது ஒரு நல்ல ஆடுகளமாகத் தெரிகிறது, எனவே ஒரு வலுவான ஸ்கோரை எடுக்க விரும்புகிறோம். தனிப்பட்ட சாதனைக்காக இல்லாமல் அணிக்காக விளையாட வேண்டும். தொடர் இன்னும் நீண்ட தூரம் இருப்பதால், இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, ஒவ்வொரு போட்டியையும் தனித்தனியாகக் கவனித்து விளையாட வேண்டும். ஆரம்பத்தில் பந்து சற்று நகரும் என்று நினைக்கிறேன், எனவே பேட்டர்கள் பந்தைக் கவனித்து நிதானமாக விளையாட வேண்டும்.” என்று கூறினார்.

பிளேயிங் லெவனில் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான சூப்பர் கிங்ஸ் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அகீல் ஹொசைன் நீக்கப்பட்டு மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார். சன்ரைசர்ஸின் இடது கை டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னைப் பயன்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்தார். அதேபோல், காயம் காரணமாக கலீல் அஹமது இந்த சீசனில் இருந்து விலகியிருக்கும் நிலையில், முகேஷ் சௌத்ரி பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.

பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, டெவால் பிரெவிஸ், ஜேமி ஓவர்டன், மேத்யூ ஷார்ட், அன்ஷுல் கம்போஜ், நூர் அஹமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர், ராமகிருஷ்ணா கோஷ், மேட் ஹென்றி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்தப் போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஹர்ஷ் துபேவிற்குப் பதிலாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா அணியில் சேர்க்கப்படுவதாக டாஸின்போது இஷான் கிஷன் தெரிவித்தார். ஆனால், பேட்டிங்கின்போது விரைவாக விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் இம்பேக் வீரராகக் களமிறக்குவார்.

பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன்), ஹெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா (விக்கெட் கீப்பர்), அனிகேத் வெர்மா, ஷிவாங் குமார், பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன், இசான் மலிங்கா.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஸ்மரன் ரவிச்சந்திரன், ஹர்ஷ் துபே, தில்ஷன் மதுஷன்கா, லியாம் லிவிங்ஸ்டன், ஹர்ஷல் பட்டேல்.

SOURCE : THE HINDU