Home தேசிய national tamil ராமர் கோவில் திறப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானதா? நீதிமன்றங்களின் பார்வை எப்படி இருக்கிறது?

ராமர் கோவில் திறப்பு மதச்சார்பின்மைக்கு எதிரானதா? நீதிமன்றங்களின் பார்வை எப்படி இருக்கிறது?

1
0

SOURCE :- BBC NEWS

மோதி, ராமர் கோவில்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா ஒரு மதச்சார்பற்ற குடியரசு நாடு. இருப்பினும், அரசுக்கும் மதத்திற்கும் இடையிலான மெல்லிய கோடுகள் அடிக்கடி மங்கலாகிவிடுகின்றன.

ஜனவரி 22-ம் தேதி, அயோத்தியில் ராமர் கோயில் திறந்து வைக்கப்பட்டது, இதில் பிரதமர் மற்றும் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகள் விடுமுறை அறிவித்திருந்தன. இதனால், இந்திய அரசு, ஒரு மத நிகழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பினர்.

அரசியலமைப்பின் கீழ் மதச்சார்பின்மை என்றால் என்ன, இது குறித்து நீதிமன்றங்கள் என்ன கூறியுள்ளன என்பதை இங்கே காணலாம்.

இந்தியாவில் மதச்சார்பின்மை என்றால் என்ன?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்பு கூறுகிறது. இந்த அம்சம் 1976 -ல் ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. எனினும், இதற்கு முன்பும் கூட, மதத்தைப் பின்பற்றுவது தொடர்பாக சில அடிப்படை உரிமைகள் இருந்தன. அரசியலைப்பின் பிரிவு 25 சில நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, அனைத்து மக்களுக்கும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதற்கும் பரப்புவதற்கும் உரிமையை வழங்குகிறது. பிரிவுகள் 29 மற்றும் 30 சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கின்றன.

இது குறித்து விளக்கிய மூத்த வழக்கறிஞரும் அரசியலமைப்பு சட்ட நிபுணருமான டாக்டர் ராஜீவ் தவான், “இந்தியாவில், மதச்சார்பின்மை இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது. முதலாவது, நீங்கள் மதங்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது. இரண்டாவது நீங்கள் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

மதம் அல்லது மொழியின் அடிப்படையில் சிறுபான்மையாக இருப்பவர்கள் தங்கள் சொந்த கல்வி நிறுவனங்களை நடத்திக் கொள்ள அரசியலமைப்பு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. அரசு உதவிகள் வழங்கும் போது சிறுபான்மை நிறுவனங்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்றும் கூறுகிறது.

“இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்குவது என்று அர்த்தம். மதத்தையும் அரசையும் முற்றிலும் பிரிக்கும் கோட்பாட்டை நாம் பின்பற்றவில்லை. சில நாடுகளில், அப்படி பின்பற்றப்படுகிறது. உதாரணமாக, ஃபிரான்ஸ்-ல் மதமும் அரசும் மிக கடுமையாக பிரித்து வைக்கப்படுகிறது. பொதுவாழ்வுக்கும் மதத்துக்கும் சம்பந்தமே இருக்காது” என்றார்.

இருப்பினும், மதசார்பின்மை எவ்வாறு சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்பதில் தெளிவில்லை.

இந்தியாவில் மதச்சார்பின்மை என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

“இந்திய மதச்சார்பின்மை என்றால் என்ன என்ற கேள்விக்கு பதில் எழுதினால், ஒரு புத்தகம் பத்தாது. ” என்று அரசியலமைப்பு சட்ட நிபுணர் டாக்டர் ஜி மோகன் கோபால் அதன் சிக்கலான தன்மையைப் பற்றி கூறுகிறார். “அரசியலமைப்பை எழுதும் முன் நடைபெற்ற விவாதங்களிலும், இது குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை. இதே தெளிவின்மை தான் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வரை நீடிக்கின்றன” என்றார்.

“அனைத்து மதங்களிலிருந்தும் சமதூரத்தில் இருக்க வேண்டும் என்பது நீதிமன்றங்களின் முக்கிய அணுகுமுறையாகும். ஆனால், இந்த யோசனை கூட உண்மையில் பிராமணிய நூல்களில் இருந்தே வருகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

1994-ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில், நீதிபதி ஜே.எஸ்.வர்மா, யஜுர் வேதம், அதர்வ வேதம் மற்றும் ரிக் வேதத்திலிருந்து “சர்வ தர்ம சம்பவா” என்ற கருத்தை மேற்கோள் காட்டி, மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் சகித்துக்கொள்வது என்று கூறினார். மத நூல்கள் மூலம் மதச்சார்பின்மையை வரையறுப்பது விசித்திரமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மதச்சார்பின்மை என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

மதச்சார்பின்மை குறித்து உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

மதச்சார்பின்மை குறித்து நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன. இருப்பினும், அவற்றில் பொதுவான கருத்துகள் எதுவும் இல்லை என்று விமர்சகர்கள் வாதிட்டனர்.

“இந்திய மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய மதச்சார்பின்மை கருத்திலிருந்து வேறுபட்டது. அரசியலமைப்பின் படி, மதமும் அரசும் விலகியிருப்பது குறித்து தெளிவு இல்லை. உச்ச நீதிமன்றமும் மதச்சார்பின்மையை எந்த வடிவத்தில் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிடாமல் இருப்பது நல்லது தான், ஏனென்றால் இந்த விவகாரம் அதன் வரம்பிற்குள் வருவதில்லை. மதத்தையும் அரசையும் முற்றிலுமாக பிரித்து வைப்பது இந்தியாவில் சாத்தியமில்லை. அது விரும்பத்தக்கதும் இல்லை” என்று தேசிய நீதித்துறை அறிவியல் பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் மதச்சார்பின்மை உதவி பேராசிரியர் விஜய் கிஷோர் திவாரி கூறினார்.

“சில வழக்குகளில் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடுமையாக சாடியுள்ளது. மதச்சார்பின்மை இந்திய அரசியலமைப்பின் திருத்த முடியாத அம்சம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. வேறு சில வழக்குகளில் நீதிமன்றம், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளில் தலையிடும் பெரும்பான்மையினரின் நலன்களுக்கு இணங்கி விடுகிறது. வேறு சில நேரங்களில், சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்கிறது” என்று நியூ ஜெர்சியின் ராம்பாவ் கல்லூரியில் சட்டம் மற்றும் சமூகத்தின் இணை பேராசிரியரான சங்கமித்ரா பதி குறிப்பிட்டார்.

மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், அதாவது அதை மக்களிடமிருந்து பறிக்க எந்த அரசாங்கத்திற்கும் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் 1972-ல் கூறியது.

ஆனால், 1974 -ம் ஆண்டில், அதே நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், இந்தியாவில் மதமும் அரசுமும் உறுதியாக விலக்கி வைக்கப்படாததால், இந்தியாவை “மதச்சார்பற்ற நாடு” என்று திட்டவட்டமாக கூறுவதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறினர். “நமது அரசு மதச்சார்பற்றது என்று வகைப்படுத்த ஒருவர் தயங்கும் வகையிலேயே அரசியலமைப்பு விதிகள் உள்ளன” என்று அவர்கள் கூறினர்.

இந்தியாவில் மதச்சார்பின்மை என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

மதச்சார்பின்மை குறித்த வலுவான தீர்ப்புகளில் ஒன்று 1994 -ம் ஆண்டு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, பாஜக தலைமையிலான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநில அரசாங்கங்களை அகற்றியது சரி என்று உறுதி செய்தது. இந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டசபை இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்த மாநில அரசுகள் வகுப்புவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கியதையும், மசூதியை இடிப்பதில் அவர்களுக்கு உதவியதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு பெரும்பான்மை இருந்தபோதிலும், அரசியலமைப்பு இயந்திரங்கள் தோல்வியடைந்துள்ளன என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில், அரசும் மதமும் தனித்தனியாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர், “மதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் அல்லது கோட்பாடுகள், அரசியல் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மதத்தை அங்கீகரிப்பதற்குச் சமம். இதை அரசியலமைப்பு வெளிப்படையாக தடை செய்துள்ளது” என்று தீர்ப்பில் எழுதியிருந்தார். சட்டத்திற்கு அப்பாற்பட்டு நிர்வாக நடவடிக்கைகளில் கூட மதச்சார்பின்மை இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

ஆனால், இந்த தீர்ப்பு பின்னர் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டில், “மகாராஷ்டிராவில் முதல் இந்து மாநிலம் நிறுவப்படும்” என்று ஒரு அரசியல்வாதி கூறியது, மத அடிப்படையில் வாக்குகளை பெறுவதற்காக அல்ல, அது ஒரு “நம்பிக்கையின் வெளிப்பாடு” எனவே சட்டவிரோதமானது அல்ல என்று நீதிமன்றம் கூறியது.

இந்தியாவில் மதச்சார்பின்மை என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

2002-ம் ஆண்டில், என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி, ஆராய்ச்சி, பயிற்சிக்கான கவுன்சில்) வடிவமைத்த பாடத்திட்டங்களில் சமஸ்கிருதம், வேத கணிதம் போன்றவை இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் அந்த பாடத்திட்டம் சரி என்றது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர், “நடுநிலை என்ற கொள்கை… நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை” என்று எழுதியிருந்தார். ஆனால், இந்த கருத்து, ஒரு மதத்தின் போதனைகள் மட்டுமே அந்த பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தன என்ற விவரத்தை புறந்தள்ளுவதாக இருக்கிறது என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அப்தாப் ஆலம் 2009 -ல் தனது உரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

சமீப காலத்தில் கூட நீதிமன்றங்கள் மதச்சார்பற்றவை அல்ல என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. “நீதிமன்றங்கள் தங்கள் தீர்ப்புகளுக்காக பல முறை மத நூல்களைப் பயன்படுத்தியுள்ளன” என்று டாக்டர் கோபால் கூறினார்.

“அயோத்தி தீர்ப்பு ஆவணத்தின் பிற்சேர்க்கை மதசார்புடையதாக இருந்தது” என்றார். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை, அயோத்தி தீர்ப்பின் பிற்சேர்க்கை வலியுறுத்தியது.

மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதில் நீதிமன்றங்கள் தவறிவிட்டன என்று டாக்டர் தவான் கூறுகிறார். “ஞானவாபி வழக்கில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் முற்றிலும் மறக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.” என்றார்.

“நீதிமன்றங்களும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகும் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டன” என்று டாக்டர் திவாரி மேலும் கூறினார்.

ராமர் கோவில்

பட மூலாதாரம், Getty Images

ராமர் கோவில் நிகழ்ச்சி மதச்சார்பற்றதா?

ஜனவரி 22-ம் தேதி நிகழ்வு இந்திய மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று டாக்டர் தவான் கூறுகிறார். “ஒரு மதத்துக்கு ஆதரவாக நின்று, மதத்தை அரசியலாக்கும் செயலை செய்யக் கூடாது. அரசுக்கும் மதத்துக்கும் இடைவெளி இருக்க வேண்டும், நடுநிலையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும், இந்திய மதச்சார்பின்மைக்கு நியாயமாக இந்த அரசு நடந்து கொள்ளவில்லை” என்றார்.

ஒரு மதத்தை விட அதிகமாக மற்றொரு மதத்தை நீங்கள் ஆதரிக்க முடியாது என்று சுட்டிக்காட்டுகிறார் . “ஒரு மசூதி கட்டப்படும்போது இவ்வளவு பரபரப்பு இருக்குமா?”

டாக்டர் திவாரி கூறுகையில், “நமது அரசியலமைப்பு வாக்குறுதி சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டாதது மற்றும் மத சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக, இந்த உரிமைகள் ஆபத்தில் உள்ளன” என்றார்.

வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தின் பேராசிரியர் ஹிலால் அகமது, ஜனவரி 22ம் தேதி நிகழ்வை இரண்டு கோணங்களில் பார்க்கலாம் என்கிறார். “இதை ஒரு கலாச்சார நிகழ்வாக பார்க்கலாம். எனவே சட்டத்தின் அடிப்படையில் அரசின் தலையீடு ஏற்றுக் கொள்ளத்தக்கது என்று ஒருவர் கூறலாம்.” இந்தியச் சூழலில் “ஒரு மசூதி, கோவில் அல்லது அரசியல்வாதிக்கு பணம் கொடுப்பது,” பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது.

“இருப்பினும், இதை மற்றொரு விதமாகவும் பார்க்கலாம். அரசியலமைப்பு தார்மீகம் என்பது, மத விவகாரங்களில் இருந்து கொள்கை ரீதியாக அரசு தள்ளி நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே இரண்டு கேள்விகள் உள்ளன: நடந்தது ஒரு மத நிகழ்வா இல்லையா? இந்த கொண்டாட்டத்தில் அனைத்து மதத்தினரும் சேர்க்கப்பட்டார்களா அல்லது அவர்கள் விலக்கப்பட்டதாக உணர்ந்தார்களா? அந்த கண்ணோட்டத்தில், இது மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு தார்மீகத்துக்கு எதிரானதாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

SOURCE : THE HINDU