Home தேசிய national tamil பிரதமர் மோதிக்கு முதல்வர் விஜய் எழுதிய முதல் கடிதம் – விவசாயிகள் சங்கம் எதிர்ப்பது ஏன்?

பிரதமர் மோதிக்கு முதல்வர் விஜய் எழுதிய முதல் கடிதம் – விவசாயிகள் சங்கம் எதிர்ப்பது ஏன்?

9
0

SOURCE :- BBC NEWS

ஜவுளி, பருத்தி, ஆடை, தமிழ்நாடு

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய முதல் கடிதத்தில் பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தியிருந்தார்.

இந்த அறிவிப்பை ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் நூற்பாலை நிறுவனங்கள் வரவேற்கின்றனர்.

ஆனால் இந்தக் கோரிக்கை பருத்தி விவசாயிகளைப் பாதிக்கும் எனக் கூறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முதலமைச்சர் விஜயின் கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல

X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

கடந்த மே 14-ஆம் தேதி, பருத்திக்கான இறக்குமதி ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். பிரதமர் மோதிக்கு நேரடியாக அவர் எழுதும் முதல் கடிதம் இது.

அந்தக் கடிதத்தில், “அண்மைக் காலமாக, பருத்தி விலை உயர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நூல் விலை உயர்வால் இத்தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டில் பருத்தி உற்பத்திக் குறைவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் அதிகரிப்பு ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்களாகும்.”

“பருத்தியின் விலை கடந்த இரண்டு மாதங்களில் கண்டி (candy) ஒன்றுக்கு ரூ.54,700-லிருந்து ரூ.67,700 அதாவது, 25 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.301-லிருந்து ரூ.330-ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், இறக்குமதி மூலமாக மட்டுமே மூலப்பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இயலும் ஆனால் பருத்திக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஜவுளி, பருத்தி, ஆடை, தமிழ்நாடு

மேலும் அதில், “மூலப்பொருட்களின் இருப்பை உறுதி செய்யும் பொருட்டு. தற்போதுள்ள 11 சதவீத பருத்திக்கான இறக்குமதி வரியை முழுவதுமாக ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட அளவு உற்பத்தி இல்லாதது தான் பற்றாக்குறைக்கு காரணம் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்து ரத்தினம்.

“சுமார் 330 லட்சம் பேல் பருத்தி இந்த ஆண்டு கிடைக்கும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் 40 லட்சம் பேல் குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால் தான் விலை கடுமையாக அதிகரித்துள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பருத்திக்கு முறையான விலை கிடைக்காதது மற்றும் கணிக்க முடியாத பருவநிலை ஆகியவை தான் உற்பத்தி குறைவதற்கு காரணம் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன்.

இந்தச் சூழலில் பருத்திக்கான இறக்குமதி வரி செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்கிறார் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் இணை இயக்குநர் துரை பழனிசாமி.

நூல் ஏற்றுமதியால் தான் தற்போதைய தட்டுப்பாடு மட்டும் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் முத்து ரத்தினம்.

“நம்மிடம் தற்போது போதிய அளவில் பருத்தி கையிருப்பு இல்லை. நூல் ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருந்தால் ஜவுளித்துறைக்கு நெருக்கடி வந்திருக்காது. ஏற்றுமதியை ஒழுங்குபடுத்த வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

ஜவுளி, பருத்தி, ஆடை, தமிழ்நாடு

ஆனால் இந்தக் கூற்றை துரை பழனிசாமி மறுக்கிறார். ஏற்றுமதிக்கு என தயாரிக்கப்படும் நூல் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், “உள்நாட்டு தேவைக்கு என உற்பத்தியாகும் நூல் பெரும்பாலும் உள்ளூர் சந்தைக்கு தான் செல்கிறது. ஏற்றுமதிக்கு என தயாரிக்கப்படும் நூல் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலோட்டமாக அவ்வாறு சொல்லிவிட முடியாது. ஏற்றுமதியை நம்பியும் ஒரு தொழில்துறை மற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க இறக்குமதி செய்வது மட்டுமே ஒரே வழி என இருவரும் தெரிவிக்கின்றனர்.

“தற்போது பல நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வர்த்தகம் மேம்படும் என நம்பப்படுகிறது. இந்தச் சூழலில் உள்நாட்டு சந்தையில் போதிய மூலப் பொருட்கள் இல்லாமல் நாம் தவிக்கிறோம். அதனால் இறக்குமதி செய்வது மட்டுமே நமக்கு இருக்கும் ஒரே வழி. அதனால் இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோருகிறோம்,” என்று கூறுகிறார் முத்து ரத்தினம்.

இந்தக் கோரிக்கை ஆதரித்து பேசும் துரை பழனிசாமி, “பருத்தி உபரி என்கிற நிலையிலிருந்து பற்றாக்குறை என்கிற நிலையை நோக்கி நகர்ந்துள்ளோம். விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்கள் உள்ளன, தொழிற்சாலைகளுக்கு மாற்று மூலப் பொருட்கள் கிடையாது. தற்போது விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதால் யாரும் பாதிக்கப்படப்போவதில்லை. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளது, மாற்றுப் பயிர்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆதார விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.” என்றார்.

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைப்பதில்லை என்கிறார் சாமி. நடராஜன்.

இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், “இறக்குமதி வரியிலிருந்து குறுகிய காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுகிறது. ஒரு குவிண்டாலுக்கு என மத்திய அரசு நினைக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைப்பதில்லை. பருத்தி ஒரு குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.5,500 மட்டுமே கிடைக்கிறது.

இறக்குமதி பருத்தி விலை குறைவாக இருப்பதால் நூற்பாலைகள் உள்ளூர் பருத்தியை தேர்வு செய்வதில்லை. இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டால் மலிவான பருத்தி இந்திய சந்தைக்குள் நுழையும். தற்போது விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைவிட ரூ.1,200 குறைவாகவே கிடைக்கிறது.” என்றார்.

ஜவுளி, பருத்தி, ஆடை, தமிழ்நாடு

இந்தக் கருத்தை ஆமோதிக்கும் முத்து ரத்தினம், இறக்குமதி செய்யப்படும் பருத்தி குறைவான விலைக்கு கிடைப்பதால் அதிக லாபம் பெற நூற்பாலைகள் அதை தேர்வு செய்கின்றனர் என்கிறார்.

ஆனால் இந்தக் கூற்றுகளை மறுக்கும் துரை பழனிசாமி, “இறக்குமதி செய்யப்படும் பருத்தி உள்ளூர் பருத்தியைவிட விலை அதிகமாகவே இருக்கிறது,” எனத் தெரிவிக்கிறார்.

மாற்று வழிகள் என்ன?

பருத்தி உற்பத்தியை அரசு ஊக்குவிப்பதோடு அதற்கு போதிய மாணியம் வழங்க வேண்டும் என்கிறார் முத்து ரத்தினம்.

“சீனாவில் இருப்பதைப் போல இந்தியாவில் பருத்தியை கையிருப்பு வைக்கும் வழக்கம் இல்லை. ஜவுளித்துறையில் பருத்தியின் பயன்பாடு குறைந்து இதர வகை நூல்களின் உற்பத்தி அதிகரித்துவிட்டது. இதனால் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். பருத்தி உற்பத்தியை ஊக்குவித்து அதற்கு மானியம் வழங்க வேண்டும். ஏற்றுமதியை ஒழுங்குபடுத்த வேண்டும். தற்போதைய கணக்கீடுகள் போதுமானதாக இல்லை. 350 லட்சம் பேல் தேவைப்படுகிறது என்றால் 700 லட்சம் பேல் பயிரிட வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.

பருத்திக்கு என தனிக் கொள்கை வேண்டும் எனக் கூறும் சாமி. நடராஜன் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக மேலும் விவரித்த அவர், “கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட பருத்தி விளைச்சல் குறைவாகவே உள்ளது. பற்றாக்குறைக்காக இறக்குமதி செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டாலும் அதில் ஒரு கட்டுப்பாடு இருக்காது. இறக்குமதிக்கு என அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். தேவையான அளவு மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அரசாங்கம் அதற்கு ஒரு கொள்கை வகுக்க வேண்டும். பருத்தி லாபகரமாக இல்லையென்றால் விவசாயிகள் நெல் போன்ற மாற்றுப் பயிர்களை நோக்கி நகர்கின்றனர். ஆனாலும் பருத்தியை விளைவிக்கும் விவசாயிகள் இருக்கவே செய்கின்றனர்.” எனத் தெரிவித்தார்.

அதிக விளைச்சல் தரக்கூடிய பருத்தி ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்கிறார் துரை பழனிசாமி. மேலும் அவர், “ஆடைக்காக உற்பத்தி செலவில் மூலப்பொருளான நூலின் பங்கு 25 – 30% தான், ஆனால் நூல் உற்பத்தி செலவில் மூலப் பொருளான பருத்தியின் செலவு 60 – 65% வரை இருக்கும்.” எனத் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU