Home தேசிய national tamil பாம்பேய் நகரம்: ரோமப் பேரரசின் கொடூர முகத்தைக் காட்டிய அகழாய்வு – என்ன கிடைத்தது?

பாம்பேய் நகரம்: ரோமப் பேரரசின் கொடூர முகத்தைக் காட்டிய அகழாய்வு – என்ன கிடைத்தது?

1
0

SOURCE :- BBC NEWS

பண்டைய ரோமானிய நகரில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள்

பட மூலாதாரம், BBC/Tony Jolliffe

பண்டைய ரோமில் கி.பி. 79-ல் வெசுவியஸ் எரிமலை வெடித்ததில் புதைந்துபோன பாம்பேய் (Pompeii) நகரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஆச்சரியம் தரும் கலைப் படைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பண்டைய நகரின் அழிவுகளில் இருந்து மிக நேர்த்தியான சுவரோவியங்கள் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கிரேக்க புராண கதாபாத்திரமான டிராய் நகரின் ஹெலன், உயரமான கருப்பு சுவர்களில் ஓவியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அறையின் முழுமையான மொசைக் தளம், 10 லட்சத்திற்கும் அதிகமான தனித்தனி வெள்ளை டைல்ஸ்களால் ஆனது.

புதைந்துபோன இந்த நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு, எரிமலை வெடிப்பின் எச்சங்களில் இருந்து இன்னும் மீட்கப்பட வேண்டியுள்ளது. இந்த அகழாய்வு, ரோமானிய பேரரசின் மக்கள் மற்றும் கலாசாரத்தின் மீது உலகின் முதன்மையான சாளரமாக பாம்பேய் நகரின் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பூங்கா இயக்குநர் டாக்டர் கேப்ரியல் ஜுச்ட்ரிகல், பிபிசிக்கு பிரத்யேகமாக அந்த ‘கருப்பு அறை’யைக் காட்டினார்.

உயிர்ப்பான ஓவியங்கள்

பண்டைய ரோமானிய நகரில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள்

பட மூலாதாரம், BBC/Tony Jolliffe

இரவுநேரப் பொழுதுபோக்கின்போது பயன்படுத்தப்படும் விளக்குகளில் இருந்து புகை படிவுகளை மறைக்க சுவர்களின் அப்பட்டமான நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.

“பளபளக்கும் வெளிச்சத்தில், இந்த ஓவியங்கள் உயிர் பெற்றிருக்கும்,” என்று அவர் கூறினார். இவற்றுள், இரண்டு சுவரோவியங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஒன்று, ரோமானிய புராணங்களில் தெய்வமாகக் குறிப்பிடப்படும் அப்பல்லோ, பெண் பாதிரியார் கசாண்ட்ராவை வசீகரிக்க முயலும் ஓவியம். புராணங்களின்படி அப்பல்லோவை கசாண்ட்ரா நிராகரித்ததால், அவருடைய தீர்க்கதரிசனங்கள் நம்பப்படவில்லை.

அதன் சோகமான விளைவு, இரண்டாவது ஓவியத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் இளவரசர் பாரிஸ் அழகான ஹெலனை சந்திக்கிறார். அவர்கள் ட்ரோஜன் போரில் அழிக்கப்படுவார்கள் என்பது கசாண்ட்ராவுக்கு முன்கூட்டியே தெரியும்.

இந்த அகழாய்வு 12 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதிலிருந்து வெளிவரும் சமீபத்திய புதையல், இந்தக் கருப்பு அறை. இது ஏப்ரல் மாதத்தில் ஒளிபரப்பப்படும் பிபிசி மற்றும் லயன் டிவியின் ஆவணத் தொடரில் இடம்பெறும்.

‘ரீஜியன் 9’ (Region 9) என்று அழைக்கப்படும் ஒரு பரந்த குடியிருப்பு மற்றும் வணிகத் தொகுதியில், ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வெசுவியஸ் எரிமலை வெடிப்பால் பல மீட்டர்களுக்கு மேல் படிந்த படிகக்கல் மற்றும் சாம்பல் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த அகழாய்வில் புதிய கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்க பணியாளர்கள் விரைவாக முன்னேறிச் செல்கின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட ஓவியங்கள் அதன் நிலையிலேயே இருக்கவும் சுவர்களில் இருந்து பெயர்ந்து வருவதைத் தடுக்கவும் அவற்றின் பின்புறத்தில் ஒரு பசை செலுத்தப்படுகிறது. தற்காலிக கூரையும் அதன் மேலே அமைக்கப்பட்டுள்ளது.

தலைமை மறுசீரமைப்பு நிபுணர் டாக்டர் ராபர்ட்டா பிரிஸ்கோ இந்த வாரம், செவ்வாய்கிழமை அப்பகுதியில் ஒரு வளைவு இடிந்து விழுவதைத் தடுக்க முயன்றார். “இது மிகப்பெரிய பொறுப்பு, என் பணியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்” என்கிறார் அவர்.

இந்தப் பணியால் ஏற்பட்டுள்ள அழுத்தம் அவரைப் பாதித்திருப்பது அவருடைய முகத்தில் தெரிகிறது.

“நாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் எங்களுக்கு ஆர்வமும் ஆழமான அன்பும் உள்ளது. ஏனென்றால் இதில் கண்டெடுக்கப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் நமக்குப் பின் வரும் தலைமுறையினரின் மகிழ்ச்சிக்கானது.”

துப்பறியும் சுவாரஸ்யம்

பண்டைய ரோமானிய நகரில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள்

பட மூலாதாரம், BBC/Tony Jolliffe

‘ரீஜியன் 9’ எனும் இந்தப் பகுதி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு துப்பறியும் கதையைப் போன்று உள்ளது.

இப்பகுதியில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஒரு மூலையில் சலவை செய்யும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்திய ஆராய்ச்சியில் பேக்கரி ஒன்றும் கருப்பு அறையுடன் கூடிய பிரமாண்டமான குடியிருப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அடையாளங்கள் ‘ஏ.ஆர்.வி’ என்ற முதல் எழுத்துகளுடன் பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எழுத்துகள் சுவர்களிலும் பேக்கரியின் அரவைக் கல்லிலும்கூட உள்ளது.

“ஏ.ஆர்.வி. யார் என்று எங்களுக்குத் தெரியும். அவர், ஆலஸ் ரஸ்டியஸ் வெரஸ்” என்று பூங்கா தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சோஃபி ஹே விளக்கினார்.

“பாம்பேய் நகரில் உள்ள மற்ற அரசியல் பிரசாரங்களில் இருந்து அவரை நாங்கள் அறிவோம். அவர் ஒரு அரசியல்வாதி. அவர் பெரும் பணக்காரர். அவர் பேக்கரி மற்றும் சலவை செய்யும் இடத்திற்குப் பின்னால் இருக்கும் ஆடம்பரமான வீட்டுக்குச் சொந்தக்காரராக இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்கிறார் அவர்.

எவ்வாறாயினும், வெசுவியஸ் எரிமலை வெடிப்பின்போது இந்தப் பகுதி முழுவதும் புதுப்பிக்கப்பட்டு வந்தது தெளிவாகிறது.

தப்பியோடிய தொழிலாளர்கள் கூரை ஓடுகளை நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தனர். சுண்ணாம்பு சாந்து பானைகள் நிரப்பப்பட்டு, பயன்பாட்டுக்காகக் காத்திருந்தன. மரக் கைப்பிடிகள் நீண்ட காலமாக சேதமடைந்த போதிலும், அவற்றின் துருப்புகள் மற்றும் கைக்கருவிகள் அப்படியே இருக்கின்றன.

கலைப் பொருட்களின் பொக்கிஷம்

பண்டைய ரோமானிய நகரில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள்

பட மூலாதாரம், BBC/Tony Jolliffe

டாக்டர் லியா ட்ராபானி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட எல்லாவற்றையும் பட்டியலிடுகிறார். அவர் தனது சேமிப்பறையில் உள்ள ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட கலைப்பொருட்களின் பெட்டிகளில் இருந்து நீல பச்சை வண்ணம் கொண்ட ரத்தினக் கல்லால் ஆன கூம்பை வெளியே எடுத்தார்.

தற்போது பயன்படுத்துவதைப் போலவே, ரோமானிய தொழிலாளர்களும் செங்குத்து மேற்பரப்புகளைச் சீரமைக்க இதைப் பயன்படுத்தியிருப்பார்கள்.

அவர் தனது விரல்களுக்கு இடையில் கூம்பை வைத்திருக்கிறார், “நீங்கள் உற்று நோக்கினால், ரோமானிய சரத்தின் ஒரு சிறிய துண்டு இன்னும் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்,” என்கிறார் அவர்.

டாக்டர் அலெஸ்ஸாண்ட்ரோ ருஸ்ஸோ அகழ்வாராய்ச்சியில் இணை முன்னணி தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். ஒரு அறையில் இருந்து மீட்கப்பட்ட உட்கூரையின் சுவரோவியத்தை அவர் எங்களுக்குக் காட்ட விரும்பினார். எரிமலை வெடிப்பின்போது நொறுக்கப்பட்ட, அதன் மீட்கப்பட்ட துண்டுகள் திருகு-வெட்டுப் புதிர் பாணியில், ஒரு பெரிய மேசையில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் மீது பனித்துளிகளைத் தெளித்தார். அப்போது, அந்த ஓவியத்தின் விவரனைகள் மற்றும் தெளிவான வண்ணங்கள் வெளியே தெரிந்தன. எகிப்திய எழுத்துகளுடன் கூடிய கதாபாத்திரங்களை அதில் பார்க்கலாம். உணவுகள் மற்றும் பூக்களைக் காணலாம் மற்றும் சில நாடக முகமூடிகளையும் காணலாம்.

“இந்த அகழ்வாராய்ச்சியில் இது எனக்கு மிகவும் பிடித்த கண்டுபிடிப்பு, ஏனெனில் இது சிக்கலானது மற்றும் அரிதானது,” என்று அவர் விளக்கினார்.

பண்டைய ரோமானிய நகரில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள்

பட மூலாதாரம், BBC/Jonathan Amos

ரோமானிய காலத்தில் அடிமைத்தனம்

பண்டைய ரோமானிய நகரில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள்

பட மூலாதாரம், BBC/Tony Jolliffe

இங்கு கண்டெடுக்கப்பட்டவை, ரோமானிய வாழ்க்கையின் முற்றிலும் கொடூரமான அம்சத்தைப் பற்றி பேசுகின்றன, அதுதான் அடிமைத்தனம்.

அக்காலத்தில் பணியாளர்கள் பயங்கரமான சூழ்நிலையில் அடைத்து வைக்கப்பட்டனர், கழுதைகளுடன் அருகருகே தங்க வைக்கப்பட்டனர் என்பது வெளிப்படையானது. அங்கு ஜன்னல் ஒன்று இருந்ததாகவும், தப்பிப்பதைத் தடுக்க இரும்புக் கம்பிகள் இருந்ததாகவும் தெரிகிறது.

பேக்கரியில் தோண்டியதில் இருந்து எலும்புக்கூடுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரண்டு பெரியவர்களும் ஒரு குழந்தையும் மலை வெடிப்பில் சிக்கி நசுக்கப்பட்டு உயிரிழந்ததற்கான தடயங்கள் உள்ளன. அவர்கள் மலை வெடிப்பில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்ட அடிமைகளாக இருந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது யூகம் மட்டுமே.

“நாங்கள் அகழாய்வு செய்யும்போது, நாங்கள் பார்த்தவை குறித்து ஆச்சரியப்படுகிறோம்” என்று இணை-தலைமை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜெனாரோ அயோவினோ விளக்கினார்.

“ஒரு அரங்க மேடையைப் போலவே, நீங்கள் இயற்கைக் காட்சி, பின்னணி மற்றும் குற்றவாளி (வெசுவியஸ் மலை) ஆகியவற்றைக் காண்கிறீர்கள். காணாமல் போன மக்கள், குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் கதைகளைச் சொல்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வல்லவராக இருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

கூடுதல் தகவல்கள்: டோனி ஜாலிஃப்

பண்டைய ரோமானிய நகரில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள்

பட மூலாதாரம், BBC/Tony Jolliffe

SOURCE : THE HINDU