Home Latest news tamil சமீபத்திய செய்தி தொகுதி மறுவரையறை மசோதா: தமிழக எம்.பி.க்கள் கேள்வியும், மோதி – அமித் ஷா பதிலும் என்ன?

தொகுதி மறுவரையறை மசோதா: தமிழக எம்.பி.க்கள் கேள்வியும், மோதி – அமித் ஷா பதிலும் என்ன?

34
0

SOURCE :- BBC NEWS

தொகுதி மறுவரையறை மசோதா -  தமிழக எம்.பி.க்களின் கேள்வியும், மோதி -அமித் ஷாவின் பதிலும் என்ன?

பட மூலாதாரம், Sansad/Youtube

26 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது. இவை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அமல்படுத்துவது மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பானவை.

தற்போதுள்ள 543 மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது இந்த மசோதாக்களின் ஒரு நோக்கமாகும்.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தென் மாநிலங்களில் கடும் ஆட்சேபனை இருந்த நிலையில், இதுகுறித்த விவாதம் மக்களவையில் நடந்தது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

மகளிருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் மற்ற மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது ‘சாண்ட்விச்’ போல இருப்பதாக கூறிய திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதாவால் வட மாநிலங்களுக்கு கூடுதல் ஆதாயம் என்ற தென்மாநிலங்களின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விகிதாச்சாரங்களின் அடிப்படையிலேயே தொகுதிகள் அதிகரிக்கும் என்று விளக்கமளித்தார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

பட மூலாதாரம், Sansad/Youtube

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் இந்த மசோதாக்களை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்த அவர், ”இந்த மசோதாக்கள் மூலம் எந்த மாநிலங்களுக்கும் இழப்பு ஏற்படாது” என்று தெரிவித்தார்.

”இந்த செயல்முறைக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும்” என்று கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி. ஆர் பாலு

பட மூலாதாரம், Sansad/Youtube

தமிழக எம்பிக்கள் பேசியது என்ன?

இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தமிழக எம்.பி.க்கள், ”மகளிர் இட ஒதுக்கீட்டை ஆதரிப்போம். ஆனால் அதன் பின்னூடாக வரும் தொகுதி மறுவரையறையை ஏற்கமாட்டோம்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுகவின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி. ஆர் பாலு, “தொகுதி மறு வரையறை , மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற அனைத்தையும் ஒன்றாக இணைத்து பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் குறுக்கு வழியில் ஒரு மசோதாவை நிறைவேற்ற பார்ப்பதை ஏற்க முடியாது” என்று தெரிவித்தார்.

இந்த மசோதாவை கண்டித்து தமிழ்நாட்டில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்தததை அவர் அவையில் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த வாதம் அவைக்கு தேவையற்றது என சபாநாயகர் கருத்து தெரிவித்தார்.

“2023-ஆம் ஆண்டே பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் புதிய மசோதா தேவையில்லை” என்று தெரிவித்தார் டி. ஆர் பாலு.

“மகளிருக்கான 33 % இட ஒதுக்கீட்டை திமுக ஆதரிக்கிறது ஆனால் 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அதனை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்” என்றார்

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

பட மூலாதாரம், Sansad/Youtube

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவாதத்தில் பேசிய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, திமுக பிரிவினை வாதத்தை பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

அதற்கு பதிலளித்த ஆ. ராசா, ”1971-ல் இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்த போது தமிழ்நாடு 6 கோடி நிதியை மத்திய அரசுக்கு வழங்கியது, எந்த ஒரு மாநிலமும் அது போன்ற ஒரு பெரும் தொகையை நிதியாக வழங்கவில்லை” என கூறினார்.

”தேசப்பற்று தொடர்பாக தேஜஸ்வி சூர்யா போன்றவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியது இல்லை” என்று அவர் பதிலளித்தார்.

“மாநில சுயாட்சிக்கு மரியாதை தராமல் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை எங்கள் மீது திணிக்கும் போது மட்டுமே நாங்கள் எங்கள் அடையாளத்தை தனிமைப்படுத்தி காட்டுகிறோம்” என்று அவர் மக்களவையில் பேசினார்.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

பட மூலாதாரம், Sansad/Youtube

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பேசுகையில், “தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை அரசியல் ரீதியாக ஒழித்துக் கட்ட நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என்று விமர்சித்தார்.

“சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களிலும், நடைபெற இருக்கக்கூடிய தேர்தல்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்திருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் தற்போது மசோதாவாக தாக்கல் செய்வது ஏன்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“தொகுதி மறுவரையறை மசோதா அமல்படுத்தினால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கும். உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிக பிரதிநிதித்துவம் பெரும்” என்று அவர் பேசினார்.

பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து வருவதால் அவர்களை வஞ்சிப்பதற்காகவே இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரச்னைகளை பேசுவோம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பட மூலாதாரம், Sansad/Youtube

மத்திய அரசின் பதில் என்ன?

மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ”தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என எந்த திசையாக இருந்தாலும் சரி; சிறிய மாநிலங்கள், பெரிய மாநிலங்கள் என எதுவாக இருந்தாலும் சரி, இன்று மிகுந்த பொறுப்புடன் இதைக் கூற விரும்புகிறேன் – முடிவெடுக்கும் நடைமுறையில் யாருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டப்படாது. இந்த நடைமுறையில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது.” என்றார்

”இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை மற்றும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் விகிதாச்சாரம் எதுவோ, அதில் எந்த மாற்றமும் இருக்காது. வளர்ச்சியும் அதே விகிதாச்சாரத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.” என்றார்

மேலும் அவர்,” உங்களுக்கு ‘உத்தரவாதம்’ என்ற வார்த்தை தேவையென்றால், ‘உத்தரவாதம்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறேன். உங்களுக்கு ‘வாக்குறுதி’ என்ற வார்த்தை தேவையென்றால், ‘வாக்குறுதி’ என்ற சொல்லை பயன்படுத்துகிறேன். இதைச் சொல்ல தமிழில் இதைவிடச் சிறந்த சொல் ஏதேனும் இருந்தால், அதையும் சொல்ல தயாராக இருக்கிறேன்” என்றார் மோதி.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருப்பு உடை அணிந்து வந்தது குறித்து பேசிய மோதி, ”எப்போதெல்லாம் ஏதேனும் ஒரு நல்ல விஷயம் நடக்கிறதோ, அப்போது திருஷ்டி பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் ‘கருப்பு பொட்டு’ இடும் வழக்கம் உள்ளது. அந்த ‘கருப்புப் பொட்டு’ இட்டதற்காக உங்களுக்கு (திமுக-வினர்) நன்றி கூறுகிறேன்.” என்றார்.

ஷார்ட் வீடியோ

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

SOURCE : BBC