SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், sansad tv
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்புக் கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ”இன்று இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் நீண்ட காலப் போக்கில் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்” என்று கூறினார்.
தொகுதி மறுவரையறை குறித்துப் பேசிய பிரதமர், “இன்று நான் பொறுப்புடன் கூற விரும்புவது என்னவென்றால், இந்த முடிவு எடுக்கும் செயல்முறை யாருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டாது. யாருக்கும் அநீதி இழைக்கப்படாது,” என்று தெரிவித்தார்.
”இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை மற்றும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் விகிதாச்சாரம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. அதன் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை நடைபெறும். இதற்கு உத்தரவாதம் தேவையென்றால், நான் உத்தரவாதம் அளிக்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
மகளிர் இடஒதுக்கீடு குறித்துப் பேசிய அவர், ” இது அவர்களின் உரிமை. பல தசாப்தங்களாக நாம் இதைத் தடுத்து வைத்துள்ளோம், இன்று அதற்குப் பரிகாரம் செய்து, அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது,” என்று தெரிவித்தார்.

என்னென்ன மசோதாக்கள்?
முன்னதாக, மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தின்போது, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ”இந்த செயல்முறைக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கும்” என்று கூறினார்.
அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகிய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து அதிகபட்சமாக 850 ஆக அதிகரிக்கப்படும், மேலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்’ என மத்திய அரசு கூறுகிறது.
இவை 2023-இல் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. இச்சட்டம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்குகிறது. ஆனால் அதன் அமலாக்கத்தை எதிர்கால மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் இணைத்திருந்தது.
அதாவது, மக்களவை இடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பின்னரே, பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
பட மூலாதாரம், Sansad TV
அரசியலமைப்பு (131-வது திருத்தச் சட்டம்) மசோதா, 2026-ஐ அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளனர்.
இம்மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பை பதிவு செய்த உறுப்பினர்களில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். எம்.பி. ஓவைசி ஆகியோரும் அடங்குவர். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சி.பி.எம். (CPI-M) ஆகிய கட்சிகளும் இம்மசோதாக்களை எதிர்க்கின்றன.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றிய காங்கிரசின் கே.சி. வேணுகோபால், “மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் அமித் ஷா ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நான் எதிர்க்கிறேன். இந்த மசோதா இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான அடிப்படைத் தாக்குதலாகும். இந்த மசோதாவின் உண்மையான நோக்கம் என்ன? ஏற்கெனவே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவை நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் நிறைவேற்றியுள்ளது” என்று கூறினார்.
இதற்கு உடனடியாகப் பதில் கொடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மசோதாக்களை அறிமுகப்படுத்தும் கட்டத்தில் அதன் நன்மைகள் குறித்து வேணுகோபால் கேள்வி எழுப்ப முடியாது என்றும், தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபனைகளை எழுப்புவதற்கு மட்டுமே அவருக்கு அனுமதி உண்டு என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் “வலுவான பதிலடி” கொடுக்கும் என்றும் அமித் ஷா கூறினார்.
மேலும், “பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதன் தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்வதற்காக இந்த இரண்டு மசோதாக்களும் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டுள்ளன” என்று அமித் ஷா கூறினார்.
நகலை எரித்து ஸ்டாலின் போராட்டம்
பட மூலாதாரம், MK Stalin/X page
தொகுதி மறுவரையறை சட்ட முன்வடிவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
தேர்தல் பிரசாரத்திற்காக நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்தார்.
இதனை தமது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டாலின்,”தமிழர்களை அவர்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கும் மசோதாவின் நகலை எரித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
ஷார்ட் வீடியோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

SOURCE : BBC



