Home Latest news tamil சமீபத்திய செய்தி ‘தேர்தல் பரிசுப்பொருள்’ விநியோகத்தில் தகராறு – இளம் பெண் மரணம் தொடர்பாக 6 பேர் கைது

‘தேர்தல் பரிசுப்பொருள்’ விநியோகத்தில் தகராறு – இளம் பெண் மரணம் தொடர்பாக 6 பேர் கைது

26
0

SOURCE :- BBC NEWS

சிந்துஜா

பட மூலாதாரம், Handout

(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடம் தரலாம்)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் பரிசுப் பொருட்கள் வழங்கி வாக்கு சேகரிப்பதாக தேர்தல் ஆணையத்தில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பரிசுப் பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னையால் சிந்துஜா(25) என்ற பெண் மரணமடைந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

மரணத்துக்கான காரணம் என்ன?

பரிசுப்பொருள்

பட மூலாதாரம், Handout

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாழைக்கட்டை என்ற கிராமத்தில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திமுகவினரால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை சிலர் விநியோகித்ததாக காவல்துறை அறிக்கை கூறுகிறது.

சிந்துஜாவின் மரணம் குறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, அவருக்கு பரிசுப் பொருள் வழங்க சிலர் மறுத்ததாக கூறப்படுகிறது.

“பரிசுப் பொருட்கள் வழங்கவில்லை என்றால் வேட்பாளர் பிரசாரத்திற்கு வரும் போது கேள்வி கேட்பேன்” என சிந்துஜா தெரிவித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜா, ராஜேந்திரன், ரவிக்குமார், ராஜ்குமார், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் சிந்துஜாவை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் கடுமையாக தாக்கியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக்கு சென்ற சிந்துஜா இரவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உறவினர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

உறவினர்கள் சொல்வது என்ன?

இளையராணி

பட மூலாதாரம், Handout

பரிசு பொருள் கேட்க சென்ற எங்கள் பெண்ணை அடித்து அவமானப்படுத்தியதால் இறந்துவிட்டார், இதற்கு காரணமாக திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிந்துஜாவின் உறவினர் இளையராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்துஜாவின் உறவினர் இளையராணி, “வாழைக்கட்டை கிராமத்தில் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த பகுதியை சேர்ந்த திமுகவினர் சிந்துஜாவுக்கு மட்டும் வழங்காமல், எங்கள் விருப்பம் போல்தான் கொடுப்போம் என்ற சொன்னார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

காவல்துறை வழக்குப்பதிவு

விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள்.

பட மூலாதாரம், Handout

இந்த சம்பவம் தொடர்பாக சிந்துஜாவின் உறவினர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய காலதாமதம் ஆனால் சிந்துஜாவின் உறவினர்கள் நேற்று (ஏப்ரல் 15) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படியும், பெண்ணை தாக்குதல், ஆபாசமாக திட்டுதல், தானாக முன் வந்து காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் ஒன்பது நபர்களில் ராஜா, ராஜேந்திரன், ரவிக்குமார், புஷ்பம், ராஜேஸ்வரி, அங்குமணி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கொள்ளிடம் காவல்நிலைய ஆய்வாளர் வீரபாண்டி, புகாரில் சம்பந்தப்பட்ட 9 பேரில் 6 பேர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் மீதமுள்ள 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “ஒரே தெருவில் குடியிருக்கும் அவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள், வாய்த்தககராறு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

இறந்த பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் படி 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணின் உறவினர்கள் விடுத்த வேண்டுகோளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இறந்த பெண்ணின் உடல் இன்று உடற்கூராய்வு செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். உடற்கூராய்வுக்கு பிறகு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

போராட்டத்தில் ஈடுபட்ட சிந்துஜாவின் உறவினர்கள்

பட மூலாதாரம், Handout

இந்த சம்பவம் தொடர்பாக தன்னுடய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ” தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக கூப்பன் வழங்கப்படுகிறது.” என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “மணச்சநல்லூரில் இதுபோன்ற பணிகளின் போது தனக்கு கூப்பன் ( மணச்சநல்லூரில் வழங்கப்பட்டது பரிசுப்பொருள் ) கிடைக்காததை கேட்ட பெண் கடுமையாக தாக்கப்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த பெண்ணின் மரணம் தற்கொலை என மருத்துவர்கள் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

அதே போல மணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரதன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மணச்சநல்லூரில் தேர்தல் விதிமுறைகளை மீறி பல இடங்களில் பரிசுப் பொருட்கள் திமுகவினர் வழங்கி வருகின்றனர் இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

திமுகவினர் சொல்வது என்ன?

ஒரே பகுதியில் உறவினர்கள் போல வாழ்ந்து வந்தவர்கள் , முன்பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறில் அசாம்பாவிதம் நடந்துள்ளதாக திமுக மணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில் தெரிவித்துளார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், அப்பகுதியில் திமுக சார்பில் பரிசுப்பொருள் விநியோகம் நடந்ததை ஒப்புக்கொண்டார்.

ஆனால்,”உயிரிழந்த பெண்ணும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களும் திமுகவின் உறுப்பினர்கள் தான். ஒரே கிராமத்தில் உறவினர்கள் போல் வாழ்ந்து வந்தஅவர்களுக்கிடையே இருந்த முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது ஆனால் இதனை அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினர் தொடர்புபடுத்தி பெரிதாக்குகின்றனர்.” என்று அவர் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC