Home தேசிய national tamil விஜய் மீண்டும் நடிக்க வருகிறாரா? ‘ஜனநாயகன்’ கசிந்தது பற்றி திரையுலகினர் கூறியது என்ன?

விஜய் மீண்டும் நடிக்க வருகிறாரா? ‘ஜனநாயகன்’ கசிந்தது பற்றி திரையுலகினர் கூறியது என்ன?

33
0

SOURCE :- BBC NEWS

ஜனநாயகன் லீக், விஜய் மீண்டும் நடிப்பாரா?

பட மூலாதாரம், @KvnProductions

அரசியலில் நுழைந்த விஜய் தனது கடைசி படம் என அறிவித்த ஜனநாயகன் இணையத்தில் கசிந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, படத்தை தயாரித்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பெயரில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜனநாயகன் படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுதவிர, கோவை கருமத்தம்பட்டியில் ஜனநாயகன் படத்தை உள்ளூர் கேபிள் டிவியில் ஒளிபரப்பியதாக, பழனிசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கேபிள் டிவி அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

”காவல்துறை நெருங்கிவிட்டது”

ஜனநாயகன் படத்தின் படத்தொகுப்பாளர் பிரதீப் மீது குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில், சென்னை பெப்சி (FEFSI – தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்) அலுவலகத்தில் திங்கட்கிழமை பெப்சி தலைவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ”ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த விஷயத்தில் படத்தொகுப்பாளர் மீது தவறில்லை. நாங்கள் முழுமையாக விசாரித்த பின் இதை சொல்கிறோம். ‘எடிட்டர் ரெஃபரன்ஸ் என்ற வாட்டர் மார்க் லோகோவுடன் படம் கசிந்துள்ளது. திருட செல்பவர் தங்கள் அடையாள அட்டையை வெளியிடுவாரா? அந்த தவறை யார் செய்தாலும் தவறுதான். அவர்களை காவல்துறை நெருங்கிவிட்டது. ஒருவேளை படம் கசிந்த விவகாரத்தில் திரைத்துறையினர் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களை இத்துறையிலிருந்து விலக்கி வைப்போம். அவருக்கு எந்த சங்கமும் ஆதரவு கொடுக்காது.” என்றார்.

ஜனநாயகன் லீக், விஜய் மீண்டும் நடிப்பாரா?

பட மூலாதாரம், RK SELVAMANI / FACEBOOK

“ஒலிக்கலவை நடந்த ஹைதராபாத்தில் கசிந்திருக்க வாய்ப்புள்ளது”

அதேபோன்று, தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர் சங்க தலைவர் கோபியும் செல்வமணியின் கருத்தையே வலியுறுத்தொனார்.

“பெரும்பாலும் ஒரு படம் படத்தொகுப்பாளர் மேசைக்கு வந்த பின்னரே மற்ற துறைகளுக்கு செல்லும். அதனால் அந்த ‘வாட்டர் மார்க்’ இருந்தது. அதை வைத்து பழி போடக்கூடாது. ஜனநாயகன் படம் 5 மொழிகளில் வெளியாகவிருந்ததால் ஹைதராபாத்தில் ஒலிக்கலவை நடந்தது. அங்கே சென்ற இடத்தில் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. அடுத்து இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க படத்தொகுப்பாளர்கள் சங்கம் சார்பில் கடும் கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் வெளியிடப்படும்.” என்கிறார்.

விஜய் மீண்டும் நடிக்க வருகிறாரா?

ஜனநாயகன் தான் கடைசி படம் என்று அறிவித்துவிட்டு, முழுநேர அரசியலில் இறங்கிவிட்ட விஜய், அப்படம் இணையத்தில் கசிந்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடிப்பார் என்று சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. இது நடக்குமா என்பது குறித்து திரைத்துறையில் பலரிடம் பேசினோம்.

விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை இயக்கிய பேரரசு பிபிசி தமிழிடம் கூறுகையில், ”நான் பல மாதங்களாக பல மேடைகளில் சொல்லி வரும் விஷயம் இது. கண்டிப்பாக, விஜய் நடிக்க வேண்டும். அவர் சினிமாவை விட்டு விலகியதால் அவருக்கு இழப்பா என தெரியவில்லை. ஆனால், சினிமாவுக்கு குறிப்பாக, திரைத்துறையில் உள்ளவர்களுக்கு இழப்பு. அவர் ஒரு படத்தில் நடித்தால் அந்த பட இயக்குநர், முக்கியமாக தொழில்நுட்ப வல்லுநர்கள், நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் என நுாற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நடனக் கலைஞர்கள், சண்டைக் கலைஞர்கள், துணை நடிகர்களுக்கும் வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்கும். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும்.” என்றார்.

விஜய் அரசியலுக்கு என பல மாதங்களையும் சினிமாவுக்கு என சில மாதங்களையும் ஒதுக்க வேண்டும் என்றும் இயக்குநர் பேரரசு வலியுறுத்தினார்.

”ஜனநாயகன் வெற்றிதான் முடிவு செய்யும்”

ஜனநாயகன் லீக், விஜய் மீண்டும் நடிப்பாரா?

பட மூலாதாரம், Dhananjayan

அதேசமயம் தயாரிப்பாளர் தனஞ்செயன் கருத்தோ வேறு மாதிரி இருக்கிறது.

அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”ஜனநாயகன் படத்தை விரைவில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏப்ரல் 24-ஆம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளது. அது நடக்காவிட்டால், ஏப்ரல் 30-ல் படம் வெளியாகலாம். விரைவில் தணிக்கை சான்றிதழ் வந்துவிடும் என நம்புகிறோம். ஜனநாயகன் இணையத்தில் கசிந்துவிட்டாலும், விஜய் படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள்.” என்றார்.

”தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த அத்தாரண்டிக்கு தாரேதி (2013) என்ற படம், வெளியீட்டுக்கு முன்பே 90 நிமிட காட்சிகள் கசிந்துவிட்டது. ஆனாலும் அந்த படம் தெலுங்கில் ஹிட்டானது” என்றார் அவர்.

“விஜய் மீண்டும் நடிப்பாரா என்பதற்கு ஜனநாயகன் திரையரங்குகளில் எப்படி ஓடுகிறது என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை பெரிய பாதிப்பு ஏற்பட்டால் அவர் நடிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அதுவும் அவரின் தனிப்பட்ட முடிவு.” என்கிறார் அவர்.

எனினும், விஜய் மீண்டும் நடிக்கப் போகிறார் என்பது ஒருவகையில் வதந்தியே என்றும் அவர் குறிப்பிட்டார்.

”வசூல் குறையலாம், மக்கள் பார்ப்பார்கள்”

இதுகுறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதரிடம் பிபிசி சார்பில் கேட்டபோது, ”விஜய் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவரால் திரையரங்குகள் லாபம் பெற்றன. நான் அறிந்தவரையில் ஜனநாயகனை தயாரித்த கேவிஎன் நிறுவனத்துக்காக விஜய் படம் நடிக்கக் கூடும். அவருக்கு அந்த குணம் உண்டு. ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த நிலையில், பெங்களூருவில் உள்ள கேவிஎன் நிறுவனத்தில் விநியோகஸ்தர்கள் பேசியுள்ளனர். ஜனநாயகன் இணையத்தில் கசிந்ததால் வசூல் குறையலாம். ஆனால், விஜய் ரசிகர்கள், மக்கள் படத்தைக் கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வருவார்கள்.” என்றார்.

இதற்கு முன்பு செய்த வியாபார முறையை, ஒப்பந்தத்தை விநியோகஸ்தர்கள் மாற்றிக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

நாசர், சசிகுமார், மிஷ்கின் வேண்டுகோள்

மலேசியாவில் நடந்த ஜனநாயகன் பட விழாவிலேயே விஜய் திரைத்துறையை விட்டு போகக்கூடாது என்று நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியிருந்தார்.

நாசரை போல, நடிகர் சசிகுமாரும் விஜய் ஆண்டுக்கு ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

இயக்குநர் மிஷ்கின் உட்பட பல நடிகர்கள், நடிகைகளும் அரசியலுக்கு சென்றாலும் விஜய் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU