Home தேசிய national tamil அமெரிக்க முற்றுகைக்கு பிறகும் இரான் தொடர்புடைய 4 கப்பல்கள் ஹோர்மூஸை கடந்தது எப்படி?

அமெரிக்க முற்றுகைக்கு பிறகும் இரான் தொடர்புடைய 4 கப்பல்கள் ஹோர்மூஸை கடந்தது எப்படி?

22
0

SOURCE :- BBC NEWS

ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகே தற்போது உள்ள 14 அமெரிக்கக் கடற்படைக் போர்க்கப்பல்களில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனும் ஒன்றாகும்.

பட மூலாதாரம், Reuters

அமெரிக்காவின் இரான் துறைமுக முற்றுகை தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் சீரற்ற தன்மை தெளிவாக தெரிந்தது.

இரான் தொடர்புடைய குறைந்தது நான்கு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

அவற்றில் இரு கப்பல்கள் இரானின் பண்டார் இமாம் கொமேனி துறைமுகம் மற்றும் புஷெர் துறைமுகத்திலிருந்து வந்தவை.

இதற்கான சில காரணங்கள் இருக்கலாம்.

அமெரிக்க கடற்படை இன்னும் முழுமையாக தயார் ஆகாமல் இருந்திருக்கலாம் அல்லது, அந்த கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தை மறைப்பதற்காக ‘ஸ்பூஃபிங்’ எனப்படும் தவறான இருப்பிடத் தகவல்களை அனுப்பி இருக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் இதில் சீனாவின் தாக்கமும் முக்கியம். சீனா இரான் எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடாக இருப்பதால், அமெரிக்காவின் நடவடிக்கையை கண்டித்துள்ளது.

சீனா இந்த பிரச்னையை அமைதியான மற்றும் ராஜீய ரீதியில் தீர்க்க விரும்புகிறது.

ஆனால் இந்த பதற்ற நிலை நீடித்தால், சீனாவுக்கு செல்லும் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க கடற்படை அனுப்ப வேண்டுமா? என்ற விவாதம் சீனாவில் தொடங்க வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

அமெரிக்கா கூறுவது என்ன?

ஆனால், இரான் துறைமுக முற்றுகை தொடங்கிய 24 மணி நேரத்தில் ஒரு கப்பலும் கடந்து செல்லவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

10,000க்கும் மேற்பட்ட ராணுவப் பணியாளர்கள், பல போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்றும் ஆறு வர்த்தக கப்பல்கள் அமெரிக்க படையினரின் உத்தரவின்படி திரும்பி, மீண்டும் இரானிய துறைமுகத்திற்குள் சென்றன என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

கடந்த வாரம் ஹோர்மூஸ் நீரிணையை கடந்த ஒரு கப்பல்

பட மூலாதாரம், Getty Images

கப்பல்கள் எவை?

பிபிசி உறுதிப்படுத்திய கப்பல் கண்காணிப்பு தரவுகள், 4 இரான் தொடர்புடைய கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை வழியாக கடந்ததாக காட்டுகின்றன.

கண்காணிப்பு தரவுகளின்படி, இரானின் பண்டார் இமாம் கொமேனி துறைமுகத்திற்குச் சென்ற கிறிஸ்டியானா என்ற சரக்குக் கப்பல், முற்றுகை தொடங்கிய பிறகு திங்களன்று நீரிணையைக் கடந்துள்ளது.

இரான் தொடர்பான வர்த்தகத்திற்காக அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ரிச் ஸ்டாரி கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் ஷார்ஜாவிலிருந்து கிழக்கு நோக்கி ஹோர்மூஸ் நீரிணை வழியாக இரவு நேரத்தில் பயணித்ததை தரவுகள் காட்டுகின்றன.

இரான் தொடர்பான வர்த்தகத்திற்காக அமெரிக்கத் தடையின் கீழ் உள்ள மற்றொரு டேங்கர் கப்பலான முரளிகிஷன் சீனாவின் லான்ஷானில் இருந்து புறப்பட்டு இரவு நேரத்தில் நீரிணை வழியாக மேற்கு நோக்கிச் சென்றது. மரைன் ட்ராஃபிக் தகவல்படி, அதன் கடைசியாகப் பதிவான இருப்பிடம் இரானின் கெஷ்ம் தீவுக்குக் கிழக்கே இருந்தது.

மற்றொரு டேங்கர் கப்பலான எல்பிஸ், இரானின் புஷெர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செவ்வாயன்று கிழக்கு நோக்கி நீரிணையைக் கடந்தது. இதுவும் அமெரிக்கத் தடையின் கீழ் உள்ளது, இதன் இலக்கு எங்கு என்பது தெரியவில்லை.

திங்கள்கிழமை இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல், “இரான் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல்சார் போக்குவரத்தையும்” முற்றுகையிடப்போவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

அதே நேரத்தில், “இரான் அல்லாத பிற துறைமுகங்களுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் பயணச் சுதந்திரத்திற்கு எந்தத் தடையுமிருக்காது” என்றும் அது கூறியுள்ளது.

சீனா கூறியது என்ன?

பட மூலாதாரம், Reuters

சீனா கூறியது என்ன?

இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை “ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு, திங்களன்று இந்த முற்றுகை நடைமுறைக்கு வந்தது.

இந்த முற்றுகை “பதற்றத்தை அதிகப்படுத்தும் மற்றும் ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும்” என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் எச்சரித்துள்ளார்.

“இது ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடத்தை” என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் குவோ கூறினார்.

இரான் நாட்டிற்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக வெளிவந்த செய்திகள் “முற்றிலும் புனையப்பட்டவை” என்று குவோ தெரிவித்தார்.

இந்தச் செய்திகளின் பின்னணியில், இரானிற்கு சீனா ராணுவ உதவி வழங்கினால், சீனப் பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

“சீனா மீது கூடுதல் வரிகளை விதிப்பதற்கு அமெரிக்கா இதனை ஒரு சாக்காகப் பயன்படுத்தினால், சீனா நிச்சயமாக உறுதியான பதில் நடவடிக்கைகளை எடுக்கும்” என்று குவோ கூறினார்.


உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU