Home தேசிய national tamil டாப் 4 இடங்களுக்குள் நுழையுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? டெல்லிக்கு எதிராக 193 ரன்கள் எடுத்தது

டாப் 4 இடங்களுக்குள் நுழையுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? டெல்லிக்கு எதிராக 193 ரன்கள் எடுத்தது

14
0

SOURCE :- BBC NEWS

இந்தப் போட்டியில் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார் ரியான் பராக்

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது 17 மே 2026, 13:56 GMT

புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 62வது போட்டியில் இன்று (மே 17) டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்தப் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிப்பதற்கு இரண்டு அணிகளுக்குமே இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம்.

12 போட்டிகளில் விளையாடியிருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அதில் ஐந்தில் வெற்றி பெற்றிருக்கிறது. 10 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறது. கடைசியாக மே 9ம் தேதி விளையாடிய அந்த அணி, கடைசி 15 நாள்களில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடியிருக்கிறது.

இதுவரை 11 போட்டிகளில் விளையாடியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது. ஐந்தாவது இடத்தில் இருக்கும் அந்த அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் டாப் 4 இடங்களுக்குள் முன்னேற முடியும்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.

ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ராயல்ஸ் இன்னிங்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தது. 12 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால், லுங்கி எங்கிடி பந்துவீச்சில் ஸ்டார்க் வசம் கேட்சாகி வெளியேறினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த பார்ட்னர்ஷிப் 34 பந்துகளிலேயே 70 ரன்கள் விளாசியது. வழக்கம்போல் அதிரடியாக பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசிய சூர்யவன்ஷி, 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் விக்கெட்டை இளம் ஆல்ரவுண்டர் மாதவ் திவாரி கைப்பற்றினார்.

அதன்பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டினார். அவரும், ஜுரெலும் அதிரடியாக ஆடியதால் ராயல்ஸின் ரன்ரேட் வெகுவாக உயர்ந்தது. முகேஷ் குவார் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்து 1 பவுண்டரி, 3 சிக்ஸர் என விளாசினார் பராக். அதன் காரணமாக, 14 ஓவர்கள் முடிவில் 160/2 என்ற மிகச் சிறந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஆனால், 15வது ஓவரில் ஆட்டத்தை மொத்தமாக மாற்றினார் மிட்செல் ஸ்டார்க். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்தினார் ஸ்டார்க். 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பராக். அதற்கடுத்து களமிறங்கிய டானவன் ஃபெரீரா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். ஸ்டார்க்கின் ஹாட்ரிக் பந்தை சந்தித்த ரவி சிங், அந்தப் பந்தில் பவுண்டரி அடித்து ஹாட்ரிக்கைத் தவிர்த்தார். ஆனால், அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டையும் கைப்பற்றினார் ஸ்டார்க். அவர், 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த 165/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது ராயல்ஸ்.

அதன்பிறகு அந்த அணியால் சரிவிலிருந்து மீளவே முடியவில்லை. கடைசி கட்டத்தில் பந்துவீசிய மாதவ் திவாரி, ஸ்டார்க், லுங்கி எங்கிடி அனைவரும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். அதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களே எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஒருபக்கம் துருவ் ஜுரெல் மட்டும் போராடி அந்த அணியை இந்த ஸ்கோருக்கு எடுத்துவந்தார். கடைசி ஓவரில் ஆட்டமிழந்த ஜுரெல், 40 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

கடைசி 35 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே எடுத்த ராயல்ஸ், 6 விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி கேபிட்டல்ஸ் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். லுங்கு எங்கிடி, மாதவ் திவாரி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

4 ஓவர்கள் வீசிய எங்கிடி 24 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்

பட மூலாதாரம், ANI

பிளேயிங் லெவனில் யார்?

டெல்லி கேபிட்டல்ஸ்

இந்தப் போட்டிக்கான கேபிட்டல்ஸ் அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டது. காயமடைந்த ஆகிப் நபிக்குப் பதிலாக திரிபுரணா விஜய் சேர்க்கப்பட்டார். அவர் விளையாடும் முதல் ஐபிஎல் ஆட்டம் இது.

பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் பொரெல், சஹில் பராக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அக்‌ஷர் பட்டேல் (கேப்டன்), முகேஷ் குமார், மாதவ் திவாரி, திரிபுரணா விஜாய், லுங்கி எங்கிடி, மிட்செல் ஸ்டார்க்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அஷுதோஷ் ஷர்மா, சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், பதும் நிசன்கா, கருண் நாயர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்தப் போட்டிக்கான ராயல்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேப்டன் ரியான் பராக் மீண்டும் திரும்பினார். அவர் காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடவில்லை. அதேபோல், ரவி சிங், ஆடம் மில்ன் ஆகியோரும் அந்த அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்கள். முந்தைய போட்டியில் ஆடிய ரவீந்திர ஜடேஜா, ஷிம்ரன் ஹிட்மெயர் மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை.

பிளேயிங் லெவன்: வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), ரவி சிங், டானவன் ஃபெரீரா, ஷுபம் துபே, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆடம் மில்ன், பிரிஜேஷ் ஷர்மா, யஷ் ராஜ் புஞ்சா.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: தசுன் ஷனகா, லுவான் ட்ரே-பிரிடோரியஸ், ரவி பிஷ்னாய், சுஷாந்த் மிஷ்ரா, அமன் ராவ்.

SOURCE : THE HINDU