SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், ANI
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் நான்காவது முறையாகத் தோற்றிருக்கிறது. ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்திருந்த நிலையில் உப்பல் ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக தோல்வியடைந்திருக்கிறது ஐந்து முறை சாம்பியன் சிஎஸ்கே.
முதலில் பேட்டிங் செய்து இரண்டு போட்டிகளை வெற்றி பெற்ற அந்த அணியால் இப்போது 194 என்ற இலக்கை சேஸ் செய்ய முடியவில்லை. இது 2018க்குப் பிறகு தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் தான்.
இந்த சீசன் தொடங்கும்போது பேட்டிங் அட்டகாசம், பௌலிங் தான் பிரச்னை என்று பேசிக்கொண்டிருந்த நிலையில், தற்போது எல்லாம் தலைகீழாக மாறிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. சிஎஸ்கே பௌலர்கள் மெல்ல முன்னேற்றம் கண்டுகொண்டிருக்க, பேட்டர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறார்கள்.
அதேசமயம் சூப்பர் கிங்ஸைப் போலவே விமர்சனம் செய்யப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுமே எழுச்சி கண்டிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது போட்டியாக தாங்கள் எடுத்த ஸ்கோரை டிஃபண்ட் செய்து வென்றிருக்கிறது அந்த அணி.
மேத்யூ ஷார்ட் முடிவு சரிதான்
சன்ரைசர்ஸ் அணிக்கு அவர்களின் பவர்பிளே மிகப் பெரிய பலமாக அமைந்துவிட்டது. அபிஷேக் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்து தன் அணிக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். மேத்யூ ஷார்ட் வீசிய ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை அவர் நன்கு பயன்படுத்திக்கொண்டார். அந்த ஓவரில் 25 ரன்கள் எடுக்கப்பட்டது சூப்பர் கிங்ஸை சற்று பின்தங்க வைத்தது.
இந்த இடத்தில், அகீல் ஹொசைனுக்குப் பதிலாக ஷார்ட் தேர்வு செய்யப்பட்ட முடிவு குறித்து பலரும் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். ஆனால், இந்த முடிவை நான் தவறானது என்று சொல்லமாட்டேன். போட்டியின் முடிவுக்குப் பின்னர் அந்த முடிவை இப்போது விமர்சிக்கலாம். ஆனால், அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் என 3 இடது கை பேட்டர்கள் டாப் ஆர்டரில் இருக்கும்போது ஷார்ட்டை எடுத்த முடிவு சரிதான்.
அபிஷேக் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறியது உலகக் கோப்பையில் நிறையவே பார்த்தோம். ஹெட் கூட சமீபத்தில் சரியான ஃபார்மில் இல்லை எனும்போது இந்த மாற்றம் நல்ல முடிவைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். என்ன, அந்த ஓவர் சரியாகப் போகவில்லை. அதில் கூட ஷார்ட் அவ்வளவு மோசமாகப் பந்துவீசிடவில்லை. லென்த்தை மட்டும் சற்று மாற்றி ‘பேக் ஆஃப் லென்த்’ வீசியிருக்கலாம். ஆனால், அபிஷேக் ஆடிய விதம் அட்டகாசமாக இருந்தது. கடைசியில் அந்த அணி 194 என்ற ஸ்கோர் வருவதற்கு அவர் அடித்த 59 ரன்கள் மிகப் பெரிய காரணமாக அமைந்தது.
பட மூலாதாரம், ANI
சிறப்பாக கம்பேக் கொடுத்திருக்கும் சிஎஸ்கே பௌலர்கள்
என்னதான் இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் தோற்றிருந்தாலும், அவர்களின் பந்துவீச்சு நன்கு முன்னேறியிருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலுமே முன்னேற்றத்தைக் காண முடிகிறது. பவர்பிளேவில் 75 ரன்கள் அடித்துவிட்ட பிறகு, சன்ரைசர்ஸ் அணி எளிதாக 220 ரன்கள் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது சாதாரண விஷயம் இல்லை. பந்துவீசிய ஒவ்வொரு வீரருமே நல்லதொரு பங்களிப்பைக் கொடுத்தார்கள்.
இதுபோன்ற போட்டிகளில் விக்கெட்டுகள் மிகவும் முக்கியம். ஆரம்பத்தில் அது கிடைக்கவில்லையென்றாலும், பவர்பிளேவின் இறுதியில் 2 விக்கெட்டுகளை முகேஷ் சவுத்ரி கைப்பற்றினார். கடந்த 2 ஆண்டுகளாக சூப்பர் கிங்ஸின் முக்கிய பௌலராக விளங்கிய கலீல் அஹமது இல்லாத நிலையில், அந்த இடத்தை ஓரளவு நன்றாக நிரப்பினார் முகேஷ். நீண்ட காலமாக ஆடிக் கொண்டிருக்கும் அவர் தன் அனுபவத்தை நன்கு வெளிக்காட்டினார். கொஞ்சம் அதிகம் ரன் கொடுத்திருந்தாலும் அந்த விக்கெட்டுகள் மூலம் சூப்பர் கிங்ஸை அவர் மீண்டும் ஆட்டத்துக்குள் எடுத்துவந்தார்.
அதேபோல் மிடில் ஓவர்களிலும் அடுத்தடுத்து சூப்பர் கிங்ஸ் விக்கெட்டுகள் வீழ்த்தியது. குறிப்பாக ஜேமி ஓவர்டன்… என்ன மாதிரியான கம்பேக் அவருக்கு. கடந்த சீசன் அவருக்கு அவ்வளவு சிறப்பாகச் செல்லவில்லை. ஆனால், இம்முறை சிஎஸ்கே அவர்மீது நம்பிக்கை வைக்க, அவரும் அதற்கு ஏற்ப அற்புதமாக செயல்பட்டுவருகிறார்.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பைக் கொடுத்தவர், தற்போது பந்துவீச்சின் மூலமும் நல்ல தாக்கம் ஏற்படுத்துகிறார். கடினமான லென்த்களில் பந்துவீசி பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறார். முந்தைய போட்டிகளிலிருந்து இன்னமும் வேகம் சற்று அதிகரித்திருப்பதை இந்தப் போட்டியில் பார்க்க முடிந்தது. முக்கியமான தருணங்களில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவையான ‘இன்ஸ்பிரேஷன்’ ஓவர்டன் மூலம் கிடைக்கிறது.
பட மூலாதாரம், ANI
தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்த பிறகு மெல்லமெல்ல சிஎஸ்கே பந்துவீச்சில் நல்ல முன்னேற்றங்களைப் பார்க்க முடிகிறது. விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தவில்லை என்றாலும் நூர் அஹமதுவும் இந்தப் போட்டியில் நன்றாகவே பந்துவீசினார். அவருடைய முதல் ஓவரில் ஷிவம் துபே மட்டும் அபிஷேக் ஷர்மாவின் கேட்ச்சைப் பிடித்திருந்தால் நூர் அஹமதுவுடைய ஸ்பெல் வேறு மாதிரி இருந்திருக்கும்.
இவர்களை விட என்னை அதிகம் கவர்ந்தது அன்ஷுல் கம்போஜ். இந்த சீசன் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரிடம் பெரிய வேகம் இல்லை, ஸ்விங் இல்லை. ஆனால், அவர் வீசும் ‘வைட் யார்க்கர்கள’ பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த ஃபார்மட்டில் அப்படியான துல்லிய யார்க்கர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எப்பேர்ப்பட்ட பேட்டராக இருந்தாலும் அது கடினமாகத்தான் இருக்கும். ஒரு பந்து சிக்ஸர் போகும். ஆனால், அது சரியான சவால் கொடுக்கும். அந்த பந்துகளை கம்போஜ் மிகச் சிறப்பாக வீசுகிறார். அவர் தன்னுடைய வரம்புகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுகிறார். இந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், தற்போது பர்ப்பிள் கேப்பையும் வசப்படுத்தியிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய இந்த செயல்பாட்டுக்கு சிஎஸ்கே பௌலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸையும் நிச்சயம் பாராட்டியாகவேண்டும்.
அதேபோல் தமிழ்நாட்டுக்கு ஆடும் குர்ஜப்னீத் சிங் செயல்பாடும் நன்றாக இருந்தது. ஐபிஎல் போன்ற ஒரு பெரிய அரங்கில் எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடுகிறார். அவர் உயரத்தை நன்கு பயன்படுத்துகிறார். ஸ்லோயர் பால்களையும் சரியாகப் பயன்படுத்துகிறார். டெத் ஓவர்களில் நன்றாக பேட்டர்களை ஏமாற்றினார். இந்தப் போட்டியில் அதிக டாட் பால்கள் வீசியது (12) இவர்தான். போகப்போக இன்னும் பெரிய பங்களிப்பை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
சிஎஸ்கே பௌலர்கள், ஹைதராபாத் ஆடுகளத்தில் பவர்பிளேவுக்குப் பின்பான 14 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள் என்பது அபாரமான செயல்பாடு. ஏலம் முடிந்தது முதலே சிஎஸ்கே ‘பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. பந்துவீசுதான் பலவீனமாக இருக்கிறது’ என்று அனைவருமே பேசிவந்தோம். அவ்வளவு அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த பௌலிங் யூனிட் தற்போது செயல்பட்டுவரும் விதம் நிச்சயம் மகிழ்ச்சியளிக்கிறது.
பட மூலாதாரம், ANI
சூப்பர் கிங்ஸ் பேட்டிங் ஏமாற்றம்
அச்சுறுத்திய பந்துவீச்சு ஒருபக்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்க, பெரும் பலம் என்று கருதப்பட்ட சூப்பர் கிங்ஸின் பேட்டிங் இந்தப் போட்டியில் ஏமாற்றியிருக்கிறது. இந்த ஆடுகளத்தில் நிச்சயம் 194 என்ற ஸ்கோரை சேஸ் செய்திருக்கவேண்டும். ஆனால் மறுபடியும் ஒரு 190+ ஸ்கோரை சேஸ் செய்யத் தவறியிருக்கிறது சூப்பர் கிங்ஸ்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஃபார்ம் கவலையளிப்பதாக இருக்கிறது. இந்த சீசனில் 6 போட்டிகளிலும் சேர்த்தே அவர் 82 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். சூப்பர் கிங்ஸ் கேப்டன் நிச்சயம் தன்னுடைய செயல்பாட்டில் கவனம் செலுத்தவேண்டும். மறுபக்கம் இளம் ஆயுஷ் மாத்ரே மிகச் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார். களமிறங்கியது முதலே அதிரடி காட்டி நல்ல தாக்கம் ஏற்படுத்துகிறார். ஆனால், அவர் கொடுக்கும் அந்த அதிரடி தொடக்கங்களை சிஎஸ்கே சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறது. இந்தப் போட்டியிலும் அதுவே நடந்திருக்கிறது.
குறிப்பாக இந்தப் போட்டியின் மிடில் ஓவர்களில் போட்டியை மொத்தமாகக் கோட்டைவிட்டார்கள். மேத்யூ ஷார்ட் அதிக நேரம் எடுத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் அவரும் ஷிவம் துபேவும் ஆடும்போது 27 பந்துகள் பவுண்டரிகளே வரவில்லை. அந்த நேரத்தில் ஷார்ட் ஆடிய விதம் துபேவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அங்குதான் ஆட்டம் மாறிவிட்டது. அப்போது ஏற்பட்ட நெருக்கடி அதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழுவதற்குக் காரணமாக அமைந்தது.
இத்தனை காலமாக பந்துவீச்சு சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க, இப்போது அவர்கள் நன்றாக செயல்பட்ட போதும் பேட்டர்கள் மொத்தமாக சொதப்பியிருக்கிறார்கள். கையில் இருந்த ஆட்டத்தை அவர்கள் கோட்டைவிட்டுருக்கிறார்கள்.
2018ம் ஆண்டுக்குப் பிறகு 190+ ஸ்கோரை சேஸ் செய்யவே சென்னை சூப்பர் கிங்ஸ் தடுமாறுகிறது. ஏன் அது முடியவில்லை என்ற காரணம் எனக்குப் புரியவில்லை. இதை சரிசெய்ய வேண்டுமெனில் சிஎஸ்கே மிடில் ஓவர் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் அது ஷிவம் துபே மீது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அதற்கு டாப் ஆர்டர் பேட்டர்களில் ஒருவராவது 12 ஓவர்கள் வரையிலுமாவது ஆடவேண்டும். இந்த சீசன் சூப்பர் கிங்ஸ் ஜெயித்த இரண்டு போட்டிகளையும் பார்த்தால் ஒரு விஷயம் புரியும் – இரண்டிலுமே சாம்சன் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருப்பார். மாத்ரே அதிரடியான பங்களிப்பைக் கொடுத்திருப்பார். டெல்லிக்கு எதிராக முழு இன்னிங்ஸும் ஆடிய சாம்சன், கொல்கத்தாவுக்கு எதிராக 12வது ஓவர் வரை ஆடினார். அந்த இரு போட்டிகளிலுமே மாத்ரே பவர்பிளே கடந்தும் அதிரடியை வெளிப்படுத்தினார்.
ஆனால், இந்தப் போட்டியில் அவை நடக்கவில்லை. சாம்சன் விரைவில் வெளியேறினார். அதிரடியாக ஆடியிருந்தாலும் மாத்ரேவுமே பவர்பிளேவுக்குள்ளாகவே அவுட் ஆகிவிட்டார். இனிவரும் போட்டிகளில் டாப் 3 பேட்டர்களில் ஒருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதை உறுதி செய்யவேண்டும். அவர்கள் அப்படி ஆடும்போது அது மிடில் ஓவர் ரன் விகிதத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ளும்.
சிஎஸ்கே அவர்களின் பேட்டிங் பற்றி நிச்சயம் ஆய்வு செய்யவேண்டும். ஏற்கெனவே பாதி தொடர் முடிந்துவிட்ட நிலையில் அவர்கள் இன்னும் பேட்டிங் பலமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருந்துவிடக்கூடாது. இந்த பிரச்னைகளை சீக்கிரம் சரிசெய்தால் தான் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியும்.
சரியான பாதையில் பயணிக்கும் சன்ரைசர்ஸ்
பட மூலாதாரம், ANI
சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்படி பந்துவீச்சு பிரச்னை என்று பேசியிருந்தோமோ, அதேபோலத்தான் சன்ரைசர்ஸ் பந்துவீச்சு பற்றிய விவாதங்களும் இருந்தது. ஆனால், அவர்களும் மெல்ல நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறார்கள்.
இஷான் மலிங்கா ஒருபக்கம் மிகச் சிறப்பாகப் பந்துவீசி ஆட்டநாயகனாக உருவெடுக்க, மறுபக்கம் இரு இளம் வீரர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள்.
ஷிவாங் குமார் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். கடினமான சூழ்நிலைகளில் நிதானமாக இருக்கிறார். தன் கையிலும் அவர் வித்தை வைத்திருக்கிறார். அவருடைய ஸ்லோயர் பால்கள் பேட்டர்களை வெகுவாக ஏமாற்றுகிறது. கை வேகமாகத்தான் சுற்றுகிறது. ஆனால், பந்து மெதுவாகச் செல்கிறது. பேட்டர்கள் அதைக் கணிக்கத் தடுமாறுகிறார்கள். அதேசமயம் அவர் யார்க்கர்களையும் நன்கு பயன்படுத்துகிறார்.
பிரஃபுல் ஹிங்கே இந்தப் போட்டியில் நிறைய ரன்கள் கொடுத்தார். இருந்தாலும், மிகவும் பதற்றமான கடைசி ஓவரைப் பந்துவீசும் போது அவர் தன் மன உறுதியை வெளிப்படுத்தினார். சிறப்பாகவும் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்தார். ஒரு இளம் வீரருக்கு அதுவொரு நல்ல தகுதி.
இவர்கள் போக இளம் ஸ்பின்னர் ஷிவாங் குமார் சிக்கனமாகப் பந்துவீசி சூப்பர் கிங்ஸ் பேட்டர்களுக்கு சவால் கொடுத்தார். அவர் 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பிரெவிசுக்கு அவர் வீசிய இரண்டு பந்துகளுமே அற்புதமானவை. அவர் அந்த விக்கெட்டுக்குத் தகுதியானவர்.
ஒட்டுமொத்தமாகவே கடந்த 2 போட்டிகளாக சன்ரைசர்ஸ் பந்துவீச்சு நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் இணைந்தால் அவர்கள் ஒரு தடுக்க முடியாத சக்தியாக மாறிவிடுவார்கள்.
(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



