Home தேசிய national tamil இரான் விவகாரத்தில் அமெரிக்காவை கண்டித்த சீனா நேரடியாக களமிறங்குமா?

இரான் விவகாரத்தில் அமெரிக்காவை கண்டித்த சீனா நேரடியாக களமிறங்குமா?

26
0

SOURCE :- BBC NEWS

அமெரிக்காவுக்கு சீனாவின் புதிய எச்சரிக்கை – இரான் தனது பலமாக கருதும் 'ஒரு விஷயம்' என்ன?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கா இரானில் தனது கடற்படை முற்றுகை தொடங்கிய போதிலும், இரான் தொடர்புடைய நான்கு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளதை பிபிசி வெரிஃபை பகுப்பாய்வு செய்த கப்பல் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.

மரைன் ட்ராஃபிக் தகவல்படி, அந்த நான்கு கப்பல்களில் இரண்டு இரான் துறைமுகங்களுக்குச் சென்று வந்துள்ளன.

இதற்கிடையே இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை “ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

4 கப்பல்கள் எவை?

கண்காணிப்பு தரவுகளின்படி, இரானின் பண்டார் இமாம் கொமேனி துறைமுகத்திற்குச் சென்ற கிறிஸ்டியானா என்ற சரக்குக் கப்பல், முற்றுகை தொடங்கிய பிறகு திங்களன்று நீரிணையைக் கடந்துள்ளது.

இரான் தொடர்பான வர்த்தகத்திற்காக அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ரிச் ஸ்டாரி கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் ஷார்ஜாவிலிருந்து கிழக்கு நோக்கி ஹோர்மூஸ் நீரிணை வழியாக இரவு நேரத்தில் பயணித்ததை தரவுகள் காட்டுகின்றன.

இரான் தொடர்பான வர்த்தகத்திற்காக அமெரிக்கத் தடையின் கீழ் உள்ள மற்றொரு டேங்கர் கப்பலான முரளிகிஷன் சீனாவின் லான்ஷானில் இருந்து புறப்பட்டு இரவு நேரத்தில் நீரிணை வழியாக மேற்கு நோக்கிச் சென்றது. மரைன் ட்ராஃபிக் தகவல்படி, அதன் கடைசியாகப் பதிவான இருப்பிடம் இரானின் கெஷ்ம் தீவுக்குக் கிழக்கே இருந்தது.

மற்றொரு டேங்கர் கப்பலான எல்பிஸ், இரானின் புஷெர் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செவ்வாயன்று கிழக்கு நோக்கி நீரிணையைக் கடந்தது. இதுவும் அமெரிக்கத் தடையின் கீழ் உள்ளது, இதன் இலக்கு எங்கு என்பது தெரியவில்லை.

இந்தக் கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தை மறைப்பதற்காக ‘ஸ்பூஃபிங்’ எனப்படும் தவறான இருப்பிடத் தகவல்களை அனுப்பி இருக்கவும் வாய்ப்புள்ளது.

திங்கள்கிழமை இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல், “இரான் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல்சார் போக்குவரத்தையும்” முற்றுகையிடப்போவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், “இரான் அல்லாத பிற துறைமுகங்களுக்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் பயணச் சுதந்திரத்திற்கு எந்தத் தடையுமிருக்காது” என்றும் அது கூறியுள்ளது.


அமெரிக்காவுக்கு சீனாவின் புதிய எச்சரிக்கை – இரான் தனது பலமாக கருதும் 'ஒரு விஷயம்' என்ன?

பட மூலாதாரம், EPA-EFE/Shutterstock

அமெரிக்காவின் முற்றுகைக்கு சீனா கண்டனம்

இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை “ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு, திங்களன்று இந்த முற்றுகை நடைமுறைக்கு வந்தது.

இந்த முற்றுகை “பதற்றத்தை அதிகப்படுத்தும் மற்றும் ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும்” என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் எச்சரித்துள்ளார்.

“இது ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடத்தை” என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் குவோ கூறினார்.

இரான் நாட்டிற்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக வெளிவந்த செய்திகள் “முற்றிலும் புனையப்பட்டவை” என்று குவோ தெரிவித்தார்.

இந்தச் செய்திகளின் பின்னணியில், இரானிற்கு சீனா ராணுவ உதவி வழங்கினால், சீனப் பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

“சீனா மீது கூடுதல் வரிகளை விதிப்பதற்கு அமெரிக்கா இதனை ஒரு சாக்காகப் பயன்படுத்தினால், சீனா நிச்சயமாக உறுதியான பதில் நடவடிக்கைகளை எடுக்கும்” என்று குவோ கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

சீனா என்ன செய்யக்கூடும்?

லாரா பிக்கர், பிபிசி

இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி சீனாதான், மேலும் இரானின் எண்ணெயில் சுமார் 80% வரை சீனா வாங்குகிறது.

ஆனால் மேற்கத்திய நாடுகளைப் போல அல்லாமல், சீனாவின் கூட்டணிகள் பெரும்பாலும் “வணிக அடிப்படையிலானவை”

அதாவது, சீனா வணிக ஒப்பந்தங்களை செய்ய தயாராக இருக்கும். ஆனால் ராணுவ ஆதரவு வழங்காது. மேலும் இரானுடன் எந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தமும் அதற்கு இல்லை.

அதனால், சீனா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்து, இரு தரப்பும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

சீனா அமெரிக்காவின் நடவடிக்கைகளை விமர்சித்தாலும், டிரம்ப் மீது அதிகமாக அழுத்தம் கொடுக்க விரும்பாது.

ஏனெனில், அடுத்த மாதம் அமெரிக்க அதிபரை வரவேற்க சீனா தயாராகி வருகிறது, மேலும் கடுமையான வர்த்தகப் போருக்கு முடிவு காண பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்கிறது.

மேலும், சீனாவுக்கு பிற நாடுகளின் விஷயங்களில் தலையிடாத பழக்கம் உள்ளது. அதனால் இந்த மோதலில் நேரடியாக இழுக்கப்பட விரும்பாது.

சீனா ஒரு வல்லரசு என்றாலும், அதன் அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு வரம்புகள் உள்ளன.

அதனால், சீனா இந்த பிரச்னையில் முன்னணியில் இல்லாமல், பக்கத்தில் இருந்து செயல்படுவதே அதிக சாத்தியம்.


அமெரிக்காவுக்கு சீனாவின் புதிய எச்சரிக்கை – இரான் தனது பலமாக கருதும் 'ஒரு விஷயம்' என்ன?

பட மூலாதாரம், Getty Images

இரான் என்ன உணர்ந்துள்ளது?

அமெரிக்க – இரான் உறவுகள் குறித்த நிபுணர்கள் கடந்த சில நாட்களின் நிகழ்வுகள் மற்றும் இது எப்படி முடிவுக்கு வரும் என்பது குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

குயின்சி இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ட்ரிடா பார்சி, இரு நாடுகளும் எந்த ஓர் ஒப்பந்தத்தையும் எட்டாத சூழலே அதிகம் சாத்தியமானது என்று நம்புகிறார். ஆனால், அமெரிக்கா விலகிச் செல்வதும், ஹோர்மூஸ் நீரிணையில் பயணம் செய்வதற்கு இரான் கட்டணம் வசூலிப்பதுமான ஒரு புதிய நிலை உருவாகலாம்.

இந்தச் சூழலில் இரு தரப்புமே வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறிக்கொள்ள முடியும். இருப்பினும், தடைகள் நீக்கப்பட்ட ஒப்பந்தமே இரானுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இது ஒரு சிறந்த சூழலாக இருக்காது என அவர் கூறுகிறார்.

தடைகள் நீக்கப்படாமலும், ஐரோப்பா மற்றும் ஆசியாவுடன் பொருளாதார உறவுகளை மீண்டும் ஏற்படுத்தாமலும் மறுசீரமைப்பு என்பது சாத்தியமற்றது என ட்ரிடா பார்சி கூறுகிறார்.

2021 முதல் 2023 வரை இரானுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதராகப் பணியாற்றிய ராபர்ட் மேலி, ”இரான் தனது கையிருப்பில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதியை ஒப்பந்தப்படி விட்டுக் கொடுத்தால், அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கி மீண்டும் தடைகளை விதிக்க மாட்டார் என்பதை எப்படி நம்புவது என்பதே இரானில் உள்ள முடிவெடுப்பவர்களுக்கு உள்ள கடினமான விஷயம்” என்கிறார்.

இதற்கிடையில், ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நர்கஸ் பஜோக்லி, அமெரிக்க முற்றுகையின் மூலம் அதிபர் டொனால்ட் டிரம்ப் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுகளுக்கான பழியைத் தன்மீது சுமத்திக்கொள்ளும் நிலையைத் தேடிக்கொண்டார் என்கிறார்.

இரான் இப்போது தனது அணுசக்தித் திட்டத்தை விட, ஹோர்மூஸ் நீரிணையையே தனது மிகப்பெரிய பலமாகப் பார்க்கிறது என்றும் அவர் கூறுகிறார்.


உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU