Home தேசிய national tamil ‘தி ரொமான்ஸ் ஆஃப் கெஞ்சி’ – ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் முதல் நாவலை எழுதிய...

‘தி ரொமான்ஸ் ஆஃப் கெஞ்சி’ – ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் முதல் நாவலை எழுதிய ஜப்பானிய பெண்

8
0

SOURCE :- BBC NEWS

முரசாகி ஷிகிபு

பட மூலாதாரம், Getty Images

“முன்னொரு காலத்தில், வெகு காலத்துக்கு முன்பு, ஒரு தொலைதூர தேசத்தில்…” என்று தொடங்கும் கதைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதுவும் அதுபோன்ற ஒன்றுதான், ஆனால் இது ஒரு கதை அல்ல.

இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

அந்தத் தொலைதூர இடம் ஜப்பான்.

ஆனால், 894-ஆம் ஆண்டில் ஜப்பான் தன்னை உலகின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டதால், ஜப்பான் அதன் அண்டை நாடுகளுக்கே எட்டாத தூரத்தில் இருந்தது.

அக்காலத்தில், உலகம் முழுவதிலும் உள்ள கலாசாரங்கள் பொருட்களைப் பரிமாறிக்கொண்டன, புதிய கருத்துகளையும் நம்பிக்கைகளையும் பரப்பின.

ஜப்பானும் முந்தைய இரண்டு நூற்றாண்டுகளாக, குறிப்பாக சீனாவுடன் அவ்வாறு செய்து வந்தது. ஆனால், பிறகு ஜப்பான் வெளி உலகத்துடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்க முடிவு செய்தது.

தீவு நாடான ஜப்பான் பல நூற்றாண்டுகளாகத் தனக்குள்ளேயே சுருங்கி, தனக்கென ஒரு கலாசாரத்தை வளர்த்துக்கொண்டது. அந்தக் குமிழிக்குள் மற்றொரு குமிழி இருந்தது.

அது தான் ஹெயன் காலத்து (794 முதல் 1185 வரை) கியோட்டோ அரசவை. அங்கே வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மிகவும் நுட்பமான இன்பத்தைத் தேடித் தொடர்ந்து செம்மைப்படுத்தப்பட்டு வந்தது.

“மத்திய கால ஜப்பானிய கலாசாரத்தின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் தீவிர அழகியல் உணர்வு. இது அழகை ஒரு வழிபாடாகவே மாற்றியது. கண்ணாடி, சாப்ஸ்டிக்ஸ் போன்ற பொருட்கள் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும், ஏன் வாழ்க்கையே அழகியலாகப் பார்க்கப்பட்டது” என்று நாவலாசிரியரும் ஜப்பானிய கலாசார நிபுணருமான இயன் புருமா பிபிசியிடம் தெரிவித்தார்.

எல்லா உயர்குடிச் சமூகத்தையும் போல, கியோட்டோ அரசவையும் சடங்குகள் நிறைந்ததாக இருந்தது. “ஆனால் ஹெயன் காலத்து உயர்குடியினர், அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இருந்த மற்ற எந்த கலாசாரத்தையும் விட இதில் வெகுதூரம் முன்னேறிச் சென்றனர்.”

“மக்கள் கவிதைகள் எழுதித் தங்களுக்குள் உரையாடிக்கொண்டனர். நறுமணம் நுகரும் போட்டிகளை ஏற்பாடு செய்தனர். அவர்கள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான உறவுகள் உட்பட அனைத்து வகையான அழகியல் செயல்பாடுகளிலும் நிபுணர்களாக இருந்தனர்.”

மேலும், அந்தப் பெண்கள் ஒரு முக்கிய கலாசாரப் பங்கை ஆற்றினர்.

செவ்வியல் சீன மொழி பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கத்தில், அரசாங்கத்தின் மொழியாகப் பயன்படுத்தப்பட்டபோதிலும், அரசவையில் இருந்த பெண்கள், ஜப்பானிய மொழிக்கான எழுத்து முறையைப் பயன்படுத்துவதில் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். இது ஹிரகானா அல்லது அக்காலத்தில் ‘ பெண்ணின் கை’ என்று பொருள்படும் ‘ ஒன்னாடே ‘ என அறியப்பட்டது.

தாய்மொழியிலும் அன்றாட மக்கள் பேசும் மொழியிலும் எழுதியதன் மூலம், பெண்களால் தங்களை மிகவும் ஆற்றலுடன் வெளிப்படுத்த முடிந்தது.

அதன் விளைவாக, பிற்கால ஜப்பானியத் தலைமுறையினரைக் கவரும் வகையிலான இலக்கிய நாட்குறிப்புகளையும் படைப்புகளையும் அவர்கள் உருவாக்கினர்.

கெஞ்சியின் கதை'

பட மூலாதாரம், Getty Images

அவர்களால் தான், பெரிதும் அறியப்படாத ஹெயன் அரசவை குறித்த நுணுக்கமான விபரங்களை நாம் அறிந்துகொள்கிறோம்.

அந்த அரசவை மங்கை ஒரு தலைசிறந்த படைப்பை எழுதினார். அதுதான் ‘கெஞ்சி மோனோகாதரி’ (Genji Monogatari – இது பொதுவாக “தி ரொமான்ஸ் ஆஃப் கெஞ்சி” என்று மொழிபெயர்க்கப்படுகிறது).

11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இந்தப் படைப்பு, ஹிகாரு கெஞ்சி அல்லது ஒளிவீசும் கெஞ்சி என்று அழைக்கப்படும் ஒரு இளவரசனின் சாகசங்களை விவரிக்கிறது.

“கெஞ்சி குழந்தையாக இருந்ததிலிருந்தே, அவனது அசாத்திய அழகு அவனைக் கண்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.”

“அவன் வளர்ந்து பெரியவன் ஆகும்போது அவனது அழகு குறைந்துவிடுமோ என்று அச்சம் ஏற்பட்டது . ஆனால் மாறாக, அவன் முன்னெப்போதையும் விட மிகவும் அழகாக இருந்தான்.”

“அவரது அற்புதமான வசீகரம் மற்றும் சாதனைகளைப் பற்றி நான் உங்களிடம் சொன்னால், நான் அவனுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாகப் பேசுவதாக நீங்கள் நினைக்கலாம்.”

“ஆனால், அவர் எந்தக் கலை அல்லது பொழுதுபோக்கிலும் அதே அதிசயமான திறமையை வெளிப்படுத்தத் தவறியதில்லை என அனைவருக்கும் தோன்றியது “

இளவரசனை உருவாக்கிய பெண்மணி

“தி ரொமான்ஸ் ஆஃப் கெஞ்சி” நூலாசிரியரின் இயற்பெயர் தெரியவில்லை.

ஏனெனில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அந்த ஜப்பானிய அரசவையில், ஒருவரைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக்குரியதாகக் கருதப்படவில்லை. மேலும், பெண்களின் பெயர்கள் பொதுவாகப் பதிவு செய்யப்படுவதும் இல்லை.

எனவே, அவர் முரசாகி ஷிகிபு என்ற பெயரிலேயே வரலாற்றில் இடம்பிடித்தார்.

இருப்பினும், அவர் கி.பி. 973 வாக்கில் பேரரசின் தலைநகரான கியோட்டோவில், ஒரு பண்பட்ட மற்றும் உயர்குடி குடும்பத்தின் சிறிய கிளையில் பிறந்தார் என அறியப்படுகிறது.

அவர் ஒரு பெண்ணாக இருந்ததால், அவருக்கு முறையான கல்வி வழங்கப்படவில்லை. மாறாக, அவர் அதைப் பற்றித் தூரத்திலிருந்தே கேள்விப்பட்டார்.

அவரது சகோதரர் அரசவையில் பணியாற்றுவதற்கான கல்வியைப் பயின்றுகொண்டிருந்தார். அதாவது சீன வரலாற்றுச் செம்மொழிகள் மற்றும் இலக்கியங்கள், பௌத்த நூல்கள் மற்றும் ஜப்பானியப் படைப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

சத்தமாக வாசிப்பது ஒரு பிரபலமான கற்றல் முறையாக இருந்தது.

ஆர்வமும் புத்திசாலித்தனமும் கொண்ட அவரது சகோதரி அதைக் கூர்ந்து கவனித்தார் என்று பிபிசி வானொலி நிகழ்ச்சியான ‘தி எஸ்சே’ நிகழ்ச்சியில் கலாசார வரலாற்றாசிரியர் கிறிஸ்டோஃபர் ஹார்டிங் கூறுகிறார்.

அவர் எவ்வளவு அறிவை உள்வாங்கிக்கொண்டார் என்பதை அவரது தந்தை உணர்ந்தபோது, அவர் ஓர் ஆணாகப் பிறக்கவில்லையே என்று வருந்தியதாக முரசாகி குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

ஒரு பெண்ணுக்கு வழங்கப்படுவதை விட அதிக அறிவை அவர் பெற்றிருந்தாலும், அவர் 30 வயதை அடைவதற்கு முன்னரே அவரது கணவர் இறந்திருக்காவிட்டால், முரசாகி ஒருபோதும் எழுதத் தொடங்கியிருக்க மாட்டார்.

இனிமேல் தனது வாழ்க்கை தனிமையாகவும் சலிப்பாகவுமே இருக்கும் என்ற பயம் தன்னை ஆட்கொண்டதாக அவர் பின்னர் நினைவுகூர்ந்தார்.

“பூக்களையும், பறவைகளையும், பாட்டையும், பருவத்துக்குப் பருவம் வானம் மாறும் விதத்தையும், நிலாவையும், பனியையும், உறைபனியையும் கவனித்து, காலம் கடந்து செல்வதைப் பதிவு செய்வதைத் தவிர வேறு பெரிதாக எதுவும் செய்யாமல், நான் ஒவ்வொரு நாளும் உணர்ச்சியற்று வாழ்ந்து வந்தேன்” என்று அவர் தனது நாட்குறிப்பில் எழுதியிருப்பார்.

“தொடர்ச்சியான எனது தனிமை பற்றிய எண்ணம் தாங்க முடியாததாக இருந்தது.”

இந்தக் காலக்கட்டத்தில்தான் அவர் அழகான, மரியாதையான, தாராள குணம் கொண்ட மற்றும் அதிநவீனமான கெஞ்சியின் வாழ்க்கை மற்றும் காதல்களைப் பற்றி எழுதத் தொடங்கினார். இதை அவர் பத்தாண்டு காலத்துக்குத் தொடர்ந்து செய்தார்.

அவர் முதல் அத்தியாயங்களைக் கருத்துக்களுக்காகத் தனது நண்பர்களிடம் வழங்கியபோது, அவை அரசவையில் பரவி உயர்குடி சமூகத்தின் கவனத்தை ஈர்த்ததாக நம்பப்படுகிறது.

சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், 1005 அல்லது 1006-இல், முரசாகி இளம் பேரரசி புஜிவாரா நோ ஷோஷி அல்லது அகிகோவின் (அரச குடும்பப் பெயர்) பணிப்பெண்ணாகப் பணிக்கு அழைக்கப்பட்டார்.

அந்த அழைப்பு, அரச மற்றும் உயர்குடி வாழ்க்கையின் அந்தரங்கங்களைக் கவனிக்கும் ஒரு சலுகை பெற்ற நிலையில் அவரை அமர்த்தி, அவரது திறமையை வெளிக்கொணர உதவியது. மேலும், அவரை ஒரு விலைமதிப்பற்ற வர்ணனையாளராகவும் மாற்றியது.

கவிதை, பொழுதுபோக்குகள், உடைகள் மற்றும் பொதுவான நடத்தைகளில் கற்பனை செய்ய முடியாத அளவிலான நுட்பங்களைக் கொண்டிருந்த அந்தச் சமூகத்தில், அங்கு வசித்தவர்களின் தனிப்பட்ட குறைகள் மற்றும் சமூகத் தவறுகளின் ஒவ்வொரு சுவையான விவரங்களையும் பிழிந்தெடுக்கும் திறன் கொண்ட வரலாற்று ஆசிரியர்களில் ஒருவராக முரசாகி இருந்தார்.

அரசவையின் வாழ்க்கை பற்றிய அவரது பதிவுகளை வாசிப்பது, “அதன் நுட்பத்தைக் கண்டு வியப்படையச் செய்கிறது”. அதே சமயம், அதில் பிரதிபலிக்கும் “மனிதநேயத்துக்குத் தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்று ‘தி ஜப்பானீஸ்: ஏ ஹிஸ்டரி இன் டுவென்டி லைவ்ஸ்’ (The Japanese: A History in Twenty Lives) நூலின் ஆசிரியர் ஹார்டிங் கூறுகிறார்.

தன்னைப் பற்றி, தனது நாட்குறிப்பின் முடிவில் முரசாகி பின்வருமாறு எழுதியிருந்தார்.

“நாம் ஒவ்வொருவரும் மிகவும் வித்தியாசமானவர்கள். சிலர் தன்னம்பிக்கை கொண்டவர்கள், வெளிப்படையானவர்கள் மற்றும் நேர்மையானவர்கள். மற்றவர்கள் எதிலும் மகிழ்ச்சியைக் காண முடியாத அவநம்பிக்கையாளர்களாகப் பிறக்கிறார்கள்.”

“வேலையாட்களின் ஆழமான பார்வை என் மீது இருப்பதை நான் உணர்வதால், நான் முழு சுதந்திரத்துடன் செய்யக்கூடிய விஷயங்களைக் கூட செய்யத் தயங்குகிறேன்.”

“அதிலும் குறிப்பாக அரசவையில், நான் சொல்ல விரும்பும் விஷயங்கள் ஏராளமாக இருந்தும், அவற்றை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. அது எவ்வளவு எவ்வளவு கடினமான ஒன்று”.

“எனவே, மற்றவர்கள் என்னிடம் காண்பதெல்லாம் ஒரு முகமூடியைத் தவிர வேறொன்றுமில்லை” என்று அக்குறிப்பு கூறுகிறது.

சீமாட்டியின் இளவரசர்

 இளவரசர் கெஞ்சி (1847 - 1850).

பட மூலாதாரம், Getty Images

“தி ரொமான்ஸ் ஆஃப் கெஞ்சி” ஒரு ஆழ்ந்த சோகமான கதையுடன் தொடங்குகிறது.

“ஒரு குறிப்பிட்ட ஆட்சிக் காலத்தில், உயர்ந்த அந்தஸ்து இல்லாத ஒரு பெண் இருந்தார், அவரை சக்கரவர்த்தி மற்ற அனைவரையும் விட அதிகமாக நேசித்தார்.”

உயர்ந்த நிலையில் இருந்த முக்கியப் பெண்கள், தங்களுக்கு மட்டுமே அந்த இடத்துக்கு உரிமை இருப்பதாகக் கருதினர். அவர்கள் அப்பெண்ணை ஒரு அகங்காரமான பெண்மணியாகப் பார்த்தனர்.

அதே சமயம், அவரை விடக் குறைந்த அந்தஸ்தில் இருந்தவர்கள் அவர் மீது இன்னும் கடுமையான கோபத்தைக் கொண்டிருந்தனர்.

பேரரசரின் அன்பைப் பெற்றிருந்த போதிலும், மற்ற பெண்களின் இடைவிடாத துன்புறுத்தல்களும் வெறுப்பும் அவரை நோய்வாய்ப்படுத்தியது. இறுதியில், பேரொளிமிக்க கெஞ்சிக்குப் பிறப்பு அளித்த பிறகு அப்பெண் இறந்துவிடுகிறாள்.

இதனைத் தொடர்ந்து வரும் கதைக்களம், நாயகன் அன்பையும் மகிழ்ச்சியையும் தேடுவது, அரசவையில் புகழுடன் விளங்குவது, தொடர்ச்சியான காதல் சந்திப்புகள், அதிகாரத்தைப் பெறுவது, அதை இழந்து மீண்டும் அடைவது எனத் தொடர்கிறது.

ஆச்சரியப்படும் விதமாக, கதை முடிவதற்கு முன்பே நாயகன் இறந்துவிடுகிறான்.

இந்தத் தொடர் நாவலைப் போன்ற அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட பாணியிலான படைப்பு, கிட்டத்தட்ட 100 ஆண்டுகால வரலாற்றை உள்ளடக்கியது.

இதில் 400-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ளன, மேலும் இது 54 புத்தகங்கள் அல்லது அத்தியாயங்களால் ஆனது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட, ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான நீளம் கொண்ட இந்தப் படைப்பு, பலருக்குத் தெரிந்திருந்தாலும், அதிகமானோர் படித்திராத ஒரு செவ்வியல் இலக்கியமாகும்.

இருப்பினும், ஜப்பானில் இதன் தாக்கம் இன்றும் குறையாமல் இருந்து வருகிறது.

ஐரோப்பாவில் லத்தீன் மொழியைப் போல, அப்போதைய அறிஞர்களின் மொழியான சீன மொழியை முரசாகி அறிந்திருந்தார். ஆனால் அவர் ஜப்பானிய மொழியிலும், உரைநடையிலும் இதை எழுதினார். அக்காலத்தில் புனைகதைகள் ஒரு மதிக்கத்தக்க இலக்கிய வகையாகக் கருதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், இந்த பிரமாண்டமான படைப்பு மிகச் சிறப்பானது.

இதன் உரைநடைக்குள் 795 ‘வகா’ (31-அசைகளைக் கொண்ட கவிதைகள்) பின்னப்பட்டுள்ளன.

ஒரு கதாபாத்திரம் மற்றொரு கதாபாத்திரத்துக்கு அனுப்புவதாக இவை எழுதப்பட்டுள்ளன, எனவே இதை யாராலும் கவனிக்காமல் கடந்து செல்ல முடியாது.

ஜப்பான் இலக்கியம், கெஞ்சி கதை

பட மூலாதாரம், Getty Images

எழுதப்பட்ட சில தசாப்தங்களிலேயே, இது ஜப்பானில் ஒரு செவ்வியல் இலக்கியமாகக் கருதப்பட்டது.

மேற்கத்திய நாடுகளில், இதன் ஆசிரியர் ஹோமர் மற்றும் வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு இணையாகப் போற்றப்படுவார்.

கெஞ்சி குறித்த பண்டைய மற்றும் நவீன கல்விசார் படைப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன, மேலும் நவீன ஜப்பானிய மொழியிலும் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஓவியங்கள், திரைப்படங்கள், நாடகங்கள், நடனம், இசை நாடகங்கள் மற்றும் ஓபராக்களுக்கும் இதன் புகழ் உத்வேகமாக இருந்துள்ளது. மேலும் இது நவீன நாவல்கள் மற்றும் மங்கா காமிக்ஸுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.

ஒரு நீண்ட பயணம்

கெஞ்சி மேற்கத்திய நாடுகளைச் சென்றடைய ஆயிரம் ஆண்டுகள் ஆனது, ஆனால் வசீகரிக்க சில நாட்களே போதுமானதாக இருந்தது.

1925-இல் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் வேலி வெளியிட்ட மொழிபெயர்ப்பு, நாவலாசிரியர் வர்ஜீனியா வூல்ஃப்பை உடனடியாகக் கவர்ந்தது. அவர் அதே ஆண்டு வோக் இதழில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் இதனை வெளிப்படுத்தியிருந்தார்.

அதே காலகட்டத்தில் பிரிட்டனில் வழக்கமாக எழுதப்பட்டவற்றுக்கும், முரசாகியின் நேர்த்தியான வாக்கியங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டு அவர் வியப்படைந்தார்.

“கோடை காலம் வந்துவிட்டது; / உரக்கப் பாடு, குயிலே!” (இடைக்கால ஆங்கிலக் கவிதை);

“இலைகளுக்கு இடையே, தன் எண்ணங்களைக் கண்டு தானே புன்னகைப்பவர்களின் உதடுகளைப் போல, பாதி இதழ்கள் திறந்திருந்த வெண் மலர்கள் மலர்ந்தன” (கெஞ்சி).

மேலும், தலைசிறந்த ஜப்பானியப் படைப்புகளின் மீதான வியப்பை வெளிப்படுத்தும் வூல்ஃபின் எழுத்துக்கு, மகிழ்ச்சியளிக்கும் விஷயங்கள் இன்னும் ஏராளமாக இருந்தன.

இருப்பினும், முரசாகி “டால்ஸ்டாய், செர்வாண்டஸ் அல்லது மேற்கத்திய உலகின் பிற சிறந்த கதைசொல்லிகளின் தரத்தில் இல்லை” என்று அவர் கூறுகிறார்.

வூல்ஃப்பின் கருத்துப்படி, “திகில், பயங்கரம் அல்லது இழிவு ஆகியவற்றின் ஒரு குறிப்பிட்ட அம்சம் நீக்கப்பட்டுள்ளது,” இதனால் “முரட்டுத்தனம் சாத்தியமற்றதாகவும், அநாகரிகமானது நினைத்துப் பார்க்க முடியாததாகவும்” ஆகிவிட்டது” இது அதன் வீரியத்தையும் செழுமையையும் குறைப்பதாக அவர் கருதினார்.

முழுப் படைப்பையும் படித்த பிறகு அவரது கருத்து இதேபோல் இருந்திருக்குமா என்பது யாருக்குத் தெரியும்? அவர் அந்தக் கட்டுரையை எழுதியபோது, ​​வாலேயின் மொழிபெயர்ப்பின் ஆறு தொகுதிகளில் முதலாவதை மட்டுமே படித்து முடித்திருந்தார்.

“அவற்றில், பால்சாக் போன்றவர்களுக்கு இணையான ஒரு பழிவாங்கும் கதைக்களம் ஒளிந்திருந்தது” என்று பிரபல கட்டுரையாளர் லூயிஸ் மேனண்ட் ‘தி நியூ யார்க்கர்’ இதழில் குறிப்பிட்டுள்ளார்.

காலப்போக்கில், முழுமையாகப் படித்த மற்றவர்கள், தங்களது இலக்கிய உலகம் தலைகீழாக மாற்றப்படுவதை உணர்ந்தனர்.

நீண்ட காலமாக, நாவல் ஒரு இலக்கிய வகையாக 18-ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது என்று கருதப்பட்டது, அது நவீனத்தைப் பிரதிபலிக்கும் விதமாக உருவானதாக நம்பப்பட்டது.

நாவல் அன்றாட வாழ்க்கையை அன்றாட மொழியில் விவரித்தது, அதன் மையத்தில் தனிமனித உளவியல் மற்றும் சமூகத் தொடர்புகள் இருந்தன.

கெஞ்சி, ஒரு நிலப்பிரபுத்துவ, மதச்சார்புள்ள மற்றும் இறுக்கமான படிநிலைகளைக் கொண்ட சமூகத்தில் எழுதப்பட்டிருந்தாலும், இந்த அனைத்து பண்புகளையும் கொண்டிருந்தது.

அதன் பின்னணி ஒரு அரசவையாக இருந்தபோதிலும், அது அன்றாட வாழ்க்கையை அந்த நாட்டுக்கே உரிய பேச்சுவழக்கில் விவரித்தது.

அதன் கருப்பொருள்கள் நாவல் மரபுக்கு உரியவையாக இருந்தன. திருமணம், துரோகம், பழிவாங்குதல் மற்றும் அந்தஸ்துக்காக விரிவாக ஆனால் மறைக்கப்பட்ட கடுமையான போட்டி போன்றவை காணப்பட்டன.

” 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற நாவல்களைப் போலவே, இதுவும் ஒரு சமூகக் கட்டமைப்பின் பகுப்பாய்வு ஆகும். இது ஜேன் ஆஸ்டன் அல்லது ஹென்றி ஜேம்ஸ் எழுதியிருக்கக்கூடிய ஒரு புத்தகம்” என்று லூயிஸ் மேனண்ட் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு, ஜப்பானிய தலைசிறந்த படைப்பான இந்நாவல், ஒரு உலகளாவிய படைப்பாக மாறியது. பொதுவாக வரலாற்றின் முதல் நாவலாகவும், உலகின் முதல் உளவியல் நாவலாகவும் இது கருதப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU