Home தேசிய national tamil நாசிக் டிசிஎஸ் வழக்கு: மதமாற்ற குற்றச்சாட்டு மற்றும் விசாரணை குறித்து கேள்விகள் எழுவது ஏன்?

நாசிக் டிசிஎஸ் வழக்கு: மதமாற்ற குற்றச்சாட்டு மற்றும் விசாரணை குறித்து கேள்விகள் எழுவது ஏன்?

6
0

SOURCE :- BBC NEWS

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது

“என் கணவர் குண்டுவெடிப்பை நிகழ்த்தினாரா? ஒரே இரவில் ஏன் எட்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டன, ஏன் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள்?” நாசிக் டிசிஎஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மனைவி எழுப்பியுள்ள கேள்விகள் இவை.

நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, காவலில் இருந்த தனது கணவரைப் பார்க்க வந்த அந்தப் பெண், ஒட்டுமொத்தச் சூழலையும் கண்டு குழப்பத்தில் இருந்தார்.

வழக்கில் இணை குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ள ஷாரூக் குரேஷியின் தந்தை ஷௌகத் குரேஷி, உறவினர்களின் கூட்டத்தில் காத்திருந்தார். நாங்கள் அவர்களிடம் பேச முயன்றோம்.

நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஷௌகத் குரேஷி, “என் மகன் இப்படி எதையும் செய்திருப்பான் என நான் நினைக்கவில்லை. ஆனால் அவன் விடுதலை ஆகும் வரை, மகனுக்காக இங்கு வருவது எனக்குக் கடமையாகும். ஷாரூக் குற்றவாளி என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும், ஆனால் ஊடகங்களில் நடப்பவற்றை என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.

அன்று விசாரணை சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும், பாதுகாப்புக்காக அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளும் அந்த மூன்று மணி நேரமும் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தனர்.

இந்த வழக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பெயரைக் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வழங்குகிறது.

இரண்டாவதாக, இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது.

இந்த வழக்கின் செய்திகள் மற்றும் விவாதங்களில் ‘மதமாற்ற முயற்சிகள்’ போன்ற பல சொற்கள் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டன.

சிலர் இதை வெளிநாட்டினருடனும் தொடர்புபடுத்தினர். ஆனால் அதைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஆனால் இந்தக் கோட்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால், உண்மை நிலவரம் என்ன?

விசாரணையிலும் நீதிமன்றத்திலும் காவல்துறையினர் என்ன கூறியுள்ளனர்?

முதல் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், சில சமூக அமைப்புகள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சில கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது

இதுவரையில் நடந்தது என்ன?

இந்த வழக்கின் தொடக்கம் மார்ச் 26 . நாசிக்கில் அமைந்துள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) அலுவலகத்தில் பணிபுரியும் 23 வயது பெண் ஒருவர், அங்கு பணிபுரியும் மூன்று ஊழியர்களுக்கு எதிராகப் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றுதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் டேனிஷ் ஷேக், தௌசிஃப் அத்தார் மற்றும் நிதா கான் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நாசிக் காவல் ஆணையர் சந்தீப் கர்னிக் பிபிசி மராத்தியிடம், “இந்த வழக்கில் முதல் புகாரைப் பதிவு செய்ய வந்த பாதிக்கப்பட்ட பெண் மிகவும் பயந்திருந்தார், மேலும் புகார் அளிக்கும் மனநிலையில் அவர் இல்லை. காவல்துறையினர் அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கை அளித்து, தைரியம் கொடுத்தனர், அதன் பிறகு அவர் புகாரைப் பதிவு செய்தார்” என்றார்.

மார்ச் 26 அன்று முதல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தேதிகளுக்கு இடையில் மேலும் எட்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த எஃப்ஐஆர்கள் நாசிக்கில் உள்ள மும்பை நாகா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்தச் சம்பவங்கள் 2022 முதல் 2026 வரையிலான நான்கு ஆண்டு காலத்தில் டிசிஎஸ் நிறுவன அலுவலகத்தில் நடந்ததாக இந்த புகார்களில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, இந்த ஒன்பது வழக்குகளின் விசாரணை நாசிக் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வெவ்வேறு நாட்களில் நடைபெற்று வருகிறது.

பாபா சையத், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்

மதமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா?

இந்த வழக்கில் மிகவும் உணர்வுப்பூர்வமான மற்றும் தீவிரமான விஷயம் மதமாற்றம் தொடர்பானது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் நோக்கம் மதமாற்றம் செய்வதே என்று போலீசார் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சில ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை விவரிக்க பல்வேறு சொற்களைப் பயன்படுத்தின.

சில ஊடகங்களின் செய்திகளில், இந்த வழக்கு திட்டமிடப்பட்ட மதமாற்றத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கப்பட்டது. சில இடங்களில் இது ஒரு சர்வதேச மோசடியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

“பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது வழக்குகளில், மதமாற்ற முயற்சி, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று காவல் ஆணையர் சந்தீப் கர்னிக் கூறுகிறார்.

இது உண்மையானால், எஃப்ஐஆரில் இது ஏன் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை? என குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ராகுல் காஸ்லிவால், “இந்த வழக்கில் எந்தவொரு எஃப்ஐஆரும் மதமாற்றம் தொடர்பானது அல்ல. சில இடங்களில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்கான பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது, இருப்பினும் மதமாற்றம் குறித்து எந்த குறிப்பும் இல்லை” என்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் மற்றொரு வழக்கறிஞரான பாபா சையத், “காவல்துறையின் ரிமாண்ட் அறிக்கையில் கூட, மதமாற்றத்திற்காக வற்புறுத்தப்பட்டதாகவோ அல்லது உண்மையில் மதமாற்றம் நடந்ததாகவோ தெளிவான குறிப்பு இல்லை. அப்படியிருக்கையில், எந்த அடிப்படையில் இந்த விஷயம் முன்வைக்கப்படுகிறது?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.

பிபிசி மராத்தி இந்த வழக்கின் எஃப்ஐஆர்களை ஆய்வு செய்தபோது, மதமாற்றம் நடந்ததற்கான தெளிவான குறிப்பு எதுவும் காணப்படவில்லை.

தற்போது சில அமைப்புகளும் முன்வந்து இதே போன்ற கேள்வியை எழுப்புகின்றன.

வெள்ளிக்கிழமை மும்பையில் குடியுரிமைப் பாதுகாப்புச் சங்கம் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு நாசிக் சென்று, ஒரு உண்மை கண்டறியும் அறிக்கையை வெளியிட்டது. இங்கு மதமாற்ற முயற்சிகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த அறிக்கையும் கூறுகிறது.

“இந்த வழக்கு மதமாற்றம் தொடர்பானது என்றால், கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு நபருக்காவது மதமாற்றம் நடந்திருக்க வேண்டும். ஆனால் கட்டாய மதமாற்றம் நடந்த ஒரு சம்பவம் கூட கண்டறியப்படவில்லை. இவை அனைத்தும் ‘டிசிஎஸ்’ போன்ற ஒரு மதிப்புமிக்க நிறுவனத்தில் நடந்தவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய நிறுவனத்தின் ஓர் ஊழியர் கூட நான்கு ஆண்டுகளில் முன்வரவில்லை என்பது சற்று வியப்பளிக்கிறது” என்று குடியுரிமைப் பாதுகாப்புச் சங்கத்தின் தேசியச் செயலாளர் நதீம் கான் கூறுகிறார்.

சந்தீப் கர்னிக்

புகார் காவல்துறையைச் சென்றடைந்தது எப்படி?

இது குறித்து பல்வேறு வகையான தகவல்கள் உள்ளன.

ஒரு காவல்துறை குழு டிசிஎஸ் நிறுவனத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் பேசி, புகார் அளித்தவர்களை முன்வரச் செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இது நடப்பதற்கு முன்பே, புகார் அளித்தவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத மற்றொரு நபர், இது குறித்து ஏற்கெனவே காவல்துறையிடம் ஒரு புகாரை அளித்திருந்தார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது.

ஆரம்பக்கட்ட புகாருக்குப் பிறகு, சீருடை அணியாத பெண் காவல்துறை அதிகாரிகள் டிசிஎஸ் அலுவலகத்திற்குச் சென்று சில பெண்களிடம் பேசி, அவர்களை புகாரளிக்க முன்வருமாறு ஊக்கப்படுத்தியதைத் தொடர்ந்து கூடுதல் புகார்கள் பெறப்பட்டன என்கிறார் நாசிக் காவல் ஆணையர் சந்தீப் கர்னிக். அதன் பின்னரே, மார்ச் 26 அன்று முதல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இதுவரை டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தற்போது கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தங்களது உள் கமிட்டிக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

”நாசிக் அலுவலகம் தொடர்பான அமைப்புகள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்ததில், எங்களது முதற்கட்ட விசாரணையில், தற்போது கூறப்படும் குற்றச்சாட்டுகள் போன்ற எவ்விதப் புகாரும் எங்களது போஷ் கமிட்டிக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது” என்று ஏப்ரல் 17-ஆம் தேதியிட்ட டிசிஎஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

”குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒரு குழுத் தலைவராகவோ அல்லது உயர் பதவியில் இருந்தவராகவோ இருந்திருக்கக்கூடும். அதனாலேயே பெண்கள் இத்தனை ஆண்டுகளாக மௌனம் காத்திருக்கலாம்.” என்று காவல் ஆணையர் கர்னிக் கூறுகிறார்.

ஆனால், ஒரே இரவில் எப்படி இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

“ஏப்ரல் 2 முதல் 3-ஆம் தேதிக்குள், சில மணி நேர இடைவெளியில் மொத்தம் எட்டு எஃப்ஐஆர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. உடனடியாக அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏன் இவ்வளவு அவசரம்? நான்கு ஆண்டுகளில் போஷ் கமிட்டியிலோ அல்லது மனிதவளத் துறையிலோ எந்தப் புகாரும் இல்லை, திடீரென்று ஒரே நாளில் அனைவரும் ஒன்று சேர்ந்து காவல் நிலையத்திற்கு வந்து எட்டு புகார்களை அளிக்கிறார்களா? அதனால்தான், உறுதியாக சந்தேகம் எழுகிறது” என்கிறார் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் பாபா சையத்.

நாசிக் காவல்துறையிடமும் நாங்கள் இந்தக் கேள்வியை முன்வைத்தோம் . இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன், புகார்களின் தன்மை தீவிரமாக இருந்ததால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

நாசிக்கைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் நிரஞ்சன் தக்லே, “எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, ஓர் அரசியல் கட்சியை சேர்ந்தவர் காவல்துறையிடம் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில், தனக்குத் தெரிந்த ஒரு இந்துப் பெண் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை இந்தப் புகாரைப் பெற்று விசாரணையைத் தொடங்கியது. ஒரு நபர் எந்தச் சட்டத்தின் கீழ் அத்தகைய புகாரை அளிக்க முடியும்? அப்படி எந்தச் சட்டமும் இல்லை” என்று தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் நிதா கானுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் ராகுல் கஸ்லிவால் மற்றும் பாபா சையத்

நிதா கான் மீது என்னென்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன?

நாசிக் டிசிஎஸ் வழக்கில், நிதா கானின் பெயர் விவாதத்திற்கு வந்தது.

சில ஊடக செய்திகளில், இந்த முழு சம்பவத்திலும் அவர் உதவியாகவும், மூளையாகவும் செயல்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டார்.

தற்போது, நிதா கானின் முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, மேலும் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

இருப்பினும், காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரின்படி, வேறுவிதமான செய்தி கிடைக்கிறது. இந்த ஒன்பது வழக்குகளில், ஒரே ஒரு எஃப்ஐஆர்-இல் மட்டுமே நிதா கான் ஓர் இணை குற்றஞ்சாட்டப்பட்ட நபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

மார்ச் 26 அன்று அளிக்கப்பட்ட புகாரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவரது வழக்கறிஞர் பாபா சையத், “நிதா கான் ஒரே ஒரு வழக்கில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மற்ற எட்டு ‘எஃப்ஐஆர்’-களில் அவரது பெயர் எங்கும் அவர் குறிப்பிடப்படவில்லை. அப்படியிருக்க, எந்த அடிப்படையில் நிதா கான் முக்கிய குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டார் என்பதே புரியவில்லை” என்கிறார்.

நாசிக் காவல் ஆணையர் சந்தீப் கர்னிக், “இந்த வழக்கில் மொத்தம் ஒன்பது குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் உள்ளனர். அவர்களில் இருவர் பெண்கள். மேலும் நிதா கான் ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபராக உள்ளார். மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், நிதா கானின் பங்கு குறித்து டிசிஎஸ் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.

நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, செய்திகளில் அவர் ‘ஹெச்ஆர் மேனேஜர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அவர் ஒரு ‘புராசஸ் அசோசியேட்’ ஆகப் பணிபுரிந்து வந்தார் என்றும், அவருக்கு எந்த தலைமைப் பொறுப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில், நிதா கான் டிசிஎஸ் நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


ஏப்ரல் 24 அன்று, குடியுரிமைப் பாதுகாப்புச் சங்கம்   மும்பையில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இவ்விவகாரம் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்தது.

‘இது மிகவும் பொறுப்பற்ற செய்தி’

இந்த நாசிக் வழக்கு முழுவதிலும், சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட விதம் குறித்து தீவிர விவாதம் நடந்து வருகிறது. காவல்துறை அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளில் கூட குறிப்பிடப்படாத சில செய்திகளும் வெளிவந்துள்ளன.

முன்னர் பத்திரிகையாளராக இருந்த சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், மும்பையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்த வழக்கின் செய்தி அறிக்கை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“பாலியல் சுரண்டலை எந்த ஒரு மதத்துடனோ அல்லது எந்த ஒரு பாலினத்துடனோ தொடர்புபடுத்த முடியாது. இத்தகைய சுரண்டல்கள் ‘அதிகாரக் கட்டமைப்பால்’ நிகழ்கின்றன. இதுபோன்ற ஒரு விஷயத்திற்கு ஏன் மதச்சாயம் பூசப்பட்டது என்பதே எனது கேள்வி. இந்தக் கேள்வி காவல்துறைக்கும், அரசுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக ஊடகங்களுக்கும் உரியது” என்று செதல்வாட் கூறுகிறார்.

மேலும் , “ஊடகங்களில் மிகவும் பொறுப்பற்ற மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான செய்திகள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், இந்த வழக்கில் மகாராஷ்டிராவின் அரசியல் தலைமை ஆற்றிய பங்கும் பொறுப்பற்றது. இது மக்களை பிரிக்கும் ஒரு அப்பட்டமான முயற்சி” என்று செதல்வாட் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்தமாக, இந்த நாசிக் வழக்கில் துல்லியமான உண்மை இன்னும் வெளிவராத நிலையில், அதற்கு முன்பே ஒரு முடிவுக்கு வருவது கடினம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU