Home தேசிய national tamil ‘9 ஆண்டுகள் காத்திருந்து வெற்றி’ – விக்ரம் பற்றி அதிகம் அறியாத விஷயங்களை பகிரும் திரைக்கலைஞர்கள்

‘9 ஆண்டுகள் காத்திருந்து வெற்றி’ – விக்ரம் பற்றி அதிகம் அறியாத விஷயங்களை பகிரும் திரைக்கலைஞர்கள்

15
0

SOURCE :- BBC NEWS

நடிகர் விக்ரம் பற்றி அதிகம் அறியாத விஷயங்களை பகிரும் 8 திரைக்கலைஞர்கள்

பட மூலாதாரம், X/Chiyaan

தமிழ் சினிமாவில் கடுமையான உழைப்பால் உயர்ந்தவர்களில் ஒருவர் விக்ரம். 1990ல் என் காதல் கண்மணி படத்தில் தொடங்கிய அவருடைய சினிமா பயணம் ஆரம்பத்தில் இனிமையாக இல்லை.

அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்தாலும் ஒரு வெற்றிக்காக அவர் 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. 1999ல் பாலா இயக்கத்தில் வெளியான சேதுதான் அவரின் முதல் வெற்றி படம். அந்த படமும் அவ்வளவு எளிதில் வெளியாகவில்லை.

100 முறைக்கு மேல் சிறப்பு காட்சிகள் போடப்பட்டாலும் அதை வாங்க யாருமில்லை. பல்வேறு புறக்கணிப்புகள், போராட்டங்கள், பிரச்னைகளுக்கு நடுவே வெளியான சேது இன்று தமிழ்சினிமாவில் முக்கியமான படமாக இருக்கிறது.

விக்ரம் நடிப்பில் அடுத்து வந்த தில், துாள், ஜெமினி படங்கள் அவரை கமர்ஷியல் ஹீரோவாக்கியது. சாமி படத்தின் பெரிய வெற்றி அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. மீண்டும் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த பிதாமகன் அவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்தது.

அடுத்து அந்நியன், பீமா என்று கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் தெய்வத்திருமகள், ராவணன், தாண்டவம் போன்ற கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களிலும் நடித்தார் விக்ரம்.

விக்ரமின் சினிமா வாழ்க்கையில் ‘ஐ’ திரைப்படம் முக்கியமான இடத்தை பிடித்தது. பொன்னியின் செல்வனிலும் ஆதித்தகரிகாலனாக நடிப்பில் மிரட்டினார். தங்கலான், வீரதீரசூரனில் அவர் நடிப்பு பேசப்பட்டது. இப்போது அவர் மகன் துருவ் ஹீரோவாக நடிக்கும் வேளையிலும், விக்ரம் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இன்று (ஏப்ரல் 17) அவருக்கு பிறந்தநாள்.

ஐ திரைப்படத்தில் நடிகர் விக்ரம்

பட மூலாதாரம், jayatv/Youtube

‘தன்னை வருத்தி, சினிமாவை காதலிப்பவர்’

விக்ரமுடன் பணியாற்றிய திரையுலக பிரபலங்கள், நண்பர்களிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

விக்ரம் நடித்த மீரா படத்தை இயக்கியவரும், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தின் ஒளிப்பதிவாளருமான பி.சி.ஸ்ரீராம், ”நான் பார்த்த ஹீரோக்களில் தன்னை வருத்தி படம் பண்ணுபவர் விக்ரம். அதிலும் ஐ படத்தில் அவர் உடலை வருத்தியதை போல யாரையும் பார்த்தது இல்லை. அந்த கேரக்டருக்காக பல கிலோ உடலை இளைத்தார்.

அந்த சமயத்தில் படப்பிடிப்பு 3 மாதங்கள் தள்ளிப்போனது. அந்த சமயத்திலும் அதே எடையுடன் தொடர்ந்தார். அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், உடற்பயிற்சி அதிகம். இப்படிப்பட்ட கஷ்டமான விஷயத்தை அவர் ஆர்வமாக, ரசித்து செய்கிறார். சினிமா மீதான அவரது காதல் பாராட்டுக்குரியது” என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
தூள் திரைப்படத்தில் நடிகர் விக்ரம்

பட மூலாதாரம், APITamilSongs/Youtube

‘கமல்ஹாசனுக்குபின் விக்ரம்தான்’

விக்ரம் நடித்த கமர்ஷியல் படமான துாள் படத்தை தயாரித்தவரும், முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஏ.எம்.ரத்னம், ”தரணி இயக்கத்தில் நான் தயாரித்த துாள் படம் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றியை கொடுத்தது. ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள். அந்த வெற்றிக்காக அவர் அவ்வளவு மெனக்கெட்டார். குறிப்பாக, அந்த படத்தில் எப்படி வேட்டி கட்ட வேண்டும். எப்படிப்பட்ட லுக்கில் வந்தால் நன்றாக இருக்கும் என்பதற்கு கூட நிறைய யோசித்தார், பயிற்சி எடுத்தார்.” என்றார்

”எந்த கேரக்டர் கொடுத்தாலும், அந்த கேரக்டருக்காக உயிர் கொடுப்பார். அதை எப்படி வித்தியாசமாக பண்ணலாம் என யோசித்து அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்வார். தயாரிப்பாளர்களை பொறுத்தவரையில் அவரால் எந்த பிரச்னையும் வந்தது இல்லை. மிக சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவார், வேறு எந்த தொந்தரம் கிடையாது. தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார். எனக்கு தெரிந்தவரை கமல்ஹாசனுக்கு பின், தன்னை வருத்தி, உடல், மனரீதியாக கஷ்டப்பட்டு சினிமாவில் நடிப்பவர் விக்ரம்தான்” என்றார் ஏ.எம்.ரத்னம்.

ஜெமினி திரைப்படத்தில் இடம்பெற்ற ஓ போடு பாடலில் நடிகர் விக்ரம்

பட மூலாதாரம், APITamilSongs/Youtube

‘பீடா சாப்பிட்ட மாதிரியே ஆடினார்’

சரண் இயக்கிய ஜெமினி படத்தில் விக்ரமின் ஓ போடு பாடல் பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்தது.

அந்த பாடலின் டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜா, ” நான் கலா மாஸ்டரிடம் பணியாற்றினேன். அப்போதிலிருந்தே விக்ரம்சார் பழக்கம். ஓ போடு பாடலுக்குமுன் குறைவான படங்களுக்கே நடனம் அமைத்து இருந்தேன். இந்த பாடலின் வெற்றி என் தலை எழுத்தை மாற்றியது. எனக்கு 800க்கும் அதிகமான பட வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்தது.” என்றார்

”தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, துளு பல மொழி வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. அந்த பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குனர் சரண், படத்தை தயாரித்த ஏவி.எம் நிறுவனம் காரணம் என்றால், ஹீரோவும் முக்கிய காரணம். நான் கொடுத்த ஸ்டெப்பை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், அந்த கேரக்டர் தன்மையையும் தனது டான்சில் கொண்டு வந்தார்.” என கூறுகிறார் அவர்

”கதைப்படி ஜெமினி கேரக்டர் பீடா போட்டு டான்ஸ் ஆடுவது. பல நடிகர்கள் பாடல் காட்சிகளில் டான்சில்தான் முழு கவனத்தை செலுத்துவார்கள். பீடா போட்ட அந்த முகபாவனையை டான்ஸ் முழுக்க கொண்டு வந்து எங்களுக்கு ஆச்சரியம் கொடுத்தார் விக்ரம். ஜெமினி படத்தின் கிளைமாக்சிலும் ஓ போடு பாடல் வரும். அதிலும் டான்சில் கலக்கினார் விக்ரம்” என்கிறார்.

பிதாமகன் திரைபடத்தில் விக்ரம் நடித்த கேரக்டர்

பட மூலாதாரம், IndianExpress/Website

‘பலமணி நேரம் துடைப்பத்தால் அடித்தேன்’

பிதாமகன் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தவர் சங்கீதா, ”பிதாமகன் படப்பிடப்பை, அதில் நடந்த சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது. பிதாமகன் படத்தில் கிளைமாக்சுக்கு முன்பு ஒரு முக்கியமான காட்சியில் விக்ரமை துடைப்பத்தால் அடிக்க வேண்டும். தேனியில் எடுக்கப்பட்ட அந்த காட்சியில் நான் அடிப்பது மாதிரி நடித்தேன். ஆனால், இயக்குனர் பாலாவோ அது இயல்பாக வர வேண்டும். நிஜமாக அடிக்க வேண்டும் என்றார்.” என கூறுகிறார்.

”நான் தயங்கினேன். பல டேக் போனது. 3 கேமரா வைத்து எடுத்தார்கள். பாலா அவ்வளவு எளிதில் ஓகே சொல்லமாட்டார். காலையில் எடுக்க ஆரம்பித்த டேக், மாலை வரை சென்றது. ‘சங்கீதா தயவு செய்து யோசிக்காமல் அடி’ என்றார் விக்ரம். பல ஆங்கிளில் அவரை துடைப்பதால் அடித்தேன். ஒரு கட்டத்தில் நான் அடித்து டயர்டு ஆகிவிட்டேன். கதைப்படி விக்ரம் கேரக்டர் உணர்ச்சிகளை வெளிக்காட்டாது. ஆகவே, வலியை பொறுத்துகொண்டு சிறப்பாக நடித்தார் விக்ரம்.” என கூறுகிறார் அவர்

”அந்த சீன் முடிந்தவுடன் ‘என்னை மன்னிசிடுங்க. நீங்க மகா நடிகன். இந்த வலி, உங்க பொறுமை, உங்களை பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும்’ என அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன்” என்றார்.

 விக்ரம்

பட மூலாதாரம், Chiyaan/X

‘காய்ச்சலிலும் வலியுடன் நடித்தார்’

மைனா, கும்கி படங்களின் ஒளிப்பதிவாளர் சுகுமார் விக்ரமின் இன்னொரு பக்கத்தை சொல்கிறார்.

”நான் உதவி போட்டோகிராபராக என் வாழ்க்கையை தொடங்கினேன். விக்ரம் சார் நடித்த கிங் படத்தில் பணியாற்றினேன். அன்று முதல் என்னிடம் அன்பாக பழகுவார். பிற்காலத்தில் நான் ஒளிப்பதிவாளர் ஆனவுடன், தான் நடித்த ஸ்கெட்ச் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர் மகன் அறிமுகமான ஆதித்யா படத்துக்கும் நான்தான் ஒளிப்பதிவாளர்.” என்றார்

”ஸ்கெட்ச் படத்தில் ஒரு காட்சியை காசிமேடு துறைமுகம் பகுதியில் எடுத்தோம். அவருக்கு அன்றைக்கு கடும் காய்ச்சல். ஆனாலும், எங்கள் உழைப்பு, நான் லைட்டிங் செய்தது வீண் போகக்கூடாது என்பதற்காக காய்ச்சலை யோசிக்காமல், தண்ணீரில் நனைந்தபடி நடித்துக்கொடுத்தார்.

சாமுராய் படத்துக்காக ஊட்டி குளிரில் ஏரியில் குளித்தார். ரிஸ்கான பயர் காட்சியில் நடித்தார். ஐஸ் கட்டியில் அடிவாங்குற காட்சியில், உப்பில் போட்டு அடிக்கிற காட்சியில் வலியை பொறுத்து நடித்தார். ஏன் என்று கேட்டபோது இதில் ஒரு போராளியாக வருகிறேன். அந்த முகபாவம், அந்த உடல்மொழி நிஜமாகவே மக்களுக்கு தெரிய வேண்டும் என்றார்.” என கூறுகிறார் அவர்

விக்ரமும் பாலாவும்

பட மூலாதாரம், ChiyaanVikaram/Facebook

பிதாமகன் சண்டைக்காட்சி

சேது, பிதாமகன் படங்களின் பைட்மாஸ்டர் ஸ்டண்ட் சிவா, ”சேது படத்தில் ஒரு பாடல் முடிந்தவுடன் பைட் வரும். அதிலேயே விக்ரம் உழைப்பு தெரியும். சில ஆண்டுகள் கழித்து உருவான பிதாமகன் படத்தில் அவர் அர்ப்பணிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த படத்தில் இயல்பாக சண்டைக்காட்சிகள் இருக்கணும். அடி இடி மாதிரி இருக்கணும் என்று இயக்குனர் பாலா சொல்லிவிட்டார். கிளைமாக்ஸ் உள்ளிட்ட சண்டைக்காட்சிகளில் சேது படத்தை விட பல மடங்கு கஷ்டப்பட்டார் விக்ரம். அவர் காலில் கூட அடிப்பட்டது. நான் கொடுத்த சண்டைக்காட்சிகளை தன் நடிப்பால் பத்து மடங்கு உயர்த்துவார்.

அதைவிட முக்கியம் மனிதாபிமானம் மிக்கவர். சண்டைக்காட்சியில் யாருக்கும் அடிப்படக்கூடாது என்பார். பலருக்கு உதவிகள் செய்து இருக்கிறார்” என்கிறார்.

வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் விக்ரம்

பட மூலாதாரம், ChiyaanVikram/Facebook

மகான், தங்கலான் படங்களில் விக்ரமுடன் நடித்த முத்துக்குமார், ”நான் அடிப்படையில் கூத்துப்பட்டறையில் வளர்ந்தவன். அதனால், விக்ரம்சாருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஓய்வு நேரங்களின் என்னை பல விதமாக நடிக்க வைத்து ரசிப்பார். மகான் படத்தில் அவ்வளவு உற்சாகம் கொடுத்தார். தங்கலான் படத்தில் அவர் கெட்அப், கேரக்டர், உழைப்பு பார்த்து மிரண்டு விட்டேன். ஒரு நடிகர் தனது கேரக்டருக்காக இப்படியெல்லாம் மாறுவாரா என மிரண்டு விட்டேன். அந்த படத்தில் அவர் வாய்ஸ் கூட பிரமாதம். அதற்காக அவ்வளவு உழைத்தார்”. என்றார்

பிரச்னைகளை பேசுவோம்
உடற்பயிற்சி கூடத்தில் நடிகர் விக்ரம்

பட மூலாதாரம், Chiyaanvikram/Facebook

‘7 முறை உணவு சாப்பிட்டார்’

நடிகர் விக்ரமுக்கு பலஆண்டுகள் உடற்பயிற்சி ஆலோசகராக இருந்த பரத், ”நான் ஐடியில் இருந்தேன். ஜிம், உடற்பயிற்சியில் ஆர்வமாக இருக்க, விக்ரம்சார்தான் என்னை இந்த துறையில் முழுமையாக ஈடுபடு என்று ஊக்குவித்தார். உடற்பயிற்சி என்பது அவருக்கு உயிர் மாதிரி. ஐ படத்தில் உடற்பயிற்சிக்கு அதிக கவனம் செலுத்தினார். ஒருநாள் கூட லீவு போடமாட்டார். நான் டயர்டு ஆனால் கூட விடமாட்டார். திட்டி ஜிம்முக்கு அழைத்து செல்வார். காலையில் 4 மணிக்கு என்னை எழுப்பி பீச்சில் ஜாக்கிங் அழைத்து செல்வார். ஜிம்மில் பலமணி நேரம் செலவழித்தார். அதில் 3 விதமான உடல் தோற்றத்தில் வருவார். 20 கிலோ எடை குறைத்தார்.” என கூறுகிறார்.

”அதற்காக டயட், உடற்பயிற்சியை கடைபிடித்தார். அவர் உணவுமுறை வித்தியாசமாக இருக்கும். சில சமயங்களில் ஒருநாளைக்கு கொஞ்சம், கொஞ்சமாக 7 முறை சாப்பிடுவார். அந்த உணவு மிகக்குறைவாக இருக்கும். அவர் மனைவிதான் அவருக்கு டயட்ஷியன்.

மாம்பழமும், துரியன் பழமும் அவர் வீக்னஸ். அதை சாப்பிட்டுவிட்டு இன்னும் அதிகமாக உடற்பயற்சி செய்வார். ஜிம் மட்டுமல்ல, உணவு, பிசியோதெரிபி, உறக்கம், பழக்க வழக்கம் என எல்லா விஷயத்திலும் மிகச்சரியாக இருப்பார்.” என்றார்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU