Home தேசிய national tamil ’16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி’ – செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

’16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி’ – செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

18
0

SOURCE :- BBC NEWS

'16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி' - செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

பட மூலாதாரம், HANDOUT

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“அரிசி ஆலையில் வேலை எனக் கூறி கூட்டிச் சென்றனர். அங்கு வேலை பார்த்த நான்கு வருட காலத்தில் சொல்ல முடியாத அளவுக்குக் கொடுமைகளை அனுபவித்தோம். அங்கிருந்து உயிருடன் வெளியில் வந்ததே பெரிய விஷயம்” என்கிறார், செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடி கிராமத்தில் வசிக்கும் சுமதி.

இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமதி உள்பட ஒன்பது பேரை அரிசி ஆலையில் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தி துன்புறுத்தியதாக ஆலை உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது.

சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 16ஆம் தேதியன்று அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் அவரின் கார் ஓட்டுநருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனையை செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் தாலுகாவில் வடகடம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீராசாமி என்பவர் அரிசி ஆலை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இங்கு பணிபுரிவதற்கு நான்கு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது இருளர் பழங்குடிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். கணேசன், மாரி, காமாட்சி, அஞ்சலை, குமார், சாந்தி, மகேஸ்வரி, சுமதி, ஏழுமலை உள்ளிட்ட ஒன்பது பேரும் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியன்று தனியார் அமைப்பு ஒன்றிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அரிசி ஆலையில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குறைவான கூலி, அதிக உடல் உழைப்பு, உணவு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது உள்பட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

இதையடுத்து, மாமல்லபுரம் காவல் நிலையத்தில் திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அரிசி ஆலை உரிமையாளர் வீராசாமி, அவரது கார் ஓட்டுநர் ஏகாம்பரம் ஆகியோர் மீது கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 16 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று நீதிபதி சந்திரசேகரன் அளித்துள்ள தீர்ப்பில், இருளர் பழங்குடிகள் அனுபவித்த கொடுமைகள் குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

'16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி' - செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

பட மூலாதாரம், HANDOUT

‘சட்டவிரோத முன்பணம், 16 மணிநேர வேலை’

அதில், ‘சட்டவிரோதமாக முன்பணம் கொடுக்கப்பட்டு இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், அந்தப் பணத்தை அவர்களால் திருப்பிச் செலுத்தவே முடியாத அளவுக்கு மிகக் குறைவான கூலியைக் கொடுத்துள்ளனர்’ என மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ஐந்தாயிரம் ரூபாய் வரை முன்பணமாக அரிசி ஆலை உரிமையாளர் கொடுத்துள்ளார். இவர்கள் ஆலை வளாகத்தில் உள்ள ஓலைக் கொட்டகைகளில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

காலை 6 மணியளவில் எழுந்து அரிசியை அவிப்பது, உலர்த்துவது, காய வைப்பது என இரவு 12.30 மணி வரை அவர்கள் வேலை பார்த்து வந்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு தலா 50 ரூபாய் கூலியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 25 ரூபாயை முன்பணத்தில் கழித்துள்ளனர். அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தியபோது முன்பணம் தொடர்பான எந்தக் கணக்குகளும் பராமரிக்கப்படவில்லை’ என மாவட்ட நீதிமன்றம் கூறியுள்ளது.

‘பணிச் சுமை தாங்காமல் வெளியில் சென்று வேலை பார்ப்பதற்கும் இவர்கள் அனுமதிக்கப்படவில்லை’ எனக் கூறியுள்ள நீதிபதி, ‘வேலை பார்க்காமல் தவிர்த்தபோது கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘உடல்ரீதியாகத் துன்புறுத்தியும் அவதூறான வார்த்தைகளில் மிரட்டியும் அங்கிருந்து செல்ல முடியாத அளவுக்குத் தடுத்துள்ளனர். முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் தொடர்ந்து வேலை பார்ப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்’ என நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது.

இருளர் பழங்குடிகளில் திண்டிவனத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றும் தங்கி வேலை பார்த்து வந்துள்ளது. இந்தக் குடும்பத்தில் இருந்த சிறுமியும் ஆலையில் வேலை பார்ப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார். நெல்லை உலர்த்துவது உள்ளிட்ட பணிகளைச் சிறுமி மேற்கொண்டு வந்துள்ளார்.

'16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி' - செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

பட மூலாதாரம், HANDOUT

‘பொய்யான புகார்’ – அரிசி ஆலை தரப்பு

அரிசி ஆலை உரிமையாளரின் கார் ஓட்டுநர் ஏகாம்பரம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை இருளர் பழங்குடிகள் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் முன்வைத்துள்ளனர்.

“நாங்கள் குடியிருந்த கொட்டகைக்குள் சிறுமியிடம் தவறாக நடப்பதற்கு கார் ஓட்டுநர் ஏகாம்பரம் முயற்சி செய்தார். இதை பெற்றோர் தட்டிக் கேட்டபோது, அவர்களைக் கடுமையாகத் தாக்கினார்” என்று நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் உணவு சமைப்பதற்குத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தருவதற்கு ஏகாம்பரம் மறுத்ததாக இருளர் பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அரிசி ஆலை உரிமையாளர் தரப்பினர் மறுத்துள்ளனர். நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில், ‘அரிசி ஆலையில் மீட்பு நடவடிக்கை என எதுவும் நடக்கவில்லை. இருளர் பழங்குடிகள் பொய் கூறுகின்றனர்’ எனக் கூறியுள்ளனர்.

வழக்கில் முதல் தகவல் அறிக்கையை தாமதமாக காவல்துறை பதிவு செய்துள்ளதாகக் கூறிய அரிசி ஆலை உரிமையாளர் தரப்பு வழக்கறிஞர், “காவல்துறை பொய்யான வழக்கைப் பதிவு செய்துள்ளதாக” வாதிட்டார்.

“ஆனால் இந்த வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய விடுதலைச் சான்று (Release certificate) மிக முக்கியப் பங்கு வகித்தது. சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ, ‘அவர்கள் கொத்தடிமைகள்’ என்பதை முடிவு செய்து விடுதலை செய்துள்ளார். இதனால் ஆலை தரப்பு வாதம் எடுபடவில்லை” என்றார் வழக்கறிஞர் ராஜா.

'16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி' - செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

பட மூலாதாரம், HANDOUT

16 ஆண்டுகள் தாமதம் ஏன்?

பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடி மக்களுக்காக தொடக்கம் முதலே நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜா வாதாடி வந்துள்ளார். சுமார் 16 ஆண்டுகளாக வழக்கின் தீர்ப்பு வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அவர் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்தார்.

“இரு தரப்பு வாதங்களும் முடிந்து 2019ஆம் ஆண்டில் தீர்ப்பு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது எதிர்த் தரப்பில் வழக்கை மறு விசாரணை நடத்துமாறு மனு போட்டனர்” என்கிறார்.

இருளர் பழங்குடி மக்களிடம் தங்கள் தரப்பில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி மனு போட்டதால் மீண்டும் மறு விசாரணை நடத்தப்பட்டு தற்போது தீர்ப்பு வெளிவந்ததாகவும் அவர் விவரித்தார்.

வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஆலை உரிமையாளர் வீராசாமி இறந்துவிட்டதாகக் கூறிய வழக்கறிஞர் ராஜா, “பாதிக்கப்பட்ட சில பழங்குடிகள், நீண்ட காலத்திற்குப் பிறகு நீதிமன்றத்திற்கு வந்தபோது அவர்களால் பழைய சம்பவங்களை நினைவுகூர முடியவில்லை” என்றார்.

பழங்குடிகள் பாதிக்கப்பட்டது தொடர்பான ஆர்.டி.ஓ விசாரணை, அதன் அறிக்கைகள், காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் ஆகியவை மிக முக்கியப் பங்கு வகித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“ஆலையில் பல்வேறு கொடுமைகளை அவர்கள் அனுபவித்துள்ளனர். வெளியில் சென்று காய்கறிகள் வாங்க விரும்பினால் ஒருவரை மட்டுமே அனுப்பி வைப்பார்கள். குடும்பமாக வெளியில் சுற்ற அனுமதிக்கவில்லை” என்கிறார் வழக்கறிஞர் ராஜா.

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர் இறந்துவிட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நபரான கார் ஓட்டுநர் ஏகாம்பரத்துக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஏழாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

'16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி' - செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

பட மூலாதாரம், HANDOUT

‘நிம்மதியாக சாப்பிட விடமாட்டார்கள்’

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடி மக்களிடம் பிபிசி தமிழ் பேசியது. “நான்கு வருட காலம் அந்த ஆலையில் வேலை பார்த்தோம். அங்கு ஓலைக் கொட்டகையில் தங்க வைக்கப்பட்டோம். வெளியில் எங்கும் போக முடியாத அளவுக்குக் கொடுமைப்படுத்தினர்” என்கிறார் சுமதி.

“சமைப்பதற்கு அரிசி கொடுப்பார்கள். அதை வைத்து சாப்பாடு சமைப்போம். ஆனால், நிம்மதியாகச் சாப்பிட விடமாட்டார்கள். நெல் காய்ந்துவிடும் எனக் கூறி விரட்டுவார்கள்” என்கிறார் அவர்.

அவரது கூற்றுப்படி, இரவு நேரத்தில் நெல்லை அவித்து காயப்போட வைப்பது, அதிக வெயில், மழை ஆகிய நேரங்களில் நெல்லை பாதுகாப்பது எனப் போதிய உறக்கமின்றி உழைத்ததாகக் கூறுகிறார்.

“முன்பணம் பிடித்தம் போக தினமும் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரைதான் சம்பளம் வரும். அங்கு ஒன்பது பேர் வேலைக்குப் போனோம். இதில் சிலர் உடல்நலமில்லாமல் இறந்துவிட்டனர்” என்றார் சுமதி.

‘தப்பித்து ஓடிப்போனோம்… ஆனால்?’

ஆலையில் பணிபுரிந்த மகேஸ்வரியிடம் பேசியபோது, “வேலைக்குப் போனால் குடும்பப் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என நினைத்தோம். ஆனால், இன்னும் சில மாதங்கள் இருந்திருந்தால் நாங்கள் உயிருடன் இருந்திருக்கவே வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு கொடுமைகளை அனுபவித்துவிட்டோம்” எனக் கூறினார்.

அரிசி ஆலையில் இருந்து ஒருமுறை தப்பிச் செல்வதற்கும் இவர்கள் முயன்றுள்ளனர். “அந்த இடத்தைவிட்டு ஓடிப் போவதற்காக தாம்பரம் வரை சென்றுவிட்டோம். ஆனால், எங்களைத் தேடி வந்து இழுத்துச் சென்றனர்” என்கிறார் சுமதி.

“உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகள் உள்பட எதற்கும் போக முடியாது. மிகவும் முக்கியமான நிகழ்வு நடந்தால் ஒருவரை மட்டும் அனுப்பி வைப்பார்கள். உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் மருத்துவமனைக்குப் போக முடியாது. குழந்தைகளையும் படிக்க வைக்க அனுமதிக்கவில்லை” எனக் கூறுகிறார் மகேஸ்வரி.

தற்போது இவர்கள் செய்யூர் அருகில் உள்ள கடம்பாடி என்ற கிராமத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். “தினமும் வேலைக்குப் போகிறோம். எந்தவித சிரமமுமின்றி நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம்” என்கிறார், அரிசி ஆலையால் பாதிக்கப்பட்ட ஏழுமலை.

'16 மணிநேர வேலை, தப்பித்தால் அடி' - செங்கல்பட்டில் இருளர் பழங்குடிகளுக்கு நேர்ந்த துயரம்

பட மூலாதாரம், CV Ganesan

ஐந்து ஆண்டுகளில் 944 பேர் மீட்பு

தொழிற்சாலைகளில் கொத்தடிமை முறைகள் உள்ளதா என்பது குறித்துப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, கடந்த பிப்ரவரி மாதம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக 2.56 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் பேசினார்.

கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு நிவாரணத் தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வீட்டுமனை, பட்டா, வேலை வாய்ப்பு, கல்வி, தொழில்திறன் பயிற்சி, சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராகச் சேர்த்தல் மற்றும் மருத்து வசதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு கூறுகிறது.

அந்த வகையில், கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை, 2030ஆம் ஆண்டுக்குள் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்குவது அரசின் இலக்காக உள்ளதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU