Home தேசிய national tamil வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 கேள்விகள் மற்றும் பதில்கள்

வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 கேள்விகள் மற்றும் பதில்கள்

15
0

SOURCE :- BBC NEWS

குளிர்ந்த நீரைவிட வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

மாத்திரை சாப்பிடுவதென்பது மிகவும் எளிதான செயலாகத் தோன்றலாம். நாம் மாத்திரையை வாயில் போட்டு, சிறிது தண்ணீர் குடித்து, அதனுடன் வேலை முடிந்துவிட்டதாக உணர்கிறோம்.

ஆனால், மருந்துகளைச் சரியான முறையில் உட்கொள்வதென்பது, பலரும் நினைப்பதைவிட மிக முக்கியமான செயலாகும். சிலர் மாத்திரைகளைக் குளிர்ந்த நீருடன் விழுங்குகிறார்கள், சிலர் வெந்நீரை பயன்படுத்துகிறார்கள்.

மாத்திரையை விழுங்க பிடிக்காதவர்கள், தேநீர், காபி, பால் அல்லது மென்பானங்களுடன் அதை உட்கொள்கிறார்கள். ஆனால், இவ்வாறு செய்வது சில நேரங்களில் மருந்து செயல்படக்கூடிய விதத்தை பாதிக்கக்கூடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.

சிலர் தங்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மாத்திரைகளைத் துல்லியமாக உட்கொள்கிறார்கள். வேறு சிலரோ எப்போதெல்லாம் நியாபகத்துக்கு வருகிறோ அப்போதெல்லாம் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால், நமக்குத் தோன்றியபடியெல்லாம் மாத்திரைகளை உட்கொள்வது சரியான செயலா? அதற்கான பதில்: இல்லை, அது எப்போதுமே சரியான அணுகுமுறையல்ல. நீங்கள் எந்த வகையான தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள், மாத்திரையுடன் எந்தப் பானத்தைப் பருகுகிறீர்கள், எந்த நேரத்தில் உட்கொள்கிறீர்கள் என்பன போன்ற மிகச் சிறிய விஷயங்கள்கூட, மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

இத்தகைய காரணிகள், மருந்து உடலால் எவ்வாறு உறிஞ்சப்படுகிறது என்பதையும், அது எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதையும் பாதிக்க வல்லவை. எளிதாகக் கூறுவதெனில், நீங்கள் ஒரு மாத்திரையை உட்கொள்ளும் விதமே அந்த மருந்து முறையாகச் செயல்படுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. எனவே, மாத்திரைகளைச் சரியான முறையில் உட்கொள்வது குறித்த சில சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள தகவல்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

மருந்துகளில் பல வகைகள்

சிரப்கள் (திரவ மருந்துகள்), சஸ்பென்ஷன்கள், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், பொடிகள், ஊசிகள் எனப் பல்வேறு வடிவங்களில் மருந்துகள் வருகின்றன.

சிரப்களை போன்ற திரவ மருந்துகள் உடலால் பெரும்பாலும் எளிதாக உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. இருப்பினும், அவை கெட்டுப் போகக்கூடும் என்பதால், அவற்றை நீண்ட காலத்துக்குப் பாதுகாத்து வைப்பது சற்று கடினமாக இருக்கலாம். பல மருந்துகள் மாத்திரைகள் அல்லது காப்ஸ்யூல்களாக தயாரிக்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

குளிர்ந்த நீரைவிட வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

மேலும், ஒவ்வொரு மருந்தையும் திரவ வடிவில் தயாரிக்கவோ அல்லது உட்கொள்ளவோ இயலாது. சில மருந்துகள், ‘மெதுவாக வெளிப்படும் மருந்துகள்’ (slow-release medicines) என்ற வகையில் சிறப்பாகத் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, இந்த மருந்துகள் வயிற்றைச் சென்றடைந்த பிறகு, ஒரே நேரத்தில் முற்றிலுமாக வெளிப்படுவதில்லை. அவை பல மணிநேரம் மெல்ல மெல்ல வெளிப்பட்டு, நீண்ட நேரத்துக்கு உடலில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

இதன் காரணமாக, இந்த வகையான ‘மெதுவாக வெளிப்படும் மாத்திரைகளை’ நசுக்கவோ அல்லது மென்று சாப்பிடவோ கூடாது. அவ்வாறு நீங்கள் அவற்றை நசுக்கினாலோ அல்லது மென்று சாப்பிட்டாலோ, மருந்து மெதுவாக வெளிப்படுவதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் முழுவதுமாக உடலில் வெளியாகிவிடக்கூடும். இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

குளிர்ந்த நீரா? வெந்நீரா?

இப்போதுள்ள அடுத்த கேள்வி: மாத்திரைகளைச் சாப்பிட எத்தகைய நீரைப் பயன்படுத்துவது சிறந்தது? எதைத் தவிர்க்க வேண்டும்? இதுகுறித்து மருத்துவர் கோபேஷ் பிபிசியிடம் விளக்கினார்.

அவர், எந்தவொரு மாத்திரை அல்லது காப்ஸ்யூலாக இருந்தாலும் அதை வெதுவெதுப்பான நீருடன் சாப்பிடுவதே சிறந்தது என்றார். அவரைப் பொறுத்தவரை, அதுவொரு திட வடிவ மாத்திரையாக இருந்தாலும் சரி, மருந்துத் துகள்களால் நிரப்பப்பட்ட காப்ஸ்யூலாக இருந்தாலும் சரி வெதுவெதுப்பான நீருடன் உட்கொள்ளும்போது மட்டுமே அந்த மாத்திரை முறையாகச் செயல்படுகிறது.

குளிர்ந்த நீர், மாத்திரை அல்லது காப்ஸ்யூல் கரையும் செயல்முறையை மெதுவாக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

அதாவது, மருந்து உடலில் சிதைந்து கரைவதற்கு அதிக நேரம் எடுக்கலாம் என்கிறார் அவர். அதேவேளையில், மிக அதிகமாகச் சூடான நீர் மருந்தின் செயல்திறனைக் குறைக்கக்கூடும். அதாவது, மருந்து செயல்பட வேண்டிய அளவுக்குச் சிறப்பாகச் செயல்படாமல் போகலாம்.

குளிர்ந்த நீரைவிட வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், மருத்துவர் கோபேஷ் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுக்கிறார். “மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு மாத்திரை, சிரப் அல்லது பிற மருந்து எதுவாக இருந்தாலும், அதை மருத்துவர் அறிவுறுத்திய விதத்தில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.” மேலும், மக்கள் ‘சுய மருத்துவம்’, அதாவது முறையான மருத்துவ ஆலோசனையின்றி தாங்களாகவே மருந்துகளை உட்கொள்வதைச் செய்ய முயலக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதே தலைப்பில் கே.எம்.எஸ் ஹெல்த் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், மருத்துவர் என்.விஜயலட்சுமியும் இத்தகைய விளக்கத்தையே அளித்துள்ளார்.

அவரது விளக்கத்தின்படி, நாம் உட்கொள்ளும் மருந்துகள், வயிறு மற்றும் குடல்களில் உள்ள செல்களின் வாயிலாக உடலால் உறிஞ்சப்படுகின்றன. ஆனால், இந்த உறிஞ்சுதல் செயல்முறை சரியாக நடைபெற வேண்டுமானால், செரிமான மண்டலத்தின் உட்புறச் சூழல் அதற்கு ஏற்றவாறு அமைந்திருக்க வேண்டும்.

மருந்துகள் முறையாகக் கரைந்து உறிஞ்சப்படுவதற்கு, வயிறு மற்றும் குடல்களின் ‘லூமென்’ என்ற உட்புறப் பகுதியின் வெப்பநிலை பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மருத்துவர் விஜயலட்சுமியின் கூற்றுப்படி, குளிர்ந்த நீருடன் உட்கொள்ளும்போது மருந்துகள் கரைவடைய அதிக நேரம் எடுக்கும். இது வயிற்றின் உட்புற வெப்பநிலையைக் குறைக்கவும் கூடும்; இது மருந்து உடலால் முறையாக உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தலாம்.

நாம் மாத்திரைகளைக் குளிர்ந்த நீருடன் எடுத்துக் கொள்ளும்போது, விழுங்கிய மருந்தைச் செயலாக்குவதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உடல் தனது கூடுதல் ஆற்றலை முதலில் அந்தக் குளிர்ந்த நீரை உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு சூடுபடுத்துவதிலேயே செலவிடுகிறது என்று அவர் மேலும் விளக்கினார்.

இதைப் புரிந்துகொள்ள அவர் ஓர் எளிய ஒப்பீட்டை முன்வைத்தார். சாதம் சாப்பிட்ட பிறகு நீங்கள் குளிர்ந்த நீரைக் குடித்தால்கூட, உணவில் இருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்குத் தேவையான ஆற்றலைச் செலவிடுவதற்குப் பதிலாக, உடல் தனது ஆற்றலை முதலில் அந்தக் குளிர்ந்த நீரைச் சூடுபடுத்துவதிலேயே செலவிடக்கூடும்.

எனவே, மாத்திரைகள் முறையாகக் கரையவும், உடல் மருந்தை இன்னும் திறம்பட உறிஞ்சிக்கொள்ளவும் உதவக்கூடும் என்பதால், மருந்துகளை உட்கொள்ளும்போது பொதுவாக வெந்நீரைப் பயன்படுத்துவதே சிறந்தது என்று மருத்துவர் கோபேஷ், மருத்துவர் என்.விஜயலட்சுமி ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

குளிர்ந்த நீரைவிட வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

வெந்நீருடன் சாப்பிடுவதால் என்ன பயன்?

மருந்துகளை வெதுவெதுப்பான நீர் அல்லது அறை வெப்பநிலையிலுள்ள தண்ணீருடன் எடுத்துக்கொள்வது, அவை வேகமாகக் கரையவும் விரைவில் செயல்படத் தொடங்கவும் உதவுமென மருத்துவர் விஜயலட்சுமி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

மருந்து உட்கொள்வதன் நோக்கமே, அது உடலுக்குள் விரைவாகச் சென்று தனது வேலையைத் தொடங்க வேண்டும் என்பதுதான் என்று அவர் விளக்கினார். ஆனால், நீங்கள் மாத்திரைகளைக் குளிர்ந்த நீரில் எடுத்துக்கொண்டால், இந்தச் செயல்முறை மெதுவாகலாம், அதாவது மருந்து வேலை செய்ய அதிக நேரம் எடுக்கலாம்.

அதேவேளையில், மிகவும் சூடான நீரைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் அவர் எச்சரித்தார். அவரைப் பொறுத்தவரை, மிகவும் சூடான நீர் மருந்தின் செயல்திறனைச் சேதப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம். இதன் காரணமாக, மருந்துகளை உட்கொள்ளும்போது அறை வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

பால், பழச்சாறுடன் மாத்திரை சாப்பிடலாமா?

இதுபோக, மருந்துகளை பால், மினரல் வாட்டர், பழச்சாறு ஆகியவற்றுடன் எடுத்துக்கொள்ளலாமா என்ற மற்றுமொரு பொதுவான கேள்வி மக்களிடையே உள்ளது.

தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், ஜெர்மன் மருந்தாளுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினுடைய செய்தித் தொடர்பாளர் உர்சுலா செல்லெர்பெர்க், “மருந்துகளைச் சாதாரண தண்ணீருடன் எடுத்துக்கொள்வதே சிறந்தது. ஏனெனில், பால், மினரல் வாட்டர், பழச்சாறு, பீர், ஒயின் ஆகியவை சில நேரங்களில் மருந்தின் விளைவுகளை மாற்றக்கூடும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக அவர் பால் குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். அவர், “பாலில் கால்சியம் உள்ளது. அது மருந்துடன் பிணைந்து, ரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்கிறது,” என்றார்.

ஒரு கோப்பை காபியில் சிறிதளவு பால் கலந்தால்கூட, அது மருந்தின் செயல்திறனை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

அவரைப் பொறுத்தவரை, அதிக அளவு கால்சியம் கொண்ட, கால்சியம் செறிவூட்டப்பட்ட பழச்சாறுகள், மினரல் வாட்டர் ஆகியவற்றிலும் இதே பிரச்னை ஏற்படலாம். ஏனெனில், அவையும் சில மருந்துகளுடன் குறுக்கிடக்கூடும்.

பால் மற்றும் பால் பொருட்கள் சில மருந்துகளின், குறிப்பாக தைராய்டு ஹார்மோன் மருந்துகள், ஆஸ்டியோபோரோசிஸ் மருந்துகள் மற்றும் பல வகையான நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்திறனைக் குறைக்கக்கூடும் என்று உர்சுலா செல்லெர்பெர்க் கூறியதாக தி இந்து மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டுள்ளது.

குளிர்ந்த நீரைவிட வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

மதுவுடன் மருந்துகளைச் சாப்பிடலாமா?

மற்ற பழச்சாறுகளைவிட, திராட்சை சாறு பல மருந்துகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் பக்க விளைவுகளில் தாக்கம் செலுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உர்சுலா செல்லெர்பெர்க்கின் கூற்றுப்படி, பொதுவாக மருந்துப் பொருட்களைச் சிதைக்கும் நொதிகளை நம் உடலில் திராட்சை சாறு தடுக்கக்கூடும். இதனால், மருந்து உடலில் நீண்ட நேரம் தங்கியிருக்கலாம் அல்லது எதிர்பார்த்ததைவிட அதிக வீரியத்துடன் செயல்படலாம்.

உயர் ரத்த அழுத்தம், இதய நோய், கொழுப்பு வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் பிற நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளை திராட்சை சாறு பாதிக்கக்கூடும் என்று அவர் கூறுகிறார். இதுவரை, ஆரஞ்சு சாறு, ஆப்பிள் சாறு ஆகியவற்றில் இத்தகைய தீங்கு விளைவிக்கும் தன்மைகள் கண்டறியப்படவில்லை.

எந்தச் சூழ்நிலையிலும் மருந்துப் பொருட்களை மதுவுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது.

ஏனெனில், மருந்துகளின் செயல்பாட்டுக் கூறுகளுடன் வினைபுரிந்து, ஆபத்தான பக்க விளைவுகளை மது ஏற்படுத்தக்கூடும்.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

மருந்து உட்கொள்ளும்போது எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும் என்பது மற்றொரு முக்கியமான கேள்வி. சிலர் மாத்திரைகளை தண்ணீர் ஏதுமின்றி அப்படியே விழுங்கிவிடுகின்றனர். ஆனால் இது பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மேல் பூச்சு (coating) இல்லாத மாத்திரைகள் நாக்கில் ஒட்டிக்கொண்டு, கசப்பான சுவையை ஏற்படுத்தலாம்.

மும்பையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பிரதீப் சிங்கை மேற்கோள் காட்டி ஹெல்த்சைட்.காம் இணைதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, “தண்ணீரின்றி மாத்திரையை உட்கொள்வது ஆபத்தானது. ஏனெனில், அது தொண்டையில் சிக்கிக்கொண்டு, மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடும்.”

குளிர்ந்த நீரைவிட வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா?

பட மூலாதாரம், Getty Images

மருத்துவர் பிரதீப் சிங் மேலும் கூறுகையில், “தண்ணீரின்றி மாத்திரையை உட்கொண்டால், அது முறையாக செரிமானம் ஆகாது. அந்த மாத்திரை செரிமான மண்டலத்தின் வழியாகப் பயணித்து, மலத்தின் வழியாக அப்படியே வெளியேறிவிடக்கூடும். மாத்திரை செரிமானம் ஆகாமல் வெளியேறினால், அதன் மூலம் உடலுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவப் பயன்களும் கிடைக்காமலே போய்விடும்,” என்றார்.

இதைப் புரிந்துகொள்ள அவர் ஓர் உதாரணத்தைச் சுட்டிக்காட்டினார். ‘இபுப்ரோஃபென்’ போன்ற ஸ்டிராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ளும்போது போதுமான அளவு தண்ணீர் அருந்தாவிட்டால், அவை வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் கலந்து, வயிற்றுப் புண்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.

பொதுவாக, மருந்து சாப்பிடும்போது அறை வெப்பநிலையில் உள்ள ஒரு முழு குவளைத் தண்ணீரை அருந்தலாம். எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அதன்படி பின்பற்றுங்கள்.

(மூலாதாரங்கள்: இந்திய மருத்துவ சங்கம், nhs.uk இணையதளம், இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம்)

(குறிப்பு: இந்தத் தகவல் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்னைகள், சிகிச்சைகள் அல்லது மருந்துகள் தொடர்பான விஷயங்களுக்கு, எப்போதும் ஒரு மருத்துவரிடம் நேரடியாக ஆலோசனை பெற்று அதைப் பின்பற்ற வேண்டும்.)

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU