SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Hulton-Deutsch Collection/CORBIS/Corbis via Getty Images
ஒரு மனிதரின் வாழ்நாளில் அடங்கிவிடாத அளவுக்கு நீண்டதாகத் தோன்றும் வாழ்க்கை வரலாறுகள் சில உள்ளன.
பிரிட்டிஷ் ஆய்வாளர், உளவாளி, தூதரக அதிகாரி, சிப்பாய், மொழி பெயர்ப்பாளர் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் பர்ட்டனின் வாழ்க்கை, அவரது 79 ஆண்டுகால வாழ்வின் அனைத்து சாதனைகளையும் சர்ச்சைகளையும் உள்ளடக்கி, காலத்தைக் கடந்த ஒரு தோற்றத்தை அளிக்கிறது.
விக்டோரியன் கால ஆய்வுகளின் பொற்காலத்தைச் சேர்ந்த சாகசக்காரரான பர்ட்டன் 26 மொழிகளைப் பேசினார். அவர் தேர்ச்சி பெற்றிருந்த வட்டார வழக்குகளையும் சேர்த்தால் மொத்தம் 40 மொழிகளை அவர் அறிந்திருந்தார்.
பர்ட்டன் மெக்காவுக்கு உள்ளும், கராச்சியில் இருந்த ஆண்கள் பாலியல் விடுதிகளுக்கு உள்ளும் ஊடுருவினார், நைல் நதியின் பிறப்பிடத்தைத் தேடினார். மேலும் “ஆயிரத்தொரு இரவுகள்”, “காமசூத்திரா” ஆகியவற்றை அப்போதைய பழமைவாத பிரிட்டிஷ் சமூகத்திற்காக மொழிபெயர்த்தார்.
இதன் மூலம் ஆங்கில மொழியில் அதிகம் திருட்டுத்தனமாக அச்சிடப்பட்ட தடை செய்யப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இது மாறியது.
பிரிட்டிஷ் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக மட்டும் பர்ட்டன் உலகம் முழுவதும் பயணம் செய்யவில்லை. அவர் “விக்டோரியா மகாராணிக்கே மாரடைப்பை வரவழைக்கக்கூடிய மற்ற விஷயங்களையும் ஆராய்ந்தார். விசித்திரமான கடவுள்கள் மற்றும் மதங்கள், பரிசோதனை மருந்துகள், மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, பாலுறவு மற்றும் சிற்றின்பம் போன்றவற்றை ஆராய்ந்தார்” என 19ஆம் நூற்றாண்டு ஆய்வாளர்கள் குறித்த தனது தொடரில் பிரிட்டிஷ் எழுத்தாளரும் கல்வியாளருமான ரெட்மண்ட் ஓ’ஹான்லன் குறிப்பிடுகிறார்.
“சிலர் அவரை ஒரு மேதை என்று வர்ணிக்கிறார்கள். மற்றவர்கள் அவர் வக்கிரமானவர் என்று நம்புகிறார்கள்.”
கடந்த 1821இல் தென்மேற்கு பிரிட்டனின் டார்குவேயில் பிறந்த பர்ட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்படப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்தார்.
மொழிகளைக் கற்றுக்கொள்வதில் குறிப்பிடத்தக்க திறமையையும் தன்னடக்கம் இல்லாத தன்மையையும் கொண்ட பர்ட்டன், தான் மூன்று வயதிலேயே லத்தீன் மொழியையும், நான்கு வயதில் கிரேக்க மொழியையும் கற்றதாகக் கூறினார்.
பிறகு, அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பர்ட்டன் அரபு மொழி, வல்லூறு வளர்ப்புக் கலை ஆகியவற்றைக் கற்றார், வாள்வீச்சுத் திறனை மெருகேற்றிக் கொண்டார். ஒரு “பிரமாண்டமான மீசையை” வளர்த்தார் (அதைச் சிரைக்க அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்). அதில் அவர் சலிப்படைந்தார். பிறகு, விதிகளை மீறினார்.
இறுதியில் 1842இல் அனுமதியின்றி குதிரைப் பந்தய போட்டிகளுக்குச் சென்றதற்காக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பல்கலைக்கழக அதிகாரிகள் அவரைக் கண்டித்தபோது, மாணவர்களைக் குழந்தைகளைப் போல நடத்துவதாக அவர்களைக் குற்றம் சாட்டி, “மரியாதையுடன் தலைவணங்கி” அங்கிருந்து வெளியேறினார்.
ஆனால் அவர் அதை ஒரு தனித்துவமான பாணியில் செய்தார், தவறு செய்த மற்றொரு மாணவருடன் சேர்ந்து ஒரு குதிரை வண்டியை வாடகைக்கு எடுத்து, டிரம்பட் ஊதிக்கொண்டும், நண்பர்களுக்குக் கையசைத்து விடைபெற்றபடியும், கடைப் பெண்களின் கைகளில் முத்தமிட்டுக் கொண்டும் ஆக்ஸ்போர்டின் பிரதான வீதி வழியாகச் சென்றார்.
இந்த நாடகத்தன்மையும் கலக குணமும் அவரது வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தது.
பட மூலாதாரம், Hulton-Deutsch Collection/CORBIS/Corbis via Getty Images
தன்னை அவர் “ஒரு நாடோடி, தொலைந்த ஆத்மா, ஒரு நிலையான திசை இல்லாத ஒளிக்கீற்று” என்று வரையறுத்துக் கொண்டார்.
பல்வேறு வாழ்க்கை வரலாறுகள் அவரை மிகையான பண்புகளும் வரம்புமீறல்களும் கொண்ட ஒரு மனிதராகச் சித்தரிக்கின்றன.
அவர் நூலகங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்குச் சென்றது போலவே பாலியல் விடுதிகள் மற்றும் போதை மருந்துகளையும் பயன்படுத்தினார்.
ஒரு சிறந்த பண்பாட்டையும், தான் பயணம் செய்த பல்வேறு சமூகங்களை ஆராயத் தூண்டிய எல்லையற்ற ஆர்வத்தையும் அவர் கொண்டிருந்தார்.
கராச்சி அறிக்கை
தன்னைச் சூழ்ந்திருந்த அனைத்திலும் தன் உடலையும் ஆன்மாவையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, பர்ட்டன் எந்த அளவுக்குத் தீவிரமாகவும் அச்சமின்றியும் வாழ்ந்தார் என்பதை ஒரு நிகழ்வு விளக்குகிறது.
ஆக்ஸ்போர்டை விட்டு வெளியேறிய பிறகு, பர்ட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் சேர்ந்தார், அங்கு அவர் இரக்கமற்ற ஜெனரல் சார்லஸ் நேப்பியரின் கீழ் பணியாற்றினார்.
பர்ட்டன் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றிருந்த பாரசீகம் மற்றும் அரபு மொழிகளுடன், குஜராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, பாஷ்டோ, மராத்தி, ஹிந்துஸ்தானி போன்ற பல உள்ளூர் மொழிகளையும் கற்றுக் கொண்டார். இது அவரை உளவுத்துறையின் ஒரு முக்கிய சொத்தாக மாற்றியது.
உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலக்கவும், வெள்ளையர்களால் ஒருபோதும் கால் வைக்க முடியாத இடங்களுக்குச் செல்லவும், பர்ட்டன் தனது தலைமுடியைத் தோள் வரை வளர்த்து, அடர்த்தியான நீண்ட தாடியையும் வளர்த்தார்.
அவர் தனது கைகளிலும் கால்களிலும் மருதாணி பூசிக் கொண்டார். மேலும் உச்சரிப்புச் சிக்கல்களை மறைப்பதற்காக, தன்னை அரபு-பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த வளைகுடா வணிகரான “மிர்சா அப்துல்லா” என்று அழைத்துக்கொண்டார்.
கராச்சி அமைந்திருந்த பகுதியின் மொழியான சிந்தி மொழியைப் பேசத் தெரிந்த ஒரே பிரிட்டிஷ் அதிகாரி என்பதால், 1845ஆம் ஆண்டில் ஆண் பாலியல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், நகரின் தன்பாலின பாலியல் விடுதிகளைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பை நேப்பியர் அவரிடம் ஒப்படைத்தார்.
தனக்கு அறிமுகமான உள்ளூர் நண்பர்களுடன் சேர்ந்து, “மிர்சா அப்துல்லா” எனப் பெயர் வைத்துக்கொண்ட அவர், இரவு தோறும் பல்வேறு பாலியல் விடுதிகளுக்குச் சென்றார். அவர் தனது பணியை நுணுக்கத்துடனும் கவனத்துடனும் செய்ததாகத் தெரிகிறது. இது பழமைவாத விக்டோரியன் சமூகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன், ராணுவத்தில் அவரது எதிர்காலத்தை எப்போதும் இல்லாத அளவுக்குச் சேதப்படுத்தியது.
இந்த பாலியல் விடுதிகளின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் பிரிட்டிஷ் படை வீரர்களும் அதிகாரிகளும்தான், என அவர் அறிக்கை அளித்தது அவரது வாழ்க்கைப் பயணத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்று சில வாழ்க்கை வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
மெக்கா
பர்ட்டன் பின்னர் பிரிட்டனுக்கு திரும்பினார், அங்கு அவர் பல்வேறு இந்திய பழங்குடியினரின் பழக்க வழக்கங்கள் பற்றிப் பல புத்தகங்களை எழுதினார். ஆனால் சாகசம் மற்றும் ஆய்வுகள் மீதான ஆர்வம் அவரை விட்டு ஒருபோதும் நீங்கவில்லை.
இஸ்லாமியர்களின் புனித நகரங்களும் புனிதப் பயணத் தலங்களுமான மெக்கா மற்றும் மதீனாவுக்கு செல்வது அவரது மிகப்பெரிய ஆசைகளில் ஒன்றாக இருந்தது.
இஸ்லாமியர் அல்லாதவர்கள் அங்கு நுழைவதற்கு அப்போதும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில், இந்தத் தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இது எதுவும் பர்ட்டனை தடுக்கவில்லை.
அவர் பல ஆண்டுகள் “இஸ்லாம் இறையியலைப் படித்தார், குர்ஆனின் பெரும்பகுதியை மனப்பாடம் செய்தார் மற்றும் ‘தொழுகையில் நிபுணரானார்'” என்று 1909இல் தாமஸ் ரைட் எழுதிய “தி லைஃப் ஆஃப் சர் ரிச்சர்ட் பர்ட்டன்” என்ற விரிவான வாழ்க்கை வரலாறு கூறுகிறது.
இந்த முறை தன்னை மறைத்துக் கொள்ள, அவர் ஒரு பஷ்டூன் மருத்துவராக வேடமிட்டுக் கொண்டார். தன்னை “ஷேக் அப்துல்லா” என்று அழைத்துக் கொண்ட அவர், தான் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்டார்.
அவர் தனது தலையைச் சிரைத்து, மீண்டும் தாடி வளர்த்தார்.
அந்த கதாபாத்திரத்தின் எதார்த்தத்தை மேலும் மேம்படுத்த அவர் விருத்தசேதனம்கூட செய்துகொண்டார் என்றும் ஒரு நண்பர் கூறுகிறார்.
இவ்வாறு, பர்ட்டன் 1853இல் பிரிட்டனில் இருந்து கெய்ரோவுக்கு பயணம் செய்தார், அங்கு அவர் தனது புனிதப் பயண உடையை வாங்கி, இஸ்லாத்தின் புனித பூமிக்குப் புறப்படுவதற்காகத் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டார்.
ஆனால் அதற்கு முன் தான் சந்தித்த ஒரு அல்பேனிய கேப்டனுடன் மது அருந்தினார். இந்தச் செய்தி கசிந்ததும், ஷேக் அப்துல்லா கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுவது நல்லது என்று முடிவு செய்தார்.
பட மூலாதாரம், Historica Graphica Collection/Heritage Images/Getty Images
“காட்டு விலங்குகளும், அவற்றைவிடக் கொடூரமான மனிதர்களும் நிறைந்த ஒரு தரிசு நிலத்தின்” வழியாக, அவர் சூயஸ் கால்வாயை நோக்கி ஒட்டகப் பயணத்தைத் தொடங்கினார் என்று ரைட் எழுதிய வாழ்க்கை வரலாறு விவரிக்கிறது.
சூயஸில் அவர் மதீனா மற்றும் மெக்காவை சேர்ந்த சிலரைச் சந்தித்தார். அவர்கள் அவரது பயணத் தோழர்களாக மாறினர்.
அவர்களில் “சாத் த டெமான்” என்பவர், ” தனது மூன்று மனைவிகளுக்காக நேர்த்தியான ஆடைகள் கொண்ட இரண்டு பெட்டிகளைச் சுமந்து வந்த கறுப்பின மனிதர்” ஒருவரும், ஷேக் ஹமீத் என்ற “‘நெட்டையான மற்றும் வியர்வை வழியும் அரேபியர்’ ஒருவரும் இருந்தனர். அந்த நபர் தனது பெட்டியிலிருந்து சுத்தமான ஆடைகளை எடுக்க சோம்பேறித்தனப்பட்டு ஒருபோதும் தொழுகை செய்ய மாட்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய சுவாரஸ்யமான விவரங்கள் அந்தப் பயணம் பற்றிய “பில்கிரிமேஜ் டு மதீனா அண்ட் மெக்கா” என்ற புத்தகத்தை பிரிட்டனில் பெரும் வெற்றி பெறச் செய்தன. அந்தச் சமூகம் எவ்வளவு பாரபட்சமாக இருந்ததோ, அதே அளவு அந்நிய நாட்டு விசித்திரங்களை அறியவும் ஆவலாக இருந்தது.
ஒரு படகுப் பயணத்திற்குப் பிறகு, அவர் யம்பு துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்து வழியில் பெடோயின்களால் தாக்கப்பட்ட போதிலும் மதீனாவை சென்றடைந்தார்.
அவர் நகரின் புனிதத் தலங்களைப் பார்வையிட்டார். மேலும், மதீனாவுக்குள் நுழைந்த 7,000 பேரைக் கொண்ட “டமாஸ்கஸின் ஒரு பெரிய வணிகக் குழுவை” நேரில் கண்டார், “பச்சை மற்றும் தங்க நிறப் பல்லக்குகளில் வந்த பெரிய பிரபுக்கள், பிரமாண்டமான வெள்ளை சிரிய ஒட்டகங்கள், பகட்டான அலங்காரங்களைக் கொண்ட குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகள், பக்திமிக்க ஹாஜிகள் (புனிதப் பயணிகள்), சர்பத் விற்பனையாளர்கள், தண்ணீர் சுமப்பவர்கள் மற்றும் ஏராளமான ஒட்டகங்கள், செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள்” ஆகியவற்றைக் கண்டார்.
இத்தகைய ஒரு காட்சியைக் கண்டு ஒருவர் எப்படித்தான் அதன் மீது ஈர்ப்பு கொள்ளாமல் இருக்க முடியும்?
அவர் மெக்காவுக்கு சென்ற ஒரு வணிகக் குழுவில் இணைந்து, 1853 செப்டம்பர் 11 அன்று அங்கு சென்றடைந்தார்.
பட மூலாதாரம், Rick Jacobson/Royal Geographical Society via Getty Images
அங்கு, இஸ்லாமிய சமூகமான ‘உம்மா’வின் ஓர் உறுப்பினராக, அவர் அனைத்து மதச் சடங்குகளையும் நிறைவு செய்தார். இஸ்லாமியர்கள் எதை நோக்கித் தொழுகிறார்களோ அந்தப் புனிதக் கட்டடமான காபாவை ஏழு முறை சுற்றி வந்தார்.
தனது பணியாள் முகமது, சில பாரசீகர்களை பன்றி என்று அழைத்து அவமதித்ததால் ஏற்பட்ட சிறிய மோதலுக்குப் பிறகும், அவர்கள் காபாவின் மூலையில் பதிக்கப்பட்டுள்ள புனிதப் பாறையான ‘கருப்புக் கல்லை’ முத்தமிடச் சென்றனர்.
“நான் அதை முத்தமிட்டு, எனது கைகளையும் நெற்றியையும் அதன் மீது தேய்த்துக் கொண்டிருந்தபோது, அதை உற்று நோக்கினேன், அது ஒரு விண்கல் என்ற உறுதியுடன் அங்கிருந்து வெளியேறினேன்,” என்று பர்ட்டன் எழுதினார்.
ரகசியமாக காபாவின் குறிப்புகளை எடுத்து அதன் வரைபடங்களை வரைந்த பர்ட்டன், அந்தப் புனித இடத்தைப் போர்த்தியிருந்த திரைகளைப் பிடித்துக்கொண்டு அழுத அனைத்துப் பக்தர்களிலும், தன்னைவிட ஆழமான உணர்வை எவரும் உணரவில்லை என்று நினைத்தார். இருப்பினும் தன்னுடையது, “திருப்தியடைந்த பெருமையின் பரவசம்” என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
மெக்காவுக்குள் நுழைந்த முதல் மேற்கத்தியர் பர்ட்டன் அல்ல, ஆனால் இஸ்லாமிய சடங்குகளையும் பழக்க வழக்கங்களையும் நுணுக்கமாக விவரித்த முதல் நபர் அவர்தான். தனது சாகசம் பற்றிய எந்த விவரத்தையும் அவர் விட்டுவிடவில்லை, இது அவரது புகழை மேலும் வளர்த்தது.
நைல் நதியின் பிறப்பிடத்தைத் தேடி
அவரது புத்தகம் பெரும் வெற்றியைப் பெற்றது, ஆனால் பிரிட்டனுக்கு திரும்பி வந்து அந்த வெற்றியை அனுபவிப்பதற்குப் பதிலாக, இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு அப்போது தடைசெய்யப்பட்டிருந்த மற்றோர் இடத்திற்குப் பயணம் செய்ய அவர் முடிவு செய்தார். அது ஆப்பிரிக்காவின் ஹார்ன் பகுதியில் உள்ள ஹரார் நகரம்.
இந்த முறை ஒரு துருக்கிய வணிகரைப் போல உடை அணிந்து அங்கு சென்ற அவர், அந்த நகரின் அமீர் (இளவரசன்) தன்னை 10 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும்படி செய்தார்.
தாமஸ் ரைட் குறிப்பிடுவது போல, பர்ட்டன் துணிச்சலானவராக இருந்தாரே தவிர கவனக் குறைவானவர் அல்ல.
“சகிப்புத்தன்மையற்ற மற்றும் ரத்தவெறி கொண்ட ஓர் இளவரசனின் கூரையின் கீழ் தான் இருப்பதாக அவர் நினைத்தபோது, யாருடைய அழுக்கான நிலவறைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட மற்றும் அரைப் பட்டினியில் வாடும் கைதிகளின் முனகல்கள் எதிரொலித்தனவோ, அந்நியர்களை வெறுக்கும் மக்களுக்கு மத்தியில், அந்த விருந்தோம்பலற்ற வாசலைத் தாண்டிய ஒரே ஐரோப்பியராக, அவர் இயற்கையாகவே அமைதியற்றவராக உணர்ந்தார்.”
தனது சாதனைப் பட்டியலில் ஹராரை சேர்த்த பிறகு, பர்ட்டன் புகழ்பெற்ற நைல் நதியின் பிறப்பிடத்தைத் தேடுவதில் தனது கவனத்தைச் செலுத்தினார். இது பல ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டிய ஒரு மர்மமாக இருந்தது.
பட மூலாதாரம், The Print Collector/Getty Images
நதிக்கு நீர் வழங்கும் இரண்டு முக்கியக் கிளைகளில், ப்ளூ நைல் எத்தியோப்பியாவில் உருவாவதாக அறியப்பட்டிருந்தது, ஆனால் ஒயிட் நைலின் தோற்றம் தெரியாமல் இருந்தது.
ஆங்கில அதிகாரியும் ஆய்வாளருமான ஜான் ஸ்பேக் உள்ளிட்ட அவர்களின் குழு, பெர்பெராவில் சுமார் 300 பழங்குடியினரால் தாக்கப்பட்டபோது, அதன் பிறப்பிடத்தை அடைவதற்கான முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
அந்தப் பழங்குடியினர், குழுவின் சில உறுப்பினர்களைக் கொன்றனர் மற்றும் ஸ்பேக்கின் தோள்பட்டை மற்றும் கால்களில் காயம் ஏற்படுத்தினர். அதே நேரத்தில் ஒரு ஈட்டி பர்ட்டனின் முகத்தில் பாய்ந்தது, இது அவரது அடையாளமாக மாறிய பயங்கரமான தழும்பை ஏற்படுத்தியது.
குணமடைவதற்காக பிரிட்டனுக்கு சென்ற பிறகு, கிரைமியன் போரில் அவர் தன்னார்வலராகப் பங்கேற்றார். அவரது வாழ்க்கை அனுபவங்கள் நிறைந்ததாக இருந்தது. பின்னர் பர்ட்டன் தனது நைல் சாகசத்தை மீண்டும் தொடங்கினார்.
அவர் ஸ்பேக் மற்றும் 132 சுமை தூக்குபவர்களுடன் சான்சிபார் தீவில் இருந்து புறப்பட்டார். நைல் நதியில் பயணம் செய்வதற்குப் பதிலாக, இந்திய பெருங்கடலில் இருந்து கண்டத்தைக் கடப்பதே நதியின் பிறப்பிடத்தைக் கண்டறிய விரைவான வழி என்று பர்ட்டன் கருதினார்.
அந்தக் குழு காடுகள், சதுப்பு நிலங்களைக் கடந்து, அனைத்து வகையான பூச்சிகளின் கடிக்கும் ஆளாகி சாத்தியமான அனைத்து இன்னல்களையும் சந்தித்தது.
இறுதியில் பர்ட்டன் மற்றும் ஸ்பேக் டாங்கனிகா ஏரியை அடைந்தனர், இதற்கு முன்பு எந்தவொரு வெள்ளையரும் அதை அறிந்திருக்கவில்லை அல்லது பார்த்திருக்கவில்லை. அப்போது அவர்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டு பாதி கண் தெரியாத நிலையில் இருந்தனர்.
ஸ்பேக் விரைவாகக் குணமடைந்தார். டாங்கனிகா ஏரி நைல் நதியின் பிறப்பிடம் அல்ல என்பதை அவர்கள் இருவரும் உறுதிப்படுத்திய பிறகு, வடக்கே பல வாரங்கள் பயண தூரத்தில் இருப்பதாக மக்கள் கூறிய மற்றொரு பெரிய நீர்நிலையை நோக்கி அவர் புறப்பட்டார். குணமடைவதற்காக பர்ட்டனை அங்கேயே விட்டுச் சென்றார்.
இப்போது விக்டோரியா ஏரி என்று அழைக்கப்படும் இடத்தை ஸ்பேக் அடைந்தார், அதற்கு பிரிட்டிஷ் மன்னரின் பெயரைச் சூட்டினார். மேலும் தான் மர்மத்தைத் தீர்த்துவிட்டதாக முடிவு செய்தார்.
ஆனால் அவரது கண்டுபிடிப்பு பர்ட்டனுடன் ஒரு கசப்பான மோதலுக்கு வழிவகுத்தது, அவர் ஸ்பேக்கை நம்ப மறுத்தார்.
அவர்கள் பிரிட்டன் திரும்பியதும் இந்தத் தகராறு தீவிரமடைந்தது. விக்டோரியா ஏரிக்கு ஸ்பேக் மேற்கொண்ட இரண்டாவது பயணம் அவரது கோட்பாட்டை உறுதிப்படுத்தியது, இது பர்ட்டனின் நற்பெயரை மேலும் களங்கப்படுத்தியது.
ஆனால் இது அவருடைய கடைசி சாகசமாக அமையவில்லை.
பட மூலாதாரம், Richard Francis Burton/Royal Geographical Society via Getty Images
தூதர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்
சால்ட் லேக் சிட்டியில் உள்ள மோர்மன்ஸ் பற்றி ஆய்வு செய்வதற்காக அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்தார், அவர்களைப் பற்றி “தி சிட்டி ஆஃப் தி செயின்ட்ஸ்” என்ற புத்தகத்தையும் எழுதினார்.
அவர் ஓர் ஆளும்வர்க்க பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் அப்போதைய ஸ்பானிஷ் காலனியான ஈக்வடோரியல் கினியாவின் தலைநகரான பெர்னாண்டோ பூ-வுக்கு தூதராக அனுப்பப்பட்டார்.
அங்கிருந்து ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
தான் சந்தித்த மக்களின் பழக்கவழக்கங்கள், அவர்களின் நம்பிக்கைகள், நரமாமிசம் உண்ணும் பழக்கம் மற்றும் பாலியல் சடங்குகள் பற்றிக் குறைந்தது ஐந்து புத்தகங்களை எழுதினார்.
பிரேசிலின் சான்டோஸ் நகரில் தூதராக இருந்தபோது லூயிஸ் டி காமோஸை மொழிபெயர்த்தார். அதன் பிறகு டமாஸ்கஸில் பணியாற்றினார். இறுதியில், 1872இல் இத்தாலியின் ட்ரைஸ்டே நகரில் தனது தூதரகப் பதவியை ஏற்றுக்கொண்டார், அதுவே அவரது கடைசிப் பணியிடமாகும்.
பட மூலாதாரம், Fine Art Images/Heritage Images via Getty Images
அங்கே, தனது வாழ்நாள் முழுவதும் தான் தேடி அலைந்த அந்த விசித்திரமான சூழல்களில் இருந்து விலகி, இலக்கியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அவர் ஐஸ்லாந்து மற்றும் எட்ரூஸ்கன்கள் பற்றி எழுதினார். கேட்டலஸ், ஜியாம் பாட்டிஸ்டா பாஸைல் ஆகியோரின் படைப்புகளை மொழி பெயர்த்தார். இப்போது பர்ட்டன் தனது கற்பனை மற்றும் அறிவாற்றல் மூலமாகவே பயணம் செய்தார்.
ஒருவேளை, மனித உறவுகளின் மிகவும் அந்தரங்கமான அம்சங்கள் குறித்த அவரது தடையற்ற ஆர்வமே, இறுதியில் அவரது முதுமைக் காலத்தை வசதியாகக் கழிப்பதற்கான வழிகளை வழங்கியிருக்கலாம்.
சிறைத் தண்டனை பெறும் அபாயத்தையும் மீறி, அவர் “காமசூத்திரா”வை ரகசியமாக மொழிபெயர்த்து வெளியிட்டார்.”
காதலைப் பற்றிய கிழக்கு நாடுகளின் பாலியல் ஞானத்தை அவர் மேலை நாடுகளுக்குக் கொண்டு வந்தார். அத்துடன் “ஆயிரத்தொரு இரவுகள்” புத்தகத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பையும் வெளியிட்டார்.
அதனுடன் ஆபாசம், தன்பாலின உறவு மற்றும் பெண்களுக்கான பாலியல் கல்வி குறித்த கட்டுரைகளையும் அவர் இணைத்திருந்தார்.
“எனது முதுமையில் ஒரு சர்ச்சைக்குரிய புத்தகத்தை மொழி பெயர்க்கிறேன், உடனடியாக 16,000 கினியாக்கள் வருமானம் ஈட்டுகிறேன். இப்போது பிரிட்டனின் ரசனை எனக்குத் தெரிந்துவிட்டது, இனி நமக்கு பணத்திற்குப் பஞ்சம் இருக்காது,” என்று அவர் தனது மனைவி இசபெல்லிடம் கூறியதாகத் தெரிகிறது.
தீவிர கத்தோலிக்கரான அவர், தனது கணவரின் ரசனைகளில் அவ்வளவு சௌகரியமாக உணரவில்லை.
பர்ட்டன் இறந்த அடுத்த நாள், இசபெல் தனது கணவரின் ஆய்வு அறைக்குள் நுழைந்தார். பழமைவாத விக்டோரியன் சமூகத்தில் தனது கணவரின் மறைவுக்குப் பின் ஏற்படும் நற்பெயர் குறித்துப் பயந்து, அங்கிருந்த பல கையெழுத்துப் பிரதிகளை எரித்தார்.
அவற்றில் 15ஆம் நூற்றாண்டின் அரபு காதல் கையேடான “தி பெர்ஃப்யூம்ட் கார்டன்”-இன் புதிய மொழி பெயர்ப்பும் அடங்கும். கடந்த 14 ஆண்டுகளாக அவர் இதில் பணியாற்றி வந்தார். இதில் முன்னெப்போதும் மொழி பெயர்க்கப்படாத தன்பாலின உறவு குறித்த இறுதிக் கட்ட அத்தியாயமும் இடம் பெற்றிருந்தது.
அதன் மற்றொரு மொழிபெயர்ப்பு வெளிவர கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆனது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



