Home தேசிய national tamil ‘மமதா அல்லது பாஜக’: மேற்கு வங்க தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

‘மமதா அல்லது பாஜக’: மேற்கு வங்க தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

10
0

SOURCE :- BBC NEWS

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக, 2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 92.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், ANI

மேற்கு வங்கத்தில் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின்படி, இரண்டாம் கட்டத்தில் 91.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமாக, 2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 92.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே தாங்கள் வெற்றி பெறுவோம் எனக் கூறியுள்ளன.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறென நிரூபிக்கப்பட்டாலும், இந்த முறை பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் கூற்றுக்கள்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற 148 இடங்கள் தேவை.

பி-மார்க் கருத்துக்கணிப்பு திரிணாமுல் காங்கிரஸிற்கு 118-138 இடங்களையும், பாஜகவிற்கு 150-175 இடங்களையும், மற்றவர்களுக்கு 2-6 இடங்களையும் கணித்துள்ளது.

மேட்ரைஸ் கருத்துக்கணிப்பு திரிணாமுல் காங்கிரஸிற்கு 125-140 இடங்களையும், பாஜகவிற்கு 146-161 இடங்களையும், மற்றவர்களுக்கு 6-10 இடங்களையும் வழங்குகிறது.

பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பு திரிணாமுல் காங்கிரஸிற்கு 178-189 இடங்களையும், பாஜகவிற்கு 95-110 இடங்களையும், காங்கிரஸிற்கு 1-3 இடங்களையும், இடதுசாரிகளுக்கு 0-1 இடமும் கிடைக்கும் என கணித்துள்ளது.

சாணக்யா ஸ்ட்ராடஜீஸ் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, திரிணாமுல் காங்கிரஸிற்கு 130-140 இடங்களையும், பாஜகவிற்கு 150-160 இடங்களையும், மற்றவர்களுக்கு 6-10 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளது.

வாக்குப்பதிவிற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்குப் பிறகு பாஜகவை சேர்ந்த பிரேம் சுக்லா பிடிஐ செய்தி நிறுவனத்திடம், உண்மையான முடிவுகள் கருத்துக்கணிப்புகளை விடச் சிறப்பாக இருக்கும் என்றும், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.

”மமதா பானர்ஜியின் தவறான ஆட்சியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள மேற்கு வங்க மக்கள் உத்தரவு வழங்கியுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெறும் மதிப்பீடுகளே தவிர, அவை எப்போதும் துல்லியமானவை என நிரூபிக்கப்படுவதில்லை.

கடந்த 2021 தேர்தலில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முற்றிலும் தவறாகின. யாரும் எதிர்பார்க்காத வகையில் திரிணாமுல் காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான இடங்களை வென்றது.

ஆனால் இந்த முறை, போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. பிபிசி வங்க சேவை செய்தியாளர் சுப்ஜோதி கோஷ் இந்த தேர்தல் குறித்து களத்திலிருந்து செய்தி வழங்கி வருகிறார்.

“கருத்துக்கணிப்புகளை நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட, மேற்கு வங்கத்தில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார் அவர்.

மேற்கு வங்கம்

பட மூலாதாரம், ANI

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் தாக்கம்

மேற்கு வங்கத் தேர்தல்கள் பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சிறப்புத் தீவிர திருத்தத்தைத் தொடர்ந்து, 91 லட்சம் மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இரு கட்டங்களிலும் வாக்குப்பதிவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.

இத்தகைய மிகப்பெரிய அளவிலான வாக்குப்பதிவு சிறப்புத் தீவிர திருத்தத்தின் காரணமாகவே நடந்துள்ளதாக நிபுணர்கள் கருதுவதாக சுப்ஜோதி கோஷ் கூறுகிறார்.

“சிறப்புத் தீவிர திருத்தத்தின் காரணமாக, மக்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று உணர்ந்தனர். இல்லையெனில் அடுத்த முறை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? அடுத்த முறை எந்த உரிமை பறிக்கப்படும் என்று யாருக்குத் தெரியும்? இந்த பயம் மக்களிடையே எழுந்தது. அதனால்தான் மக்கள் இவ்வளவு பெரிய அளவில் வாக்குச்சாவடிகளுக்குச் சென்றனர்” என்றார் அவர்.

கருத்துக்கணிப்பு நிறுவனமான சிஎன்எக்ஸ்-இன் நிர்வாக இயக்குநரும், அரசியல் ஆய்வாளருமான பாவேஷ் ஜா, “சிறுபான்மையினரின் வாக்குகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள 63 இடங்கள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு, மீதமுள்ள இடங்களில் அது முயற்சி செய்யலாம்” என்றார்.

தேர்தலில் சிறப்புத் தீவிர திருத்தத்தின் தாக்கம் குறித்து அவர் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினருக்கு 30 சதவீத வாக்குகள் உள்ளன. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு இது ‘குறைந்துள்ளதா’ இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் 30 சதவீதத்திலிருந்தும், பாஜக பூஜ்ஜியத்திலிருந்தும் தொடங்குகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ரஷீத் கித்வாய், அதிக வாக்குப்பதிவு நடப்பது ஜனநாயகத்திற்கு நல்லது என்று கூறுகிறார்.

அதே நேரத்தில் அவர் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்.

“100-இல் 80 பேர் வாக்களித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களில் 10 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டால், வாக்குப்பதிவு சதவீதம் நிச்சயமாக அதிகரிக்கும். ஒரு ஜனநாயகத்தில், ஒரு நபர் கூட தனது வாக்குரிமையை இழக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்த 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டது வெட்கக்கேடானது” என்பது அவரது கருத்து.

அடையாள அரசியல்

“அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டிலும் கலாசாரம் ஒரு பிரச்னையாக மாறியது. மேலும் சிறப்புத் தீவிர திருத்தத்தின் காரணமாக, மேற்கு வங்கத்தில் அடையாள அரசியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அசாம் மாநிலம் சிறப்புத் தீவிர திருத்தத்திலிருந்து விலக்கப்பட்ட ஒரு மாநிலமாகும். அசாமில் உள்ள பிரச்னை வேறு. அங்கு தேசிய குடியுரிமைப் பதிவேடு நடைபெற்றது. ஆனால் அடையாள அரசியல் என்பது இரண்டு மாநிலங்களிலும் ஒரு பிரச்னையாக, விவாதப் பொருளாக மாறியது. இருப்பினும், இதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது மே 4-ஆம் தேதி தெரியவரும்.” என்றார் சுப்ஜோதி கோஷ்.

“மேற்கு வங்கம் ஒரு தனித்துவமான மொழி மற்றும் கலாசாரத்தைக் கொண்ட மாநிலமாகும். இத்தகைய மாநிலங்களில் மொழி மிகவும் முக்கியமானது. மாநிலத்தின் மொழியைப் பேசத் தெரியாதவர்களுக்கு அங்கு பெரிய தாக்கம் இருக்காது. உதாரணமாக, பிரதமரும், உள்துறை அமைச்சரும் குஜராத்தியர்களாக இருப்பதால், அதன் பலன் அவர்களுக்கு குஜராத்தில் கிடைக்கிறது. ஆனால் அத்தகைய பலனை மேற்கு வங்கத்தில் பெற முடியாது” என்றார் ரஷீத் கித்வாய் .

“அப்படியானால், வாக்காளர்கள் ஏன் பாஜகவை நோக்கித் திரும்புகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. 70-80 சதவீத இஸ்லாமியர்கள் மமதா பானர்ஜிக்கு வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், 40 சதவீத இந்துக்களும் அவருக்கு வாக்களிப்பார்கள். அது 40 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைய வாய்ப்பில்லை”என்றும் குறிப்பிட்டார்.

மேற்கு வங்கம்

பட மூலாதாரம், Getty Images

‘திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பெறாமல் போவது என்பது சாத்தியமற்றது’

இந்தியாவின் புகழ்பெற்ற தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.

அதில்,”நான் இப்போது தேர்தல் கணிப்புகளை மேற்கொள்வதில்லை, அதனால் அமைதி காத்தேன். ஆனால் மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைப் பார்த்த பிறகு, இதை நான் சொல்லியாக வேண்டும். ஒரு நியாயமான தேர்தலில், இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை பெறாமல் போவது என்பது சாத்தியமற்றது “எனக் குறிப்பிட்டுளார்.

“பாஜக வெற்றி பெறுவதற்கு ஒரே வழி முறைகேடுகள் செய்வதுதான். அதாவது, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதோ அல்லது வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்வதோ என ஏதேனும் ஒரு வடிவிலான தேர்தல் முறைகேடு நடந்தால் மட்டுமே அது சாத்தியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்..

ஆனால் ரஷீத் கித்வாய் இக்கருத்துடன் உடன்படவில்லை.

“ஒரு அரசியல் கட்சி பூஜ்ஜியத்திலிருந்து 70 இடங்களுக்குச் செல்கிறது, அதன் வாக்கு சதவீதம் 20-30 சதவீதம் அதிகரிக்கிறது என்றால், இது மோசடி மூலம் சாத்தியமில்லை” என்றார் அவர்.

மேலும், “அப்படியானால், கேரளம் மற்றும் தமிழ்நாட்டிலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. மோசடி செய்யப்பட வேண்டுமென்றால் அங்கும் செய்யப்பட்டிருக்கும், ஆனால் அங்கு பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU