Home தேசிய national tamil பெரியாரியம் முதல் பிராமண கடப்பாரை வரை: ‘நாம் தமிழர்’ சீமானின் அரசியல் பயணம்

பெரியாரியம் முதல் பிராமண கடப்பாரை வரை: ‘நாம் தமிழர்’ சீமானின் அரசியல் பயணம்

18
0

SOURCE :- BBC NEWS

சீமான், நாதக, தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

பட மூலாதாரம், Seeman/Facebook

(2026-ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் குறித்த கட்டுரைகளை பிபிசி தமிழ் வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)

‘தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமகால தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்திய தலைவர்களுள் ஒருவராக பார்க்கப்படுகிறார். அதே நேரம், அவரது பல கருத்துகள் அவ்வப்போது அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் கிளப்புகின்றன.

சீமானின் அரசியல் பயணம் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது?

நாம் தமிழர் தேர்தல் அரசியல்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தாலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தான் நேரடியாக போட்டியிட்டது. தேர்தல் ஆணைய தரவுகளின்படி, அந்தத் தேர்தலில் சுமார் 4.5 லட்சம் வாக்குகளை அக்கட்சி பெற்றது. சதவீத அடிப்படையில் இது 1.1%.

பின் 2019 மக்களவை தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் சுமார் 3% ஆக உயர்ந்தது.

அடுத்து வந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 6% வாக்குகள் பெற்றது. பின், 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8%-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது.

இரட்டை மெழுகுவர்த்தி, கரும்பு விவசாயி, மைக் என்று நாம் தமிழர் கட்சியின் சின்னம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. இருப்பினும் தொடர்ந்து தனது வாக்கு வங்கியை உயர்த்தி வந்த நாம் தமிழர் கட்சி, 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்தே களமிறங்குவதாக அறிவித்துள்ளது.

சீமான் தனக்குத் தானே கட்டமைத்த பிம்பம்

ஆவேச உரைகள் மற்றும் ஆங்கிலம் கலக்காத தமிழ்ப்பேச்சை தொடக்கம் முதலே தனக்கான ஓர் அடையாளமாக சீமான் உருவாக்கிக் கொண்டார். குறிப்பாக, இளைஞர்களை அவர் அதிகம் ஈர்த்தார். பெரியாரிய மேடைகள் தொடங்கி இன்று வரை சீமானின் பலமாக இவை கருதப்படுகின்றன.

தன்னை ஒரு வலுவான தலைவராக சீமான் தொடர்ந்து முன்னிறுத்தி வந்துள்ளார். கொட்டும் மழையிலும் தொடர்ந்து பேசுவது, அவ்வப்போது வெளியாகும் உடற்பயிற்சிக் கூட புகைப்படங்கள் என தனது பிம்பம் தொடர்பான விஷயத்தில் சீமான் கவனம் செலுத்துகிறார்.

நாம் தமிழர் கட்சி கூட்டங்களில் சீமான் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்ட விதம் நாஜி சல்யூட்டை நினைவூட்டும் விதமாக இருந்தது என்ற சர்ச்சையும் எழுந்தது.

சமூக ஊடகங்களின் வளர்ச்சி சீமானின் பேச்சை பரந்த அளவில் கொண்டு சேர்த்தது. ஆரம்ப காலத்தில் வைரலான பெரும்பாலான காணொளிகள், தத்துவ அடையாளமிக்கத் தலைவராக சீமானை முன்னிறுத்தும் வகையில் இருந்தன.

சீமான், நாதக, தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

பட மூலாதாரம், Seeman/Facebook

கட்சியாக கவனம் ஈர்த்த நாம் தமிழர்

தொடர்ந்து தனித்து போட்டி, எல்லா தொகுதிகளிலும் போட்டி, அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தல், சரிபாதி தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு என்று படிப்படியாக மக்களிடையே கவனம் பெற்றது நாம் தமிழர் கட்சி.

அதே நேரத்தில், மற்ற கட்சிகளிடம் இருந்து சீமானை தனித்துக் காட்டும் சில விஷயங்களே கேலிக்கும் உள்ளாகின.

குறிப்பாக, கச்சத்தீவை எப்படி மீட்பேன், தமிழ்நாட்டின் கடனை அடைப்பது குறித்து அளித்த விளக்கம் உட்பட பல விஷயங்கள் சாத்தியம் இல்லாத விஷயங்களைப் பேசுகிறார் என்ற விமர்சனத்தை சீமானுக்கு பெற்றுத்தந்தன.

ஆடு, மாடு மேய்த்தல் அரசுப்பணி என்பது போன்ற அவர் முன்வைக்கும் திட்டங்கள், ‘கற்காலத்தை நோக்கி இழுக்கிறார்’ என்ற விமர்சனத்துக்கும் உள்ளாயின.

சர்வாதிகாரி போல செயல்படுவதாக குற்றச்சாட்டு

சீமான், நாதக, தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

பட மூலாதாரம், Seeman/Facebook

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து சீமானோடு பயணித்த சிலர் தற்போது கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர்.

அப்படி வெளியேறிய பலரும், கட்சிக்குள் சீமான் சர்வாதிகாரி போல செயல்படுவதாகவும், தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

2019 மக்களவை தேர்தலின்போது வேட்பாளர் தேர்வு விஷயத்தில் எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த சீமான், ‘வேட்பாளர் தேர்வுக்கு ஒரு குழு உள்ளது. பல தகுதிகள் பார்த்தே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது சாதாரண ஒரு சிக்கல்தான்’ என கூறினார்.

நாதக மாநாடுகள், கூட்டங்கள்

கவனம் ஈர்க்கும் வகையில் வித்தியாசமான மாநாடுகளையும் கூட்டங்களையும் அவ்வப்போது நாம் தமிழர் கட்சி நடத்தி வந்துள்ளது.

தமிழர் மெய்யியல் மீட்பு எனக் கூறி நாம் தமிழரின் கிளை அமைப்பாக வீரத்தமிழர் முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கினார் சீமான்.

இந்த அமைப்பின் மூலம் கிராமப் பூசாரிகள் மாநாடு, திருமுருகப்பெருவிழா, வேல் பயணம் போன்ற விஷயங்களிலும் சீமான் ஈடுபட்டார். அதோடு, முருகனை தமிழர்களின் முப்பாட்டன் என அவர் முன்னிறுத்தினார்.

சீமானின் இந்த முன்னெடுப்புகள் விமர்சனத்துக்கும் உள்ளாயின. சீமான் ஆர்.எஸ்.எஸ் பாதையில் பயணிப்பதாக திராவிட இயக்கத்தினர் விமர்சித்தனர்.

ஆனால், ‘மூதாதையர்களை வழிபடுவது தமிழர்களின் மரபு, அதை மீட்டெடுப்பதே இதன் நோக்கம்’ என சீமான் கூறுகிறார்.

முருகன், பெருமாள் போன்ற கடவுள்களுக்கு சீமான் மாற்று உருவம் கொடுத்தது இந்து அமைப்புகளிடயே விமர்சனத்தைத் தூண்டியது. இந்து மத அடையாளங்களை சீமான் அழிக்க முயற்சிப்பதாக அவர்கள் விமர்சித்தனர்.

இவற்றையெல்லாம் தாண்டி, சமீபமாக நடத்திய மரங்களின் மாநாடு, தண்ணீர் மாநாடு, கடலம்மா மாநாடு, ஆடு மாடுகளின் மாநாடு ஆகியவை பேசுபொருளாகின.

அதேநேரம், இத்தகைய முன்னெடுப்புகள் கேலிக்கும் உள்ளாயின. குறிப்பாக, மரத்தோடு சீமான் பேசிக் கொண்டிருக்கும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளானது.

ஆனால் விமர்சனங்களுக்கு பதிலளித்த சீமான், ‘சூழலியல் சார்ந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமல் எங்களுக்கு வாக்குச் செலுத்தி எந்தப் பயனும் இல்லை’ என கூறினார்.

சீமான், நாதக, தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

பட மூலாதாரம், seeman/Facebook

அரணையூரில் இருந்து தொடங்கிய பயணம்

சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரணையூர் என்ற கிராமம்.

இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த சீமான், பாரதிராஜா, மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

பாஞ்சாலங்குறிச்சி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் போன்ற படங்களை இயக்கினார்.

தொடக்கத்தில் பெரியாரிய மேடைகள் சீமானுக்கு நல்ல அடையாளம் கொடுத்தன. பின்னர், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போர் சீமானின் வாழ்க்கையை மாற்றியது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2009ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் 2010ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் தாக்கப்படுவதாகக் கூறி நடந்த போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் திமுக, காங்கிரஸை விமர்சித்த சீமான், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என பிரசாரம் செய்தார். பின், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.

பின், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முறையாக களம் கண்ட நாம் தமிழர் கட்சி, இன்று மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் கொண்ட கட்சியாக வளர்ந்து நிற்கிறது.

இலங்கைத் தமிழர் தொடர்பான சீமான் அரசியல் குறித்து விமர்சனங்களும் உண்டு. குறிப்பாக, பிரபாகரன் உடனான சந்திப்பை மிகைப்படுத்திக் கூறுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

பெரியாரிய மேடைகளில் பேசியுள்ள சீமான் பிற்காலத்தில் பெரியாரை கடுமையாக விமர்சித்தும் உள்ளார். ‘பிராமண கடப்பாரை கொண்டு திராவிடத்தை இடிப்பேன்’ என கடந்த டிசம்பரில் சென்னையில் நடந்த பாரதியார் தொடர்பான ஒரு விழாவில் சீமான் பேசியது, அந்த சமயத்தில் பேசுபொருளானது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் பெற்றார். தேர்தல் ஆணைய தரவுகளின்படி, சதவீத அடிப்படையில் இது 7.2%. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 48 ஆயிரம் வாக்குகள் பெற்றார். சதவீத அடிப்படையில் இது 24.3%.

இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் களமிறங்குகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU