Home தேசிய national tamil ‘பூமியின் நரகம்’: இந்தியாவை பற்றிய ‘சர்ச்சை’ கருத்தை பகிர்ந்த டிரம்ப் – இந்தியா கூறியது என்ன?

‘பூமியின் நரகம்’: இந்தியாவை பற்றிய ‘சர்ச்சை’ கருத்தை பகிர்ந்த டிரம்ப் – இந்தியா கூறியது என்ன?

16
0

SOURCE :- BBC NEWS

டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகள் பலமுறை மோதி அரசை சங்கடப்பட வைத்துள்ளன (சித்தரிப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பழமைவாத எழுத்தாளரும் ரேடியோ தொகுப்பாளருமான மைக்கேல் சாவேஜ் பிறப்புவழி குடியுரிமை குறித்துப் பதிவிட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், தற்போதைய சட்டங்கள் புலம் பெயர்ந்தவர்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் “ஒன்பதாவது மாதத்தில்” அமெரிக்கா வந்து உள்ளூர் சட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதாக சாவேஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

மைக்கேல் சாவேஜின் எந்தக் கருத்தை டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளாரோ அதில், “இங்கே ஒரு குழந்தை பிறந்தவுடன் குடிமகனாகி விடுகிறது, அதன் பிறகு அவர்கள் முழு குடும்பத்தையும் சீனா அல்லது இந்தியா அல்லது பூமியின் வேறு ஏதேனும் ஒரு நரகத்திலிருந்து இங்கே அழைத்து வருகிறார்கள். இதைப் பார்ப்பதற்கு நீங்கள் வெகுதூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இங்கே இப்போது ஆங்கிலம் பேசப்படுவதில்லை.”

டொனால்ட் டிரம்ப்-இன் இந்தப் பதிவிற்குப் பிறகு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இதற்குத் கடுமையான எதிர்வினையை ஆற்றியுள்ளது.

காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை ‘நரகம்’ என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து மிகவும் அவமதிப்புக்குரியது மற்றும் இந்தியாவிற்கு எதிரானது. இது ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தியுள்ளது” என்று பதிவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி இது குறித்து அமெரிக்க அதிபருடன் பேச வேண்டும் மற்றும் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-இன் ட்ரூத் சோஷியல் பதிவு குறித்துக் கேட்டபோது, “நாங்கள் சில செய்திகளைப் பார்த்தோம்… அவ்வளவுதான் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.

பகிரப்பட்ட பதிவில் என்ன இருக்கிறது?

அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் குடியுரிமை தற்போது ஒரு விவாதப் பொருளாக உள்ளது.

டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ள பதிவில் மைக்கேல் சாவேஜ், “இன்றைய சிறு விவாதம், பிறப்புவழி குடியுரிமை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நான் கேட்ட வாதங்களைப் பற்றியதாக இருக்கும். வாதங்களைக் கேட்டபோது எனக்குச் சற்று கோபம் வந்தது, ஏனென்றால் சொல்லப்பட்டவை அனைத்தும் சட்ட ரீதியான விஷயங்களாக இருந்தன.” என குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும், “அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் வான்வழிப் பயணம் தொடங்குவதற்கு முன்பே எழுதப்பட்டது. தொலைக்காட்சிக்கு முன், இணையத்திற்கு முன் மற்றும் ரேடியோவிற்கு முன் என சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என கூறியுள்ளார்

அந்தப் பதிவில் பகிரப்பட்ட உரையில் ”புலம்பெயர்ந்தவர்கள் காரணமாக அமெரிக்க மக்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்கர்களின் உரிமையைப் பறிப்பதாக அவர்கள் கருதுகின்றனர்” என எழுதப்பட்டுள்ளது.

“இதைப் பார்ப்பதற்கு நீங்கள் வெகுதூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இங்கே இப்போது ஆங்கிலம் பேசப்படுவதில்லை. இன்று வரும் புலம்பெயர்ந்த வகுப்பினருக்கு இந்த நாட்டின் மீது எந்த விசுவாசமும் இல்லை, இது முன்னரும் எப்போதும் இருந்ததில்லை.”

புலம்பெயர்ந்தவர்கள் அமெரிக்கர்களின் உரிமைகளைப் பறிப்பதாக டொனால்ட் டிரம்ப் கருதுகிறார் (சித்தரிப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்கள் உரிமை சுதந்திரச் சங்கம் மீது மிகவும் கடுமையான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“இவர்கள் இந்த நாட்டிற்கு அனைத்து மாஃபியா குடும்பங்களையும் ஒன்றிணைத்து செய்ததைவிட அதிக தீமை செய்துள்ளனர், அவர்கள் இவர்களுக்கு முன்னால் ஒன்றுமில்லை. இவர்கள் லேப்டாப் வைத்திருக்கும் குண்டர்கள். இவர்கள் நம்மை மோசமாகச் சுரண்டியுள்ளனர், நம்மை இரண்டாம் தரக் குடிமக்களைப் போல நடத்தியுள்ளனர் மற்றும் ‘மூன்றாம் உலகை’ நம்மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்துள்ளனர், நமது கொடியை அவமதித்துள்ளனர்.” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்

“அமெரிக்க மக்கள் உரிமை சுதந்திரச் சங்க வழக்கறிஞர் வாங் நமது தேசிய அடையாளத்தை அழிக்க விரும்புகிறார், நம்மை சீனாவின் காலனியாக மாற்ற விரும்புகிறார், ஆனால் இது சீனாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை, இது இந்தியாவிற்கும் பொருந்தும்.”

இந்த மாத தொடக்கத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப்-இன் பிறப்புவழி குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றம் சந்தேகம் தெரிவித்தது.

சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கும், தற்காலிகமாக அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதில் நீதிமன்றத்தின் பெரும்பாலான நீதிபதிகள் உடன்படவில்லை.

சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பிறப்புவழி குடியுரிமையைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று டொனால்ட் டிரம்ப் அரசு வாதிடுகிறது.

இதன் மூலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியம் தலைகீழாக மாறும் என்று அவரது எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

மோதி அரசு மௌனம் காப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது (சுப்ரியா ஸ்ரீனேத் - கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

இந்திய எதிர்க்கட்சிகளின் இலக்கில் டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்-இன் இந்தப் பதிவிற்குப் பிறகு இந்தியாவில் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்வினை எழுந்துள்ளது.

“டொனால்ட் டிரம்ப்பிடம் மோதியால் எதையும் சொல்ல முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவைப் பற்றி அவதூறான கருத்துகளைக் கூறி வருகிறார், மோதி அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நரேந்திர மோதி ஒரு பலவீனமான பிரதமர், முழு நாடும் இதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.” என காங்கிரஸ் கூறியுள்ளது

காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீனேத், “இந்தியாவை ‘நரகம்’ என்று சொல்ல டொனால்ட் டிரம்ப்பிற்கு எவ்வளவு தைரியம்? இந்தியர்களை ‘லேப்டாப் கேங்க்ஸ்டர்கள்’ என்று சொல்ல அவருக்கு எவ்வளவு துணிச்சல்?

இதற்கு வலுவான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், ஆனால் மோதி அரசு தரப்பிலிருந்து இதுவரை ஊசி விழும் சத்தம் கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மணீஷ் சிசோடியா, “இந்தியாவை அவமதிப்பதன் மூலம் ஒருவேளை உங்களுக்குத் தலைப்புச் செய்திகள் கிடைக்கலாம். ஆனால், இந்தியாவிற்கு உங்கள் அங்கீகாரம் தேவையில்லை. 140 கோடி மக்கள் கொண்ட இந்த நாட்டிற்கு கண்ணியம், திறமை மற்றும் நாகரிகத்தின் பாரம்பரியம் உள்ளது. இந்தியாவை ‘நரகம்’ என்று சொல்வது இந்தியாவிற்கு அவமானமல்ல, மாறாக இது உங்கள் அறியாமையையும் வெற்றுக் கர்வத்தையும் அம்பலப்படுத்துகிறது.” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU