SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், TN Assembly
புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது )
தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்துள்ள நிலையில் ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளின் தலைவர்கள் தீர்மானத்தின் மீது பேசி வருகின்றனர்.
“குதிரை பேரம் பற்றி முதல்வர் பேச வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்
பட மூலாதாரம், TN ASSEMBLY
தீர்மானத்தை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
அவர் தனது உரையில், ” தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததாக கூறுவது மனவேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் நடக்காத விஷயம். அதனை நினைத்து நான் மனவேதனை அடைகிறேன்.” என்றார். “முதல்வரைச் சந்திக்க யார் முகமூடி அணிந்து வந்தார் எனத் தெரிவிக்க வேண்டும். அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் அதைவிட தலைகுனிவு இருக்க முடியாது. ” எனவும் கூறினார்.
“அதே போல அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என முதல்வர் தெரிவித்தார். ஆனால் இன்று அவரின் ராஜ குருவாக இருக்கும் ரத்தன் பண்டிட்டை அரசின் உயர் பொறுப்பில் நியமித்ததை ஒட்டுமொத்த தமிழக அரசின் சார்பாக தேமுதிக கண்டிக்கிறது.” எனத் தெரிவித்தார்.
“நேற்று, இன்று, நாளையும் ஆதரவு” – மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ்
தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாகப் பேசினார்.
“முதல்வர் விஜய்க்கு ஆதரவளித்ததால் நான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். தமிழ்நாட்டு மக்களையெல்லாம் காப்பாற்றப்போகும் முதல்வர் விஜய், என்னையும் காப்பாற்றுவார், எனக்கு ஆதரவாக இருப்பார் என நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். நேற்றும் இன்றும் நாளையும் தவெகவிற்கு ஆதரவு அளிப்பேன்,” எனத் தெரிவித்தார்.
“எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது” – காங்கிரஸ்
பட மூலாதாரம், TN ASSEMBLY
காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ்குமார் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
“இந்திய அரசியல் சாசனம் மதச்சார்பின்மை, சமூக நீதியை பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு காங்கிரஸ் இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.” என்று கூறினார்.
“முதலமைச்சர் ஆதரவு கோரியது காங்கிரஸ் உள்ளிட்ட 5 மதசார்பற்ற கட்சிகளிடம் தான். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் வெளியிட்ட அறிவிப்புகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஆனால் மக்கள் மனதில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பாதுகாப்பான சமூகம் உள்ளிட்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பும் இந்த அரசுக்கு உள்ளது.” என்றும் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
திமுக அரசின் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும் – முஸ்லிம் லீக்
பட மூலாதாரம், TN Assembly
இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகான் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்.
அவர் தனது உரையில், “ஒன்றிய அரசின் முயற்சிகளைத் தடுக்கவே தவெகவிற்கு முஸ்லிம் லீக் ஆதரவளித்துள்ளது. மதுபானக் கடைகள் அப்புறப்படுத்தப்படும் என்கிற அறிவிப்பை முஸ்லிம் லீக் வரவேற்கிறது. தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், மாநில வளர்ச்சி உள்ளிட்ட உயர்ந்த தத்துவங்களை நிலைநாட்டுவதில் உங்களுடைய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும். திமுக அரசின் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
“மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் வேண்டும்” – விசிக
பட மூலாதாரம், TN Assembly
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) சார்பில் அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் வன்னி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ” விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளது. ஆனால் அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் எந்த சமரசமும் இல்லாமல் இருக்க வேண்டும்.” என வலியுறுத்தினார்.
“அதே போல ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். எஸ்சி/எஸ்டி மக்கள் பதவி உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு நீதிபதி அக்பர் அலி தலைமையில் ஆணையம் அமைத்துள்ளது. அந்த ஆணையம் பரிந்துரைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்தில் இருப்பதைப் போல மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும். மீனவப் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத் தொடர வேண்டும். ஒன்றிய அரசிடம் பேசி அவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முந்தைய திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் தொடர வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு ஏன்?
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அக்கட்சி பெறாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.
பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு மே 10 அன்று விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
த.வெ.க. 108 தொகுதிகளில் வென்ற நிலையிலும், விஜய் 2 தொகுதிகளில் வென்றதால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107 ஆக உள்ளது. இது தவிர காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2 மற்றும் ஐயூஎம்எல் 2 என 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.
தவெக அரசு தனது பெரும்பான்மையை மே 13ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நிரூபிக்க வேண்டும் என பொறுப்பு ஆளுநர் அர்லேகர் அறிவுறுத்தியதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்தது.
தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



