SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
ஒரு தேன்கூட்டுக்குள் நுழைந்தால், அங்குள்ள காட்சியைவிட ஒலியே நமது கவனத்துக்கு முதலில் வரும். ஆயிரக்கணக்கான இறக்கைகள் இறுக்கமான, ஒருங்கிணைந்த இயக்கத்தில் அடிப்பதால் உருவாகும் ஒரு தொடர்ச்சியான, மெல்லிய ரீங்காரம் காற்றெங்கும் நிரம்பியிருக்கும்.
அந்தக் கூட்டினுள்ளே, புழுக்களுக்கு உணவளித்தல், கூட்டை சுத்தம் செய்தல், தேன் சேமித்தல் போன்ற பணிகளை ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் செய்கின்றன.
ஆனால், ஒரு தேனீக் கூட்டத்தில் ஒரேயொரு ராணி மட்டுமே இருக்கும். அது பிற பிரிவுகளைச் சேர்ந்த தேனீக்களைவிட அளவில் பெரியதாக இருக்கும். இருப்பினும், உடலுடன் ஒப்பிடுகையில் அதன் இறக்கைகள் மிகவும் சிறியதாகவே இருக்கும். ராணிக்கு நீண்ட, கூர்மையான வயிறு இருப்பதால், கூட்டிலுள்ள பிற தேனீக்களைவிட கொஞ்சம் வித்தியாசமாக குளவி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
ஒரு தேனீக் கூட்டத்தில் முட்டையிடும் ஒரே உயிரினம் ராணி மட்டுமே. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரவுகள்படி, ஒற்றை ராணித் தேனீயால் ஒரு நாளைக்கு 2,000 முட்டைகள் வரை இட முடியும்.
ஒரு தேனீ ராணியாக தேர்வாவது எப்படி?
வழக்கமாக ஒரு ராணித் தேனீ என்பது பிறவியிலேயே சிறப்பு வாய்ந்தது என்ற கருதுகோள்கள் இருக்கக்கூடும். அதாவது, இயற்கையாகவே அது ராணியாகப் பிறப்பதற்குத் தேர்வு செய்யப்பட்டதாகப் பலரும் நினைக்கின்றனர்.
ஆனால், உண்மையில் ராணியும் தேன் கூட்டிலுள்ள பிற தேனீக்களைப் போலவே புழுப் பருவத்தில் இயல்பாகத் தனது வாழ்க்கையைத் தொடங்குகிறது. ஆரம்பக் கட்டத்தில் புழு பருவத்திலுள்ள அனைத்து தேனீக்களும் உயிரியல் ரீதியாக ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அவற்றில் எதுவும் ராணி ஆவதற்கென விதிக்கப்பட்டவை அல்ல.
ஒரு தேன் கூட்டில், அடுத்த ராணியாவதற்கு எந்தவொரு தேனீயும் தாமாக முன்வருவதோ அல்லது தேர்வு செய்யப்படுவதோ இல்லை. கூட்டினுள் ஏதேனும் மாற்றம் நிகழும்போது, இந்தச் செயல்முறை அமைதியாகவும், கிட்டத்தட்ட தானாகவும் தொடங்குகிறது.
ஒரு தேன் கூட்டில் புதிய ராணி பிறப்பதற்கான சூழல் மூன்று தருணங்களில் ஏற்படுகின்றன. அதாவது, ஏற்கெனவே இருக்கும் ராணி பலவீனமடையும்போது, உயிரிழக்கும்போது அல்லது அது ஒரு தனிக் கூட்டத்துடன் வெளியேறி புதிய கூட்டை அமைக்கத் தயாராகும்போது, புதிய ராணிக்கான தேவை எழுகிறது.
இந்த மாற்றத்தை, வழக்கமாக ராணியின் இருப்பையும் அதன் இனப்பெருக்கத் திறனையும் குறிக்கக்கூடிய ஃபெரோமோன் எனப்படும் ரசாயன சமிக்ஞைகளில் ஏற்படும் வீழ்ச்சியின் மூலம் வேலைக்கார தேனீக்கள் உணர்கின்றன. இதைத் தொடர்ந்து, தங்கள் கூட்டுக்கான அடுத்த ராணியை தேர்வு செய்யும் செயல்முறையில் அவை இறங்குகின்றன.
புதிதாகப் பிறந்த மிகவும் இளம் வயதுடைய சில புழுக்களைத் தனியாக எடுக்கின்றன. இவ்வாறு தனியே எடுக்கப்படும் லார்வாக்கள் பிறவற்றில் இருந்து எந்த வகையிலும் வேறுபட்டவையல்ல. அவற்றைத் தனித்துவமானவையாக மாற்றுவது அவற்றுக்கு வேலைக்கார தேனீக்கள் வழங்கப்போகும் உணவுதான்.
பெரும்பாலான லார்வாக்களுக்கு மகரந்தம், தேன் கலவை போன்றவை உணவாகக் கொடுக்கப்பட்டாலும், தனியே தேர்வு செய்யப்பட்ட சிலவற்றுக்குத் தொடர்ந்து அதிகளவிலான ராயல் ஜெல்லி ஊட்டப்படுகிறது. இந்தச் செழுமையான உணவு தொடர்ச்சியாக வழங்கப்படுவது, அவற்றின் வளர்ச்சியை முழுமையாக மாற்றி, ராணித் தேனீ உருவெடுக்க வித்திடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
ராணி தேனீயை உருவாக்க வல்ல ராயல் ஜெல்லி
ராணித் தேனீயுடைய பிறப்பின் மையத்தில் இருப்பது ராயல் ஜெல்லி எனப்படும் தனித்துவமான உணவு. இந்த உணவு, இளம் வேலைக்கார தேனீக்களால் உற்பத்தி செய்யப்படும் அடர்த்தியான, பால் போன்ற ஒரு திரவப் பொருளாகும்.
இந்த ஜெல்லி போன்ற திரவம், இளம் வேலைக்கார தேனீக்களால் அவற்றின் தலையிலுள்ள சிறப்புச் சுரப்பிகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மாலிகுலர் சயின்சஸ்’ மற்றும் ‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ போன்ற ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுகள், ராயல் ஜெல்லி ஒரு புழுப் பருவத்திலுள்ள இளைய தலைமுறை தேனீயின் வளர்ச்சியில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகிறது என்பதை விவரிக்கின்றது.
ஆரம்ப நாட்களில், தேன்கூட்டில் உள்ள அனைத்துப் புழுக்களுக்கும் இந்த ஊட்டச்சத்து நிறைந்த ஜெல்லி உணவாக அளிக்கப்படுகிறது. ஆனால் அவை வளர, வளர, பெரும்பாலானவை மகரந்தம் மற்றும் தேன் அடங்கிய எளிய உணவுமுறைக்கு மாற்றப்படுகின்றன.
அவையன்றி, தனியாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு சில புழுக்களுக்கு மட்டுமே இந்த ராயல் ஜெல்லி தொடர்ந்து அதிகளவில் வழங்கப்படுகின்றன. இந்த உணவுமுறை வேறுபாடுதான் ஒரு ராணி பிறப்பதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.
பிற ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்களைப் போலவே வளர்ந்திருக்க வேண்டிய ஒரு புழு, பெரிய உடல், நீண்ட ஆயுட்காலம், இனப்பெருக்கத் திறன் ஆகியவற்றைக் கொண்ட ராணித் தேனீயாக உருவெடுக்கிறது. அதற்கான ஊட்டத்தை அளித்து, தேன்கூட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்த ராயல் ஜெல்லி என்ற உணவு முக்கியப் பங்கை வகிக்கிறது.
பிற புழுக்களுக்கும் தேர்வு செய்யப்பட்ட சில புழுக்களுக்கும் இடையே வழங்கப்படும் உணவில் உள்ள இந்த ஊட்டச்சத்து வேறுபாடு, மரபணு வெளிப்பாடு மற்றும் உடலியல் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு ராணிக்குத் தேவைப்படும் பண்புகளான முழுமையாக வளர்ந்த கருப்பைகள், பெரிய உடல் அளவு, வியத்தகு முறையில் நீட்டிக்கப்பட்ட ஆயுட்காலம் ஆகியவற்றை இந்தத் தனித்துவமான ஊட்டச்சத்துமிக்க ராயல் ஜெல்லி வழங்குகிறது.
பட மூலாதாரம், Getty Images
இனப்பெருக்கத்துக்கான ராணியின் பயணம்
புழுப் பருவத்தில் இருந்து ராணி தேனீயாக வளர்ந்த சில நாட்களில் இனப்பெருக்கம் செய்வதற்காக இளம் ராணி தேனீ கூட்டைவிட்டு வெளியேறுகிறது.
நப்ஷியல் ஃப்ளைட் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில், கூட்டைவிட்டு வெளியேறி திறந்தவெளிக்குப் பறந்து செல்லும் ராணி, அங்கு நடுவானில் பிற கூடுகளைச் சேர்ந்த ஆண் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.
இந்தச் செயல்முறை மீண்டும் மீண்டும் நிகழ்வதல்ல, சுமார் மூன்று ஆண்டுகள் வரை வாழக்கூடிய ராணி தேனீ தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இத்தகைய இனப்பெருக்க பயணத்தை மேற்கொள்வதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனப்பெருக்க செயல்முறைக்கான அந்தப் பயணத்தில் பல ஆண் தேனீக்களுடன் இணைசேர்ந்து, விந்தணுக்களை வாழ்நாள் முழுவதும் முட்டையிடுவதற்காகத் தனது உடலில் சேமித்துக் கொள்கிறது.
பிறகு, தான் சேகரித்த விந்தணுக்களை தனது உடலிலுள்ள ‘ஸ்பெர்மத்தீக்கா’ எனப்படும் ஒரு சிறப்பு உறுப்பில் சேமித்து வைத்துக்கொள்கிறது. இந்தத் தனித்துவமான உறுப்பு, விந்தணுக்களைப் பல ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைக்கும் திறன்மிக்கது.
ராணியின் வாழ்வில் ஒரேயொரு முறை நிகழும் இந்த இனச்சேர்க்கை நிகழ்வின் மூலமாகவே, தனது வாழ்நாள் முழுவதும் முட்டைகளைக் கருவுறச் செய்வதற்குத் தேவையான ஆற்றலையும் விந்தணுக்களையும் அது சேமித்துக்கொள்கிறது.
தேனீக்களின் நடத்தை குறித்து கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் தாமஸ் சீலி மேற்கொண்ட ஆய்வுகள், தேனிக் கூட்டங்கள் பரவலாக்கப்பட்ட அமைப்பு மூலம் செயல்படுவதைக் காட்டுகின்றன. அதாவது, எந்தவொரு தனிப்பட்ட தேனீயும் பொருப்பில் இருப்பதில்லை. இந்த அமைப்புக்குள் ராணியின் ஃபெரோமோன்கள், தேனீக் கூட்டம் நிலையானதாகவும், இனப்பெருக்கத் திறன் கொண்டதாகவும், இயல்பாகச் செயல்படுவதற்கான சமிக்ஞைகளை வழங்குகின்றன.
அதாவது, ராணியே கூட்டை நேரடியாகக் கட்டுப்படுத்துவதில்லை என்றாலும், அதன் இருப்பின்றி, தேனீக்களின் சமூக அமைப்பு சிதைவடையத் தொடங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
தேன் கூட்டில் ராணியின் முக்கியத்துவம் என்ன?
ராணியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, தேன்கூட்டை முழு பரிமாணத்தில் பார்க்க வேண்டியது அவசியம்.
ஒரு தேனீக் கூட்டத்தை, ஆயிரக்கணக்கான உயிரினங்கள் ஒன்றாக ஒருங்கிணைந்து இயங்கும் ஒற்றை உயிரினமாகச் செயல்படுவதாக நீண்டகாலமாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
தேனீக்களின் நடத்தை குறித்த தாமஸ் சீலியின் ஆய்வுகள், வேலைக்கார தேனீக்கள் தங்கள் இறக்கைகளை விசிறி வெப்பநிலையைக் கூட்டாக ஒழுங்குபடுத்துவதாகவும், எப்போது, எங்கே உணவு தேடுவது என்பதைக் கூட்டாகத் தீர்மானிப்பதாகவும் விளக்குகின்றன.
இதுபோக, அவரது கூற்றுப்படி, லார்வாக்களை பராமரிப்பது, தேன்கூட்டு மெழுகுக் கட்டமைப்புகளைக் கட்டுவது போன்ற பணிகளையும் அவையே மேற்கொள்கின்றன.
தேன்கூட்டு மெழுகு என்பது, இளம் வேலைக்கார தேனீக்களால் சுரக்கப்பட்ட தேன்மெழுகைக் கொண்டு அறுகோண அறைகளாக உருவாக்கப்படும் செங்குத்தான, இரண்டடுக்கு அமைப்புகளாகும். இந்தத் தேன்மெழுகுக் கட்டமைப்பு, தேன் மற்றும் மகரந்தத்தைச் சேமிக்கவும், புழுப் பருவத்திலுள்ள தேனீக்களை வளர்க்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
இப்படியாக இறுக்கமாக ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்துக்குள், ராணியின் பங்கு என்பது மிகவும் தனித்துவமானது. ஜர்னல் ஆஃப் பேசிக் அண்ட் அப்ளைட் ஸூவாலஜி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் கூறியுள்ளதன்படி, ராணிதான் தேனீக் கூட்டத்தின் இனப்பெருக்க மையமாகச் செயல்பட்டு, ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
அதேவேளையில், ஒரு கூட்டில் ராணியின் செல்வாக்கு என்பது இனப்பெருக்கத்துடன் நின்றுவிடுவதில்லை. ஃபிரான்டியர்ஸ் இன் ஸூவாலஜி, கரன்ட் பயாலஜி ஆகிய ஆய்விதழ்களில் வெளியான ஆய்வுகள், ராணி தேனீயானது கூட்டினுள் முக்கிய ஒழுங்குமுறை சமிக்ஞைகளாகச் செயல்படக்கூடிய ஃபெரோமோன்களை உற்பத்தி செய்வதாகவும், அவை வேலைக்கார தேனீக்களிடையே சமூக ஒழுங்கையும் ஒருங்கிணைப்பையும் பராமரிக்க உதவுவதாகவும் காட்டுகின்றன.
ராணி தேனீ ஆரோக்கியமாகவு, இந்த ஃபெரோமோன்களை தீவிரமாக உற்பத்தி செய்துகொண்டும் இருக்கையில், தேனீக் கூட்டம் நிலையானதாகவும் ஒன்றுபட்டதாகவும் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஆனால், வயது மூப்பு, நோய் அல்லது இறப்பு போன்ற காரணங்களால் அதன் ஃபெரோமோன் உற்பத்தி குறையும்போது, அதன் விளைவுகளை வேலைக்கார தேனீக்கள் உடனடியாக உணர்கின்றன.
பி.எம்.சி பயாலஜி என்ற ஆய்விதழில் வெளியான ஃபெரோமோன் தகவல் தொடர்பு வலைப்பின்னல்கள் குறித்த சமீபத்திய ஆய்வுகள் உள்படப் பல ஆராய்ச்சிகள், இந்த சமிக்ஞைகள் பலவீனமடைவது வேலைக்கார தேனீக்கள் இடையிலான ஒருங்கிணைப்பைக் குலைப்பதாகவும், புதிய தலைமுறை ராணி தேனீயை உருவாக்குவதற்கான தூண்டுதலை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
ஃபெரோமோன் சமிக்ஞைகள் பலவீனமடைவதை வைத்து ராணி இறக்கும் தறுவாயில் இருப்பதையோ அல்லது பலவீனமடைந்து வருவதையோ உணர்ந்துகொள்ளும் வேலைக்கார தேனீக்கள், அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த ராணி தேனீயை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்குகின்றன.
இல்லினாய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பூச்சியியலாளருமான ஜீன் ராபின்சன் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூச்சியியலாளரான ஜேம்ஸ் நீ ஆகியோரின் ஆய்வுகள் இந்தச் செயல்முறை குறித்து விரிவாக விளக்குகின்றன.
அதன்படி, வேலைக்கார தேனீக்கள் சில இளம் புழுக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றுக்குப் பிரத்யேகமாக ராயல் ஜெல்லியை உணவாகக் கொடுக்கத் தொடங்குகின்றன. சில நாட்களுக்குள் இந்தப் புழுக்கள் பிறவற்றிடம் இருந்து ஒரு மாறுபட்ட வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றி வருங்கால ராணியாக வளரத் தொடங்குகின்றன.
தேன்கூடு கண்காணிப்பு மற்றும் நடத்தை குறித்தான ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், ராணியின் இருப்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதை அறுதியிட்டுக் காட்டுகின்றன.
ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நடத்தையியல் உயிரியலாளரான யுர்கன் டாட்ஸ் மேற்கொண்ட ஆய்வில், ராணி இல்லாத தேனீக் கூட்டங்கள் விரைவாகத் தங்கள் ஒருங்கிணைப்பை இழப்பது தெரிய வந்துள்ளது. மேலும், ராணியின் இழப்பு, வேலைக்கார தேனீக்களின் நடத்தை சீர்குலைந்து, ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் சரிந்து, சில நேரங்களில் தேனீக் கூட்டத்தின் படிப்படியான வீழ்ச்சிக்கு வித்திடுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



