Home தேசிய national tamil ‘டெஸ்ட் மேட்ச் போன்ற பௌலிங்’ – டி20 ஆட்டத்தை 4 ஓவர்களிலேயே ஆர்சிபி முடிக்க உதவிய...

‘டெஸ்ட் மேட்ச் போன்ற பௌலிங்’ – டி20 ஆட்டத்தை 4 ஓவர்களிலேயே ஆர்சிபி முடிக்க உதவிய உத்தி

9
0

SOURCE :- BBC NEWS

'டெஸ்ட் மேட்ச் போன்ற பௌலிங்' - டி20 ஆட்டத்தை 4 ஓவர்களிலேயே ஆர்சிபி முடித்தது எப்படி?

பட மூலாதாரம், ANI

ஏப்ரல் 25 – டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியம் – பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில், 20 ஓவர்களில் 264 ரன்கள் குவித்தது டெல்லி கேபிட்டல்ஸ். அதை, 19வது ஓவரிலேயே சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்.

2 நாள்கள் கழித்து… அதே மைதானம்; 529 ரன்கள் எடுக்கப்பட்ட அந்த ஆடுகளத்துக்குப் பக்கத்து ஆடுகளம். மீண்டும் முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி கேபிட்டல்ஸ். ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்த்துக்கொண்டிருக்க, ஆர்சிபி பௌலர்கள் அதிரடியாக வீசிய பந்துவீச்சில் டெல்லி அணிக்கு மிக கடுமையான ஆட்டமாக இருந்தது. 75 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது அந்த அணி.

புவனேஷ்வர் குமார் மற்றும் ஜாஷ் ஹேசில்வுட் வீசிய அபாரமான ஸ்பெல்லில் அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார்கள். முதல் 23 பந்துகளிலேயே 6 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அதுவும் 8 ரன்களுக்கு. அந்த இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய ஓவர்களில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் பவர்பிளே ஸ்கோர் 13/6. ஐபிஎல் தொடரின் 19 ஆண்டுகால வரலாற்றில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச பவர்பிளே ஸ்கோர் இதுதான்.

டெல்லி கேபிட்டல்ஸ் 16.3 ஓவர்களில் எடுத்த ஸ்கோரை 6.3 ஓவர்களில் சேஸ் செய்து, இந்த சீசனில் தங்களின் 6வது வெற்றியைப் பதிவு செய்தது ஆர்சிபி. மேலும், இந்தப் பெரிய வெற்றியால் தங்களின் ரன்ரேட்டையும் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது அந்த அணி.

இந்தப் போட்டி பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் யோமஹேஷ், “புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் பந்துவீசுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. யாரும் சுற்றியெல்லாம் ஆட்டமிழக்கவில்லை. ஒருபக்கம் புவனேஷ்வர் குமார் இருபக்கமும் ஸ்விங் செய்து மிரட்டினார். பேட்டர்கள் போல்ட் ஆனார்கள், எட்ஜாகி ஆட்டமிழந்தார்கள். மறுபக்கம் ஹேசில்வுட் தன் உயரத்தைப் பயன்படுத்தி பவுன்சாலும் வேகத்தாலும் அச்சுறுத்தினார். ஒரு டெஸ்ட் போட்டியின்போது தான் இப்படியான பௌலிங் பற்றிப் பேசுவோம். ஆனால், ஒரு டி20 போட்டியில் அவர்கள் அப்படி ‘டெஸ்ட் மேட்ச் பௌலிங்’ செய்திருக்கிறார்கள். அப்படி பந்துவீசி வெறும் 4 ஓவர்களில் போட்டியை முடித்திருக்கிறார்கள்.” என்று கூறினார்.

அபாரமாக ஸ்விங் செய்த புவனேஷ்வர் குமார்

'டெஸ்ட் மேட்ச் போன்ற பௌலிங்' - டி20 ஆட்டத்தை 4 ஓவர்களிலேயே ஆர்சிபி முடித்தது எப்படி?

பட மூலாதாரம், ANI

முந்தைய போட்டியைப் போல் ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ். களத்தில் இருந்தது, அதற்கு முன் 2 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்த 18 வயது இளம் வீரர் சஹில் பரக். ஆனால், ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான புவனேஷ்வர் குமார் சற்றும் பாரபட்சம் பார்க்கவில்லை. அந்த இடது கை வீரரை நோக்கி, உள்ளே ஸ்விங் ஆகி வந்த ஒரு யார்க்கரை வீசினார்.

அதிலும் இந்த பந்து ஆடுகளத்தில் பிட்ச் ஆன பிறகு நகரவில்லை. பிட்ச் ஆவதற்கு முன்பாக காற்றிலேயே பேட்டரை நோக்கி உட்புறமாக நகரந்தது. அதனால், அறிமுக வீரரான பரக்கால் பந்து எங்கு விழப்போகிறது என்பதைக் கணிக்க முடியவில்லை. அவர் தன் பேட்டைக் கீழே கொண்டுவருவதற்குள்ளாகவே கால்களுக்கு முன் பிட்சான பந்து, ஸ்டம்புகளைத் தகர்த்து. ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ஆர்சிபியின் விக்கெட் வேட்டையை தொடங்கிவைத்தார் புவனேஷ்வர் குமார்.

டெல்லி கேபிட்டல்ஸ் இன்னிங்ஸ் முடிந்ததும் பேசிய புவனேஷ்வர் குமார், டெல்லி – பஞ்சாப் போட்டியின் தொடக்க ஓவர்களில் பந்து அவுட் ஸ்விங் ஆனதை கவனித்ததாகவும், அதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். அதை இந்தப் போட்டியில் சரியாகவும் அரங்கேற்றினார். 529 ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியில், பௌலர்களுக்கு சாதகமாக அமைந்து ஒரு விஷயத்தை சரியாகப் பிடித்து, அதை தன் ஆயுதமாகவும் மாற்றினார் புவனேஷ்வர் குமார்.

தன் முதல் ஓவரில் 1 விக்கெட்டை வீழ்த்திய அவர், இரண்டாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் & அக்‌ஷர் பட்டேல். இரண்டு பந்துகளுமே பேட்டர்களுக்கு வெளியே சென்றவை. ஆனால், ஒரே மாதிரியானவை அல்ல. வலது கை பேட்டர் ஸ்டப்ஸுக்கும் பந்தை வெளியே எடுத்துச் சென்றார், இடது கை பேட்டர் அக்‌ஷருக்கும் பந்தை வெளியே எடுத்துச் சென்றார். இப்படி இரு பக்கமும் ஸ்விங் செய்து அந்த 2 விக்கெட்டுகளையும் காலி செய்தார் அந்த அனுபவ வேகப்பந்துவீச்சாளர்.

சொல்லப்போனால், அக்‌ஷர் பட்டேல் அதற்கு முந்தைய பந்தே அவுட் ஆகியிருப்பார். புவி வீசிய பந்து, இடது கை பேட்டரான அக்‌ஷருக்கு சற்று உள்ளே நகர்ந்து வந்தது. அக்‌ஷர் அடிக்க முயன்றார். ஆனால், பந்து கீப்பரிடம் சென்றது. ஏதோ சத்தம் வந்ததால் பேட்டில் பட்டதாக நினைத்து ஆர்சிபி அணி ரிவ்யூ எடுத்தது. அப்போது ‘அல்ட்ரா எட்ஜில்’ பந்து பேட்டில் படவில்லை, ஆஃப் ஸ்டம்பில் பட்டது என்று தெரிந்தது. ஆஃப் ஸ்டம்பை உரசிச் சென்றிருக்கிறது அந்தப் பந்து. பெய்ல்ஸ் விழாததால் தப்பித்த அக்‌ஷர், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். முந்தைய பந்தை உள்ளே எடுத்துச் சென்ற புவனேஷ்வர் குமார், அடுத்த பந்தை வெளியே எடுத்துச் சென்று அந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

லென்த் மாற்றி ஏமாற்றிய ஹேசில்வுட்

'டெஸ்ட் மேட்ச் போன்ற பௌலிங்' - டி20 ஆட்டத்தை 4 ஓவர்களிலேயே ஆர்சிபி முடித்தது எப்படி?

பட மூலாதாரம், ANI

புவனேஷ்வர் ஸ்விங் மூலம் தாக்கம் ஏற்படுத்தினால், ஹேசில்வுட் தன் லென்த்களை மாற்றியும், வழக்கமான பவுன்சர்களை வீசியும் டெல்லி பேட்டர்களுக்கு சவால் கொடுத்தார்.

கடந்த போட்டியில் 20 ஓவர்களும் களத்தில் இருந்து ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் தாக்குப்பிடித்தது என்னவோ மூன்று பந்துகள் தான். அதிலும், ஹேசில்வுட் வீசிய முதல் பந்திலேயே அவர் பெவிலியன் திரும்பினார். ‘பேக் ஆஃப் லென்த்’ பிட்ச் செய்த அந்தப் பந்தை 141.4 kmph வேகத்தில் வீசினார். தன் தோள்பட்டை நோக்கி பவுன்ஸ் ஆன அந்தப் பந்தை புல் செய்ய முற்பட்டார் ராகுல். ஆனால், பந்தின் கூடுதல் பவுன்ஸ் மற்றும் வேகம் அவரை ஏமற்ற, பந்து டாப் எட்ஜாகி ஜித்தேஷ் ஷர்மாவின் கிளவுஸ்களுக்குள் தஞ்சமடைந்தது.

அப்போது வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், “ஹேசில்வுட்டிடம் இந்த ஏமாற்றும் லென்த் இருக்கிறது. இதைப் பார்த்தால் ‘ஷார்ட் பால்’ போல் இருக்கும். ஆனால், அது ஷார்ட் லென்த்தில் பிட்ச் ஆகவில்லை. ஆனால், அந்த லென்த்தில் பிட்ச் செய்தும் அவரால் பந்தை நன்கு மேலே எழும்பச் செய்ய முடியும். இங்கு அவர் அதைத்தான் செய்திருக்கிறார். அதை அடிக்கும் சரியான நிலையிலேயே ராகுல் இருக்கவில்லை.” என்று கூறினார். மிகச் சிறந்த ஃபார்மில் இருந்த பேட்டரை முதல் பந்திலேயே வெளியேற்றினார் ஹேசில்வுட்.

அடுத்த பந்தில் ரிஸ்வி களமிறங்கியபோது லென்த்தை முழுமையாக மாற்றினார் ஹேசில்வுட். ஃபுல் லென்த்தில், ஆஃப் ஸ்டம்புக்கு நன்கு வெளியே வீசப்பட்ட பந்தை அடிக்கச் சென்று, ஜித்தேஷிடம் கேட்ச் ஆனார் ரிஸ்வி.

அடுத்த ஓவரில் நித்திஷ் ராணாவை வீழ்த்தியது ராகுலை அவுட்டாக்கியதைப் போன்ற ‘பேக் ஆஃப் லென்த்’ பந்துதான். அதையே ஹேசில்வுட் ‘அரவுண்ட் தி ஸ்டம்ப்’ வந்து வீசியதால், அந்தக் கோணத்தின் காரணமாக பந்து ராணாவின் மார்பை நோக்கிப் பாய்ந்து வந்தது. அதை சரியாக கணிக்க முடியாமல் ராணா பேட்டை நீட்ட, பந்து கிளவுஸில் பட்டு எட்ஜாகி படிக்கல் கைகளில் விழுந்தது.

சொல்லப்போனால், அதற்கு ஒரு பந்து முன்னர் தான் அரவுண்ட் தி ஸ்டம்ப் வந்தார் ஹேசில்வுட். அந்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் ‘ஓவர் தி ஸ்டம்ப்’ இருந்து வீசினார். அதில் 2வது மற்றும் 3வது பந்துகள் ஃபுல் லென்த்தில் தான் பிட்ச் செய்தார். நான்காவது பந்துக்கு முன்பாக மறுபக்கம் சென்றவர், லென்த், லைன் இரண்டையும் மாற்றி ராணாவை ஏமாற்றிவிட்டார்.

நித்திஷ் ராணா வெளியேறியபோது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 3.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 8 ரன்கள். அதன்பிறகு அந்த அணியால் மீண்டு வரவே முடியவில்லை.

முதல் 3 ஓவர்களில் 8 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹேசில்வுட், 17வது ஓவரில் மீண்டும் பந்துவீசவந்தார். அபிஷேக் பொரெலுக்கு இரண்டு ‘லென்த்’ பந்துகள் போட்டவர், மூன்றாவது பந்தை யார்க்கராக வீச, ஸ்டம்புகள் சரிந்தன. அதோடு டெல்லியின் இன்னிங்ஸும். 4/12 என்று தன் ஸ்பெல்லை முடித்தார் ஹேசில்வுட்.

ஃபீல்டிங் மூலமும் அட்டாக் செய்த ஆர்சிபி

'டெஸ்ட் மேட்ச் போன்ற பௌலிங்' - டி20 ஆட்டத்தை 4 ஓவர்களிலேயே ஆர்சிபி முடித்தது எப்படி?

பட மூலாதாரம், ANI

இப்படி இரண்டு முன்னணி பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசிக்கொண்டிருக்க, அதற்கு மேலும் உதவுவதுபோல் செயல்பட்டார்கள் ஆர்சிபி ஃபீல்டர்கள். தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருக்கும்போது, பவுண்டரிகள் சென்றால் அது பேட்டர்கள் மீதான நெருக்கடியைக் குறைக்கும். ஆனால், ஆர்சிபி வீரர்கள் அதற்கு விடவில்லை.

அபிஷேக் பொரெல் அடித்த பந்தை கல்லி ஃபீல்டர் பாய்ந்து தடுக்கிறார், நித்திஷ் ராணா வேகமாக அடித்த பந்தை கவர் பாயின்ட் திசையில் பாய்ந்து தடுக்கிறார் குருனால், புவனேஷ்வர் குமார் மற்றும் சுயாஷ் ஷர்மா லெக் சைட் வீசிய மிகப் பெரிய வைட்களைப் பறந்து சென்று தடுக்கிறார் ஜித்தேஷ் ஷர்மா… இப்படி அவர்கள் அனைவருமே பவுண்டரி போக வேண்டிய பந்துகள் தங்களைத் தாண்டிச் செல்லாமல் பார்த்துக்கொண்டனர்.

அதுமட்டுமல்லாமல், ஃபீல்ட் செட் அப் மூலம் நெருக்கடியை ஏற்படுத்தினார் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார். ராகுல் அவுட்டாகி ரிஸ்வி வந்தபோது, அவருக்கு இரண்டு ஸ்லிப் ஃபீல்டர்கள் வைத்தார்கள். புவனேஷ்வர் குமார் நன்கு அவுட் ஸ்விங் வீசிக்கொண்டிருந்ததால் அவருக்கும் ஆரம்ப ஓவர்களில் இரண்டு ஸ்லிப் ஃபீல்டர்களை நிற்கவைத்தே வீசினார்கள்.

அதுமட்டுமல்லாமல், தொடர்ச்சியான விக்கெட்டுகளுக்குப் பிறகு ஒருகட்டத்தில் 30 யார்ட் வட்டத்துக்கு வெளியே 1 ஃபீல்டரை மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு, அனைவரையும் உள்ளே கொண்டுவந்தார் பட்டிதார். இதே டெல்லி அணியின் முந்தைய போட்டிக்குப் (264 ரன்கள் சேஸ் செய்யப்பட்ட போட்டி) பிறகு, ‘இன்றைய டி20 போட்டிகளுக்கு பவர்பிளே தேவையா’ என்ற கேள்விகள் எழுந்திருந்தன. ஆனால், பவர்பிளேவுக்கு வெளியே ஒரேயொரு ஃபீல்டரை வைத்து பந்துவீசிய தருணத்தை இரண்டே நாள்களில் பார்த்திருக்கிறோம்.

இவைதான் யோமஹேஷ் சொன்ன டெஸ்ட் மேட்ச் பௌலிங். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஒரு ஆடுகளத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் முதல் ஸ்பெல்லில், ஸ்விங், பவுன்ஸ், வேகம் போன்ற ஆயுதங்களால் இருபக்கமும் வேகப்பந்துவீச்சாளர்கள் மிரட்ட, பேட்டர்களைச் சுற்றிலும் ஃபீல்டர்கள் பாய, ரன் வருவதே கடினமாகி, விக்கெட்டுகளைக் காப்பாற்றுவதே பிரதானமாக மாறும். நேற்று (ஏப்ரல் 27) டெல்லியில், ஆர்சிபி பௌலர்கள் காட்டியது அப்படியொரு செயல்பாட்டைத்தான்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU