Home தேசிய national tamil கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி – கேட்சை தவறவிட்டு வெற்றியையும் தவறவிட்டதா ராயல்ஸ்?

கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி – கேட்சை தவறவிட்டு வெற்றியையும் தவறவிட்டதா ராயல்ஸ்?

19
0

SOURCE :- BBC NEWS

கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி. கேட்சை தவறவிட்டு வெற்றியையும் தவறவிட்டதா ராயல்ஸ்?

பட மூலாதாரம், ANI

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நடந்துவரும் 2026 ஐபிஎல் சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற்றது.

ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், மற்ற 5 போட்டிகளிலுமே தோற்றிருந்தது கேகேஆர். ஒருவழியாக அவர்களின் வெற்றிக்கான தேடலுக்கு இந்தப் போட்டியில் பதில் கிடைத்திருக்கிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கேகேஆர் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த இலக்கை எட்டியது.

தொடர்ந்து பேட்டிங்கில் தடுமாறிக்கொண்டிருந்த ரிங்கு சிங், அரைசதம் அடித்து தன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 8 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவறவிட்டது. அதுவே அவர்களின் வெற்றி வாய்ப்பையும் பறித்துவிட்டதாகக் கருதப்படுகிறது.

4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தமிழ்நாடு ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சுழலுக்கு சிக்கிய ராயல்ஸ்

3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார் வருண் சக்கரவர்த்தி

பட மூலாதாரம், ANI

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் – வைபவ் சூர்யவன்ஷி ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. வழக்கமாக முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டும் இந்த இருவரும் இந்தப் போட்டியை வேறு மாதிரி அணுகினார்கள். ஆரம்பத்தில் சற்று நிதானம் காட்டி, ஒருசில பந்துகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பெரிய ஷாட் ஆடினார்கள்.

முதல் 5 ஓவர்களில் 41 ரன்கள் வந்திருந்த நிலையில், ஆறாவது ஓவர் வீசிய கேமரூன் கிரீன் அந்த ஓவரில் 22 ரன்கள் கொடுத்தார். அதன் காரணமாக பவர்பிளேவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 63 ரன்கள் எடுத்தது ராயல்ஸ்.

ஜெய்ஸ்வால் – சூர்யவன்ஷி ஜோடி 8.3 ஓவர்களுக்கு 81 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி அந்த ஜோடியைப் பிரித்தார். 46 ரன்கள் எடுத்த சூர்யவன்ஷி, ரமன்தீப் சிங் வசம் கேட்சாகி வெளியேறினார்.

வருண் வீசிய அடுத்த ஓவரில் துருவ் ஜுரெல் ஆட்டமிழந்து வெளியேறினார். நரைன் வீசிய 12வது ஓவரில் ஜெய்ஸ்வாலும் வெளியேறினார். கேகேஆர் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ராயல்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து வெளியேறினார்கள். அதனால் ராயல்ஸ் அணியின் ரன்ரேட்டும் குறையத் தொடங்கியது.

அதன்பிறகு எந்த ராயல்ஸ் பேட்டருமே நிலைத்து நின்று விளையாடவில்லை. பராக் 12 ரன்கள், ஹிட்மெயர் 15 ரன்கள், ஃபெரீரா 7 ரன்கள், ஜடேஜா 9 ரன்கள் என அனைவரும் விரைந்து வெளியேறினார்கள். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

கொல்கத்தா அணிக்காக அதிகபட்சமாக கார்த்திக் தியாகி, வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

மறுபடியும் தடுமாறிய கேகேஆர் பேட்டிங்

இந்த சீசனில் தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ரிங்கு சிங்

பட மூலாதாரம், ANI

இந்த சீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பெருமளவு தடுமாறுகிறது. அது இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. ஆர்ச்சர் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அவுட் ஆனார் டிம் செய்ஃபர்ட். அடுத்த ஓவரில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே வெளியேறினார்.

ஓரளவு அதிரடி காட்டிய கேமரூன் கிரீன் துருவ் ஜுரெல் பாய்ந்து செய்த ஸ்டம்பிங்கால் அவுட்டானார். அவர் 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு ரகுவன்ஷி (10 ரன்கள்), ராவ்மன் பவெல் (23 ரன்கள்), ரமன்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 14வது ஓவரின்போது 85/6 என்ற நிலைக்குத் தள்ளப்படது. அதனால் கொல்கத்தா அணி பெரும் நெருக்கடிக்குள்ளானது.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங், அனுகூல் ராய் ஜோடி நிதானமாக விளையாடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து தங்கள் அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றது. பரபரப்பாகச் சென்ற போட்டியில் கடைசி ஓவரில் வெற்றியை உறுதி செய்தார் ரிங்கு சிங். 34 பந்துகள் சந்தித்த அவர் ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். அனுகூல் ராய் 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்தார்.

இந்த ஜோடி 6.1 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து தங்கள் அணிக்கு இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

கொல்கத்தா இன்னிங்ஸின் 11வது ஓவரில் ரிங்கு சிங் ஒரு பெரிய கேட்ச் வாய்ப்பைக் கொடுத்தார். ஜடேஜா வீசிய பந்தை அவர் தூக்கி அடிக்க, பந்து டாப் எட்ஜ் ஆகி ஷார்ட் தேர்ட் மேன் திசைக்கு சென்றது. அந்த எளிய வாய்ப்பை ராயல்ஸ் அணியின் நாந்த்ரே பர்கர் பிடிக்கத் தவறினார். அதனால் ரிங்கு மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்றார்.

அப்போது ரிங்கு சிங் எடுத்திருந்தது 8 ரன்கள் மட்டுமே. கொல்கத்தா அணியும் 73/6 என்ற நிலைக்குச் சென்றிருக்கும். அதன்பிறகு ரமன்தீப், அனுகூல் போன்ற வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டிருக்கும். அது ராயல்ஸை வெற்றிக்கு இட்டுச் சென்றிருக்கும். ஆனால், அந்த கேட்சைத் தவறவிட்டது ராயல்ஸ் அணிக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU