Home தேசிய national tamil கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர்

கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர்

1
0

SOURCE :- BBC NEWS

பராக்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 29 மார்ச் 2024, 03:25 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்

ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.

அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான்.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது.

டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது.

இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது.

ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.

டெல்லி vs ராஜஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார்.

பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார்.

ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது.

இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது.

2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லி vs ராஜஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி

ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார்.

ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள்

ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார்.

அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது.

சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

டெல்லி vs ராஜஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட்

கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார்.

கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான்.

அதிரடியாக ஆடிய அஸ்வின்

நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.

டெல்லி vs ராஜஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

டெல்லிக்கு தொல்லையாகிய சஹல்

ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார்.

மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது.

நடுங்கவைத்த பர்கர்

ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது.

அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.

டெல்லி vs ராஜஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி

டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது.

14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை.

அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

SOURCE : THE HINDU