Home தேசிய national tamil குமரி மாவட்டத்தில் 8 பேரை பலி கொண்ட ‘கள்ளக்கடல்’ சீற்றத்திற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை?

குமரி மாவட்டத்தில் 8 பேரை பலி கொண்ட ‘கள்ளக்கடல்’ சீற்றத்திற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை?

1
0

SOURCE :- BBC NEWS

‘கள்ளக்கடல்’ சீற்றம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற தென் கடலோரப் பகுதிகள் மற்றும் கேரளாவின் கடற்பகுதிகளில் மே 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS), தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய வானிலை மையம் ஆகியவை எச்சரித்திருந்தன.

இது வழக்கமான கடல் சீற்றமாக இல்லாமல், எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் கொந்தளித்து, கரையோரம் பலத்த பாதிப்பை ஏற்படுத்தும் ‘கள்ளக்கடல்’ சீற்றம் (Swell Surge) என்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய கடலோர பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டிருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

0.5 மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலைகள் எழும் என்பதால், கடலோர பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் யாரும் கடலில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டி கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில், 5 பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்கடல் சீற்றம் என்றால் என்ன? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? எச்சரிக்கை விடுக்கப்பட்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டது எப்படி?

‘கள்ளக்கடல்’ சீற்றம்

பட மூலாதாரம், Getty Images

கள்ளக்கடல் சீற்றம் (Swell Surge)

2012ஆம் ஆண்டில், ‘கள்ளக்கடல்’ என்ற சொல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (யுனெஸ்கோ) முறையான ஒப்புதலைப் பெற்றது.

“கள்ளக்கடல் என்ற சொல் மலையாளத்திலிருந்து பெறப்பட்டது. ‘கள்ளன் + கடல்’, கள்ளன் என்றால் திருடன். திருடன் போல எந்தவித சத்தமும், முன்னறிவிப்பும் இல்லாமல் மக்கள் வசிக்கும் கரையோரப் பகுதிகளில் கொந்தளிப்புடன் நுழையும் கடல் நீர் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் வைக்கப்பட்டது” என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.

தொடர்ந்து பேசிய அவர், “கள்ளக்கடல் சீற்றம் குறித்து தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து வானிலை ஆய்வு மையம் மூலமாக பல எச்சரிக்கைகளை விடுத்து வந்தோம்.

பொதுவாக கடல் சீற்றம் மூன்று வகையில் ஏற்படும், ஒன்று கடலில் ஏற்படும் நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகளால் ஏற்படுவது, இரண்டாவது காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் காரணமாக ஏற்படுவது, மூன்றாவது எங்கோ தொலைதூரத்தில் வீசும் சூறாவளிகள் அல்லது பலத்த காற்றின் ஆற்றலால் உண்டாகும் அலைகள் அதே வேகத்தோடு கரையை நோக்கிச் செல்லும், மூன்றாவது வகையே கள்ளக்கடல்” என்று கூறினார்.

கள்ளக்கடல் சீற்றம் எதனால் ஏற்படுகிறது?

‘கள்ளக்கடல்’ சீற்றம்

“கடற்கரையோரம் வாழும் மக்கள் சாதாரண கடல் சீற்றத்தையும் கள்ளக்கடல் சீற்றத்தையும் ஒன்று என நினைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் சீற்றம் என்பது பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உருவாகும் ஒரு ஆற்றல் கடல் அலைகள் மூலமாகப் பயணித்து பெரும் வேகத்துடன் கரையை அடைவது” என்கிறார் டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன்.

இவர் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

தொடர்ந்து பேசிய அவர், “அவ்வாறு பெரும் ஆற்றலோடும் வேகத்தோடும் கரையை அடையும் அலைகள் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும். இந்த அலைகளில் மண், வண்டல் அதிகமாக இருக்கும். எனவே இத்தகைய கள்ளக்கடல் அலைகளில் நீச்சல் தெரிந்தவர்கள் சிக்கிக்கொண்டால் கூட தப்பிப்பது கடினம்.

காரணம் அந்த அலைகளில் சிக்கியவர்களின் நுரையீரலில் இந்த மண் மற்றும் வண்டல் நிறைந்து மூச்சுத்திணறி இறந்துவிடுவார்கள். அது மட்டுமல்லாது பெரும் வேகத்தோடும், ஆற்றலோடும் இந்த அலைகள் இருப்பதால் இதில் சிக்கியவர்கள் கரைகளில் இருக்கும் பாறைகளில் மோதி உயிரிழக்கவும் வாய்ப்புகள் உண்டு” என்கிறார்.

சுனாமி – கள்ளக்கடல் சீற்றம் என்ன ஒற்றுமை?

‘கள்ளக்கடல்’ சீற்றம்

“சுனாமி என்பது கடலுக்குள் ஏற்படும் பூகம்பத்தால் நிகழ்வது. அவ்வாறு கடலுக்குள் பூகம்பம் ஏற்படும் போது ராட்சத அலைகள் தோன்றி அவை கரையை நோக்கி நகரும். ஆனால் இந்த கள்ளக்கடல் சீற்றத்தில் காற்றிலிருந்து அலைகளுக்கு கடத்தப்படும் ஆற்றல் மட்டுமே பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு பயணம் செய்யும்.

இதனால் கரையை நெருங்கும்போது போது தான் பெரும் அலைகள் தோன்றும், அதுவரை இந்த ஆற்றல் அலைகள் மூலம் பயணிப்பது வெளியே தெரியாது. அதனால் தான் கள்ளக்கடலில் திடீரென எந்த ஆரவாரமும் இல்லாமல் கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறது” என்று கூறுகிறார் டாக்டர் வி.எஸ்.சந்திரசேகரன்.

“சுனாமிக்கும் இந்த கள்ளக்கடல் அலைகளுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், இரண்டுமே அதிகளவு கடல் மணலையும் வண்டலையும் சுமந்து வரும். கரையைத் தாண்டி அதிக தூரத்திற்கு அலைகள் செல்லும். இதனால் கூட சில சமயங்களில் சுனாமியும் கள்ளக்கடல் சீற்றமும் ஒன்று என புரிந்துகொள்ளப்படும்” என்று கூறினார் அவர்.

மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

‘கள்ளக்கடல்’ சீற்றம்

கள்ளக்கடல் சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான் என்றும் ஆனால் அரசு கள்ளக்கடல் சீற்றம் குறித்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் மெத்தனம் காட்டியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்கிறார் சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ்.

“கள்ளக்கடல் சீற்றம் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடக்கும் நிகழ்வு தான், ஆனால் இந்தமுறை தான் ‘ரெட் அலர்ட்’ கொடுக்கும் அளவுக்கு தீவிரமாக உள்ளது. மேற்கு கடற்கரைப் பகுதியில் கன்னியாகுமரி அமைந்திருப்பதால், இந்த பகுதி சற்று தாழ்வாக இருக்கும். இதனால் அலைகள் வழக்கமாகவே சற்று ஆக்ரோஷத்துடன் தான் வரும்.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்கள் தான். கடந்த முறை குமரி மீனவர்களின் வீடுகளுக்குள் புகுந்த கடல் அலைகள், பல அடிகளுக்கு கடல் மண்ணை அப்படியே விட்டுச் சென்றன. இதனால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.” என்கிறார் ஜோன்ஸ்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சில நாட்களாகவே கள்ளக்கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், கடற்கரைகளில் முறையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் தான் இத்தனை உயிரிழப்புகள். மீனவர்களின் வீடுகளுக்குள் தொடர்ந்து கடல் நீர் வருவதை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்தவாறே தான் இருந்தது. இந்த முறையும் அது போல கடல் நீர் வீடுகளுக்குள் புகும் அவ்வளவு தானே என நினைத்து இருந்துவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார் சமூக ஆய்வாளர் ஜோன்ஸ் தாமஸ்.

கன்னியாகுமரியில் 8 பேர் உயிரிழப்பு

‘கள்ளக்கடல்’ சீற்றம்

பட மூலாதாரம், Getty Images

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அடுத்த கணபதிபுரம் பகுதியில் ஆயிரங்கால் பொழிமுகம் என்ற லெமூர் கடற்கரை பகுதி உள்ளது. திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவரும் பயிற்சி மருத்துவர்கள் 12 பேர் தங்கள் நண்பர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் வந்துள்ளனர். இவர்களில் 8 பேர் நேற்று (06.05.2024) லெமூர் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

கடற்கரையில் நின்றிருந்தபோது, கடல் சீற்றத்தால் வேகமாக எழுந்த பெரிய அலையில் அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த சார்கவி (24), நெய்வேலியைச் சேர்ந்த காயத்ரி (25), ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ் (25), திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவின் ஷாம் (23), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சார்வதர்ஷித் (24) ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று (06-05-2024) கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் கடற்கரையில் நின்றிருந்த பிரேமதாஸ், அவரது 7 வயதான மகள் ஆதிஷா ஆகியோரும் கடல் சீற்றத்தில் சிக்கினர். அதில் பிரேமதாஸ் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் கடலில் மாயமான ஆதிஷா உயிரிழந்துவிட்டார். அவரது உடல் மட்டுமே கிடைத்தது.

சென்னையில் இருந்து சுற்றுலா வந்திருந்த 20 பேர் குழுவினர் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை கடற்கரையில் இருந்த போதும் இதேபோன்ற அசம்பாவிதம் நிகழ்ந்தது. வில்லிவாக்கம் மனோஜ் குமார், சூளைமேடு விசூஸ் ஆகியோர் கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அவர்களது உடல் மட்டுமே மீட்கப்பட்டது.

கள்ளக்கடல் சீற்றம் குறித்த தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், கள்ளக்கடல் சீற்றத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டே நாட்களில் 8 பேர் உயிரிழந்தது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரிடம் கேட்டபோது,

“முறையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கள்ளக்கடல் குறித்த எச்சரிக்கை கிடைத்தவுடன் லெமூர் கடற்கரை உட்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஊர் பாதை வழியாக பயிற்சி மருத்துவர்கள் அங்கு சென்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தோடு ஊர் மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இத்தகைய அசம்பாவிதங்களை தடுக்க முடியும். இன்னும் கடல் சீற்றம் இருப்பதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை நீடிக்கிறது. மீனவர்களையும் தங்கள் படகுகளை இடைவெளி விட்டு, பாதுகாப்பான் இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்று கூறினார்.

தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் எச்சரிக்கை

‘கள்ளக்கடல்’ சீற்றம்

பட மூலாதாரம், INCOIS,MoES/X

இந்த கள்ளக்கடல் சீற்றம் தொடர்பாக கடந்த மே 3ஆம் தேதி தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்திய பெருங்கடலின் தென் பகுதியிலிருந்து அதிக தூரம் பயணிக்கக் கூடிய ஆற்றல் உடைய அலைகள் கரையை நோக்கி வருவதால், அதன் தாக்கத்தில் கடல் சீற்றங்கள் மற்றும் மோசமான கடல் கொந்தளிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியக் கடற்கரையிலிருந்து சுமார் 10,000 கிமீ தொலைவில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கிய இந்த நிகழ்வு, 28 ஏப்ரல் 2024இல் தெற்கு இந்தியப் பெருங்கடலை நோக்கி மெதுவாக நகர்ந்தது.

இது 4 மே 2024 அதிகாலையில் (02:30 மணி) இந்தியாவின் தென் முனையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினத்தில் லட்சத்தீவு, கேரளா, தென் தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரைகளில் தாழ்வான பகுதிகளில் கடலோர வெள்ளம் ஏற்படலாம். தாழ்வான கடலோரப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறிய படகுகளை கரைக்கு அருகில் நிறுத்த வேண்டாம். மோதல் மற்றும் சேதத்தைத் தவிர்க்க, படகுகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நங்கூரமிடப்பட வேண்டும். இந்த நாட்களில் கடற்கரைகள் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அனைத்து செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மொத்தமாக நிறுத்தப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

SOURCE : THE HINDU