Home Latest news tamil சமீபத்திய செய்தி அமெரிக்க அணுகுண்டு ரகசியங்களை வேவு பார்த்த சோவியத் பெண் உளவாளியின் ‘திகிலூட்டும் நடவடிக்கைகள்’

அமெரிக்க அணுகுண்டு ரகசியங்களை வேவு பார்த்த சோவியத் பெண் உளவாளியின் ‘திகிலூட்டும் நடவடிக்கைகள்’

21
0

SOURCE :- BBC NEWS

சோவியத் உளவாளி, ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸ்

பட மூலாதாரம், Alejandra López

அவருடைய பெயர் மரியா லூயிசா இல்லை. அவர் 1950 மற்றும் 60களில் மான்டிவீடியோவில் ஒரு குழந்தைப் பராமரிப்பாளராகவோ, தையல்காரராகவோ அல்லது இல்லத்தரசியாகவோ இருக்கவில்லை.

அவையெல்லாம் உண்மையில் அவரது உண்மையான அடையாளத்தை மறைப்பதற்கான ஒரு முகமூடி மட்டுமே.

ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸ் எனும் அவர், சோவியத் யூனியனின் உளவு அமைப்பான கேஜிபி-யின் ரகசிய முகவர் ஆவார்.

உருகுவேயை தனது செயல்பாட்டுத் தளமாகப் பயன்படுத்தி, பனிப்போரின் உச்சகட்டத்தில் ஓர் உளவு வலையமைப்பை உருவாக்குவதில் அவர் பொறுப்பாளராக இருந்தார்.

ஸ்பானிய கம்யூனிச ஆர்வலரான அவர், சோவியத் நலன்களுக்காக நீண்ட காலம் பணியாற்றுவதற்கு முன்பு, பார்சிலோனாவில் ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோவுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்தார். கேஜிபி அமைப்பில் இவருக்கான புனைப்பெயர் “பேட்ரியா” (தாய்நாடு) என்பதாகும்.

இரண்டாம் உலகப் போரின்போது, யுக்ரேன் காடுகளில் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய ஒரு தந்தி இயக்குநராக அவர் இருந்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. பின்னர் மெக்சிகோவில் லியோன் ட்ராட்ஸ்கியின் படுகொலையைத் திட்டமிடுவதில் பங்கேற்றார். பாரிஸில் உளவு வேலைகளைச் செய்தார். மாஸ்கோவில் ஓர் உளவு பயிற்சியாளராகப் பணியாற்றினார். மேலும் 20 ஆண்டுகளாக உருகுவேவில் இருந்து உளவு நடவடிக்கைகளை நிர்வகித்தார் என்றும் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

கர்னல் பதவியுடனும் நீண்ட விருதுகளின் பட்டியலுடனும், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு சற்று முன்பு ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸ் காலமானார். ஒருபோதும் வெளிச்சத்துக்கு வராத பல ரகசியங்களை அவர் தன்னுடனேயே புதைத்துக்கொண்டார்.

அவரை நேரில் அறிந்த பலரும், இந்தப் பெண் உண்மையில் யார் என்பதை ஒருபோதும் உணரவில்லை. அர்ஜென்டினிய எழுத்தாளரான லாரா ராமோஸுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. ஒரு நாள் அவரது சகோதரர் உண்மையை அவருக்கு உணர்த்தும் வரை இதுதான் நிலையாக இருந்தது.

சோவியத் உளவாளி, ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸ்

பட மூலாதாரம், Courtesy of Lumen

“மை கேஜிபி நேனி” என்ற தனது புத்தகத்தில், ராமோஸ் தனது சிறு வயதில் ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸுடன் இருந்த உறவை விவரிக்கிறார். பள்ளி முடிந்ததும் தனக்குத் தின்பண்டங்கள் கொடுத்த இந்தப் பெண் உண்மையில் யார் என்பதைக் கண்டறிய ஐந்து ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட விரிவான விசாரணையைப் பகிர்ந்து கொள்கிறார்.

இந்தப் பெண்மணியை நேரில் அறிந்த ஒருவரால் எழுதப்பட்ட முதல் புத்தகம் இது. லத்தீன் அமெரிக்காவில் இருந்த காலத்தில் இந்த ஸ்பானிய உளவாளியின் வாழ்க்கையில் இருந்த மிக ஆழமான ரகசியங்களை இது வெளிப்படுத்துகிறது.

அந்த ஆய்வின்போது, ராமோஸ் ஆச்சரியமாகவும் அதேநேரம் திகிலூட்டும் விதமாகவும் அமைந்த ஓர் உண்மையைக் கண்டறிந்தார்.

அணுகுண்டு ரகசியங்களை வேவு பார்த்தனர்

ஆனால், ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸ் உருகுவேவில் என்ன செய்துகொண்டிருந்தார், அவர் அந்தத் தென் அமெரிக்க நாட்டுக்கு எப்படி வந்தடைந்தார் என்ற கதை பாரிஸில் தொடங்குகிறது என்று ராமோஸ் பிபிசி முண்டோவிடம் கூறுகிறார்.

அவர் பிரெஞ்சு நகரத்தில் இருந்தபோது, “அக்காலத்தில் மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் திறமையான உருகுவே எழுத்தாளரான பெலிஸ்பெர்டோ ஹெர்னாண்டஸை கவர்ந்தார். அவர்கள் திருமணம் செய்துகொண்டு 1947ஆம் ஆண்டின் இறுதியில் மான்டிவீடியோவை வந்தடைந்தனர்.”

உருகுவே உளவுத்துறையின் கவனத்தில் பெரிதாக இல்லாததால், சோவியத் ஏஜென்ட்களுக்கு தேவையான போலி ஆவணங்களை ஒருங்கிணைக்கவும் பெறவும் அது ஒரு சிறந்த இடமாகத் தோன்றியது.

பனிப்போரின் தொடக்கத்தில் மாஸ்கோவின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றான அமெரிக்காவின் அணுகுண்டு பற்றிய தகவல்களைப் பெறுவதே இந்த ஏஜென்ட்களின் குறிக்கோளாக இருந்தது.

இந்த ஆவணங்களை அவர் எப்படிப் பெற்றார் என்பதை அந்த அர்ஜென்டினா எழுத்தாளர் விவரிக்கையில், “அவர் உருகுவேவின் உட்புறப் பகுதிகளில் உள்ள இடுகாடுகளுக்குச் சென்று, இறந்த குழந்தைகளின் கல்லறைகளைத் தேடினார். குழந்தைகளின் கல்லறைகளைக் கண்டதும், அந்த ஊர்களின் குடிமைப் பதிவேடுகளுக்குச் சென்று, பிறப்புச் சான்றிதழ்களைக் கோருவார். பின்னர், இறந்த அந்த குழந்தைகளின் பெயரில் போலி ஆவணங்களைத் தயாரிப்பார்” என்கிறார்.

சோவியத் உளவாளி, ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸ்

பட மூலாதாரம், Getty Images

மான்டிவீடியோவில் எந்தச் சந்தேகமும் வராதபடி ஒரு நம்பகமான தோற்றத்தை வெளிப்படுத்துவதற்காக, இந்த ஸ்பானிய உளவாளி தனது கணவர் பெலிஸ்பெர்டோ ஹெர்னாண்டஸின் நண்பர்களான பல உருகுவே அறிஞர்களை அணுகினார்.

அவர்கள் முன்னிலையில், டி லாஸ் ஹெராஸ் அரசியல் விவகாரங்களில் எந்த ஆர்வமும் இல்லாத ஒரு நபராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். அவர்களுக்குத் தேவையான தையல் வேலைகளைச் செய்து கொடுத்ததோடு, அவர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும் உதவி செய்தார்.

ராமோஸின் தாய் அந்த நேரத்தில்தான் அவரைச் சந்தித்தார். அதன் பிறகு அவர் அர்ஜென்டினாவுக்கு இடம்பெயர்ந்தார், அங்குதான் அவரது இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தாய் தனது குழந்தைகளுடன் மீண்டும் மான்டிவீடியோவுக்கு வந்து, உருகுவேவில் மரியா லூயிசா என்ற பெயரில் இருந்த அந்த உளவாளியுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

சோவியத் உளவாளி, ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸ்

பட மூலாதாரம், Public document

அசைக்க முடியாத ஆயுதம்

ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸின் வீட்டுக்கு அருகிலேயே இருந்த எஸ்குவேலா ஃபிரான்சியா என்ற பள்ளியில் பயின்றபோது, 1964ஆம் ஆண்டு அந்த கேஜிபி ஏஜென்ட் தன்னையும் தனது சகோதரரையும் கவனித்துக் கொண்டதாக ராமோஸ் நினைவுகூர்கிறார்.

“எங்கள் பள்ளியின் வாசலில் அவர் நின்று கொண்டிருந்தது எனக்கு மிகத் தெளிவாக நினைவிருக்கிறது. அவர் எங்களைப் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி தருவார்,” என்று ராமோஸ் கூறுகிறார்.

அவர் ஒரு நடுத்தர வயது பெண்மணி என்று கூறும் ராமோஸ், “நரைத்த முடி, சற்று கட்டுக்கோப்பான உடல்வாகு, ஆனால் குண்டாக இல்லை, குள்ளமாக இருந்தார். அவர் ஒரு பாவாடை மற்றும் ரவிக்கை அணிந்திருந்தது எனக்கு மிகத் தெளிவாக நினைவிருக்கிறது, அவரிடம் ஸ்பானிய உச்சரிப்பு இல்லை,” என்கிறார்.

அந்தப் பராமரிப்பாளர் அல்லது தையல்காரர் மென்மையான குரலைக் கொண்டிருந்தார் என்றும், சோவியத் எழுத்தாளர் கியுலியா கொரோலெவின் வாழ்க்கை வரலாறான “தி ஃபோர்த் ஹைட்” கதைகளை அவரிடம் கூறுவார் என்றும் எழுத்தாளர் நினைவுகூர்கிறார். “அவர் ஓர் இனிமையான மனிதர் அல்ல. மாறாக அவர் சற்று உணர்ச்சியற்றவராக இருந்தார்.”

ராமோஸும் அவரது சகோதரரும் ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸின் வீட்டுக்குச் செல்ல மிகவும் விரும்புவர், ஏனெனில் அவரிடம் ஓர் “அசைக்க முடியாத ஆயுதம்” இருந்ததாக அவர் கருதினார்.

“அவை மிகவும் சுவையான, மிகவும் விலையுயர்ந்த உணவுகள். ஓரோ டெல் ரின் அல்லது லா மல்லோர்குவினாவில் இருந்து வாங்கப்பட்ட அவற்றை நாங்கள் மாலையில் பால் கலந்த காபியுடன் சிற்றுண்டியாகச் சாப்பிடுவோம்.”

சோவியத் உளவாளி, ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸ்

பட மூலாதாரம், Alejandra López

இரண்டு மரணங்கள்

உருகுவேயில் இருந்த காலத்தில் அந்த உளவாளியின் நடவடிக்கைகளை மீளுருவாக்கம் செய்து பார்த்த ராமோஸ், குடியுரிமை பெற்ற உடனேயே டி லாஸ் ஹெராஸ் உருகுவே எழுத்தாளர் பெலிஸ்பெர்டோ ஹெர்னாண்டஸை பிரிந்ததாகக் கூறுகிறார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, சோவியத் தரப்பால் அவருக்கு மேலதிகாரியாக அனுப்பப்பட்ட வாலன்டினோ மார்க்கெட்டி என்ற இத்தாலிய உளவாளியை மணந்தார் என்றும் குறிப்பிடுகிறார்.

அவர்கள் மான்டிவீடியோவில் உள்ள வில்லியமன் வீதியில் ஒரு வீட்டை வாங்கினர், அதே வீட்டுக்குத்தான் ராமோஸும் அவரது சகோதரரும் பள்ளி முடிந்ததும் சிற்றுண்டி சாப்பிடச் செல்வார்கள்.

அந்த ஸ்பானிய பெண்ணின் கதையை விசாரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு கேசட் பதிவை ராமோஸ் கண்டறிந்தார்.

அதில் உருகுவே பெண் ஒருவர் “உளவாளியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒரு நூலகர்” ஆப்பிரிக்கா டி லாஸ் ஹெராஸ் பற்றி இரண்டு மரணங்களுடன் தொடர்புடைய ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

அந்தப் பதிவில், கேஜிபி உளவாளி தனது கணவரான இத்தாலிய வாலன்டினோ மார்க்கெட்டியை “விஷம் வைத்துக் கொன்றார்” என்றும், “சடலத்தை ஓர் அறையில் இருந்து மற்றோர் அறைக்கு நகர்த்த” அவர் உதவி கேட்டார் என்றும் அந்த உருகுவே பெண் விவரிப்பதாக ராமோஸ் கூறுகிறார்.

கடந்த 1961ஆம் ஆண்டு மான்டிவீடியோவில் எர்னஸ்டோ “சே” குவேராவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வின்போது, உருகுவே பல்கலைக்கழக பேராசிரியர் அர்பெலியோ ராமிரெஸின் மரணத்திலும் அவருக்கு பங்கு இருந்ததாக அந்த எழுத்தாளர் கூறுகிறார்.

வெளிப்படையாகச் சொல்வதெனில், அர்பெலியோ ராமிரெஸும் அவருடன் ரகசியப் பணிகளில் பணியாற்றுவதற்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார் என்று அவர் கூறுகிறார்.

“தனது இத்தாலிய கணவர் மற்றும் அவரது கூட்டாளியாகக் கருதப்படும் அர்பெலியோ ராமிரெஸ் ஆகியோருக்கு விஷம் கொடுத்ததில் டி லாஸ் ஹெராஸுக்கு தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் என்ன?” என்று நான் அவரிடம் கேட்டேன்.

“விஷம் கொடுக்கப்பட்ட இத்தாலிய உளவாளியான தனது கணவரின் மரணச் சான்றிதழைப் பெற அவர் அழைத்த அதே மருத்துவரைத்தான், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அர்பெலியோ ராமிரெஸின் உடற்கூராய்வைச் செய்ய அவர் நியமித்திருந்தார்” என்று எழுத்தாளர் கூறுகிறார்.

எனது புத்தகத்தில், “அந்தப் பதிவில் உள்ள ஆதாரங்களை நான் முன்வைக்கிறேன். இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“அந்தப் பதிவின்படி, நான் எங்கு அமர்ந்து பால் குடிப்பேனோ அதே நாற்காலியில்தான் அவர் தனது கணவருக்கு விஷம் கொடுத்துள்ளார். இது எனக்கு மிகவும் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : BBC