SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Grigory SYSOYEV / POOL / AFP via Getty Images
-
- எழுதியவர், ராஜேஷ் டோப்ரியால்
- பதவி, பிபிசிக்காக
-
பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இரான் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, எண்ணெய் விநியோகம் தொடர்பான இந்தியாவின் நலன்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
மே 14-15 தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, ஆர்டி இந்தியா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக மே 10 அன்று, இரான் போரைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோதி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும், தங்கம் வாங்குவதை ஒரு வரம்பிற்குள் வைத்துக் கொள்ளுமாறும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்துப் பிரதமர் கூறுகையில், “இந்தியாவின் இறக்குமதியில் கச்சா எண்ணெய் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, உலகிற்கு அதிகப்படியான எண்ணெய் வழங்கும் பிராந்தியம் தற்போது போரிலும் மோதலிலும் சிக்கித் தவிக்கிறது. எனவே, நிலைமை சீராகும் வரை நாம் அனைவரும் இணைந்து சிறிய அளவிலான உறுதிமொழிகளை மேற்கொள்ள வேண்டும்.”
இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் ஏறத்தாழ 90 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. யுக்ரேன் போருக்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் சலுகை விலையில் எண்ணெயை வாங்கத் தொடங்கியது; இதன் விளைவாக, இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
2024 ஜூலைக்குள், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 44.6 சதவீதமாக உயர்ந்தது. இருப்பினும், அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் வரி விதிப்புக் கொள்கைகள் காரணமாக, ஜனவரி 2026-க்குள் இதுவே 20.6 சதவீதமாகக் குறைந்தது.
பட மூலாதாரம், MAXIM SHIPENKOV / POOL / AFP via Getty Images
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?
இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ், ‘RT India’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்தியா-ரஷ்யா உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
“ரஷ்யா-இந்தியா நட்புறவின் எதிர்காலம் குறித்த கவலைகளை விதைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் எவ்வித கவலைகொள்ளத் தேவையில்லை என்றே நான் நினைக்கிறேன்… சில உலகளாவிய சக்திகள் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றன; ஆனால், அவர்களின் இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது” என அவர் கூறினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் சுமூகமாக தொடர்ந்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
“இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நீண்ட காலத்திற்கு, இந்தியாவின் ராணுவத் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவ எந்தவொரு மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. ரஷ்யா இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கியது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் வழங்கியது” என அவர் மேலும் தெரிவித்தார்.
“பிரமோஸ் ஏவுகணையுடன் தொடங்கிய உறவு, பின்னர் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் வரை முன்னேறியது. தற்போது, T-90 ரக டாங்கிகளும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.”
கடந்த ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, இரு நாடுகளும் நீண்டகாலப் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு செயல்திட்டத்தின் மீது ஒருமித்த கருத்தை எட்டியதாகவும், அந்தத் திட்டத்தில் ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பும் உள்ளடங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது குறிப்பாக லுகோயில் (Lukoil) மற்றும் ரோஸ்நெஃப்ட் (Rosneft) நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய ஆர்டி இந்தியா (RT India) தொகுப்பாளர், இது ரஷ்யாவிற்கு ஏதேனும் கவலையை ஏற்படுத்தியுள்ளதா என்றும், ஒரு கூட்டாளியாக இந்தியா மீதான ரஷ்யாவின் கண்ணோட்டத்தில் இது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
பட மூலாதாரம், Alexander Zemlianichenko / POOL / AFP
“இதில் இந்தியாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. யுக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா எடுத்த ஒரு சட்டவிரோதமான முடிவைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.”
அவர் மேலும் கூறுகையில், “ரஷ்ய எண்ணெய் விநியோக விஷயத்தில் இந்தியாவின் நலன்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த நியாயமற்ற போட்டி எங்களது ஒப்பந்தங்களைப் பாதிக்காதவாறு நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்றார்.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, நாடுகளுக்கிடையிலான எல்லை தாண்டிய பணப்பரிமாற்ற முறை, பணம் செலுத்துவதற்கான தீர்வு உள்கட்டமைப்பு மற்றும் புதிய முதலீட்டுத் தளங்கள் போன்ற சுதந்திரமான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்தோம். மறு காப்பீட்டு வசதியாக ‘பிரிக்ஸ் தானிய பரிமாற்ற’ திட்டமும் முன்மொழியப்பட்டது. தற்போது வரை இந்த அனைத்துத் துறைகளும் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.”
ரஷ்ய எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்குமாறு ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்கா செலுத்தி வரும் அழுத்தத்தை ‘நியாயமற்றது’ என்று வர்ணித்த லாவ்ரோவ்,”இவை காலனித்துவ அல்லது புதிய காலனித்துவ உத்திகள் என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் அடிப்படையில், இவை பிறரைச் சுரண்டுவதற்கான வழிமுறைகளையே குறிக்கின்றன. இவற்றின் உள்ளார்ந்த செய்தி ‘நீங்கள் குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கக்கூடாது; அதற்குப் பதிலாக, என்னுடைய விலையுயர்ந்த எண்ணெயைத்தான் வாங்க வேண்டும். அமெரிக்காவிலிருந்து விலையுயர்ந்த திரவ இயற்கை எரிவாயுவை வாங்குங்கள்… உலகளாவிய எரிசக்தித் துறையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உலகையே ஆளவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
“இத்தகைய அழுத்தங்களுக்கு அனைவரும் பணிந்துவிடுவதில்லை. இந்தியா இத்தகைய அழுத்தங்களை மீண்டும் மீண்டும் எதிர்த்து வந்துள்ளது. தனது எரிசக்தி விநியோகஸ்தர்களைத் தானே சுயாதீனமாகத் தீர்மானித்துக் கொள்வதாகவும் அது தெரிவித்து வருகிறது. ரஷ்ய எண்ணெயை ஏற்றி வந்த ஒரு கப்பலை ஏற்றுக்கொள்ள இந்தியா மறுத்துவிட்டதாகச் சில செய்திகள் வெளியானபோதிலும், ஒட்டுமொத்தமாக இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவாகவே விளக்கியுள்ளது” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
‘ரஷ்யாவுடன் நீண்டகால ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளுங்கள்; அமெரிக்காவை பொருட்படுத்த வேண்டாம்’
முன்னாள் வணிகத் துறை அதிகாரியும், குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலைவருமான அஜய் ஸ்ரீவஸ்தவா இது குறித்து பேசுகையில், “இந்தியா தனது எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இதில் வளைகுடா நாடுகளிலிருந்து வரும் 50 சதவீத எண்ணெய் விநியோகம் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தடைபட்டுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு நாம் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய 30 சதவீத எண்ணெய் விநியோகம் அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக நின்றுபோயுள்ளது. இது ஏறக்குறைஇய அவசரநிலை போன்ற சூழலை உருவாக்கியுள்ளது.” என்றார்.
“எனவே, அமெரிக்காவின் நியாயமற்ற மிரட்டல்களைப் புறந்தள்ளிவிட்டு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எல்என்ஜி மற்றும் உரங்களை வாங்குவதற்கு 30 முதல் 50 ஆண்டுகள் வரையிலான நீண்டகால ஒப்பந்தத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது.”
அவர் மேலும் கூறுகையில், “நாம் எண்ணெய் வாங்கக்கூடிய பிற ஆதாரங்கள் குறித்து நான் விரிவாக ஆய்வு செய்தேன். நாம் எண்ணெய் வாங்கும் பிற நாடுகள் எதுவும் ரஷ்யாவிற்கு இணையான அளவில் எண்ணெய் வழங்கும் அளவுக்குப் பெரியவை அல்ல. மேற்கு ஆசியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டும் இந்தியாவின் உயிர்நாடிகள்; தற்போது இரண்டுமே முடங்கியுள்ளன. எனவே, நாம் உடனடியாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும், அமெரிக்காவின் அதிருப்தியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படக் கூடாது,” என்றார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளரும் தூதரக ஆய்வாளருமான ஸ்மிதா சர்மா மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளார். அவரது கருத்தின்படி, “நமது வெளியுறவுக் கொள்கை தற்போது எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான சூழல் என்னவென்றால், அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் நிலையில் நாம் துளியளவும் இல்லை என்பதே ஆகும். டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகள், நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும், நமது உற்பத்தித் துறைக்கும் ஒரு பேரிடியாய் அமைந்தன. நமது அந்நியச் செலாவணி கையிருப்பு தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது; சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்தியாவின் மீது நம்பிக்கை இல்லை. இத்தகைய சூழலில், யாரையும் பகைத்துக் கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை. எனவே, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கினாலும், அதனைப் பகிரங்கமாக அறிவிக்க மாட்டார்கள்.”
‘இந்தியா பகிரங்கமாகப் பேசாது’
பட மூலாதாரம், ANI
ரஷ்ய எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்குமாறு பிற நாடுகளை அமெரிக்கா வற்புறுத்துவது முற்றிலும் நியாயமற்ற செயல் என்று செர்ஜி லாவ்ரோவ் பலமுறை வலியுறுத்தியுள்ளார். பெரும்பாலான நாடுகள் தன்னிடமே எண்ணெய் வாங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், நடைமுறையில் இது சாத்தியமில்லை என்று அஜய் கூறும் ஸ்ரீவஸ்தவா, “அமெரிக்கா தனது எண்ணெயை விற்க விரும்புகிறது என்பது உண்மைதான். அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவை கடந்த ஆண்டு இந்தியா இருமடங்காக உயர்த்தியபோதிலும், அந்த அளவு 10 பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டவில்லை. அமெரிக்கா பல நாடுகளுக்கு எண்ணெய் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது, ஆனால் அவர்களிடம் அந்த அளவுக்குப் போதிய இருப்பு இல்லை. அதனால்தான், வெனிசுவேலா, இரான் போன்ற நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள அமெரிக்காவின் முக்கியமான நோக்கம், தனது எண்ணெய் ஆதாரங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே” எனக் கூறுகிறார்.
“அமெரிக்கா இந்தியாவையோ அல்லது வேறு எந்தச் சுதந்திர நாட்டையோ தன்னிடம்தான் எண்ணெய் வாங்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. இரண்டாவது விஷயம் என்னவென்றால், அவர்களிடம் அந்த அளவுக்கு எண்ணெய் கிடையாது. ஐரோப்பா ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்குவதை நிறுத்திவிட்டு அமெரிக்காவிடம் வாங்கப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. பிரிட்டனும் அதே நிலையில் உள்ளது. ஆனால் அமெரிக்காவால் விநியோகம் செய்ய முடியாது. தற்போது கட்டப்பட்டு வரும் அவர்களின் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டி முடிக்க பத்து ஆண்டுகள் ஆகும்… அதுவரை என்ன செய்வது?”
இந்த விவகாரம் குறித்து மேலும் கூறும் அஜய் ஸ்ரீவஸ்தவா, “இந்தியாவுக்குத் தேவைப்படும் போதெல்லாம் ரஷ்யா எப்போதும் துணை நின்றுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1965 போர், 1971 போர், நமது முதல் அணுசக்தி சோதனை எனப் பல தருணங்களில் இது நிரூபணமாகியுள்ளது. ஆனால் அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானின் பக்கமே நின்றது அல்லது இந்தியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஐநா சபையில் அந்தத் தடைகளுக்கு எதிராக ரஷ்யா தனது ‘வீடோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தியதுடன், இந்தியாவுக்குத் தேவையான உதவிகளையும் வழங்கியது.”
இது குறித்து பேசும் ஸ்மிதா சர்மா, “இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை எவ்வித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை; ஏனெனில், அமெரிக்கா இந்தியா மீது செலுத்தி வரும் அழுத்தத்தை அவரும் முழுமையாக உணர்ந்திருக்கிறார். இருதரப்பு உறவுகள் குறித்து, நிச்சயமாக, சிலவிதமான ஐயப்பாடுகள் நிலவுகின்றன. சீனா-இரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ரஷ்யா கொண்டுள்ள உறவுகளின் போக்கு குறித்து இந்தியாவுக்கும் சில கவலைகள் உள்ளது. ஆனால் அவை அவ்வளவு தீவிரமானவை அல்ல.”
“இரான் விஷயத்தைப் போலல்லாமல், ரஷ்ய விவகாரத்தில் இந்தியா சற்று மாறுபட்டுச் செயல்பட்டு ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்தது. யுக்ரேன் மீதான தாக்குதலை இந்தியா வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. அதுமட்டுமின்றி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்பாக கடுமையான பல அழுத்தங்களைச் சந்தித்தபோதிலும், அதை இந்தியா முழுமையாக நிறுத்திவிடவில்லை.”
“டொனால்ட் டிரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்தில், அமெரிக்க அழுத்தத்தால் இந்தியா இரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தியது. இப்போது ரஷ்யாவிடமிருந்து வாங்குவது குறைந்திருந்தாலும், திரைமறைவில் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரித்தது.”
“நாங்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறோம் என்றோ அல்லது நிறுத்திவிட்டோம் என்றோ இந்தியா இதுவரை வெளிப்படையாகச் சொல்லவில்லை. மாறாக ஒருவிதமான தெளிவற்ற நிலையையே பராமரித்து வருகிறோம். ஆனால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்வது ஒரு நல்ல விஷயம். நாம் அளவைக் குறைத்திருக்கலாமே தவிர, முற்றிலுமாக நிறுத்தவில்லை,” என்று ஸ்மிதா சர்மா கூறினார்.
பட மூலாதாரம், IAN FORSYTH/GETTY IMAGES
பிரிக்ஸின் இக்கட்டான நிலை
பிரிக்ஸ் நாணயம் குறித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் முன்மொழிவு பற்றி கருத்து தெரிவித்த ஸ்ரீவஸ்தவா, “சீனா எதை முன்னெடுத்தாலும் அது தானாகவே பிரிக்ஸின் செயல்திட்டமாகிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்க டாலர் மீது நமக்கு தனிப்பட்ட விருப்பம் இல்லாவிட்டாலும், அதை நாம் ஒரு பரிமாற்ற ஊடகமாகவே பார்க்கிறோம். இந்த நேரத்தில் அதற்கு மாற்றாக ஒன்றை உருவாக்குவது எளிதான காரியமல்ல” என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், வியாழக்கிழமை தொடங்கவுள்ள வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நடைபெறுவதாக ஸ்மிதா சர்மா கருதுகிறார்.
அவரது கருத்துப்படி, “பிரிக்ஸ் அமைப்பிற்குள் தற்போது கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. டொனால்ட் டிரம்ப் தற்போது சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளதைக் காரணம் காட்டி, சீனா தனது வெளியுறவு அமைச்சரை இந்த மாநாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என முடிவு செய்துள்ளது; அதற்குப் பதிலாக, தனது தூதரை இதில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது என்றார்.”
ரஷ்யா, சீனா மற்றும் இரான் ஒன்றுபட்டு நிற்பதால், பிரிக்ஸ் அமைப்பிற்குள் இந்தியா தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்தியா புதிய பாதை ஒன்றை வகுத்துக் கொண்டிருந்தாலும், அதன் நிலைப்பாடு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனேயே உள்ளது என்பதை அது தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இரானுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், உறவில் ஒரு கசப்புத்தன்மை ஏற்பட்டுள்ளது நிதர்சனம்,” என்று அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



