Home தேசிய national tamil லக்னௌ அணியிடம் தோற்ற சிஎஸ்கே – இனி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள்...

லக்னௌ அணியிடம் தோற்ற சிஎஸ்கே – இனி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள வாய்ப்புகள் என்ன?

15
0

SOURCE :- BBC NEWS

ஐபிஎல் 2026, சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று (மே 15) நடந்த ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுக்க, அதை 16.4 ஓவர்களில் சேஸ் செய்தது எல்எஸ்ஜி.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு இந்தப் போட்டியில் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ், டாப் 4 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பு இருந்தது. ஆனால், 21 பந்துகள் மீதமிருக்கையில் தோற்றதன் காரணமாக நெட் ரன் ரேட் வெகுவாகக் குறைந்து ஆறாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டிருக்கிறது.

இந்தத் தோல்வியின் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு இருந்த சூப்பர் கிங்ஸின் வாய்ப்பு சற்று குறைந்திருக்கிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் சூப்பர் கிங்ஸ் 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அதனால் அந்த அணியால் அதிகபட்சமாக 16 புள்ளிகளே பெறமுடியும்.

தற்போதைய சூழ்நிலையில் 4 அணிகள் சிஎஸ்கே-வை விட அதிக புள்ளிகள் பெற்றிருக்கின்றன. 12 புள்ளிகள் பெற்றிருக்கும் மற்றொரு அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் 11 போட்டிகளில் தான் விளையாடியிருக்கிறது. அதனால், மற்ற அணிகளுக்கு சூப்பர் கிங்ஸை விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இப்படி கடினமான இடத்துக்கு சூப்பர் கிங்ஸைத் தள்ளிய இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன? இனி டாப் 4 இடத்துக்குள் சிஎஸ்கே நுழையவேண்டும் என்றால் என்ன நடக்க வேண்டும்?

அகீல் ஹொசைன் ஏன் இல்லை?

இந்த சீசனில் ஆடிய 7 போட்டிகளில் 8.45 என்ற எகானமியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அகீல் ஹொசைன்

பட மூலாதாரம், ANI

இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் தோல்விக்கான முக்கியக் காரணம் பந்துவீச்சு. பந்துவீச்சு எனும்போது பௌலர்கள் பந்துவீசிய விதம் மட்டுமல்ல, பந்துவீச்சாளர்கள் தேர்வு, பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது போன்றவையும் முக்கியக் காரணங்கள்.

இந்தப் போட்டிக்கு முன்பாக ஜேமி ஓவர்டன் காயமடைந்தது சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய இழப்பாக அமைந்தது. அவருக்குப் பதிலாக ஸ்பென்சன் ஜான்சனை அணியில் சேர்த்தவர்கள், இன்னொரு மாற்றத்தையும் செய்தார்கள். அகீல் ஹொசைனுக்குப் பதிலாக குர்ஜப்னீத் சிங் இந்தப் போட்டியில் சேர்க்கப்பட்டார்.

மே 10 ஞாயிற்றுக்கிழமை, இவ்விரு அணிகளும் சேப்பாக்கத்தில் மோதியபோது அகீல் ஹொசைன் 4 ஓவர்கள் பந்துவீசி 49 ரன்கள் கொடுத்தார். அந்தப் போட்டியில் அகீல் ஹொசைன் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 16 ரன்கள் எடுக்கப்பட்டன. 1 சிக்ஸரும், 2 பவுண்டரிகளும் அடித்திருந்தார் இங்லிஸ்.

அவர் மீண்டும் ஐந்தாவது ஓவர் பந்துவீச வந்தபோது, அந்த ஓவரில் 3 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசினார் இங்லிஸ். ஒருவேளை இதன் காரணமாக இந்தப் போட்டியில் அகீல் ஹொசைன் சேர்க்கப்படாமல் போயிருக்கலாம்.

ஆனால், லக்னௌவில் நடந்த இந்தப் போட்டியில் சூழ்நிலை வேறாக இருந்திருக்கக்கூடும். பெரிய பவுண்டரி எல்லைகள் கொண்ட அந்த மைதானத்தில் அகீல் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தியிருப்பார். ஆனால், அந்த ஒரு செயல்பாட்டுக்குப் பிறகு உடனே மாற்றம் நடந்துவிட்டது.

போட்டிக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் இதுபற்றிப் பதிவிட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், “டீம் தேர்வில் செய்யும் தவறுகளால் சிஎஸ்கே தோற்பது இந்த சீசனில் வாடிக்கையாகிவருகிறது. இந்த ஆடுகளத்தில் அகீல் ஹொசைன் சேர்க்கப்படாததைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இன்னொரு போட்டியில், இன்னொரு வாய்ப்பு தவறவிடப்பட்டிருக்கிறது.” என்று தன் கருத்தைத் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் பவர்பிளேவிலேயே 86 ரன்கள் குவித்தது எல்எஸ்ஜி. போட்டி அங்கேயே சூப்பர் கிங்ஸ் கையை விட்டு விலகிவிட்டது. அகீல் இருந்திருந்தால் மிட்செல் மார்ஷால் அப்படி ஆதிக்க செயல்பாட்டைக் கொடுத்திருக்க முடியாது என்பதுதான் பத்ரிநாத் உள்பட பெரும்பாலான வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

முதல் ஓவருக்குப் பின் உடனடி மாற்றம்

முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி, அதன்பிறகு 12வது ஓவரைத்தான் வீசினார். அதில், அவர் இங்லிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்

பட மூலாதாரம், ANI

இன்னொருபக்கம், பவர்பிளேவில் ருதுராஜ் கெய்க்வாட் பௌலர்களை சரியாகப் பயன்படுத்தினாரா என்ற கேள்வியும் எழுகிறது. முகேஷ் சவுத்ரி வீசிய இந்தப் போட்டியின் முதல் ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டன. அதில் 5 ரன்கள் லெக் பை மூலம் வந்தவை.

அதனால், உடனடியாக மூன்றாவது ஓவருக்கு அன்ஷுல் கம்போஜைக் கொண்டுவந்தார் ருதுராஜ். முகேஷ் சவுத்ரி அதன்பின் பவர்பிளேவில் பயன்படுத்தப்படவே இல்லை. அதேசமயம், அன்ஷுல் கம்போஜ் வீசிய ஆட்டத்தின் 5வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் விளாசினார் மிட்செல் மார்ஷ். ஆட்டம் அங்கிருந்து தான் மாறத் தொடங்கியது.

முகேஷ் சவுத்ரி இந்த சீசனில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். பவர்பிளேவில் நல்ல தொடக்கங்கள் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த ஒரு ஓவர் சரியாகப் போகவில்லை என்பதற்காக உடனடியாக அவரை மாற்றினார் கெய்க்வாட்.

அதன்பிறகு 12வது ஓவரில் தான் அவர் கையில் பந்தைக் கொடுத்தார். அதுவரை ஆதிக்கம் செலுத்தி 135 ரன்கள் எடுத்த முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை உடைத்ததே முகேஷ் தான். ஆனால், அந்த ஒரு ஓவர் அவர் மறுபடியும் பந்துவீசுவதைத் தாமதப்படுத்திவிட்டது.

ருதுராஜ் இப்படி ஒரே ஓவரில் ஸ்பெல்லை மாற்றுவது இது முதல் முறையல்ல. கடந்த போட்டியில் ஒரே ஓவரில் அகீல் ஹொசைன் ஸ்பெல்லை மாற்றினார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியிலும் கூட அதையே செய்தார். 4 நல்ல பந்துகள் வீசிவிட்டு, 2 பந்துகளில் பேட்டர்கள் நல்ல ஷாட்கள் அடித்து பவுண்டரியோ, சிக்ஸரோ வந்துவிட்டாலும் கூட ஸ்பெல் மாறிவிடுகிறது.

பிளேயிங் லெவன் மாற்றம் எப்படி நிலைத்தன்மையை குலைக்குமோ, அதேபோல் இதுவும் நிலைத்தன்மையை பாதிக்கும். நம்பத்தகுந்த பௌலர்கள் ஒரு ஓவருக்குப் பிறகு நல்ல முறையில் மீண்டு வருவார்கள். அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ககிஸோ ரபாடாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 5 பவுண்டரிகள் அடித்தார் விராட் கோலி. ஆனால், மறுபடியும் ரபாடாவுக்கு அடுத்த ஓவரை ஷுப்மன் கில் கொடுக்க, அந்த ஓவரிலேயே கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றினார் ரபாடா.

ஆனால், கெய்க்வாட் அப்படி யோசிப்பதில்லை. ரபாடாவுக்கும் முகேஷ் சவுத்ரிக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது என்றாலும், முகேஷ் சவுத்ரியும் சூப்பர் கிங்ஸுக்கு சீரான நல்ல செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது இந்த மாற்றங்கள் அணியின் நிலைத்தன்மையை மட்டுமல்லாமல், வீரர்களின் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அமைந்துவிடும்.

பந்துவீச்சாளர்களின் லென்த்

பேக் ஆஃப் லென்த் பந்துகளை எளிமையாகக் கையாண்டு பவர்பிளேவிலேயே அரைசதத்தை நிறைவு செய்தார் மிட்செல் மார்ஷ்

பட மூலாதாரம், ANI

நேற்றைய போட்டியில் சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் வீசிய லென்த் லக்னௌ பேட்டர்களின் அதிரடிக்கு பெருமளவு வழிவகுத்தது. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியின்போது பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு, சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் வீசிய லென்த் லக்னௌ பேட்டர்களுக்கு சாதகமாக அமைந்தது என்று குறிப்பிட்டார்.

சிஎஸ்கே பௌலர்கள் பெரும்பாலும் ஷார்ட் மற்றும் பேக் ஆஃப் லென்த்தில் பிட்ச் செய்தனர். இது ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்த இரண்டு பேட்டர்களுக்கும் சாதகமாக அமைந்தது. மிட்செல் மார்ஷ், ஜாஷ் இங்லிஸ் இருவருமே மேற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள்.

மேற்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உலக அளவில் அதீத பவுன்சுக்குப் பெயர்போனவை. அப்படியான ஆடுகளங்களில் ஆடி வளர்ந்தவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையிலேயே பந்துவீசினார்கள் சிஎஸ்கே பௌலர்கள். அதை மார்ஷ், இங்லிஸ் இருவரும் எளிதாகக் கையாண்டு ரன் குவித்துவிட்டனர்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, இந்தப் போட்டியின் பவர்பிளேவில் 20 பந்துகளை சிஎஸ்கே பௌலர்கள் ‘பேக் ஆஃப் லென்த்’ வீசினார்கள். அந்த 20 பந்துகளில் எல்எஸ்ஜி பேட்டர்கள் 48 ரன்கள் எடுத்தனர்.

அதேசமயம், லக்னௌ பௌலர்கள் பவர்பிளேவில் 10 பந்துகளை அந்த லென்த்தில் வீசினார்கள். சிஎஸ்கே பேட்டிங் யூனிட்டின் டாப் 4 வீரர்கள் அனைவரும் இந்தியர்களாக இருக்க, அவர்களால் அதை சமாளிக்க முடியவில்லை. அந்த 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே.

பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி அந்த லென்த் சூப்பர் கிங்ஸுக்கு பாதகமாகவே அமைந்தது.

பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா?

சிஎஸ்கே தற்போது 12 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியால் அதிகபட்சம் 16 புள்ளிகளே பெற முடியும். தற்போதைய சூழ்நிலையில் 6 அணிகள் 12 புள்ளிகளோ அதற்கு மேலோ பெற்றிருக்கும் நிலையில், பெரும்பாலும் 16 புள்ளிகள் இருந்தால் தான் பிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்த முடியும்.

அதன் காரணமாக, சூப்பர் கிங்ஸ் கட்டாயம் மீதமிருக்கும் 2 போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை வீழ்த்தியாக வேண்டும். அதேசமயம், 16 புள்ளிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போதுமானது என்றும் சொல்ல முடியாது. 5 அணிகள் 16 புள்ளிகளோ, அதற்கு மேலோ பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதனால், மேலும், சில முடிவுகள் சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைய வேண்டும்.

ஏற்கெனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் டைட்டன்ஸ் அணிகள் 16 புள்ளிகள் பெற்றிருக்கின்றன. அந்த அணிகளின் நெட் ரன்ரேட்டும் சிறப்பாக இருக்கின்றன.

பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும்

பட மூலாதாரம், ANI

மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 14 புள்ளிகளோடு இருப்பதால், அவர்களின் ரன்ரேட்டும் சிறப்பாக இருப்பதால், ஒரு வெற்றி கூட அந்த அணி சூப்பர் கிங்ஸுக்கு மேலே முடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும். பஞ்சாப் கிங்ஸ் இரண்டு போட்டிகளிலும் வென்றால் 17 புள்ளிகள் பெற்றுவிடும். அதனால், அவர்களையும் சூப்பர் கிங்ஸால் முந்த முடியாது.

11 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், தங்களின் கடைசி 3 போட்டிகளில் புள்ளிப் பட்டியலில் தங்களுக்குக் கீழே இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளைச் சந்திக்கிறது. அவர்களுக்கு மூன்றில் இரண்டு வெற்றிகள் கூடப் போதுமானதாக இருக்கும்.

இப்படியொரு சூழ்நிலையில் பல்வேறு விஷயங்கள் சிஎஸ்கே-வுக்கு சாதகமாக நடக்க வேண்டும். அதில் மிகவும் எளிமையான ஒரு சாத்தியக்கூறு இது: சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தங்களின் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

ஏனெனில், சன்ரைசர்ஸ் அணி தங்களின் 2 போட்டிகளில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு எதிராக ஆடுகிறது. மேற்சொன்னபடி நடந்தால், சன்ரைசர்ஸ் 14 புள்ளிகளோடு சீசனை முடிக்கும். ஆர்சிபி அணி பஞ்சாப்பை வீழ்த்தும்போது, பஞ்சாப் கிங்ஸால் அதிகபட்சமாக 15 புள்ளிகள் தான் பெறமுடியும். அது சிஎஸ்கே டாப் 4 இடத்தில் முடிப்பதை உறுதி செய்யும். போக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முடிவுகள் பற்றிகூட கவலைப்படத் தேவையில்லை.

ஒருவேளை சிஎஸ்கே சன்ரைசர்ஸை வீழ்த்தி, அதன்பிறகு சன்ரைசர்ஸ் ஆர்சிபி-யை வீழ்த்தினால், நிலை சற்று கடினமாகும். அங்கே ராஜஸ்தான் ராயல்ஸின் முடிவுகள் முக்கியத்துவம் பெறும். ராயல்ஸும் 2 வெற்றிகள் பெற்றுவிட்டால், நெட் ரன்ரேட் முக்கியத்துவம் பெறும். அது சூப்பர் கிங்ஸுக்கு பாதகமாக அமையலாம்.

சூப்பர் கிங்ஸ் தங்களின் கடைசி போட்டியை ஆடிய பிறகு தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்களின் கடைசிப் போட்டிகளை ஆடுகின்றன. அதனால், நெட் ரன்ரேட்டை எந்த அளவுக்கு மேம்ப்படுத்த வேண்டும் என்ற முழுமையான புரிதல் இல்லாமல் தான் சிஎஸ்கே ஆடவேண்டியிருக்கும். இதுவும் அவர்களுக்குப் பாதகமான விஷயம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU