Home தேசிய national tamil பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பயணிக்கும் டிரம்பின் தூதர்கள் – இரான் கூறியது என்ன?

பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பயணிக்கும் டிரம்பின் தூதர்கள் – இரான் கூறியது என்ன?

30
0

SOURCE :- BBC NEWS

ஜாரெட் குஷ்னர் (இடது) மற்றும் ஸ்டீவ் விட்காஃப்

பட மூலாதாரம், Reuters

இரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்காக டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் சனிக்கிழமை (ஏப்ரல் 25) பாகிஸ்தான் செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

“இரானியர்கள் பேச்சுவார்த்தையை விரும்புகிறார்கள்,” என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் கூறினார். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அங்கு செல்ல “தயார் நிலையில்” இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், ‘தானும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் வெள்ளிக்கிழமை மாலை இஸ்லாமாபாத் வந்தடைந்ததாகவும், அராக்சி பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திப்பார்’ என்றும் கூறினார்.

“இரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை. இரானின் கருத்துகள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், “ஒரு நல்ல ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இரானுக்கு உள்ளது” என்றும், “அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அணு ஆயுதத்தைக் கைவிடுவது மற்றும் அதை அர்த்தமுள்ள மற்றும் சரிபார்க்கக்கூடிய வழிகளில் செய்வதுதான்” என்றும் வலியுறுத்தினார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ‘ஒரு முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையான ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்கா தொடர்ந்து முடக்கி வருவது சர்வதேச பிரச்னையாக வளர்ந்து வருகிறது’ என்றும் ஹெக்செத் எச்சரித்தார்.

டிரம்பின் முரண்பட்ட செய்திகளும் வெள்ளை மாளிகையின் முயற்சிகளும்

இரான், அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று இரான் மீது தாக்குதலைத் தொடங்கின, அதைத் தொடர்ந்து இரான் ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியது. போரிடும் இரு தரப்பினரின் இந்த நடவடிக்கைகள் உலகெங்கிலும் எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்துள்ளன.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய லெவிட், “இரானியர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக விட்காஃப் மற்றும் குஷ்னரை இஸ்லாமாபாத்திற்கு அனுப்ப டிரம்ப் முடிவு செய்துள்ளதாகக்” கூறினார். “அமெரிக்க அதிபர் எப்போதும் ராஜதந்திர முயற்சிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கத் தயாராக இருக்கிறார்” என்றும் அவர் கூறினார்.

“கடந்த இரண்டு நாட்களில் இரானிய தரப்பிலிருந்து சில முன்னேற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம்” என லெவிட் தெரிவித்தார்.

இதற்கிடையில், இஸ்லாமாபாத்தில் உள்ள இரானிய தூதரகம், அராக்சி இருதரப்பு விவகாரங்களை ஆய்வு செய்யவும் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா எந்த அழுத்தத்தையும் உணரவில்லை என்று டிரம்பும் ஹெக்செத்தும் இந்த வாரம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த வார இறுதியில் அமெரிக்க-இரான் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்ற செய்தி, நிர்வாகத்தின் பகிரங்க அறிவிப்புகளுக்கும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைக் கண்டறிய வெள்ளை மாளிகையின் திரைமறைவு முயற்சிக்கும் இடையிலான இடைவெளியை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

டிரம்பின் முரண்பட்ட செய்திகள் மற்றும் இரானின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டிற்கு மத்தியிலும், இரு தரப்பும் முன்னேற்றத்திற்கான பாதையைத் தேடுகின்றன என்பதை இது உணர்த்துகிறது.

‘ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க வாய்ப்பில்லை’

இரான், அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானில் இரு நாடுகளும் இந்த விவகாரத்தில் எவ்வளவு முன்னேற்றம் காண முடியும் என்பது இப்போது எழுந்துள்ள கேள்வி. இந்த மாத தொடக்கத்தில் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தையில் ஜே.டி. வான்ஸ் அமெரிக்க தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார், ஆனால் இந்த வார இறுதி பேச்சுவார்த்தைக்கு அவர் செல்வது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

வான்ஸ் வராத பட்சத்தில், இரு நாடுகளும் ஒரு பெரிய திருப்புமுனையை எதிர்பார்க்கவில்லை என்று பொருள்படலாம். ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்பது அமெரிக்காவும் இரானும் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் ஆர்வமாக இருப்பதைக் காட்டுகிறது.

புதன்கிழமை ஏப்ரல் 22, இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர்நிறுத்தத்தின் அப்பட்டமான மீறல்கள் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க வாய்ப்பில்லை” என்று எச்சரித்தார்.

இரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை, உலகப் பொருளாதாரத்தை ‘பிணைக் கைதியாக’ வைத்திருப்பதற்குச் சமம் என்றும், ‘அனைத்து முனைகளிலும்’ இஸ்ரேல் ‘போர் வெறியாட்டத்தை’ வெளிப்படுத்துவதும் இந்த ‘மீறல்களில்’ அடங்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், “அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தயாராக உள்ளது, ஆனால் உறுதிமொழிகளை மீறுதல், முற்றுகை மற்றும் அச்சுறுத்தல்கள் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கிய தடைகளாக உள்ளன” என்றார்.

இந்த வார தொடக்கத்தில், புதன்கிழமை முடியவிருந்த இரானுடனான போர்நிறுத்தத்தை, பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு வசதியாக காலவரையறையின்றி நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அன்று அமெரிக்க கருவூலத் துறை, ஒரு முக்கிய சீன சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கப்பல்கள், அவற்றின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 40 பிற இலக்குகள் மீது தடைகளை விதித்துள்ளது. “இரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்தை” சீர்குலைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளதாக கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலும் லெபனானில் உள்ள இரான் ஆதரவு ஹெஸ்பொலா ராணுவக் குழுவும் போர்நிறுத்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டன. இஸ்ரேல்- லெபனான் போர்நிறுத்தத்தை மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பதாக டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU