Home தேசிய national tamil ‘ஸ்டாலின் vs விஜய் போர்’: விஜய் தனது பேச்சு மூலம் தேர்தல் களத்தில் என்ன சாதிக்க...

‘ஸ்டாலின் vs விஜய் போர்’: விஜய் தனது பேச்சு மூலம் தேர்தல் களத்தில் என்ன சாதிக்க நினைக்கிறார்?

13
0

SOURCE :- BBC NEWS

மு.க. ஸ்டாலின், விஜய், தமிழ்நாடு, திமுக, தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், TVK

  • 6 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை தனக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையிலான போராக குறிப்பிடுகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய். அவரது இந்த உத்தி தேர்தலில் பலனளிக்குமா?

எதிர்வரும் தேர்தலில் த.வெ.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி எனக் கூறிவந்த விஜய், இப்போது போட்டியை இரு தலைவர்களுக்கு இடையிலான போட்டியாக குறிப்பிட்டுப் பேசியிருப்பது கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) நிர்வாகிகள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேச ஆரம்பித்த விஜய், தனது பேச்சின் துவக்கத்தில் “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது” என்று தங்கள் கட்சி நிர்வாகிகளை வாக்குறுதி எடுக்கச் செய்தார். அதன் பிறகு, ஒரு குட்டிக் கதையுடன் தனது பேச்சைத் துவங்கினார்.

ஒரு பெரிய ஊரின் முக்கிய இடத்தில் சீறிக்கொண்டு நின்ற காளையை, யாரும் அடக்க முடியாத நிலையில், புதிதாக வரும் இளைஞன் புல்லுக்கட்டு ஒன்றை அளித்து அமைதிப்படுத்தியதாக கதை சொன்ன விஜய், ஒரு பிரச்னையை எப்படி அணுக வேண்டுமோ, அப்படி அணுக வேண்டுமென்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, தி.மு.க. ஆட்சியின் மீது விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார்.

‘இந்தத் தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலினுக்குமான போர்’

மு.க. ஸ்டாலின், விஜய், தமிழ்நாடு, திமுக, தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், @TVKPartyHQ

“மக்களை நேசிக்கும் நல்ல தலைமை இல்லாததால் இத்தனை வருடமாக வேறு வழியில்லாமல் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு சரியான நேரத்தில் வந்த வெகுஜன இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம். உங்களுக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். நம் ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக வந்து நம்முடைய சொந்தங்கள் எல்லோரையும் நேரடியாகச் சந்திப்பேன். வரவிருப்பது சட்டமன்றத் தேர்தல். ஆனால், இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்குமான தேர்தல் என்கிறார் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டிற்கும் என்டிஏவுக்குமான தேர்தல் என்கிறார். இது என்ன நாடாளுமன்றத் தேர்தலா, பிரதமர் பதவிக்கு ஏதும் போட்டியிடுகிறீர்களா?” எனக் கேள்வியெழுப்பினார் விஜய்.

“எந்தத் தேர்தலை எப்படி அணுக வேண்டுமென தமிழக மக்களுக்குத் தெரியும். உண்மையில் இந்தத் தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்குமான போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒழுங்காக நிர்வாகம் செய்யாத தி.மு.க. அரசுக்குமான போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாகச் சொன்னால், விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போர். தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு. தூயசக்தி டிவிகேவுக்கும் தீயசக்தி டிஎம்கேவுக்கும்தான் இந்தப் போர்” என்று குறிப்பிட்டார்.

கட்சியைத் துவங்கியதிலிருந்தே தமிழக அரசியல் களத்தில் தி.மு.கவுக்கும் த.வெ.கவுக்கும்தான் போட்டி என தொடர்ந்து பேசிவந்த விஜய் தனது வேலூர் உரையில், இந்தத் தேர்தல் தனக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போர் எனக் குறிப்பிட்டார்.

‘எம்.ஜி.ஆர் பாணியிலான பிரசாரம்’

மு.க. ஸ்டாலின், விஜய், தமிழ்நாடு, திமுக, தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், @TVKPartyHQ

பிரசாரத்தை எம்.ஜி.ஆரைப் போல கொண்டுசெல்ல விஜய் நினைத்தாலும், சில வித்தியாசங்கள் இருக்கின்றன என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். “எப்போதுமே எம்.ஜி.ஆர். கருணாநிதி தீய சக்தி என்றுதான் கூறிவந்திருக்கிறார். எனவே, தேர்தல்கள் என்பவை அவருக்கும் கலைஞருக்குமான போட்டிதான். விஜய் பயணிப்பதும் அதே திசைதான். ஆனால், விஜய்யைப் பொருத்தவரை தி.மு.க. ஒரு தீயசக்தி எனக் குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆர். தி.மு.கவை தீயசக்தி எனக் குறிப்பிட்டதில்லை. ஏனென்றால், அவர்தான் அந்தக் கட்சியின் பொருளாளராக இருந்தவர்” என்கிறார் ஷ்யாம்.

தேர்தலை இரு நபர்களுக்கு இடையிலான மோதலாக சித்தரிப்பதை முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா செய்திருந்தாலும் அதற்கும் இப்போது விஜய் முன்வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன். “2014-ஆம் ஆண்டில் “மோடியா இந்த லேடியா” என்ற பிரசாரம் தமிழ்நாடு அரசியலில் ஒரு முன்மாதிரியாகத் தோன்றினாலும், இன்றைய விஜய் vs ஸ்டாலின் உதாரணத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், அப்போது ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அந்தத் தேர்தலில் பா.ஜ.க. மோதியை தனது பிராண்டாக முன்னிறுத்தியது. ஆகவே அந்த பிராண்டிற்கு எதிராக ஜெயலலிதா தன்னை முன்னிறுத்தினார்” என்கிறார் இளங்கோவன்.

கரூர் சம்பவம் தொடர்பான விஜய் கருத்து

மு.க. ஸ்டாலின், விஜய், தமிழ்நாடு, திமுக, தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், Getty Images

விஜய்யின் வேலூர் பேச்சில் வேறு சில அம்சங்களும் கவனிக்கத்தக்கதாக இருந்தன. அதாவது கரூர் நிகழ்வில் தன் மீது முதல்வர் குற்றம்சாட்டியதாகவும் தானும் தமிழக மக்களும் ஒன்று என்பதைப் போலவும் குறிப்பிட்டார் விஜய்.

“நமக்கு எதிராக அவ்வளவு அவதூறுகளைப் பரப்புகிறார்கள். என் மீது அவதூறு பரப்புவது மக்கள் மீது அவதூறு பரப்புவது மாதிரி. எனக்கு அரசியல் தெரியாதுன்னு சொன்னா மக்களுக்கு அரசியல் தெரியலைன்னு சொல்ற மாதிரி. என்னை அசிங்கமாகப் பேசினா, அது மக்களைப் பேசுற மாதிரி. எனக்கு எதிராகச் செய்யும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்யும் செயல். இந்த விஜய்யும் மக்களும் வேறுவேறு இல்லை. ரத்தமும் சதையும் போல, உடலும் உயிரும்போல.”

“எனக்குப் புதிய நண்பர் கிடைத்திருக்கிறார். முதல்வர் அவர்கள்தான் அந்த நண்பர். நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, எல்லோருமே நண்பர்கள்தான் எனச் சொன்னார். நாங்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் என்றால், கரூர் விஷயத்தில் எதற்காக என் மேல் பழியை தூக்கி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்று இருந்தா அப்படி பேசியிருப்பீங்களா?” என்று கேள்வியெழுப்பினார் விஜய்.

இது மிகத் தவறான போக்கு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன். “நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாகச் சொல்கிறார் விஜய். இந்தச் சம்பவம் நடந்தவுடன் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கைகளிலும் பேச்சுகளிலும் விஜய் மீது குற்றம்சாட்டியதாகத் தெரியவில்லை. எந்த ஒரு கட்சித் தலைவரும் தங்களுடைய தொண்டர்கள் மரணமடைய வேண்டுமென நினைக்க மாட்டார்கள் என்று தான் குறிப்பிட்டார்.” என்கிறார் இளங்கோவன்.

தொடர்ந்து பேசிய அவர், “பிறகு விஜய்யின் கட்சியைச் சேர்ந்தவர்கள் சதிக் கோட்பாடுகளை கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர். அதற்குப் பிறகுதான் அரசு, அதிகாரிகளை வைத்து விளக்கமளித்தது. ஆனால், விஜய் இப்படிச் சொல்வது ஆச்சரியமளிக்கிறது. இது பொய் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இது பலனளிக்குமென அவர் நம்புகிறார். காரணம், களத்தில் பல எதிரிகள் இருக்கும் நிலையில், அரசியல்மயப்படுத்தப்படாத அவருடைய ரசிகர்களை ஓரிடத்தில் குவிக்க நினைக்கிறார்” என்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், தேர்தலில் இது தனது தொண்டர்களை ஒருமுகப்படுத்த உதவும் என விஜய் கருதுவதாகக் கூறுகிறார் ஷ்யாம். “விஜய் பேசுவது சரியான கூற்று அல்ல. அது ஒரு தேர்தல் உத்தி. இந்த கருத்தை முன்வைப்பதன் மூலம் அவர் தி.மு.கவுக்கு எதிரான ஓட்டுகளை தன் பக்கம் குவிக்க நினைக்கிறார்” என்கிறார் ஷ்யாம்.

திருப்பரங்குன்றம் போன்ற சில விவகாரங்களில் தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதது விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் சில கருத்துகளையும் வேலூர் பேச்சில் தெரிவித்தார் விஜய்.

“எதையாவது செய்து ஓட்டு வாங்கலாம் என சில பேர் இருக்கிறார்கள். அவர்களைப் போல எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் எண்ணமே இல்லை. சில அரசியல் கட்சிகளும் சில அரசியல் தலைவர்களும் சில நேரங்களில் அமைதியாக இருந்தாலே போதும். ஒரு பிரச்னையும் வராது” என்றார் விஜய்.

தவெக தரப்பு விளக்கம் என்ன?

கரூர் சம்பவத்திற்கு தான்தான் காரணம் என முதலமைச்சர் கூறியதாக விஜய் பேசியது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “விஜய் லேட்டாக வந்ததுதான் இந்தச் சம்பவத்திற்கு காரணம் என முதலமைச்சர் சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். அது பொய்யான குற்றச்சாட்டு. அதைத்தான் விஜய் குறிப்பிட்டார்.” என்று கூறினார்.

“காவல்துறைக்கு த.வெ.க. சார்பில் கொடுத்த கடிதத்தில் 4 மணி முதல் 7 மணிவரை தான் நேரம் கேட்டிருந்தோம். ஆகவே விஜய் தாமதமாக வந்தார், அதுதான் காரணம் எனக் குறிப்பிட்டது பொய்யான குற்றச்சாட்டு” என்று அவர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU