SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 9, திங்களன்று, அமெரிக்காவும் வங்கதேசமும் பரஸ்பர வரிகள் தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
வங்கதேசத்தின் சார்பில் வர்த்தக ஆலோசகர் ஷேக் பஷிருதீன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலூர் ரஹ்மான் ஆகியோரும், அமெரிக்காவின் சார்பில் வர்த்தகப் பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோரும் இந்த ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சுமார் ஒன்பது மாதங்கள் நீடித்தன.
ஒப்பந்தத்தின்படி, வங்கதேசம் மீதான பரஸ்பர வரியை 19 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வரி இதற்கு முன்பு 37 சதவீதமாக இருந்தது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இது தவிர, அமெரிக்காவின் பருத்தி மற்றும் செயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் வங்கதேசத்தின் சில சிறப்பு ஜவுளிகள் மற்றும் ஆடைகளுக்கு அமெரிக்க சந்தையில் பூஜ்ஜிய வரி விகிதத்தில் அனுமதி வழங்கும் ஒரு வழிமுறையை உருவாக்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இரு நாடுகளும் கூறியது என்ன?
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸின் தலைமையைப் பாராட்டிய ஜேமிசன் கிரீர், வங்கதேசக் குழுவின் “அற்புதமான கடின உழைப்பையும்” புகழ்ந்தார்.
“இந்த ஒப்பந்தம் வங்கதேசத்தை அமெரிக்க வர்த்தகக் கொள்கைக்கு ஏற்ப கொண்டு வரும்” என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, வங்கதேசத்தின் வர்த்தக ஆலோசகர் ஷேக் பஷிருதீன் கூறுகையில், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை ஒரு புதிய வரலாற்று நிலைக்குக் கொண்டு செல்லும் என்றார்.
“இது வங்கதேசம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் சந்தைகளில் அதிக வாய்ப்புகளை வழங்கும்,” என்று அவர் கூறினார்.
“வரி குறைப்பு நமது ஏற்றுமதியாளர்களுக்கு பயனளிக்கும். மேலும் அமெரிக்க மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் சிறப்பு ஜவுளிகளுக்கான பூஜ்ஜிய வரி விகிதம் நமது ஆடைத் துறையை மேலும் வலுப்படுத்தும்” என்று தலைமைப் பேச்சுவார்த்தையாளரான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலூர் ரஹ்மான் கூறினார்.
இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
பட மூலாதாரம், Getty Images
ஒப்பந்தம் கையெழுத்தான சில மணிநேரங்களிலேயே, இந்திய ஜவுளி மற்றும் பருத்தி நிறுவனங்களின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ஆடை சந்தையில் இந்தியாவின் நிலை பலவீனமடையக்கூடும் என்ற கவலைகள் எழுப்பப்படுகின்றன.
அமெரிக்க-வங்கதேச வரி ஒப்பந்தத்தின் தாக்கம் மற்றும் அமெரிக்க பருத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்ற முக்கிய நிபந்தனை குறித்து முதலீட்டாளர்களின் கவலை காரணமாக, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பல ஜவுளி நிறுவனங்களின் பங்குகள் செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆடை ஏற்றுமதியில் இந்தியாவும் வங்கதேசமும் நீண்டகாலமாகப் போட்டியிட்டு வருகின்றன.
அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அதன் சில நிபந்தனைகள் இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தம், வங்கதேசத்தை இந்திய மூலப்பொருட்களிலிருந்து படிப்படியாக விலகி அமெரிக்க பருத்தியை நோக்கி நகர்த்தக் கூடும் என்ற கவலை உள்ளது.
இது இந்தியாவின் விவசாயிகளையும் நெசவு தொழிலையும் நேரடியாகப் பாதிக்கலாம்.
பூஜ்ஜிய வரிச் சலுகை வங்கதேச தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் மலிவாக்கும் என்பதால், இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் போட்டியிடுவது கடினமாகிவிடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் தலைவர் பவன் கெடா மோதி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மாஸ்டர் ஸ்ட்ரோக் ராஜா செய்த செயல் இந்தியாவின் ஜவுளித் தொழில் மற்றும் பருத்தி விவசாயிகள் ஆகிய இரு தரப்பையும் அழித்துவிட்டது. அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான புதிய ‘பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம்’ மேலோட்டமாக பார்க்கும்போது இந்தியாவில் உள்ளதைப் போலவே தெரிகிறது (19% அடிப்படை வரி), ஆனால் அதன் விவரங்கள் முழு ஆட்டத்தையும் மாற்றுகின்றன” என்று பதிவிட்டார்.
அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தில் வங்கதேசத்திற்கு “பூஜ்ஜிய வரி” விதியை அமெரிக்கா சேர்த்துள்ளது, ஆனால் வங்கதேசம் அமெரிக்க பருத்தி மற்றும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது என்று கெடா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இது ஏன் இந்தியாவிற்கு ஆபத்தானது?
ஏனென்றால், இந்திய ஜவுளித்துறை இனி போட்டித்தன்மையற்றதாக மாறிவிடும். இந்தியா 18 சதவீத வரியுடன் முடங்கிவிடும். மறுபுறம், வங்கதேசம் அமெரிக்க மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி பூஜ்ஜிய சதவீத வரியில் அமெரிக்க சந்தையை அணுக முடியும். இது குறைந்த லாபம் கொண்ட ஒரு தொழில்துறையில் மிகப்பெரிய விலை வித்தியாசத்தை உருவாக்குகிறது”என்றும்,
“இந்தியாவின் பருத்தி விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்படக் கூடும். ஏனெனில், வங்கதேசத்திற்கு நூல் வழங்கும் முக்கிய நாடாக இந்தியா உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய நூலைக் கைவிட்டு அமெரிக்க பருத்தியைத் தேர்ந்தெடுக்க வங்கதேசத்தை தூண்டுகிறது” என்றும் அப்பதிவு கூறுகிறது.
இந்தியா-வங்கதேச உறவுகளில் தாக்கம் ஏற்படுமா?
பட மூலாதாரம், ANI
அறிக்கைகளின்படி, 2024-2025 ஆம் ஆண்டில் இந்தியா 1.47 பில்லியன் டாலர் (570 மில்லியன் கிலோ) பருத்தி நூலை வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்தது.
இந்திய நூலை வாங்கும் மிகப்பெரிய நாடாக வங்கதேசம் உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா 1.2-1.4 மில்லியன் பேல் பருத்தியை வங்கதேசத்திற்கு அனுப்பியது.
வங்கதேசத்தின் ஜவுளி ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதமும், இந்தியாவின் பருத்தி ஆடை ஏற்றுமதியில் 26 சதவீதமும் அமெரிக்காவிற்குச் செல்கின்றன.
‘தி இந்து’ நாளிதழிடம் பேசிய இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சந்திரீமா சாட்டர்ஜி, “வங்கதேசம் இனி அமெரிக்க பருத்தியை வாங்கி அதன் ஜவுளி ஆலைகளில் நூல் தயாரிக்க முடியும் என்பதால், அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான ஒப்பந்தம் இந்திய பருத்தி நூல் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
அப்படியென்றால், இதனால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவுகள் பாதிப்படையுமா?
புதுடெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வு மற்றும் வெளியுறவுக் கொள்கை பிரிவு துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி. பந்த் இது குறித்து விளக்குகிறார்.
“இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா தனது மூலப்பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறது. இதனால் வங்கதேசத்திற்கு கிடைக்கப்போகும் நன்மைகள் மற்றும் அமெரிக்காவின் அணுகுமுறை மிகவும் பரிவர்த்தனை மையமானது என்பதைக் கருத்தில் கொண்டால் வங்கதேசம் அந்த வழியைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது கடினமாகும். இது டிரம்ப் நிர்வாகத்திற்கு இந்த ஒப்பந்தத்தின் வெற்றியை அளவிடும் ஒரு முக்கியக் குறியீடாகவும் மாறும். அதே நேரத்தில் இது இந்தியாவையும் பாதிக்கும்.” என்று அவர் குறிப்பிட்டார்.
முகமது யூனுஸ் அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இந்தியா-வங்கதேச உறவு ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் பந்த் கூறுகிறார்.
“தேர்தலுக்குப் பிறகு உறவுகள் சீரானால், வர்த்தக வீழ்ச்சியைச் சமாளிக்க இந்தியா மற்றும் வங்கதேசத்திடம் பல வழிகள் உள்ளன, குறிப்பாக அது ஒரு குறிப்பிட்ட துறை அல்லது பிராந்தியத்தில் இருந்தால் மட்டுமே. அரசியல் சூழல் மாறினால் இந்த வழிகள் திறந்தே இருக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், இது நிச்சயமாக ஒரு சிக்கலாகவே பார்க்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா- வங்கதேச ஒப்பந்தம் இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் நிச்சயமாக இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிஸ்வஜித் தார் கூறுகிறார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி அவர் கூறுகையில், “வங்கதேசத்தில் அதிக வரி விதிக்கப்படுவதால் நமக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும், குறிப்பாக ஆடை விவகாரத்தில் நமக்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா பயனடையும் என்றும் நம்மிடையே கருத்துகள் இருந்தன. ஆனால் இனி அதுபோன்ற நிலை இல்லை, ஏனென்றால் வங்கதேசத்தின் மீதான வரி ஒரு சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டிருந்தாலும், அவர்களது ஆடைகள் அமெரிக்காவிற்குள் வரி இல்லாமல் நுழைவது இந்தியாவைப் பாதிக்கும்” என்றார்.
பேராசிரியர் தார் தொடர்ந்து கூறுகையில், “இந்தியா விற்பனை செய்யும் நூலுக்கு வங்கதேசம் ஒரு மிகப்பெரிய சந்தையாக இருந்தது. கடந்த சில காலமாக, இந்திய நூல் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் சிக்கல்கள் இருந்து வருகின்றன. இருப்பினும், வங்கதேசம் இந்தியாவிற்கு ஒரு நிலையான சந்தையாக இருந்தது. எனவே, அந்த சந்தை இனி நிச்சயமாகச் சுருங்கும், ஏனென்றால் வங்கதேசம் இனி அமெரிக்காவிலிருந்து நூலை வாங்கும், இது நமது நெசவு தொழிலையும் பாதிக்கும்”என்றும் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஹர்ஷ் பந்தின் கூற்றுப்படி, சில வழிகளில் குறிப்பாக ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் வங்கதேசம் இந்தியாவின் நேரடிப் போட்டியாளராக இருப்பதால், அமெரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான ஒப்பந்தம் பெரும் கவலைக்குரிய விஷயமாகும்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “புதிய ஒப்பந்தத்தில் வங்கதேசத்தின் மீது சுமார் 19 சதவீத வரி உள்ளது, ஆனால் வங்கதேச ஜவுளிகளுக்கு பூஜ்ஜிய வரி வாய்ப்பும் உள்ளது. இது எதிர்காலத்தில் இந்தியாவிற்கு சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன். இது சில உயர் மதிப்புள்ள பிரிவுகளில் வங்கதேசத்துக்கு சாதகமான நிலையை வழங்கக்கூடும்”என்றார்.
மேலும், “குறுகிய காலத்தில் இது உண்மையில் கவலைக்குரிய விஷயம் தான், ஆனால் மற்ற துறைகளில் இந்தியா பல நன்மைகளைக் கொண்டுள்ளதால் இந்த கவலை மிகைப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஜவுளித் துறையில் இந்த சாதகமான நிலை இல்லாவிட்டாலும், அதை மற்ற துறைகளுடன் இணைக்க முடியும். ஆனால் உடனடி கவலையைப் பற்றி பேசினால், இத்துறையில் இந்தியா தனது போட்டித்தன்மையை இழக்க இது காரணமாகுமா என்ற கேள்வி எழுகிறது” என்றும் பேராசிரியர் பந்த் குறிப்பிட்டார்.
அமெரிக்கா என்ன விரும்புகிறது?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா முதலில் இந்தியாவுடனும், பின்னர் வங்கதேசத்துடனும் வர்த்தக ஒப்பந்தம் செய்தது.
வங்கதேச ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பதற்றம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இது போன்ற ஒப்பந்தங்களுக்குப் பின்னால் உள்ள அமெரிக்காவின் நோக்கம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பேராசிரியர் பிஸ்வஜித் தார் கூறுகையில், “பாருங்கள், அமெரிக்கா ஒரு வகையில் நம்மைப் போன்ற நாடுகளைப் போட்டிக்கு விடுகிறது. யார் அதிகபட்சமாக அடிபணிவார்கள் என்பதைப் பார்ப்பதே அமெரிக்காவின் நோக்கம். அமெரிக்கா அதிகபட்ச பலனைப் பெற விரும்புகிறது. இதற்கான சிறந்த வழி மற்ற நாடுகளைப் போட்டிக்கு விடுவதாகும்” என்கிறார்.
பேராசிரியர் தாரின் கூற்றுப்படி, இருதரப்பு ஒப்பந்தங்களின் மிகப்பெரிய தீமை இதுதான்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உலக வர்த்தக அமைப்பில் இருப்பது நன்மை பயக்கும், ஏனெனில் அனைத்து நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து முடிவுகளை எடுக்கின்றன. எனவே, ‘பிரித்தாளும் சூழ்ச்சியை’ முயற்சிக்கும் வளர்ந்த நாடுகள் அங்கு வெற்றி பெறுவதில்லை, ஏனெனில் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து தங்கள் சொந்த நலன்களைக் கவனித்துக்கொள்ள முடியும்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “வங்கதேசம் இந்தியாவுடன் நெருக்கமான மூலோபாயக் கூட்டாண்மையைக் கொண்டிருந்தது. இப்போது அது நிச்சயமாக மாறும். உறவு ஏற்கனவே பலவீனமாக உள்ளது. இப்போது அமெரிக்கா தலையிட்டு, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையிலான கடினமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். அமெரிக்கா அதன் மூலம் பலன் பெற விரும்பும், இந்தியாவும் வங்கதேசமும் தங்களுக்குள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்ளும். இந்தியா மற்றும் வங்கதேசத்தின் அரசியல் தலைமை இதைப் புரிந்து கொண்டால், அவர்கள் நிலைமையைச் சிறப்பாகக் கையாள முடியும்”என்றார்.
“அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் மிகவும் பரஸ்பர வரி மாற்றங்களைச் செய்து வருவதாக நான் நினைக்கிறேன். இந்த முடிவுகள் களத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே இவற்றின் உண்மையான தாக்கம் அமையும்,” என்றும் பேராசிரியர் பந்த் கூறுகிறார்.

பந்தின் கூற்றுப்படி, வரி விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்கிறது என்றால், அது ஒரு உயர் மட்டத்திலிருந்து தொடங்கி பின்னர் கீழே வந்து, தான் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறுகிறது.
“விஷயம் எதுவாக இருந்தாலும், ஒட்டுமொத்த வரிகள் அதிகரித்து வருகின்றன. ஆம், சில இடங்களில் அவை குறைவாக இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக அமெரிக்கா சற்று அதிக பாதுகாப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அமெரிக்கச் சந்தை அதிகப் பாதுகாப்புக் கொள்கை கொண்டதாக மாறுகிறது. அமெரிக்கத் தொழில்களுக்கு அதிக ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.”
பேராசிரியர் பந்தின் கூற்றுப்படி, இந்த முடிவுகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன மற்றும் இந்த வரி மாற்றங்கள் உண்மையில் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்தே இறுதி முடிவு இருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : BBC



