SOURCE :- BBC NEWS

இந்தியாவைப் போன்றே வங்கதேசத்துடனும் அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை சமீபத்தில் அறிவித்துள்ளது.
அதில் வங்கதேசத்தின் சில ஜவுளி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய ஜவுளித்துறையை பாதிக்கக் கூடும் என்கிற கவலை எழுந்துள்ளது.
குறிப்பிட்ட ஆடை ஏற்றுமதிகளுக்கு வங்கதேசம் பூஜ்ஜிய வரியையும் ஆனால், இந்தியா அமெரிக்காவுக்கான அனைத்து ஆடை ஏற்றுமதிகளுக்கும் 18% வரியையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகக் கூறுகிறார், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் கௌரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரா.
ஆனால் இது இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம் என்கிறார், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம்.
“இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்களால் நமக்கான ஆர்டர்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டு இந்தியா ஜவுளித்துறை மூலப்பொருட்களின் ஏற்றுமதியை குறைக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவிக்கிறார்.
வர்த்தக ஓப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும்போது வங்கதேசத்துக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் இந்தியாவுக்கும் கிடைக்கும் என, மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
வங்கதேசத்துக்கான அமெரிக்காவின் அறிவிப்பு என்ன?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா – இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய பொருட்களுக்கு மீதான வரி 18 சதவிகிதமாக குறைக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு இந்திய ஜவுளித் துறையினருக்கு தந்த மகிழ்ச்சி சில நாள் கூட நீடிக்கவில்லை. அதற்குள் அமெரிக்கா – வங்கதேசம் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு வெளியானது.
அதில், அமெரிக்காவின் பருத்தி மற்றும் செயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் வங்கதேசத்தின் சில சிறப்பு ஜவுளிகள் மற்றும் ஆடைகளுக்கு அமெரிக்க சந்தையில் பூஜ்ஜிய வரி விகிதத்தில் அனுமதி வழங்கும் ஒரு வழிமுறையை உருவாக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
வங்கதேசம் ஏற்றுமதி செய்யும் ஆடைகள், அமெரிக்க பருத்தியால் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது இதன் முக்கிய அம்சமாக உள்ளது என்கிறார் ஜெகதீஷ் சந்திரா.
இந்த அறிவிப்பால் இந்தியாவுக்கு உடனடியாக தீவிர பாதிப்புகள் இருக்காது என்றாலும் கணிசமான தாக்கம் இருக்கும் என்கிறார் ஜெகதீஷ் சந்திரா.
இந்தச் சூழலில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திலும், அமெரிக்காவிலிருந்து பருத்தி நூலை இறக்குமதி செய்தால் வரி பலன்களைப் பெறுவது தொடர்பான பிரிவு சேர்க்கப்படும் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஜவுளித்துறையைப் பொருத்தவரை பருத்தி, நூல் மற்றும் ஆடை உற்பத்தி எனப் பல்வேறு கட்டங்கள் உள்ளன.
பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள், பருத்தியிலிருந்து நூல் தயாரிக்கும் நூற்பாலைகள் மற்றும் ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என, ஜவுளித்துறையின் விநியோகச் சங்கிலி மிகப்பெரியது.
மத்திய அரசின் தரவுகளின்படி, இந்தியாவில் 4.5 கோடிக்கும் அதிகமானோர் ஜவுளித்துறையில் வேலை செய்து வருகின்றனர். ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் பெண்களாக உள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?
தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்கள் ஜவுளி விநியோகச் சங்கிலியில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தி குறைவு என்றாலும் நூற்பாலைகள் இங்குதான் அதிகமாக உள்ளதாகக் கூறுகிறார் ஜெகதீஷ் சந்திரா.
இந்தியாவின் இதர மாநிலங்களில் உள்ள ஆடை உற்பத்தி நகரங்களுக்கு மட்டுமல்லாது வங்கதேசத்துக்கும் கூட இங்கு உற்பத்தியாகும் நூல்கள் செல்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
“இந்தியாவின் நூல் உற்பத்தியில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. நூற்பாலைகளை மையமாக வைத்து இங்கு மிகப்பெரிய பொருளாதாரம் இயங்கி வருகிறது. வங்கதேசம் இந்தியாவின் நூலை தவிர்த்துவிட்டு அமெரிக்காவின் பருத்தி மற்றும் நூலை வாங்க முடிவெடுத்தால் தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் மற்றும் அதைச் சார்ந்துள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிகரித்த பருத்தி நூல் ஏற்றுமதி
இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தி நூலை இறக்குமதி செய்யும் நாடுகளில் வங்கதேசம் முன்னணியில் இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள தரவுகளின்படி, 2024-2025 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து 5.7 லட்சம் டன் பருத்தி நூல் வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பருத்தி நூலில் சுமார் 49% வங்கதேசத்துக்குச் செல்கிறது. இந்திய ஏற்றுமதியில் வங்கதேசத்தின் பங்கு 2022-ஆம் ஆண்டிலிருந்து கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஆடை உற்பத்தி குறைந்ததுதான் இதற்கு முக்கியக் காரணம் எனக் கூறும் முத்துரத்தினம், “கடந்த சில வருடங்களுக்காக ஜவுளி உற்பத்திக்கு போதிய ஆர்டர்கள் வரவில்லை. ஆனால், இங்கே உற்பத்தியாகும் மூலப் பொருட்களின் அளவு குறையவில்லை. இதனால் அதன் ஏற்றுமதி அதிகமானது. தற்போது நமக்குமே மூலப்பொருள் தட்டுப்பாடு உள்ளது.” என்கிறார்.

“வங்கதேசத்துக்கு கிடைக்கும் பலன்”
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு பருத்தியை விட பருத்தி நூல் ஏற்றுமதி தான் அதிகளவில் நடைபெறுவதாகக் குறிப்பிடுகிறார் ஜெகதீஷ் சந்திரா.
“அமெரிக்காவில் ஆலைகள் குறைவு, ஆனால் பருத்தி உற்பத்தி அதிகம். வங்கதேசத்திலும் ஆலைகள் குறைவு, அதனால் தான் இந்தியாவிலிருந்து பருத்தி நூலை அதிகளவில் இறக்குமதி செய்கிறது. தற்போது அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் சலுகையின்படி வங்கதேசம் பருத்தியை இறக்குமதி செய்து நூல் உற்பத்தி செய்ய வேண்டும். வங்கதேசத்தில் நூற்பாலைகள் குறைவு என்பதால் இது சிக்கலாகக்கூடும்.” என்றார்.
வங்கதேச உற்பத்தியாளர்களுக்கு இறக்குமதி செலவுகள் இருந்தாலும் இந்தியா உடன் ஒப்பிடுகையில் அவர்களுக்கு சாதகம் அதிகம் என்றும் ஜெகதீஷ் சந்திரா குறிப்பிடுகிறார்.
“இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது எளிது, ஆனால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு செலவுகள் அதிகம். ஆனாலும் வங்கதேசத்துக்கான வரி என்பது பூஜ்ஜியமாக குறைவதால் செலவுகளைக் கணக்கில் கொண்டாலும் லாபம் இருக்கும்.” என்றார்.

‘இறக்குமதிக்கு 11% வரி’
“வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு வங்கதேசத்தில் இறக்குமதி வரி கிடையாது. ஆனால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு இந்தியாவில் 11% வரி விதிக்கப்படுகிறது. இது தொடக்கத்திலேயே வங்கதேசத்துக்கு சாதகமான சூழலை உருவாக்கி நமக்கு பின்னடைவை தருகிறது” என்கிறார் ஜெகதீஷ் சந்திரா.
“அமெரிக்காவுக்கான ஏற்றுமதி போட்டியில் வங்கதேசத்துக்கு முன்னுரிமை கிடைக்கும் சூழல் உருவாகும். அமெரிக்க இறக்குமதியாளர்கள் இந்தியாவை விட வங்கதேசத்தையே தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம்.” என்றார் அவர்.
‘இந்தியாவுக்கான வாய்ப்பு’

தற்போது நிலவும் சூழல் இந்தியாவுக்குச் சவாலானதாக தெரிந்தாலும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் இந்திய ஜவுளித்துறை இதன்மூலம் பலன் அடையலாம் என்கிறார் முத்துரத்தினம்.
“பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும். பருத்தி மற்றும் நூலை உள்நாட்டு ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குப் பயன்படுத்த வேண்டும். எதிர்வரும் நாட்களில் ஆர்டர்கள் அதிகமாகும் என்பதால் உள்நாட்டு ஆடை உற்பத்தி அதிகமாகும்” என்றார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது.
வங்கதேச ஆடைகள் எப்போதுமே இந்திய ஆடைகளைவிட விலை குறைவாக இருக்கும் எனக் கூறும் முத்துரத்தினம், “இந்திய ஆடைகளை நாடி வரும் அமெரிக்க வர்த்தகர்கள் எளிதாக வங்கதேச ஆடைகளை நோக்கி நகர வாய்ப்பில்லை. மாறாக இந்தியா பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் மூலப்பொருட்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். நூலாக ஏற்றுமதி செய்வதை விட ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் தான் வேலைவாய்ப்பும் லாபமும் அதிகம். அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



