Home தேசிய national tamil வங்கதேசத்தில் பிஎன்பி வெற்றி – இந்தியா மீதான தாக்கம் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

வங்கதேசத்தில் பிஎன்பி வெற்றி – இந்தியா மீதான தாக்கம் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

8
0

SOURCE :- BBC NEWS

வங்கதேசத்தில் பி.என்.பி வெற்றி பெற்றதை வெளிநாட்டு ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன?

பட மூலாதாரம், tariquerahman.info

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வங்கதேச பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) பெரும்பான்மை பெற்றுள்ளது. முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 297 இடங்களில் பிஎன்பி கூட்டணி 209 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், அண்டை நாடான இந்தியாவிடம் பிஎன்பி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுவது மிகவும் இயல்பானது.

வங்கதேசத்தில் பிஎன்பி எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ, அப்போதெல்லாம் இந்தியாவுடனான உறவு சுமுகமாக இருந்ததில்லை.

எனவே, தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற கேள்வி குறித்து மேற்கத்திய ஊடகங்களிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் பிஎன்பி-யின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஜனநாயக, முற்போக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்கும். நமது பன்முக உறவை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி சார் இலக்குகளை முன்னெடுக்கவும் உங்களுடன் (தாரிக் ரஹ்மான்) இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று மோதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மோதியின் வாழ்த்து, வங்கதேசத்தின் புதிய அரசாங்கத்துடன் இந்தியா உறவை மேம்படுத்த விரும்புகிறது என்ற செய்தியையும் தெரிவிக்கின்றது.

இந்த 'வெற்றி' தாரிக் ரஹ்மானின் தலைமையின் மீது வங்கதேச  மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்று பிரதமர் மோதி கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images

வெளிநாட்டு ஊடகங்களில் என்ன பேசப்படுகிறது?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு வங்கதேசம் மிகவும் முக்கியமானது.

உத்தி மற்றும் பொருளாதார காரணங்களால் வங்கதேசத்தை ஒரு முக்கிய நாடாக சீனா கருதுகிறது.

இந்தியா தனது செல்வாக்கை பெருமளவில் ஷேக் ஹசீனாவுடனான தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையில் அமைத்திருந்தது, அவர் இப்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

மறுபுறம், சீனா அரசியல் மாற்றங்களைத் தாங்கி நிற்கக்கூடிய நீண்டகால முதலீடுகள் மூலம் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டது.

“அமெரிக்கா இதில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சில வங்கதேச ஜவுளி ஏற்றுமதிகளுக்கு வரியை பூஜ்ஜியமாக்கியுள்ளார். வங்கதேசத்தின் ஜவுளித் தொழில் அதன் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகும். சீனாவுக்கு அடுத்தபடியாக வங்கதேச உலகின் இரண்டாவது பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக உள்ளது. இந்தத் துறையில் இனி இந்தியாவின் ஆதிக்கம் இல்லை என்பதை இது இந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு உணர்த்துகிறது” என்று அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் குறிப்பிட்டது.

“இந்தியாவின் வங்கதேச கொள்கை ஹசீனாவையே பெரிதும் நம்பியிருந்தது. இது இப்போது ஒரு தீவிரமான உத்தி தவறாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் நெருக்கமான ஒத்துழைப்பிற்கு ஈடாக ஜனநாயகம் குறித்த கவலைகளை இந்தியா குறைத்து மதிப்பிட்டது. இந்தியாவில் ஹசீனா தொடர்ந்து தங்கியிருப்பது உறவுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.”

இந்த விவகாரம் வங்கதேசத்தில், குறிப்பாக ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை வெளியேற்றிய இளம் போராட்டக்காரர்களிடையே கடுமையான விமர்சனங்களைக் கண்டுள்ளது.

“அடுத்து அரசாங்கத்தை வழிநடத்தும் என எதிர்பார்க்கப்படும் பிஎன்பி, வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிரானதோ அல்லது சீனாவிற்கு ஆதரவானதோ அல்ல. அதன் வெளியுறவுக் கொள்கை இந்தியாவை மையமாகக் கொண்டிருக்கவில்லை, மேலும் எந்தவொரு அண்டை நாட்டிற்கும் முன்னுரிமை அந்தஸ்து வழங்கப்படாது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது. மாறாக, அது தனது இளம் வாக்காளர்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும்” என்றும் ப்ளூம்பெர்க் எழுதியுள்ளது.

“இந்தச் சூழல் ஏற்கனவே வங்கதேசத்தின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக இருக்கும் சீனாவிற்கு வாய்ப்புகளை உருவாக்குகிறது. இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தனது முக்கியமான வெளிநாட்டுப் பயணங்களில் ஒன்றாக சீனாவைத் தேர்ந்தெடுத்தது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கத்தை வெளிப்படுத்தியது. முதலில் இந்தியாவிற்குச் செல்லும் பாரம்பரிய நடைமுறையிலிருந்து ஒரு மாற்றமாகும்.”

பட மூலாதாரம், AFP via Getty Images

பாகிஸ்தானுடன் தொடர்பு

வங்கதேசம், “இந்தியாவால் சூழப்பட்ட” நாடு என்று அழைக்கப்படுகிறது. வங்கதேசத்தின் 94 சதவீத எல்லை இந்தியாவுடன் பகிரப்பட்டுள்ளது. வங்கதேசம் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்திற்காக இந்தியாவை சற்று அதிகம் சார்ந்துள்ளது.

வங்கதேசம் சமீபத்தில் பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்தியுள்ளது, இது இயல்பாகவே இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பிரச்னையாகும்.

1971 போருக்குப் பிறகு முதல் முறையாக, இரு நாடுகளும் நேரடி வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்புகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க பத்திரிகையான டைம் அதன் வலைதள செய்தியில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளது.

“ஹசீனாவின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்தியாவுடனான உறவுகள் மோசமடைந்தன. ஹசீனா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இடையே நம்பகமான உறவு இருந்தது. ஜனவரி மாதம் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானின் இந்தியன் பிரீமியர் லீக் ஒப்பந்தம் திடீரென ரத்து செய்யப்பட்டபோது உறவுகளில் விரிசல் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.”

“இருப்பினும், இந்தியா நடைமுறை ரீதியாக பிஎன்பி-யுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. மேலும் டிசம்பர் இறுதியில் தாரிக் ரஹ்மான் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார்” என்று டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

”ஹசீனாவின் ஆட்சியில் இந்தியா வங்கதேசத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தது, ஆனால் அவரது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு உறவுகள் கடுமையாக சரிந்து, சமீபத்திய மாதங்களில் வெளிப்படையான பகையாக மாறியுள்ளன” என்று பிரிட்டன் நாளிதழான தி கார்டியன் எழுதியுள்ளது.

“இந்தியாவுடன் சிக்கல்கள் இருப்பதை ரஹ்மான் ஒப்புக்கொண்டார், மேலும் அவர் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையிலான உறவை மட்டுமே விரும்புவதாகக் கூறினார். ஹசீனா மற்றும் அவரது கட்சியினருக்கு இந்தியா புகலிடம் அளித்து வரும் நிலையில், இந்தியாவும் வங்கதேசமும் தங்கள் நட்பை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா என்று கேட்டபோது, ரஹ்மான் நேரடியான பதிலைத் தவிர்த்தார்.” என்கிறது அச்செய்தி

பிஎன்பி தலைவர் தாரிக்

பட மூலாதாரம், AFP via Getty Images

இந்தியாவுடனான உறவுகள் குறித்து பி.என்.பியின் நிலைப்பாடு

பி.என்.பி கட்சியின் வெற்றிக்கு மத்தியில், அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெபா அமினா கான் இந்தியாவுடனான உறவுகள் குறித்துப் பேசினார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜெபா அமினா கான், “நாம் அண்டை நாடுகள், நாம் நண்பர்கள் மேலும், நாம் நண்பர்களாகவே இருக்க வேண்டும். நாம் மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவிற்குப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எதுவாக இருந்தாலும், அது நமக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்தான். எனவே, நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

“நமது எல்லைப் பகுதியின் சில இடங்களில் சில சிறிய பிரச்னைகள் உள்ளன, அவை பரஸ்பர சம்மதத்துடனும், இணைந்தும் தீர்க்கப்பட வேண்டும், அப்போதுதான் நாம் நல்லிணக்கத்துடன் வாழ முடியும்.”

மேலும், “இந்தியா வங்கதேச மக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இது பிஜேபி அல்லது எந்தவொரு அரசியல் கட்சியையும் பற்றியது அல்ல. இது வங்கதேச மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியது. இந்தியா இதைப் புரிந்து கொண்டால், நாம் உண்மையாகவே சிறந்த நண்பர்களாக மாற முடியும். எனக்கு இந்தியாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை”என்றும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடுகடத்துவது குறித்து அவர் கூறுகையில், “தனிப்பட்ட முறையில், எந்த நாடும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்.அவர்களுக்கு எந்த நாட்டிலும் பாதுகாப்பு கிடைக்கக் கூடாது. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். நான் இதை ஒரு நபரைக் குறிப்பிட்டு மட்டும் சொல்லவில்லை, ஏனென்றால் பலர் இந்தியாவிற்குச் சென்றுள்ளனர்,” என்றார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU