Home தேசிய national tamil வங்கதேச தேர்தலில் தாரிக் ரஹ்மான் முன் வைத்த கொள்கை இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

வங்கதேச தேர்தலில் தாரிக் ரஹ்மான் முன் வைத்த கொள்கை இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

15
0

SOURCE :- BBC NEWS

வங்கதேசம், பிஎன்பி, இந்தியா, தாரிக் ரஹ்மான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், MUNIR UZ ZAMAN / AFP via Getty Images

வங்கதேசத்தில் பிப்ரவரி 13, வெள்ளிக்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, வங்கதேச தேசியவாத கட்சி (BNP) புதிய அரசாங்கத்தை அமைக்கும் திசையை நோக்கி நகர்வது தெளிவாகியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான இடங்களை அந்தக் கட்சி வென்றுள்ளது.

வங்கதேசத்தை விட்டு வெளியேறி, கடந்த 17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான், சமீபத்தில் வங்கதேசம் திரும்பினார். அவர் நாட்டின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இந்தத் தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பொதுத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வங்கதேச வாக்காளர்கள் விரிவான அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளித்தனர்.

2024 மாணவர் போராட்டங்களுக்குப் பிறகு வங்கதேசத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டியிருந்ததுடன், அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

ஹசீனாவின் தஞ்ச கோரிக்கை தொடர்பாக கடந்த சில மாதங்களாக இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவுகள் கசப்படைந்துள்ளன. ஆனால் இந்த பதற்றம் மற்றும் கசப்புக்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு பிஎன்பி மீண்டும் ஆட்சிக்கு வருவது வங்கதேசத்தின் அரசியலில் ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றம் இந்தியா-வங்கதேச உறவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

தேர்தல் முடிவுகளுக்கு இந்தியாவின் எதிர்வினை

வங்கதேசம், பிஎன்பி, இந்தியா, தாரிக் ரஹ்மான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Samir Jana/Hindustan Times via Getty Images

வெள்ளிக்கிழமை காலை தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தபோது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி காலை 9 மணியளவில் ஒரு சமூக ஊடகப் பதிவில் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

“வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சியை ஒரு மகத்தான மற்றும் தீர்க்கமான வெற்றிக்கு வழிநடத்திய தாரிக் ரஹ்மான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி வங்கதேச மக்கள் உங்கள் தலைமையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது,” என்று மோதி சமூக ஊடகத்ளமான எக்ஸ்-இல் பதிவிட்டார்.

“ஒரு ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். நமது பன்முகத் தன்மையிலான உறவை மேலும் வலுப்படுத்தவும், நமது பகிரப்பட்ட வளர்ச்சி இலக்குகளை முன்னெடுக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்” என்றும் பிரதமர் மோதி கூறினார்.

இந்தச் செய்திக்கு சுமார் ஆறரை மணி நேரத்திற்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி மற்றொரு எக்ஸ் தள பதிவில், தான் பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மானுடன் பேசியதாகக் கூறினார்.

“தாரிக் ரஹ்மானுடன் பேசியதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். வங்கதேச தேர்தலில் அவர் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்காக அவருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். வங்கதேச மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அவரது முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தேன். ஆழமான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைக் கொண்ட இரு நெருங்கிய அண்டை நாடுகளாக, இரு நாடுகளின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்தினேன்.” என்று அந்தப் பதிவில் பிரதமர் மோதி தெரிவித்தார்.

பிஎன்பி அரசு- இந்தியா இடையிலான உறவுகள்

வங்கதேசம், பிஎன்பி, இந்தியா, தாரிக் ரஹ்மான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

பின்னோக்கிப் பார்க்கும்போது, இந்தியா-வங்கதேச உறவுகளில் பிஎன்பியின் ஆட்சி பெரும்பாலும் பதற்றம் மற்றும் அவநம்பிக்கையின் காலமாகவே பார்க்கப்படுகிறது.

கலீதா ஜியா தலைமையிலான பிஎன்பி அரசாங்கத்தின் முதல் ஆட்சிக் காலத்தில் (1991-96), குறிப்பாக எல்லைப் பிரச்னைகள், நீர் பகிர்வு மற்றும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் காணப்பட்டன. இந்தப் பிரச்னைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தின.

2001 முதல் 2006 வரை இருந்த பிஎன்பி-ஜமாத் கூட்டணி அரசாங்கத்தின் போது வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த காலகட்டத்தில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு பிஎன்பி அரசாங்கம் அடைக்கலம் அளிப்பதாகவும், பாதுகாப்பு கவலைகளைப் புறக்கணிப்பதாகவும் இந்தியா குற்றம் சாட்டியது. எல்லைத் தகராறுகள், கடத்தல் மற்றும் எல்லையில் பொதுமக்கள் உயிரிழப்புகள் போன்ற பிரச்னைகளும் இரு நாடுகளுக்கும் இடையே அவநம்பிக்கையை அதிகரித்தன.

இந்தக் காலகட்டத்தில், வங்கதேசம் மீது பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்தது, இது இருதரப்பு உறவுகளை மேலும் சிக்கலாக்கியது.

ஒட்டுமொத்தமாக, பிஎன்பியின் ஆட்சி இந்தியா-வங்கதேசம் உறவுகளுக்கு ஒரு சவாலான காலமாகவே கருதப்படுகிறது, அதில் ஒத்துழைப்பை விட சந்தேகமும் பதற்றமுமே அதிகமாக இருந்தது.

முரண்பாடாக உள்ள பிரச்னைகள் என்ன?

வங்கதேசம், பிஎன்பி, இந்தியா, தாரிக் ரஹ்மான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், K M ASAD/AFP via Getty Images

ஜூலை 2024 மாணவர் போராட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்தியா-வங்கதேச உறவுகள் குறிப்பிடத்தக்க பதற்றங்களைக் கண்டன.

இந்த அரசியல் கொந்தளிப்பின் போது, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் சென்றது இரு நாடுகளுக்கும் இடையிலான அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தியது.

டாக்காவில் உள்ள புதிய ஆளும் அமைப்பு ஹசீனா மீது அரசியல் குற்றங்களைச் சுமத்தி, அவரை நாடுகடத்த கோரியது. அதே நேரத்தில் இந்தியா இது ஒரு ‘அரசியல் ரீதியான’ வழக்கு என்று கூறி அதை நிராகரித்தது.

இந்தச் சூழலில், வங்கதேசத்திற்குள் அதிகரித்து வரும் போராட்ட அலைகள் இந்தியாவை ஒரு அந்நிய தலையீட்டாளராகச் சித்தரிப்பது போல் தோன்றியது.

இந்தியத் தூதரகம் நோக்கிய போராட்ட ஊர்வலங்கள் மற்றும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியை சீர்குலைப்போம் என்ற அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சில வங்கதேச தலைவர்களின் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கின.

இந்த புதிய அரசியல் சமன்பாட்டில், இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பழைய நம்பிக்கையின் அடித்தளம் பலவீனமடைவது போல் தோன்றியது.

ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு வங்கதேசத்தின் உள்நாட்டு அரசியலில் உருவாகி வரும் புதிய அதிகார சமநிலை இந்தியாவுடனான உறவுகளையும் பாதித்தது.

கொலைகள், கலவரங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் இந்தியாவில் கவலைகளை எழுப்பியுள்ளன, குறிப்பாக வங்கதேசத்தில் இந்து குடிமக்களுக்கு எதிரான வன்முறைச் செய்திகள் வெளியானதால் இந்தியாவின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்படுவதாக வங்கதேச அரசாங்கம் கூறியது, அதே நேரத்தில் இந்தியா இத்தகைய வழக்குகளைப் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைப் பிரச்னைகளாகக் கருதியது.

பல காரணங்களால் சமீபத்திய மாதங்களில் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் மோசமடையத் தொடங்கியுள்ளன.

இரு நாடுகளின் உள்நாட்டு அரசியல் மட்டுமல்லாமல், மாறிவரும் சர்வதேசச் சூழலும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தனது நெருக்கத்தை மீண்டும் அதிகரித்தது, இது இந்தியாவின் உத்திக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியது.

இந்தியா தனது பட்ஜெட்டில் வங்கதேசத்திற்கு அளிக்கும் நிதி உதவியைக் குறைத்தது.

வங்கதேசத்தைப் பொறுத்தவரை இது இந்தியாவின் அழுத்தம் கொடுப்பதற்கான கொள்கையாகப் பார்க்கப்பட்டது.

இதற்கிடையில், புதிய அரசியல் சூழல் இந்தியாவிற்கு எதிரான குழுக்களை வலுப்படுத்துவது போல் தோன்றியதால், எல்லைப் பாதுகாப்பு, ஊடுருவல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து இந்தியா மேன்மேலும் கவலையடைந்தது.

சமீபத்திய மோதல்கள், கொலைகள் மற்றும் அதிகரித்து வரும் அவநம்பிக்கை ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இப்போது உள்நாட்டு அரசியலால் மட்டுமல்லாமல் மாறிவரும் பிராந்திய அதிகார சமநிலையாலும் பாதிக்கப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன.

இந்த காரணங்களால், 2024-க்குப் பிந்தைய காலம் இந்தியா-வங்கதேச உறவுகளில் மிகவும் கடினமான காலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்தியாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

வங்கதேசம், பிஎன்பி, இந்தியா, தாரிக் ரஹ்மான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images

புது தில்லியிலுள்ள கண்காணிப்பு ஆய்வு அறக்கட்டளை மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் வி பண்ட் இது குறித்துப் பேசினார்.

“தற்போதைய சூழ்நிலை மற்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியா-வங்கதேச உறவுகளில் ஏற்பட்டுள்ள சரிவைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவிற்கு நிம்மதியைத் தரக்கூடிய ஒரு முடிவாக இது இருக்கும் என்று நான் நினைக்கிறேன். வங்கதேசத்தில் ஒரு முக்கிய அரசியல் கட்சி வெற்றி பெற்றுள்ளது, அதுவும் தீர்க்கமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த அர்த்தத்தில், வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமியமயமாக்கல் சக்திகளும் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். இது வரும் ஆண்டுகளில், குறிப்பாக இந்தியா-வங்கதேச உறவுகளில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள சரிவை நிலைப்படுத்துவதற்குச் சாதகமாக அமையும்.” என்று அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் பண்ட், “இந்தியாவின் கவலைகளையும் தனது வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளையும் பிஎன்பி எவ்வாறு சமநிலைப்படுத்தும் என்பதுதான் முக்கியமான விஷயம். மேலும், கடந்த காலங்களில் இஸ்லாமிய சக்திகளும் அரசியல் கட்சிகளும் இந்தியா தான் வங்கதேசத்தின் முக்கிய பிரச்சனை என்ற கருத்தை மையப்படுத்தி திரண்டது போல், இந்தியாவைத் தொடர்ந்து வங்கதேச தேசியவாதத்தின் அடையாளமாக இலக்கு வைப்பார்களா? எனவே, பிஎன்பி கடந்த கால கசப்புகளைத் தாண்டி இந்தியாவுடனான உறவுகளில் ஒரு முன்னோக்கு அணுகுமுறையை உருவாக்கினால், அது மிகவும் தேவையான ஒரு மறுதொடக்கப் புள்ளியாக அமையலாம்” என்றார்.

இன்று உலகில் காணப்படும் புவிசார் அரசியல் மாற்றங்களின் பின்னணியில் இந்தியாவும் வங்கதேசமும் பரஸ்பரம் முக்கியமான நாடுகள் என்று பேராசிரியர் பண்ட் கூறுகிறார்.

“ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு முடங்கிப் போன பல முயற்சிகளில் இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து முன்னேறுவது தெற்காசியாவிற்கு முக்கியமானது. புதிய அரசாங்கத்திடமிருந்து வரும் சமிக்ஞைகளை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்கும் என்றும், இது டெல்லி-டாக்கா உறவுகளில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் என்றும் நான் நம்புகிறேன். ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கிய நடைமுறை ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பலனளித்தது. டாக்காவில் இருக்கும் எந்த அரசாங்கமும், பிஎன்பி அரசாங்கம் கூட, அந்த முயற்சிகளில் இருந்து பின்வாங்க வேண்டிய அவசியமில்லை.” என்றும் அவர் கூறுகிறார்.

பண்ட் கூற்றுப்படி, வர்த்தகம், இணைப்பு (Connectivity), கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய விவகாரங்களில் இரு நாடுகளும் பொதுவான தளத்தைப் பகிர்ந்து கொள்கின்றன, அவை வலுப்படுத்தப்பட வேண்டும். பிஎன்பி அரசாங்கம் நடைமுறைக்குச் சாத்தியமான மற்றும் முன்னோக்குக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், அது நிச்சயம் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஸ்ரீராதா தத்தா, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் ‘சர்வதேச விவகாரங்கள்’ பேராசிரியை ஆவார்.

இந்தியாவிற்கு, இந்தத் தேர்தல்கள் அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக இல்லாவிட்டாலும், அது பெரிய விஷயமல்ல, ஏனென்றால் உலகின் ஏனைய நாடுகள் இந்தத் தேர்தல்களை ஏற்றுக்கொண்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.

“இந்தத் தேர்தல்கள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். அவை சுதந்திரமாக, நியாயமாக மற்றும் அமைதியாக நடந்தன. எனவே இது ஒரு நல்ல தேர்தல். இந்தியா அதன் முடிவுகளை ஏற்க வேண்டும்” என்கிறார் அவர்.

பேராசிரியை தத்தாவின் கூற்றுப்படி, அடுத்த கட்டம் இரு தரப்பினரும் எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார்கள் என்பதுதான்.

“மீண்டும் தொடங்க வேண்டிய நேரம் இது. ரீபூட் (Reboot) செய்ய, ரெஃப்ரெஷ் (Refresh) செய்ய, ரீசெட் (Reset) செய்ய வேண்டிய நேரம் இது. தேர்தல்கள் முடிந்துவிட்டன, இப்போது உணர்ச்சிகரமான கடந்த காலத்தையும் வரலாற்றுச் சுமைகளையும் பின்னால் தள்ளிவிட வேண்டும். இரு தரப்பு மக்களும் இந்த உறவினால் பயன்பெறும் வகையில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

“இந்தச் சதித் திட்டங்கள், ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படுவது, பாதுகாப்பு நலன்கள் பற்றிய அச்சங்கள்…இந்த விஷயங்கள் இனி எடுபடாது. மக்கள் இந்த விளையாட்டுகளைப் புரிந்து கொண்டுள்ளனர்,” என்கிறார்.

“2001-இல் பிஎன்பியின் அனுபவம், மக்கள் இத்தகைய அரசியலை விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாக்குகிறது, ஏனென்றால் அதற்கு அடுத்த முறை அவர்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தனர்.”

பிஎன்பி தனது பேச்சில் உறுதியாக இருக்கும் என்று நம்புவதாக பேராசிரியர் தத்தா கூறுகிறார்.

“அவர் இந்தியா பற்றி நேர்மறையான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவர் பேச விரும்புகிறார், சேர்ந்து பணியாற்ற விரும்புகிறார். பிரதமர் மோதியும் அதையே செய்துள்ளார். இது வெறும் பேச்சாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே எனது விருப்பம். ஆனால் இரு தரப்பிலும் இணைந்து முன்னேறுவதற்கான உண்மையான எண்ணமும் விருப்பமும் இருக்க வேண்டும். விஷயங்கள் மாறும் என்றும் கடந்த கால நிழலில் இருந்து நம்மால் வெளியே வர முடியும் என்றும் நான் நம்புகிறேன்.”

ஷேக் ஹசீனா விவகாரத்தில் பதற்றங்கள் தொடருமா?

வங்கதேசம், பிஎன்பி, இந்தியா, தாரிக் ரஹ்மான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Getty Images

ஷேக் ஹசீனாவை நாடுகடத்துவது குறித்த பிரச்னை இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்று பேராசிரியர் ஹர்ஷ் பண்ட் கூறுகிறார்.

“ஆனால் அதன் தாக்கம் புதிய அரசாங்கம் இந்தியாவுடனான தனது உறவை எவ்வாறு வரையறுக்க விரும்புகிறது என்பதைப் பொறுத்தது. யூனுஸ் அரசாங்கம் ஓரளவிற்குச் செய்ய முயன்றது போல, இந்த ஒரு பிரச்னையை மட்டும் ஆதிக்கம் செலுத்த இந்த புதிய அரசாங்கம் அனுமதித்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் உறுதியற்ற தன்மை ஏற்படக்கூடும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த அரசாங்கம் இதை பல சிக்கல்களில் ஒன்றாகக் கருதி, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேவேளையில், மற்ற அம்சங்களிலும் கவனம் செலுத்தினால், இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைக்கு இடம் இருக்கும்.”

பண்ட் கூற்றுப்படி, இந்த விவகாரம் முக்கியமானதாக இருக்கும் ஆனால் புதிய அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் டாக்காவில் உள்ள புதிய அரசாங்கம் கொண்டுள்ள கவலைகளை இந்தியா எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

பேராசிரியை ஸ்ரீராதா தத்தா கூறுகையில், “அரசாங்க மட்டத்தில், அவர்கள் (வங்கதேசம்) நிச்சயமாக நாடுகடத்தக் கோருவார்கள். ஆனால் இதில் வரம்புகள் உள்ளன என்பதையும், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைப்பதில் இந்தியாவுக்கு ஏன் பல சிக்கல்கள் உள்ளன என்பதையும் பிஎன்பியும் புரிந்து கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.”

பேராசிரியை தத்தாவின் கூற்றுப்படி, ஷேக் ஹசீனாவை விட சிக்கலான பிரச்னை அவாமி லீக் மற்றும் அது மீண்டும் வங்கதேசத்தில் தனது நிலையை எவ்வாறு வலுப்படுத்தும் என்பதுதான்.

“அவாமி லீக் வங்கதேசத்தின் மிகப்பெரிய மற்றும் பழமையான கட்சி, எனவே அதை முழுமையாக அரசியல் களத்தில் இருந்து விலக்கி வைப்பது கடினம். ஆனால் பொறுப்பு முழுக்க அவாமி லீக் தலைமையிடமே உள்ளது. ஷேக் ஹசீனா ஏதேனும் வருத்தம் தெரிவிக்கிறாரா, அவர் பதவி விலகுகிறாரா, அவாமி லீக் ஒரு புதிய வடிவத்தில், ஒரு புதிய அவதாரமாக உருவாகிறதா? இது ஒரு கடினமான செயல்முறையாக இருக்கும், ஏனெனில் ஆயிரக்கணக்கான அவாமி லீக் உறுப்பினர்கள் இந்தியா மற்றும் பிற இடங்களில் உள்ளனர். அவர்களுக்கு முன்னால் அவர்களின் எதிர்காலம் உள்ளது. அவர்களின் வணிகங்கள் சரிந்துவிட்டன, அவர்களின் குடும்பங்கள் சிதைந்துவிட்டன. எனவே, அவர்களுக்கு இது எளிதாக இருக்கவில்லை. மேலும் எவ்வளவு காலம் அவர்கள் ஷேக் ஹசீனாவுக்காகக் காத்திருப்பார்கள்?” என்கிறார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியை தத்தா, “தேர்தல்களும் வாக்காளர் வருகையும் அவாமி லீக் இல்லாமலும் மக்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்று நான் நம்புகிறேன். இது ஒரு தெளிவான செய்தி. எனவே, அவாமி லீக் தனது கொள்கைகளையும் உத்திகளையும் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். மேலும் இந்தியா ஏதோ ஒரு வடிவத்தில் அந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறுகிறார்.

‘வங்கதேசத்தின் நலன்களுக்கே முன்னுரிமை’

வங்கதேசம், பிஎன்பி, இந்தியா, தாரிக் ரஹ்மான், ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிஎன்பி மீண்டும் மீண்டும் ‘பங்களாதேஷ் ஃபர்ஸ்ட்’ (Bangladesh First) என்று பேசியது, அதாவது ஆட்சிக்கு வந்தால் முதலில் வங்கதேசத்தின் நலன்களையே கவனிக்கும் என்பதாகும். இப்போது பிஎன்பி அரசாங்கம் அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இந்தியாவுக்கு ‘பங்களாதேஷ் ஃபர்ஸ்ட்’ கொள்கை எதை உணர்த்துகிறது?

வீணா சிக்ரி வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் உயர் ஆணையர் ஆவார்.

“அவர் ‘பங்களாதேஷ் ஃபர்ஸ்ட்’ என்று சொல்லியிருக்கிறார், ஆனால் அவர் உண்மையிலேயே அந்த வார்த்தைகளில் தீவிரமாக இருந்தால், அவர் இந்தியாவுடன் நல்ல உறவை விரும்புவார் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவுடன் வலுவான பொருளாதார ஒத்துழைப்பை அவர் விரும்புவார், இல்லையெனில் வங்கதேசத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது” என்று கூறுகிறார் வீணா.

வீணா சிக்ரியின் கூற்றுப்படி, ஷேக் ஹசீனாவின் காலத்தில், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான ஒத்துழைப்பு எந்த அளவுக்கு உயர்ந்திருந்தது என்றால் வங்கதேசம் 6.5 முதல் 7 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பெற்று வந்தது, ஆனால் 18 மாதங்களில், ஜமாத் கட்சி இந்தியாவுக்கு எதிரான உணர்வைத் திணித்தது. அவர்கள் இந்தியாவுடனான எந்தப் பேச்சுவார்த்தையிலும் முன்னேறம் ஏற்பட விடவில்லை மற்றும் எதிர்மறையான நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவுடனான ஒத்துழைப்பு கட்டமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

“இதன் விளைவாக வங்கதேசத்தின் பொருளாதாரம் நெருக்கடியில் தள்ளப்பட்டது. அதன் வளர்ச்சி விகிதம் 6-7 சதவீதத்திலிருந்து 2-3 சதவீதமாகக் குறைந்தது. பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தனர்.” என்கிறார் வீணா.

தொடர்ந்து பேசிய அவர், “எனவே, பிஎன்பியின் வெற்றிக்காக வங்கதேச மக்களைப் பாராட்ட வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அவர்கள் மதவெறிக்குத் தங்களின் முழுமையான எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். வங்கதேச மக்கள் மதப்பற்றுள்ளவர்கள் ஆனால் மதவெறியர்கள் அல்ல. அவர்கள் மதவெறிக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டைக் காட்டியுள்ளனர் மற்றும் கடும்போக்குவாத இஸ்லாத்தை ஏற்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். இந்தத் தேர்தல்களில் இருந்து வெளிவந்துள்ள முக்கியமான செய்தி இதுதான். இது இந்தியாவிற்கும் முக்கியமானது.” என்றார்.

“இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான ஒத்துழைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கவும், முன்பு இருந்த நல்லுறவை மீட்டெடுக்கவும் நாங்கள் நம்புகிறோம், இதனால் வங்கதேச மக்கள் பயனடைவார்கள். பொருளாதாரம், தாரிக் ரஹ்மானின் மிகப்பெரிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை நீங்கள் காண்பீர்கள்.” என்கிறார் வீணா சிக்ரி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU