Home தேசிய national tamil ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை கொல்ல இந்த ‘விஷ தவளை’ பயன்படுத்தப்பட்டதா?

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை கொல்ல இந்த ‘விஷ தவளை’ பயன்படுத்தப்பட்டதா?

7
0

SOURCE :- BBC NEWS

விஷத்தன்மையுள்ள தவளை

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தென் அமெரிக்காவில் உள்ள ‘விஷ டார்ட் தவளைகளில்’ காணப்படும் ஒரு கொடிய நச்சைப் பயன்படுத்தி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டார் என்று பிரிட்டனும் அதன் சில ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன.

“நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எபிபடிடின் (epibatidine) தடயங்கள் கண்டறியப்பட்டன. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சைபீரிய சிறைச்சாலையில் அவரது மரணத்திற்கு காரணமாக அமைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது” என்று பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சை பிரயோகிப்பதற்கான “வழிமுறைகள், நோக்கம் மற்றும் வாய்ப்பு” ஆகியவை ரஷ்ய அரசிடம் மட்டுமே இருந்ததாக பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யா இந்த ஆய்வு முடிவை “ஒரு தகவல் பிரசாரம்” என்று நிராகரித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அந்த நச்சு எது?

எபிபடிடின் என்பது விஷ டார்ட் தவளையின் தோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு இயற்கை நியூரோடாக்ஸின் (neurotoxin) நச்சு என்று நச்சுயியல் நிபுணர் ஜில் ஜான்சன் கூறுகிறார்.

இது மார்ஃபினை விட “200 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது” என்று அவர் பிபிசி ரஷ்ய மொழி சேவையிடம் தெரிவித்தார்.

எபிபடிடின் இயற்கையாக தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் விஷ டார்ட் தவளைகளில் காணப்படுகிறது. இதனை, ஒரு ஆய்வகத்திலும் தயாரிக்கலாம்.

‘பிடிக்கப்பட்ட விஷ டார்ட் தவளைகள் இந்த நச்சுத்தன்மையை உற்பத்தி செய்வதில்லை, இது ரஷ்யாவில் இயற்கையாகக் காணப்படுவதில்லை’ என்று ஐரோப்பிய நாடுகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளன.

அந்தோணியின் விஷ டார்ட் தவளை மற்றும் பேண்டஸ்மல் விஷத் தவளை என அறியப்படும் இனங்கள் தங்களது தோலில் இந்த நச்சைச் சுரக்கும்.

வலி நிவாரணி மற்றும் நுரையீரல் அழற்சி நிலைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு எபிபடிடின் ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும், அதன் நச்சுத்தன்மை காரணமாக அது மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

அலெக்ஸி நவால்னி

பட மூலாதாரம், Getty Images

தவளை விஷம் எப்படி வேலை செய்கிறது?

ஜான்சனின் கூற்றுப்படி, இந்த சக்தி வாய்ந்த ரசாயன கலவை நரம்பு மண்டலத்தில் உள்ள நிகோடினிக் ஏற்பிகளின் மீது செயல்படுகிறது.

ஏனெனில் இது இந்த நரம்பு ஏற்பிகளை அதிகப்படியாகத் தூண்டுகிறது, இது சரியான அளவில் செலுத்தப்பட்டால், தசை துடிப்பு, முடக்கம், வலிப்பு, குறைந்த இதயத் துடிப்பு, சுவாச செயலிழப்பு மற்றும் இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

பிஏ செய்தி முகமையிடம் லீட்ஸ் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் நச்சுயியல் பேராசிரியர் அலஸ்டெர் ஹே, ”இதன் விளைவுகள் சுவாசம் தடைபட வழிவகுக்கும். இந்த நஞ்சால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத் திணறலால் இறக்க நேரிடும்” என்று கூறினார்.

ஒருவரின் ரத்தத்தில் இந்த நச்சு காணப்படுவது “திட்டமிட்ட முறையில் அது செலுத்தப்பட்டதையே உணர்த்துகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

“சில பிற மருந்துகளுடன் சேர்த்துச் செலுத்துவதன் மூலம் எபிபடிடின் நச்சுத்தன்மை அதிகரிக்கப்படலாம், இந்த சேர்க்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன,” என்று ஹே கூறினார்.

அலெக்ஸி நவால்னி

பட மூலாதாரம், Getty Images

இந்த நச்சு எவ்வளவு அரிதானது?

எபிபடிடின் மிகவும் அரிதானது மற்றும் ஒரே ஒரு புவியியல் பிராந்தியத்தில் மட்டுமே மிகக் குறைந்த அளவில் காணப்படுகிறது என்று ஜான்சன் கூறினார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிறரால் குறிப்பிடப்பட்ட விஷத் தவளை, ஈக்வடார் மற்றும் பெருவைச் சேர்ந்த ‘அந்தோணியின் விஷ டார்ட் தவளை’ என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

எபிபடிடினை உருவாக்கும் ஆல்கலாய்டுகளை (ஒரு வகை கரிம கலவை) உற்பத்தி செய்யத் தேவையான சரியான உணவுகளை உண்பதன் மூலம் தவளைகள் இந்த ரசாயனத்தை (எபிபடிடின்) உற்பத்தி செய்து அதைத் தங்கள் தோலில் சேமிக்கின்றன.

தவளையின் உணவு மாறினால், அதன் எபிபடிடின் இருப்பு தீர்ந்துவிடும்.

”தேவையான ஆல்கலாய்டுகளை உருவாக்க சரியான உணவைத் துல்லியமாக உண்டு கொண்டிருக்கும் ஒரு காட்டு தவளையை சரியான இடத்தில் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட முடியாத விஷயம்” என்று ஜான்சன் கூறினார்.

“இது மனிதர்களுக்கு விஷம் கொடுக்கும் ஒரு நம்பமுடியாத அரிதான முறையாகும். எனக்குத் தெரிந்த மற்ற எபிபடிடின் விஷ பாதிப்புகள் ஆய்வகத்தில் ஏற்பட்டவை என்பதுடன் அவை உயிரிழப்பை ஏற்படுத்தாதவை.”

ரஷ்யா என்ன கூறியுள்ளது?

நவால்னி இந்த மர்மமான நச்சால் இறந்ததை ஐரோப்பிய ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் சனிக்கிழமை தெரிவித்தன.

நவால்னி இயற்கையான காரணங்களால் இறந்ததாக மாஸ்கோ முன்பு கூறியிருந்தது, இருப்பினும் நவால்னியின் மனைவி யூலியா நவால்னாயா தனது கணவர் விஷம் கொடுத்து “கொலை செய்யப்பட்டதாக” தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.

லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், நவால்னியின் மரணத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை மறுத்தது மற்றும் இந்த ஆய்வு முடிவுகளை “மேற்கத்திய கற்பனையாளர்களின் உயிரற்ற பிரசாரம்” என்று விவரித்தது.

ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ்ஸிடம்,”அனைத்துப் பேச்சுக்களும் அறிக்கைகளும் மேற்கின் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில் செய்யப்படும் ஒரு தகவல் பிரசாரமாகும்,” என்று கூறினார்.

முன்னாள் பிரிட்டன் மற்றும் நேட்டோ மூத்த அதிகாரியும், ரசாயன ஆயுத நிபுணருமான ஹமிஷ் டி பிரெட்டன்-கோர்டன், நவால்னியின் மரணம் உட்பட ரஷ்யா எதைச் சொன்னாலும் அதை “சந்தேகத்துடன்தான்” மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அவர் பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் பேசுகையில், நேட்டோ நாடுகள் “நவால்னி அரசால் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் தங்களிடம் இருப்பதை நிரூபித்துள்ளன” என்று கூறினார்.

அவர் இறக்கும் போது, நவால்னி மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருந்திருந்தார்.

ரஷ்யாவின் கூற்றுப்படி, 47 வயதான அவர் ஒரு சிறிய நடைப்பயணம் மேற்கொண்டார், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார், பின்னர் சரிந்து விழுந்தவர் மீண்டும் சுயநினைவை பெறவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU