Home தேசிய national tamil மெகெல்லன்: 16ஆம் நூற்றாண்டின் ரத்தவெறி கொண்ட கொடூரமான காலனித்துவ மாலுமியா?

மெகெல்லன்: 16ஆம் நூற்றாண்டின் ரத்தவெறி கொண்ட கொடூரமான காலனித்துவ மாலுமியா?

4
0

SOURCE :- BBC NEWS

மெகெல்லன்: 16ஆம் நூற்றாண்டின் ரத்தவெறி கொண்ட கொடூரமான காலனித்துவ மாலுமியா?

பட மூலாதாரம், Getty Images

ஒரு பிரபலமான போர்த்துகீசிய மாலுமியின் திருப்புமுனைப் பயணத்தின் கதையைக் கூறும் ஒரு புதிய திரைப்படமான மெகெல்லன் வெளியாகியுள்ளது. அந்த மாலுமி ஒரு முன்னோடியாக நினைவுகூரப்படுகிறார். ஆனால் சிலர் அவர் அதிகப்படியான வன்முறையாளர், ரத்தவெறி கொண்டவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் கதை, இந்தோனீசியாவில் “மசாலா தீவுகள்” என்று அழைக்கப்பட்ட இடங்களுக்கு ஒரு புதிய கடல் வழியை உருவாக்கும் பெரும் லட்சியங்களைக் கொண்டிருப்பதில் தொடங்குகிறது. அவர் தனது சொந்த நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு தப்பிச் சென்று அரசர் முதலாம் சார்ல்ஸின் ஆதரவுடன், ஒரு கடினமான கடல் பயணத்தை மேற்கொள்கிறார்.

அப்போது அவரது குழுவினர் பலர் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் ஸ்கர்வி நோயால் இறக்கின்றனர் அல்லது கலகம் செய்ததற்காகக் கொல்லப்படுகின்றனர். அந்த நேரத்தில் பிலிப்பின்ஸ் என்று அழைக்கப்படும் மக்டன் தீவை அடைந்த மெகெல்லன், உள்ளூர் மக்களுடனான போரின்போது கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்.

கடந்த 1519ஆம் ஆண்டு அவர் தொடங்கிய இந்த மிக முக்கியமான பயணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலை கிட்டத்தட்ட ஒரு புராணக் கதை போல மாறிவிட்டது. பல வரலாற்று ஆசிரியர்கள் ஒரு கப்பல் உலகம் முழுவதும் பயணம் செய்தது இதுவே முதல் முறை என்கின்றனர். மெகெல்லன் 1521இல் மக்டன் தீவில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது குழுவின் மற்றொரு கேப்டனான ஜுவான் செபாஸ்டியன் எல்கானோ அடுத்த ஆண்டில் ஸ்பெயினுக்கு திரும்பும் பயணத்தை முடித்தார்.

லாரன்ஸ் பெர்கிரீன் என்ற எழுத்தாளர், மெகெல்லனின் சாதனைகள் கிறிஸ்டோபர் கொலம்பஸின் சாதனைகளைவிட மிக முக்கியமானவை என்கிறார். நாசாகூட அதன் விண்கலங்களில் ஒன்றுக்கு அவரது பெயரைச் சூட்டியது. இருப்பினும், அவரது முக்கியத்துவம் குறித்த விஷயத்தில் சிலர் உடன்படவில்லை. அவர் ஸ்பெயின் வரையிலான முழுமையான பயணத்தையும் முடிக்கும் வரை உயிர் வாழவில்லை என்பதே அதற்குக் காரணம்.

மெகெல்லன் ஒரு சர்ச்சைக்குரிய நபராகக் காணப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவர் தனது சொந்த நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகவும், சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். சிலர் அவர் தனது கப்பல்களில் ஒரு கொடூரமான தலைவராக நடந்து கொண்டதாகவும், மக்டனில் உள்ள மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறுகிறார்கள்.

கடந்த 2022ஆம் ஆண்டில்கூட, வரலாற்று ஆசிரியர் ஃபெலிப் ஃபெர்னாண்டஸ்-ஆர்மெஸ்டோ தனது ‘ஸ்ட்ரெய்ட்ஸ்: பியாண்ட் தி மித் ஆஃப் மெகெல்லன்’ என்ற புத்தகத்தில் மெகெல்லனை ஒரு நாயகனாகக் கருதுவதைக் கேள்விக்கு உட்படுத்தினார். மெகெல்லன் பொறுப்பற்றவர், தீவிரமானவர் என்று அவர் விவரித்தார். மேலும் பலர் இறந்ததால், சுமார் 270 மாலுமிகளில், 18 பேர் மட்டுமே ஸ்பெயினுக்கு திரும்பியதாக நம்பப்படுகிறது. இந்தப் பயணம் லாபம் ஈட்டாத காரணத்தால் அது முழுமையான தோல்வி என்றும் எழுத்தாளர் ஃபெர்னாண்டஸ்-ஆர்மெஸ்டோ குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, ஏகாதிபத்தியம், அடிமைத்தனம், தீவிர வன்முறை, பழங்குடி மக்களை நியாயமற்ற முறையில் நடத்துவதை ஆதரிப்பது ஆகியவற்றை மெகெல்லன் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனால்தான், மெகெல்லனை ஒரு சிறந்த முன்னோடியாக நினைவுகூர வேண்டுமா அல்லது பிறருக்குத் துரோகம் செய்த அதிகார வெறிகொண்ட தலைவராக நினைவுகூர வேண்டுமா என்று இன்னும் விவாதிக்கப்படுகிறது.

அவரது உலகம் முழுவதுமான பயணம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாக இருப்பது, மெகெல்லனின் மரபை இன்னும் இருண்டதாக மாற்றுகிறது. மெகெல்லனை பற்றி நாம் அறிந்தவற்றில் பெரும்பாலானவை அவரது கப்பலில் இருந்த வரலாற்று ஆசிரியர் அன்டோனியோ பிகாஃபெட்டாவால் வந்தவை. அவர் மெகெல்லனின் உதவியாளராகச் செயல்பட்டார். ஆனால் ஃபெர்னாண்டஸ்-ஆர்மெஸ்டோவால் மெகெல்லனின் “மக்கள் தொடர்பு முகவராக” வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

மெகெல்லன்: 16ஆம் நூற்றாண்டின் ரத்தவெறி கொண்ட கொடூரமான காலனித்துவ மாலுமியா?

பட மூலாதாரம், Janus Films

மெகெல்லனின் கதையை மாற்றுதல்

மெகெல்லனின் பயணத்தின் சொந்த அரை-கற்பனையான கதையை உருவாக்க, மெகெல்லன் திரைப்படத்தின் எழுத்தாளர் டயஸ் ஏழு ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டார், லிஸ்பனில் உள்ள காப்பகங்களைப் பார்வையிட்டார். ஆரம்பத்தில் அவரது கவனத்தை ஈர்த்தது மெகெல்லனின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுக்கால மனைவி பியாட்ரிஸ் பார்போசா டி மெகல்லன்ஸ்தான்.

“ஆனால், பின்னர் எனது ஆராய்ச்சியின்போது, குறிப்பாக, கதையைச் சமநிலைப்படுத்தவும், மலாய் கண்ணோட்டத்தை அதில் வைக்கவும் ஒரு வாய்ப்பைக் கண்டதால், மெகல்லன் மிகவும் சுவாரஸ்யமானவர் என்று நினைத்தேன். ஏனெனில் இது எப்போதும் மெகல்லனை பற்றியது,” என்று டயஸ் பிபிசியிடம் கூறுகிறார்.

கதையை மறுபரிசீலனை செய்வதில், மெகெல்லனின் 10 ஆண்டுக்கால அடிமையான மலாக்காவின் என்ரிக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதும் அடங்கும். மெகெல்லன் பிலிப்பின்ஸுக்கு தனது பயணத்தைத் தொடங்கும் முன்பு, அவர் மலேசிய நகரமான மலாக்காவில் முன்னாள் இஸ்லாமியரான என்ரிக்கை விலைக்கு வாங்கி ஸ்பெயினுக்கு அழைத்துச் சென்றார்.

மக்டனுக்கு வந்தவுடன், மெகெல்லனின் குழுவினர் என்ரிக் அப்பகுதியிலுள்ள மக்களின் தாய்மொழியைப் பேசுவதைக் கண்டு திடுக்கிட்டனர். அவர் அதற்கு அருகிலேயே வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள், மெகெல்லன் குழுவினர் எவருக்கும் முன்பாகவே, அந்தப் பகுதிக்குத் திரும்பி வந்ததன் மூலம் என்ரிக் ஏற்கெனவே உலகைச் சுற்றி வந்திருக்கலாம் என்றுகூட ஊகித்துள்ளனர்.

டயஸின் படம் அந்தக் காலகட்டத்தில் நிலவிய அடிமைத்தனத்திற்கு எதிரான வர்த்தக உணர்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஸ்பானிஷ் நீதிமன்றத்தின் சக உறுப்பினரால் மெகெல்லன் எச்சரிக்கப்படுகிறார். ஸ்பானிஷ் அரச சபையின் உறுப்பினரான ஃப்ரே பார்டோலோம் டி லாஸ் காசாஸ், அடிமைத்தனத்திற்கு எதிராகப் பிரசங்கித்தார். அதே நேரத்தில் புதிய சட்டங்கள் 1570இல் போர்ச்சுகலில் அடிமை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தின.

மெகெல்லனின் வாழ்க்கையைப் பற்றிய உறுதியான உண்மைகள் குறைவாக இருந்தாலும், பெரும்பாலும் நிலவும் கதை அவரது வீரத்தைப் பற்றியதாகவே உள்ளது. மறுபுறம், டயஸின் மெகெல்லன், அர்மடா டி மாலுகோவில் தனது குழு உறுப்பினர்களை நடத்திய விதம் பற்றி நமக்குத் தெரிந்தவற்றைத் தயக்கமின்றிக் காட்டுகிறது. அதில், அவர்களில் ஒருவரை தன்பாலின உறவுக்காகக் கொன்றது, அவரது சித்தப்பிரமை அதிகரித்தபோது பாதிரியார் பெட்ரோ சான்செஸ் டி ரெய்னாவை முடங்கச் செய்தது ஆகியவை அடங்கும். கலகங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன. மேலும் நவம்பர் 1520இல் கடற்படையின் ஐந்து கப்பல்களில் ஒன்றான சான் அன்டோனியோவும் அதன் மொத்த குழுவினரும் பணியை விட்டு விலகினர்.

மெகெல்லன்: 16ஆம் நூற்றாண்டின் ரத்தவெறி கொண்ட கொடூரமான காலனித்துவ மாலுமியா?

பட மூலாதாரம், Alamy

பாதுகாப்பின்மை காரணமாக இத்தகைய கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டிய கட்டாயம் மெகெல்லனுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் அவர் தனது சொந்த நாட்டைவிட்டு வெளியேறுவதன் மூலம், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் இரண்டிலுமே தனக்கான ஆதரவை இழந்தார்.

வரலாற்றுப் பேராசிரியர் ஜோவா பாலோ ஒலிவேரா இ கோஸ்டா கூறுகையில், மெகெல்லன் காஸ்டிலியன் இல்லை (ஸ்பெயினில் இருந்து வந்தவர் அல்ல) என்பதால் சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறினார்.

எனவே, “ஸ்பானிஷ் பிரபுக்கள் அவரது அதிகாரத்தை முழுமையாக மதிக்கவில்லை. அவரது ஸ்பானிஷ் கேப்டன்களில் சிலர் பயணத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள விரும்பினர். இதன் காரணமாக கிளர்ச்சிகளைத் தடுக்க தண்டனைகள் மிகவும் கடுமையாக இருக்க வேண்டியிருந்தது. மெகெல்லன் அவர்களைக் கொல்லவில்லை என்றால் அவர்கள் அவரைக் கொன்றிருக்கலாம்,” என்று பேராசிரியர் கூறுகிறார்.

டயஸின் படத்தில், காலனித்துவ காலத்தில் மெகெல்லன் மற்றும் அவரது குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட வன்முறை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் குவாமில் தரையிறங்கியபோது ஒரு சிறிய படகு திருடப்பட்டது. அப்போது மாலுமிகள் உள்ளூர் பழங்குடிகளை வன்முறையைப் பயன்படுத்திப் பழிவாங்கி, அவர்களின் வீடுகளை எரித்தனர். மலாக்கா மற்றும் பிலிப்பின்ஸில் உள்ள மக்களும் இதேபோன்ற கொடுமையை எதிர்கொண்டனர்.

இருப்பினும், டயஸ் இந்த வன்முறையைப் பிற பல படங்களில் இருந்து வித்தியாசமாகக் காட்டுகிறார். தி நைட்டிங்கேல் அல்லது சோல்ஜர் ப்ளூ போன்ற படங்கள் வன்முறைக் காட்சிகளை நாடகத்தனமாகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலும் காட்டுகின்றன. இதில் டயஸ் அந்த பாணியை தவிர்த்துள்ளார். மெகெல்லனின் கதை மிகப்பெரியது, முக்கியமானது என்று அவர் கூறுகிறார். ஆனால், அதை வழக்கமான முறையில் நாடகத்தனமான அதிரடி காட்சிகளுடன் காட்ட அவர் விரும்பவில்லை.

“நான் காவல்துறை தொடர்பான செய்திகளைச் சேகரித்த இளம் நிருபராக பணியாற்றியுள்ளேன். அப்போது வன்முறையை அல்ல வன்முறையின் விளைவுகளை மட்டுமே பார்த்துள்ளேன். அதைக் காட்டுவது மனித துன்பங்களை மதிக்காத செயல் எனக் கருதுகிறேன்” என்று அவர்

மெகெல்லன்: 16ஆம் நூற்றாண்டின் ரத்தவெறி கொண்ட கொடூரமான காலனித்துவ மாலுமியா?

பட மூலாதாரம், Getty Images

மெகெல்லன் திரைப்படத்தில் குறைகள் இருந்தபோதிலும், டயஸ் அவரை பேய்த்தனமாகச் சித்தரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. “நான் ஒரு உண்மையான கதாபாத்திரத்தைப் பார்க்க விரும்பினேன். ஓர் உண்மையான மனிதன், லட்சியவாதி, தனக்கோ, தனது குடும்பத்திற்கோ மட்டுமே அல்லாத கனவுகளைக் கொண்டிருப்பான். அவன் உண்மையிலேயே கிறிஸ்தவத்தை நம்பினான்,” என்று மெகெல்லன் பற்றி டயஸ் வலியுறுத்துகிறார்.

பிலிப்பின்ஸுடன் தொடர்புகொண்ட முதல் ஐரோப்பியராக பரவலாகக் கருதப்படுவதோடு, இந்தப் பகுதியில் கத்தோலிக்க மதத்தை அறிமுகம் செய்வதற்கும் மெகெல்லன் பொறுப்பேற்றார். உள்ளூர்த் தலைவர் ராஜா ஹுமாபோனுக்கு மெகெல்லன் பரிசளித்த சான்டோ நினோ (புனித குழந்தை) சிலை, அந்தச் சமூகத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை அற்புதமாகக் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது, “இன்னும் நாட்டின் மிகப்பெரிய சின்னமாக” உள்ளதாக டயஸ் கூறுகிறார். இன்று பிலிப்பின்ஸில் 93% மக்கள் கிறிஸ்தவர்கள்.

மெகெல்லனை கொன்றது யார்?

மக்டன் போரில் மெகெல்லன் எப்படி இறந்தார் என்பது பற்றிய பழைய கதைகளையும் டயஸ் கேள்விக்குள்ளாக்க முயல்கிறார். பிகாஃபெட்டா என்ற எழுத்தாளர் தனது நாட்குறிப்பில் சுமார் 2,000 மலாய் வீரர்கள் மீதமிருந்த 60 குழு உறுப்பினர்களுக்குத் எதிராகப் போரிட்டதாகவும், லாபுலாபு என்ற உள்ளூர்த் தலைவர் மெகல்லனை கொன்றதாகவும் எழுதினார். ஆனால், டயஸ் இந்தக் கதையை முழுமையாக நம்பவில்லை. “லாபுலாபுவை யாரும் உண்மையில் பார்க்கவில்லை என்றாலும், மக்கள் பிகாஃபெட்டாவின் பதிப்பை ஏற்றுக் கொள்வதால் இதுவொரு தீர்க்கப்படாத மர்மமாக எனக்குத் தோன்றுகிறது” என்று அவர் கூறுகிறார். டயஸின் படத்தில், கதை வேறுபட்டது. ஹுமாபோன் என்ற மற்றொரு தலைவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக லாபுலாபுவை காட்டுகிறார். அவர் மெகெலன்னையும் அவரது குழுவினரையும் பயமுறுத்துவதற்காக ஒரு மர்மமான, கிட்டத்தட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட நபராகக் காட்டப்படுகிறார்.

“ஹுமாபோன் கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யப்படுவதை விரும்பவில்லை” என்று டயஸ் கூறுகிறார். “அதன் பிறகு ஹுமான்போன் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என்று மெகெல்லன் கூறினார். ஏனெனில், மதமாற்றம் செய்ய விரும்பாத எவரும் இறக்க வேண்டும் என்ற ஆணையை அவர் கொண்டிருந்தார்.”

படத்தில் மெகெல்லன் ஒரு குறிப்பிட்ட நபரால் கொல்லப்படுவதாகக் காட்டப்படவில்லை. அதற்கு மாறாக அது ஹுமாபோனின் ஆட்களுடைய கூட்டு முயற்சி என்று மறைமுகமாகக் கூறப்படுகிறது.

மெகெல்லன்: 16ஆம் நூற்றாண்டின் ரத்தவெறி கொண்ட கொடூரமான காலனித்துவ மாலுமியா?

பட மூலாதாரம், Getty Images

கடந்த செப்டம்பரில் பிலிப்பின்ஸில் இந்தப் படம் வெளியானபோது, லாபுலாபு ஓர் உண்மையான நபர் இல்லை என்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. லாபுலாபுவுக்கு அங்கு நிலவிய புகழ்பெற்ற அந்தஸ்தின் காரணமாகவே இந்த சர்ச்சை ஏற்பட்டது. ஃபெர்டினாண்ட் மெகெல்லன்: தி அர்மடா டி மாலுகோ அண்ட் தி ஐரோப்பியன் டிஸ்கவரி ஆஃப் தி பிலிப்பின்ஸ் (2016) என்ற புத்தகத்தின் ஆசிரியரும் வரலாற்று ஆசிரியருமான முனைவர் டானிலோ எம் ஜெரோனாவின் கூற்றுப்படி, லாபுலாபு நீண்ட காலமாக “நினைவுச் சின்னங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பெயர்களில் பிலிப்பின்ஸ் தேசியவாதத்தின் அடையாளமாக” இருந்தார்.

இருப்பினும், “அவரைப் பற்றி நமக்குத் தெரிந்தவற்றில் பெரும்பாலானவை வாய்மொழி பரிமாற்றங்களில் இருந்து பெறப்பட்ட நாட்டுப்புறக் கதைகளில் இருந்து கிடைத்தவை. இந்தக் காரணத்திற்காக, அறிஞர்கள் மத்தியில் அவர் மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை,” என்கிறார் அவர். அதேநேரம், டயஸின் படம், பெயர் குறிப்பிடப்படாத இரண்டு வரலாற்று ஆசிரியர்களை “தி ஃப்ரீமேன்” என்ற பிலிப்பின்ஸ் நாளிதழில், லாபுலாபு பற்றிய டயஸின் அணுகுமுறையை மறுக்க வைத்தது.

பிலிப்பின்ஸில், காலப்போக்கில் மக்கள் மெகெல்லனை பற்றி வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தனர். முன்னதாக, அவர் “கத்தோலிக்க நம்பிக்கையின் பாதுகாவலராக” காணப்பட்டார். ஆனால் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே ஆட்சியில் இருந்த காலத்தில் (2016-2022), நாட்டில் வலுவான தேசியவாத உணர்வுகள் வளர்ந்தன. அதோடு மெகெல்லன் பிரபலமடையவில்லை. இன்று, குறிப்பாக மேற்கத்திய எதிர்ப்பு கருத்துகள் அதிகரித்து வருவதால், பல இளைஞர்கள் அவரை விரும்பவில்லை.

பிலிப்பின்ஸ் வரலாற்றில் அவர் உண்மையில் எவ்வளவு முக்கியமானவர் என்பது குறித்தும் விவாதம் உள்ளது. வரலாற்று ஆசிரியரும் நாட்டின் தேசிய வரலாற்று ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அம்பேத் ஒகாம்போ, மெகெல்லனை பிலிப்பின்ஸ் வரலாற்றின் தொடக்கப் புள்ளியாகக் காணக்கூடாது எனக் கூறியுள்ளார். அதற்கு மாறாக, ஒவ்வொரு புதிய தலைமுறைக்கும் ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் சொல்லப்பட வேண்டிய நீண்ட வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வாக மட்டுமே அவரைப் பார்க்க வேண்டும் என்கிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, மெகெல்லன் போன்ற ஒரு மாலுமியைப் பற்றி மக்கள் மாறுபட்ட, சிக்கலான கருத்துகளைக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. அவரது உண்மையான நோக்கங்கள்கூட இன்னும் நிச்சயமற்றவையாகவே உள்ளன. மெகெல்லன் உண்மையில் உலகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிடவில்லை என்று ஒலிவேரா இ கோஸ்டா என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.

இருப்பினும், மெகெல்லன் முக்கியமான விஷயங்களை சாதித்ததாக அவர் கூறுகிறார். “அட்லான்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் கடல் வழியைக் கண்டுபிடித்தார். பசிபிக் பெருங்கடல் உண்மையில் எவ்வளவு பெரியது என்பதைக் காட்டினார். அவரது பயணத்திற்குப் பிறகு, வரைபடத் தயாரிப்பாளர்களால் மூன்று பெரிய பெருங்கடல்களைக் காட்டும் உலக வரைபடங்களை உருவாக்க முடிந்தது. மேலும், சக்திவாய்ந்த இடத்தில் இருந்தவர்கள் இறுதியாக பூமியின் உண்மையான அளவைப் புரிந்துகொண்டனர்,” என்று அவர் விளக்கினார்.

படத்தின் இறுதியில், மெகெல்லன் அல்லது அவரது இணைத் தலைவர் எல்கானோவின் பார்வையில் இருந்து அல்லாமல், மலாக்காவின் என்ரிக்கினுடைய பார்வையில் இருந்து கதை முடிகிறது. என்ரிக் குழப்பமாகவும் பதற்றமாகவும் உணர்கிறார். மக்டன் தீவில் இன்னும் சிக்கித் தவித்த போர்த்துகீசியர்களை, ஸ்பானியர்களை கொல்லத் தான் உதவியதாக அவர் ஒப்புக்கொள்கிறார். அதேநேரத்தில், காலனித்துவ ஆட்சியின் காரணமாகத் தானும் பிற மலாய்க்காரர்களும் சந்தித்த வன்முறை மற்றும் துன்பங்களைப் பற்றியும் அவர் சிந்திக்கிறார்.

மெகெல்லனின் பயணம் பற்றிய மிகவும் வெளிப்படையான, சமநிலையான விவாதத்தை இந்தப் படம் தொடக்கி வைக்கும் எனத் தான் நம்புவதாக டயஸ் கூறுகிறார். “இது ஐரோப்பிய கண்ணோட்டத்தை மட்டுமின்றி, வெவ்வேறு கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியது” என்கிறார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU