Home தேசிய national tamil முதல் போட்டியில் இந்தியா ஆடிய விதம் பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன?

முதல் போட்டியில் இந்தியா ஆடிய விதம் பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறியது என்ன?

5
0

SOURCE :- BBC NEWS

டி20 உலகக்கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், சூர்யகுமார்

பட மூலாதாரம், AFP via Getty Images

8 பிப்ரவரி 2026, 08:49 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

சனிக்கிழமை மும்பையின் வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அமெரிக்க அணியை இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இப்போட்டியில் பலமான அணியாகக் கருதப்பட்ட இந்தியாவின் நிலை ஒரு கட்டத்தில் அவ்வளவு சிறப்பாக இல்லை.

டாஸ் வென்ற அமெரிக்கா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் அமெரிக்க அணியின் முடிவு சரியானது என்பதை நிரூபித்தது. முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார், பின்னர் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் சூர்யகுமார் 84 ரன்கள் எடுத்து அணியை இக்கட்டில் இருந்து மீட்டார்.

இந்தப் போட்டி பாகிஸ்தானில் பெரிதும் பேசப்பட்டது. மறுபுறம், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் அணி மிகச் சிரமப்பட்டே வெற்றி பெற்றிருந்தது.

சனிக்கிழமை இலங்கையில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணி மூன்று பந்துகள் மீதமிருந்த நிலையில் நெதர்லாந்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரம்பப் போட்டிகளைப் பற்றிப் பேசுகையில், முடிவுகள் இரு அணிகளுக்குமே சாதகமாக அமைந்தன. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களை விட வலு குறைந்ததாகக் கருதப்படும் அணிகளுக்கு எதிராக போராடிய விதம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

கேப்டன் சூர்யகுமாரின் சிறப்பான இன்னிங்ஸ் பாகிஸ்தானில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், சூர்யகுமார் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக விளையாடி நிரூபித்துள்ளதாக தெரிவித்தனர்.

சூர்யகுமாருக்கு பாராட்டு

டி20 உலகக்கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், சூர்யகுமார்

பட மூலாதாரம், AFP via Getty Images

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில் சூர்யகுமார் தன்னுடைய ஃபார்முக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

“ஒருகட்டத்தில், இந்தியா 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால், சூர்யகுமார் அந்த நிலைமையை மிகவும் சிறப்பாக கையாண்டார். கடந்த ஆறு முதல் எட்டு மாதங்கள் அவருக்கு மிகக் கடுமையான மாதங்களாக இருந்தன, எனினும் அவர் சரியான நேரத்தில் ‘கம்பேக்’ கொடுத்துள்ளார்.” என்றார் பட்.

சல்மான் பட் கூறுகையில், “சனிக்கிழமை காலையில் (நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில்) பாகிஸ்தான் சிக்கிக் கொண்டது போல, இந்தியாவும் சரிவில் இருந்து மீண்டது. ஒரு பெரிய அணிக்கும் சிறிய அணிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒரு வீரர் கூட நன்றாக விளையாடினால், அவர் எதிரணியை வீழ்த்திவிடுவார்.” என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி கூறுகையில், “சூர்யகுமார் 36 பந்துகளில் அரை சதமடித்தார். பிறகு தன்னுடைய அணுகுமுறையை மாற்றி ஆக்ரோஷமாக பேட்டிங் செய்தார். அவர் அடித்த அனைத்து சிக்ஸர்களும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு அப்பால் வீசப்பட்ட பந்துகளாகும். அந்த மைதானத்தில் பலமுறை விளையாடியவர் என்பதால், மைதானத்தின் அனைத்து அம்சங்களையும் அவர் அறிந்திருந்தார். சூர்யகுமார் நிலைமையை மிகச் சிறப்பாக சமாளித்தார்.” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, மறுபுறம் சூர்யகுமார் உறுதியாக விளையாடினார். மிக சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்தார். நான் மொத்தம் 130-35 ரன்கள் மட்டுமே எடுப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஆனால் எல்லா பெருமையும் சூர்யகுமாருக்குத்தான் சேரும். அவரே ஆட்ட நாயகன் ஆனார்.” என்றார்.

எனினும், சூர்யகுமாரின் ஆட்டத்திற்கான பாராட்டை கௌதம் கம்பீருக்கு வழங்கினார் சக்லைன் முஷ்டாக்.

“சூர்யகுமாரின் சிறப்பான ஆட்டத்திற்கான பாராட்டை கௌதம் கம்பீர் அல்லது அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த தேர்வுக்குழுவினருக்கு அளிக்க வேண்டும். சூர்யகுமாரால் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்த முடியாத தருணங்களிலும் அணி நிர்வாகம் அவரை நம்பியது. அவருடைய பொறுப்பு இது என நிர்வாகம் அறிந்திருந்தது, அதை சூர்யகுமாரும் நிரூபித்துவிட்டார்.” என்றார்.

அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா 200 ரன்னுக்கு மேல் குவிக்கும் என மக்கள் நினைத்தனர் என அவர் கூறுகிறார். ஏனெனில், இதே அணிதான், தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பவுலிங்குக்கு எதிராக விளையாடி 200 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹஃபீஸ் கூறுகையில், “அணிக்கு வந்ததிலிருந்து சூர்யகுமார் தன் ஆட்டத்தால் ஈர்த்துள்ளார். சிறப்பாக விளையாடாத போதும் அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தது. அவர் நான்காவது இடத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்தார். அவருடைய பொறுப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டார்.” என்றார்.

‘ இப்படி ஒரு ஆடுகளத்தை பார்த்ததில்லை’

டி20 உலகக்கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், சூர்யகுமார்

பட மூலாதாரம், AFP via Getty Images

முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி கூறுகையில், “மும்பையில் இதற்கு முன்பு இதுபோன்ற ஆடுகளத்தை பார்த்ததில்லை” என்றார்.

தன் யூடியூப் சேனலில் பேசிய அவர், “இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இப்படி ஒரு போட்டி நடக்கும் என்று யாருக்கும் தோன்றவில்லை. மும்பையில் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த இதுபோன்ற ஆடுகளத்தை நான் பார்த்ததில்லை.” என்றார்.

“டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங்கை தேர்வு செய்தது. ஆறு ஓவர்களில் 44 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி 77 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. அந்த கட்டத்தில் இந்தியா 130-35 ரன்கள் மட்டுமே எடுக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் ஸ்கோர் 167 ரன்களை எட்டியது.”

இந்த டி20 உலகக் கோப்பையில் முதல் நாளின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒப்பீட்டளவில் பலவீனமானவை என்று கருதப்பட்ட அணிகள் (நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்காட்லாந்து) வலுவான அணிகளாக கருதப்பட்ட எதிரணிகளை 200 ரன்கள் எடுக்க அனுமதிக்கவில்லை என்று அவர் கூறினார்.

பசித் அலி கூறுகையில், “அமெரிக்கா 77 ரன்களில் 6 விக்கெட்டுகள் எடுத்தது. அமெரிக்கா அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதில் முக்கிய பங்கு வகித்த அதே அணி இதுவாகும்.” என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்து அணி தோல்வியடைந்தது, ஒரு முக்கியமான கேட்சை தவறவிட்டதால் தான் என்று பசித் அலி கூறுகிறார்.

‘ஜாக்பாட் அடித்த பாகிஸ்தான்’

டி20 உலகக்கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், சூர்யகுமார்

பட மூலாதாரம், AFP via Getty Images

பாகிஸ்தான் நெதர்லாந்துக்கு எதிராக வென்றிருந்தாலும் அந்த அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் ‘உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது’ என்று கூறினார்.

தி கேம் பிளான் சேனலில் பேசிய அக்மல், “கடைசியில் ஃபாஹீம் அஷ்ரஃப் 11 பந்துகளில் 29 ரன்கள் அடித்தார். அதுவொரு சிறப்பான ஆட்டம்.” என்றார்.

டி20 உலகக்கோப்பை, இந்தியா, பாகிஸ்தான், சூர்யகுமார்

பாகிஸ்தான் அணியில் வீரர்கள் விளையாடும் வரிசை தொடர்பாக அணி நிர்வாகம் விமர்சனங்களை சந்தித்தது.

எந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளரை எப்போது களமிறக்குவது என்பதை அணியால் தீர்மானிக்க முடியவில்லை என்று கம்ரான் அக்மல் மற்றும் பசித் அலி இருவரும் தெரிவித்தனர்.

பசித் அலி கூறுகையில், “எப்படி விளையாடுவது, நமது இலக்கு என்ன, ஒவ்வொரு பந்து வீச்சாளரின் சிறப்பு என்ன என்று தெரியாமல் ஒரு அணி விளையாடினால், நிலைமை இப்படித்தான் இருக்கும்.” என்றார்.

மும்பை மற்றும் கொழும்பு ஆடுகளங்கள் குறித்து முன்னாள் வீரர்கள் கூறியது என்ன?

சக்லெயின் முஷ்டாக்

பட மூலாதாரம், AFP via Getty Images

வான்கடே ஆடுகளம் குறித்து பசித் அலி கேள்விகளை எழுப்பிய நிலையில், முன்னாள் பாகிஸ்தானிய வீரர் சக்லைன் முஷ்டாக் இலங்கையின் ஆடுகளம் குறித்து விமர்சித்துள்ளார்.

“இலங்கை மைதானங்களில் இவ்வளவு புல்லை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை.” என்றார் அவர்.

ஒருகட்டத்தில் இந்தியா 77 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்ததற்குக் காரணம் ஆடுகளம்தான் என்று பசித் அலி கூறினார்.

ஆனால் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்து மிகவும் கடுமையான கருத்து பாகிஸ்தான் முன்னாள் ஆஃப்-ஸ்பின்னர் சக்லெயின் முஷ்டாக்கிடமிருந்து வந்தது.

பிடிவியின் (PTV) ‘கேம் ஆன் ஹை’ (Game On Hai) நிகழ்ச்சியில் பேசிய அவர், “பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சை சார்ந்துள்ளது என்பதை ஐசிசி அறிந்திருக்கிறது, எனவே இதைத் தடுக்க, பாகிஸ்தானுக்கு சாதகமாக இல்லாத ஆடுகளங்கள் தயார் செய்யப்படுகின்றன. எனவே, பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் தனது உத்தியை மாற்ற வேண்டும்” என்று கூறினார்.

இந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தினாலும், இந்தப் போட்டிக்கான ஆடுகளங்கள் ஐசிசியின் மேற்பார்வையின் கீழ் தயார் செய்யப்படுகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU