Home தேசிய national tamil முதல் தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி – பெரும் சிக்கலாக மாறிய பந்துவீச்சு

முதல் தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி – பெரும் சிக்கலாக மாறிய பந்துவீச்சு

17
0

SOURCE :- BBC NEWS

பஞ்சாப் கிங்ஸ் படகில் விழுந்த முதல் ஓட்டை... ஆனால், இது பெரிய ஓட்டை!

பட மூலாதாரம், ANI

பஞ்சாப் கிங்ஸ் – 2026 ஐபிஎல் சீசனில் தடுக்க முடியாத அணியாக விளங்கியது. முதல் 7 போட்டிகளில் அந்த அணி ஒன்றில் கூட தோற்றிருக்கவில்லை. 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார்கள். 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. அந்தப் போட்டியிலும் கூட 35/2 என எதிரணியை மிரட்டியிருந்தது பஞ்சாப்.

அவர்களை எந்த அணியாலும் தடுக்க முடியாதோ என்று நினைத்திருந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 28) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது ஷ்ரேயாஸ் ஐயரின் அணி.

பெரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது முதல் தோல்வி தான். ஆனால், இந்தத் தோல்விக்கான காரணம் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது – அவர்களின் வேகப்பந்துவீச்சு.

ராயல்ஸ் அணிக்கெதிரான இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் 14.6 என்ற எகானமியில் பந்துவீசினார்கள். 68 பந்துகள் வீசிய அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியது என்னவோ 1 விக்கெட் மட்டுமே. அதனால் தான் 222 ரன்கள் எடுத்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

சொல்லப்போனால், அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலுமே அதிகமாக ரன்கள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுக்கொண்டிருந்ததால், அவர்களின் பேட்டிங் ஒவ்வொரு அணியையும் மிரட்டிக்கொண்டிருந்ததால் அதிகம் அது விவாதிக்கப்படவில்லை. ஒருசில வல்லுநர்கள் மட்டுமே அதைப் பற்றி சுட்டிக்காட்டியிருந்தார்கள். இந்நிலையில், இந்தத் தோல்வி பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கும் குறையை பெரிதாக்கிக் காட்டியிருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் படகில் விழுந்த முதல் ஓட்டை... ஆனால், இது பெரிய ஓட்டை!

பட மூலாதாரம், ANI

5 போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேல் கொடுத்த பௌலிங்

இந்த சீசன் ஒவ்வொரு போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஒவ்வொரு அணிகளின் ரன்களின் விவரம்

  • குஜராத் டைட்டன்ஸ் – முதல் பேட்டிங் – 162
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – முதல் பேட்டிங் – 209
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மழையால் ஆட்டம் ரத்து
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – முதல் பேட்டிங் – 219
  • மும்பை இந்தியன்ஸ் – முதல் பேட்டிங் – 195
  • லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் – 2வது பேட்டிங் – 200
  • டெல்லி கேபிட்டல்ஸ் – முதல் பேட்டிங் – 264
  • ராஜஸ்தான் ராயல்ஸ் – 2வது பேட்டிங் – 228

இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில், ஏழில் முழுமையாகப் பந்துவீசியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ். அதில் 5 போட்டிகளில் எதிரணிகள் 200 ரன்களோ, அதற்கு மேலோ எடுத்தன.

என்னதான் கடந்த இரு சீசன்களாக பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் ஒரு அணி தொடர்ச்சியாக 200+ ரன்கள் கொடுக்கும்போது அது நிச்சயம் பாதகமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படும். ஏனெனில், ஐபிஎல் போன்ற ஒரு பெரிய தொடரில் பந்துவீச்சின் பலமே ஒரு அணி சாம்பியன்ஷிப் வெல்வதைப் பெரும்பாலும் தீர்மானிக்கும். பஞ்சாப் கிங்ஸ் இங்குதான் பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான யுஸ்வேந்திர சஹாலால் இந்த சீசனில் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. ஒருசில போட்டிகளில் அவர் சிறப்பாகப் பந்துவீசியிருக்கிறார். ஆனால், மற்ற போட்டிகளில் அவரை எதிரணிகள் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன. இந்த சீசன் 9.64 என்ற எகானமியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் சஹால்.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மேலும் கவலை தருவதாக இருக்கிறது. அனைவருமே கிட்டத்தட்ட 10 என்ற எகானமியில் பந்துவீசியிருக்கிறார்கள். அனைவரின் சராசரியுமே 35-க்கும் அதிகமாக இருக்கிறது. ரன்கள் அதிகமாகக் கொடுத்தவர்கள் அதே அளவு விக்கெட் வீழ்த்தவும் தவறியிருக்கிறார்கள். அவர்களுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது அர்ஷ்தீப் சிங் தான் – 8 விக்கெட்டுகள். ஆனால், அவரும்கூட இந்த சீசன் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 20வது இடத்தில் தான் இருக்கிறார்.

இந்த சீசன் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு

  • அர்ஷ்தீப் சிங் – 8 விக்கெட்டுகள் – 41.12 சராசரி – 10.96 எகானமி
  • வைஷாக் விஜயகுமார் – 6 விக்கெட்டுகள் – 36.50 சராசரி – 10.95 எகானமி
  • மார்கோ யான்சன் – 5 விக்கெட்டுகள் – 51.20 சராசரி – 9.36 எகானமி
  • ஜேவியர் பார்ட்லெட் – 5 விக்கெட்டுகள் – 59.40 சராசரி – 11.57 எகானமி

இதுவரை விக்கெட்டுகள் எதுவும் எடுக்காத ஸ்டாய்னிஸ், 14 என்ற எகானமியில் 2 ஓவர்களும், லாகி ஃபெர்குசன் 14.25 என்ற எகானமியில் 4 ஓவர்களும் பந்துவீசியிருக்கிறார்கள்.

ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் தான் முதல் முறையாக 2 முழுநேர ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ். அதற்கு முன்புவரை பெரும்பாலான போட்டிகளில் குறைந்தபட்சம் 16 ஓவர்களை வேகப்பந்துவீச்சாளர்களே வீசினார்கள். அப்படி பெரும்பான்மையான ஓவர்களை வீசியவர்கள், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் தான் பஞ்சாப் இப்படி 200 ரன்களுக்கும் மேல் கொடுக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் படகில் விழுந்த முதல் ஓட்டை... ஆனால், இது பெரிய ஓட்டை!

பட மூலாதாரம், ANI

மற்ற அணிகளின் பலம், பஞ்சாப் அணிக்கு பலவீனம்

இந்த சீசன் பேட்டர்கள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அதே அளவுக்கு வேகப்பந்துவீச்சாளர்களும் திறமையாக விளையாடுகின்றனர். தற்போது வரை பர்ப்பிள் கேப் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருப்பவர்களில் 8 பேர் வேகப்பந்துவீச்சாளர்கள் தான்.

ஒவ்வொரு அணியிலும் ஒருசில வேகப்பந்துவீச்சாளர்கள் போட்டியின் வெற்றியாளர்களாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆர்சிபி அணிக்கு புவனேஷ்வர் குமார் – ஜாஷ் ஹேசில்வுட், ராஜஸ்தான் ராயல்ஸின் ஜோஃப்ரா ஆர்ச்சர் – நாந்த்ரே பர்கர் ஆகியோர் கூட்டணியாக திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். லக்னௌவுக்கு மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், மோசின் கான் ஆகியோர் உள்ளனர். சன்ரைசர்ஸுக்கு இஷான் மலிங்கா & சகிப் ஹுசைன் குஜராத் அணிக்கு ககிஸோ ரபாடா, சிராஜ் & பிரசித் கிருஷ்ணா, சூப்பர் கிங்ஸுக்கு அன்ஷுல் கம்போஜ்… இப்படி இந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை மாற்றக்கூடிய செயல்பாட்டை தங்கள் அணிக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களின் பவர்பிளே பங்களிப்பு பல போட்டிகளில் முடிவைத் தீர்மானிக்கிறது. சமீபத்திய ஒருசில செயல்பாடுகளைப் பார்த்தால் அது தெளிவாகப் புரியும். புவனேஷ்வர் குமார் – ஹேசில்வுட் இணைந்து டெல்லி கேபிட்டல்ஸின் 6 விக்கெட்டுகளைப் பவர்பிளேவில் வீழ்த்தினார்கள். சிஎஸ்கே அணி, 3வது ஓவர் முடிவிலேயே இம்பேக்ட் வீரரைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளினார்கள் ரபாடா & சிராஜ் இருவரும்.

இப்படியொரு சீசனில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் தான் பந்துவீச்சாளர்களிடமிருந்து நல்ல பங்களிப்பு வராமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பவர்பிளேவில்.

இந்தியாவுக்காக அதிக சர்வதேச டி20 விக்கெட்டுகள் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் கடந்த டி20 உலகக் கோப்பையிலிருந்தே பெரிய தாக்கம் ஏற்படுத்தத் தடுமாறுகிறார். பவர்பிளேவில் அவரால் அதிகமாக விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. அதேபோல், பார்ட்லெட் மற்றும் யான்சன் ஆகியோராலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை. அதனால், எதிரணிகள் இந்தக் கட்டத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

பஞ்சாப் கிங்ஸ் படகில் விழுந்த முதல் ஓட்டை... ஆனால், இது பெரிய ஓட்டை!

பட மூலாதாரம், ANI

ராயல்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில் பவர்பிளேவின் 4 ஓவர்களில் 15 ரன்களோ அதற்கு மேலோ விட்டுக்கொடுத்தனர் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள். அதன் காரணமாக, பவர்பிளேவில் பஞ்சாப் அடித்ததை விட 19 ரன்கள் கூடுதலாக அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அதுவே, அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் சரியான லென்த்தில் வீசாமல் பல்வேறு விஷயங்களை முயற்சி செய்வது இந்த ஏமாற்றமான செயல்பாட்டின் முக்கியக் காரணம் என்று நேற்றைய போட்டிக்குப் பிறகான இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் கூறினார் பியூஷ் சாவ்லா. அந்த நிகழ்ச்சியில் அதே கருத்தை முன்வைத்த அபினவ் முகுந்த், இந்த தோல்வி பஞ்சாப் கிங்ஸுக்கு நல்ல விஷயம் என்றும் கூறினார்.

“பஞ்சாப் பந்துவீச்சாளர்களிடம் சரியான திட்டமிடல் இல்லை. அவர்கள் என்னென்னமோ செய்துகொண்டிருந்தார்கள். பவுன்சர்கள், ஸ்லோ பவுன்சர்கள், யார்க்கர்கள் என்று மாற்றி மாற்றி வீசிக்கொண்டிருந்தார்கள். ‘பேக் ஆஃப் தி லென்த்’ வீசினால் பயங்கரமாக அடிக்கும் டானவன் ஃபெரீரா போன்ற ஒருவருக்கு அந்த லென்த்திலேயே பந்துவீசினார்கள்.” என்று கூறினார் அபினவ் முகுந்த்.

இது ஏன் பெரிய பிரச்னை?

கிரிக்கெட்டில் ஒரு கூற்று உள்ளது – பேட்டிங் போட்டிகளை வென்றுகொடுக்கும். பந்துவீச்சு தான் கோப்பைகளை வென்று கொடுக்கும். பலமான பந்துவீச்சு இருந்தால் மட்டும்தான் ஐபிஎல் போன்ற கோப்பைகளை வெல்ல முடியும். அதனால் தான் இப்போதும் கூட பல வல்லுநர்களும் கோப்பை வெல்லும் அணியாக பஞ்சாப் அணிக்குப் பதில் ஆர்சிபி-யை தேர்வு செய்கிறார்கள். ஏனெனில், பந்துவீச்சு பலமாக இருந்தால் மட்டுமே நாக் அவுட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு பற்றிப் பேசிய பியூஷ் சாவ்லா, “இது நிச்சயம் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அவர் புதிய பந்தில் நன்கு விக்கெட் எடுப்பார். ஆனால், இப்போது அது நடப்பதில்லை. பெரும்பாலான போட்டிகளில் அது நடக்கவில்லை. இதே மாதிரியான செயல்பாடு பிளே ஆஃப் போட்டியில் நடந்தால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

பஞ்சாப் கிங்ஸ் படகில் விழுந்த முதல் ஓட்டை... ஆனால், இது பெரிய ஓட்டை!

பட மூலாதாரம், ANI

இந்தக் கேள்வி தான் பெரும்பாலான வல்லுநர்களும் ரசிகர்களுமே எழுப்புவது. என்னதான் அந்த அணியின் பேட்டிங் மற்ற எதிரணிகளுக்கு எதிராக அதிசிறப்பாகச் செயல்பட்டாலும், அதுவுமே எல்லாப் போட்டிகளிலும் நடப்பது வாய்ப்பில்லாத விஷயம். நேற்று ஆர்ச்சர் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் பந்துவீசியதிலேயே அவர்களின் பவர்பிளே ரன்ரேட் வழக்கத்தை விட குறைவாக இருந்தது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இருபுறம் இருந்தும் பவர்பிளேவில் அட்டாக் செய்யும்போது அது பஞ்சாப் பேட்டர்களை நிலைகுலையச் செய்யலாம். அந்த நாள்களில் அவர்களைக் காப்பாற்றும் வகையில் பஞ்சாப் கிங்ஸின் பந்துவீச்சு இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

அந்த இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய அபினவ் முகுந்த், ஒருவகையில் இந்தத் தோல்வி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நல்லதுதான் என்று கூறினார். “பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்தத் தோல்வி நல்லதுதான் என்று நினைக்கிறேன். ஏனெனில், அவர்கள் தங்களின் பந்துவீச்சு பற்றி சரியாகத் திட்டமிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.” என்றார் அவர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களின் அடுத்த போட்டியில் மே 3-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக விளையாடுகிறது. பல போட்டிகளின் முடிவுகள் பவர்பிளேவால் தீர்மானமாகிக்கொண்டிருக்கும் நிலையில், சிராஜ் – ரபாடா ஸ்பெல்லுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான பேட்டிங்கும், அதற்கு இணையான பந்துவீச்சும் இருந்தால் பஞ்சாப் கிங்ஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU