Home தேசிய national tamil “மீறப்படும் ஈஸ்டர் சண்டை நிறுத்தம்” – ரஷ்யாவின் தாக்குதல் தொடர்வதாக குற்றம் சாட்டும் யுக்ரேன்

“மீறப்படும் ஈஸ்டர் சண்டை நிறுத்தம்” – ரஷ்யாவின் தாக்குதல் தொடர்வதாக குற்றம் சாட்டும் யுக்ரேன்

3
0

SOURCE :- BBC NEWS

யுக்ரேன் - ரஷ்யா போர்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யா போரை நிறுத்துவது போன்று தோற்றம் ஏற்படுத்திவிட்டு, ராணுவ நடவடிக்கையை இன்னமும் தொடர்வதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.

ஈஸ்டர் சண்டை நிறுத்தத்தின் முதல் 6 மணி நேரத்தில், 387 ஷெல் தாக்குதல்களும், ரஷ்யப்படைகளால் 19 நேரடி தாக்குதல்களும், 290 முறை டிரோன் வழித் தாக்குதலும் நடைபெற்றதாகவும், ஆனாலும் உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்ததாக அறிவிக்கப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை வரை “ஈஸ்டர் தினத்தையொட்டி தற்காலிக சண்டை நிறுத்தத்தை” முன்னிட்டு, யுக்ரேனில் “அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு” தன்னுடைய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

30 மணிநேர சண்டை நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 மணிவரை) (00:00 Moscow time) நீடிக்கும் என்றும் “எந்தவொரு சாத்தியமான மீறல்களுக்கும்” ரஷ்யப் படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, சண்டை நிறுத்தத்தை தாங்கள் கடைபிடிப்பதாகவும் ரஷ்யா அதை மீறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“முழுமையான மற்றும் நிபந்தனையற்ற அமைதி என்ற வியூகத்தைத் தழுவ ரஷ்யா திடீரென தயாராகிவிட்டது என்றால், யுக்ரேனும் அதற்கேற்ப செயல்படும், ரஷ்யாவின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும்,” என அவர் தெரிவித்தார்.

‘சண்டை தொடர்கிறது’

“எங்களின் நடவடிக்கைகள் சமமாகவே இருக்கும் . முன்மொழியப்பட்டுள்ள முழுமையான மற்றும் நிபந்தனையற்ற 30 நாள் அமைதி ஒப்பந்தம் இன்னும் விவாதத்தில் உள்ளது, அதற்கான பதில் ரஷ்யாவிடமிருந்து வர வேண்டும்,” என அவர் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.

ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பிராந்தியங்களில் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும் ரஷ்ய டிரோன்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், சில பகுதிகள் அமைதியாகியுள்ளன என குறிப்பிட்டார்.

ஏப்ரல் 20-ம் தேதியை தாண்டியும் சண்டை நிறுத்தத்துக்கு யுக்ரேன் தயாராக இருப்பதாக ஸெலன்ஸ்கி குறிப்பிட்டார். ஏற்கெனவே யுக்ரேனால் ஒப்புக்கொள்ளப்பட்ட, அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் சண்டை நிறுத்தத்தைதான் ஸெலன்ஸ்கி குறிப்பிடுவதாக தோன்றுகிறது.

வொலோடிமிர் ஸெலன்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images

புதின் மீது குற்றச்சாட்டு

புதினின் ஆரம்பகட்ட அறிவிப்பு குறித்து யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் ஆன்ட்ரி சிபிஹா தன் எக்ஸ் தளத்தில், “தான் சண்டை நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக புதின் தற்போது கருத்துகளை தெரிவித்துள்ளார். 30 நாட்களுக்கு பதிலாக, 30 மணிநேர சண்டை நிறுத்தத்தை அவர் அறிவித்துள்ளர்.” என பதிவிட்டுள்ளார்.

“துரதிருஷ்டவசமாக, அவருடைய கருத்துகளும் நடவடிக்கைகளும் வெவ்வேறாக இருந்ததற்கான நீண்ட வரலாறு உள்ளது. அவருடைய வார்த்தைகள் நம்பத்தகுந்தவை அல்ல என எங்களுக்குத் தெரியும், நாங்கள் நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோம், வார்த்தைகளை அல்ல,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராணுவ தலைமை தளபதி வலெரி கெராசிமோவ் உடனான சந்திப்புக்குப் பிறகு புதின் இந்த சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின்

பட மூலாதாரம், Reuters

“மனிதாபிமான எண்ணத்தின் அடிப்படையில் ஈஸ்டரை ஒட்டி, ரஷ்ய தரப்பிலிருந்து சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு உத்தரவிடுகிறேன்,” என கெரசிமோவிடம் புதின் கூறினார்.

“யுக்ரேனும் எங்கள் உதாரணத்தைப் பின்பற்றும் என நினைக்கிறோம். அதே சமயம், எந்தவொரு சாத்தியமான விதிமீறலுக்கும், எதிரிகளிடமிருந்து எந்தவொரு ஆக்ரோஷமான, தூண்டுதல் நடவடிக்கைகளுக்கும் எதிர்வினையாற்ற நமது படைகள் தயாராக இருக்க வேண்டும்.”

யுக்ரேன் சண்டை நிறுத்தத்தை “பரஸ்பரம் மதித்தால்” தங்களுடைய படைகள் இதனை பின்பற்றும் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திடீரென இத்தகைய சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படுவது இது முதன்முறையல்ல. (ஜூலியன் நாட்காட்டியை பின்பற்றி கொண்டாடப்படும்) ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை ஒட்டி, ஜனவரி, 2023ல் சண்டை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால், இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படாததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

புதினின் சண்டை நிறுத்த அறிவிப்பு குறித்து பேசிய பிரிட்டனின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர், “தன்னுடைய பயங்கரமான படையெடுப்பை முடிவுக்குக் கொண்டு வந்து, அமைதியை நிலைநாட்டுவதில் தான் தீவிரமாக இருக்கிறேன் என்பதை புதின் வெளிப்படுத்துவதற்கு இதுவே (சிறந்த) தருணம். ஈஸ்டர் பண்டிகையையொட்டி, ஒருநாள் சண்டை நிறுத்தம் மட்டுமல்லாமல், யுக்ரேன் அரசு கூறுவது போன்று முழு சண்டை நிறுத்தத்துக்கு அவர் உறுதி அளிக்க வேண்டும், ” என கூறினார்.

24, பிப்ரவரி 2022 அன்று, யுக்ரேன் மீது முழு வீச்சிலான படையெடுப்பை ரஷ்யா தொடங்கியது. இதில், இரு தரப்பிலிருந்தும் பல லட்சக்கணக்கானவர்கள் (இதில் பெரும்னாலானவர்கள் படையினர்) கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா கூறுவது என்ன?

போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்கா ரஷ்யாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது, ஆனால் அதில் பெரியளவிலான முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போராடி வருகிறது.

கடந்த மாதம், அமெரிக்கா மற்றும் யுக்ரேனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, முழுமையான மற்றும் நிபந்தனையற்ற சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்தது.

விரைவான முன்னேற்றம் இல்லையெனில், யுக்ரேனில் போரை நிறுத்துவதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் செய்வதிலிருந்து அமெரிக்கா “விலகிவிடும்” என, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மார்கோ ரூபியோ, “இதை (போரை) முடிவுக்குக் கொண்டு வருவதில் பல வாரங்கள் மற்றும் மாதங்களாக கடும் முயற்சியில் ஈடுபடுவதில் அமெரிக்கா தொடராது” என்றும் “அமெரிக்கா கவனம் செலுத்துவதற்கு மற்ற பல விஷயங்கள் உள்ளன” என கூறியதற்கு பின் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இதைச் செய்ய முடியுமா, முடியாதா என்பதை மிக விரைவாக நாம் தீர்மானிக்க வேண்டும். நான் சில நாட்களை பற்றி பேசுகிறேன்,” எனவும் அவர் தெரிவித்தார்.

“இது நடைபெறவில்லையென்றால், நாங்கள் அதை கடந்து சென்றுவிடுவோம்.” என்று ரூபியோ கூறினார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU