SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
பொதுவாகவே முதல் வாய்ப்பில் வெற்றி பெறுவது மட்டும் ஒருவரை நிரூபிக்கப் போதுமானதாக இருப்பதில்லை. முதல் வாய்ப்பில் பெறும் வெற்றியை விட இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமான ஒன்று. அப்போதுதான் அந்த முதல் வெற்றி அதிர்ஷ்டம் இல்லை என்றும், அவர் உண்மையிலேயே திறமைசாலி என்றும் ஏற்றுக்கொள்வார்கள்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு அப்படியொரு முக்கியமான சீசன் இது. கடந்த சீசனில் ஏழே போட்டிகளில் 252 ரன்கள் எடுத்து ஒரு மிகச் சிறந்த அறிமுகம் பெற்றார் அவர். தான் விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் பெற்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டுமின்றி, இந்திய தேசிய அணியின் எதிர்காலம் என்றும் பேசப்பட்டார்.
ஆனாலும் கூட, இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக அந்த வழக்கமான கேள்விகள் எழத் தொடங்கின. மிகப் பெரிய ஐபிஎல் தொடரில், உலகின் மிகச் சிறந்த பௌலர்களுக்கு எதிராக அவரால் சோபிக்க முடியுமா; இரண்டாவது சீசனிலும் அவரால் அதே தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்விகள் எழத் தொடங்கின.
இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இந்த சீசன் சூர்யவன்ஷிக்கு கடந்த சீசனைப் போல் இருக்காது என்று கூறியிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய உத்தப்பா, “சூர்யவன்ஷி அபாரமானவர். ஆனால் அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்கும்போது, அவருக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் சாதகமாக இருப்பதாக நான் உணர்கிறேன். ஆட்டத்தின் தரம் இன்னும் கொஞ்சம் உயரும்போது, சவால்கள் கடினமாகும்போதும், அவருக்கு எங்கே பந்து வீசவேண்டும் என்று இப்போது பௌலர்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் இருந்த அந்தப் புதுமை இப்போது குறைந்துவிட்டது. தற்போதைய நிலையில் அவர் அந்த அதிர்ஷ்டத்தை நம்பியே ஆடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன், அதில் தவறில்லை. இந்த சீசன் அவருக்கு ஒரு பாடமாக இருக்கும், அது நீண்ட காலத்திற்கு அவருக்கு உதவும். அவர் இன்னும் ரன்களைக் குவிப்பார், ஆனால் கடந்த ஆண்டைப் போல அவர் அவ்வளவு சிறப்பாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை,” என்று கூறினார்.
இது உத்தப்பா போன்ற பலரும் வெளிப்படுத்திய கருத்து தான். இரண்டாவது சீசன் அந்த இளம் வீரருக்குக் கடினமாக இருக்கும், ஒரு பாடமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
இந்த 2026 ஐபிஎல் சீசன் சூர்யவன்ஷிக்கு பாடமாக இருக்கலாம். ஆனால், அது நிச்சயம் கஷ்டமாகவோ, சவாலாகவோ இல்லை. அவர் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அவரை எப்படி வெளியேற்றுவது என்று பந்துவீச்சாளர்கள் பெரிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை.
மாறாக, இந்த 15 வயது சூறாவளிதான் ஐபிஎல்லின் ஜாம்பவான் அணிகளாக கருதப்படும் பெரிய பெரிய பௌலர்களையும் பந்தாடிக் கொண்டிருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
கவுஹாத்தியில் வைபவம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டாவது ஹோம் கிரவுண்டான கவுஹாத்தி பர்ஸபரா ஸ்டேடியம் அவர்களுக்கு உகந்ததாக இருந்ததில்லை. 2023 சீசன் முதல் இங்கு ஒருசில போட்டிகளை அந்த அணி ஆடிக்கொண்டிருக்கிறது. 2023 – 2025 சீசன்களில் விளையாடிய 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே அந்த அணி வென்றிருந்தது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்காமல் போக, மற்ற 3 போட்டிகளிலுமே அந்த அணி தோற்றிருந்தது.
ஆனால், இந்த சீசன் கவுஹாத்தியில் விளையாடிய 3 போட்டிகளிலுமே ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மூன்று பெரும் அணிகளை வீழ்த்தி… இந்த 3 போட்டிகளின் வெற்றிகளுக்கும் மிகமுக்கியக் காரணமாக இருந்தவர் வைபவ் சூர்யவன்ஷி தான்.
இந்த 3 போட்டிகளிலும் சேர்த்து 57 பந்துகள் சந்தித்த அவர் அடித்தது 169 ரன்கள். ஸ்டிரைக் ரேட் 296. இதில் 13 பவுண்டரிகளும், 17 சிக்சர்களும் அடக்கம். ஒவ்வொரு இரண்டு பந்துக்கும் ஒரு பவுண்டரியோ, சிக்ஸரோ அடித்திருக்கிறார் சூர்யவன்ஷி.
ஆமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் அவர் 18 பந்துகளில் 31 ரன்கள் விளாசியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
இரண்டாவது சீசனிலும் அதே வேகம்
மார்ச் 30 – இந்த சீசனில் முதல் முறையாகக் களமிறங்கினார் சூர்யவன்ஷி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான அந்தப் போட்டியின் முதல் பந்திலேயே அவர் ஒரு கேட்ச் வாய்ப்பை தந்தார். கடினமான அந்த வாய்ப்பை சிஎஸ்கே வீரர் பயன்படுத்திக் கொள்ளத் தவறினார். பந்தும் பவுண்டரிக்குப் போனது.
சீசன் தொடங்குவதற்கு முன்பிருந்த கேள்விகள் இந்தப் பந்துக்குப் பிறகு பன்மடங்கு அதிகரித்திருக்கும். மீண்டும் அதிர்ஷ்டம் பற்றிய பேச்சுகள் வலுத்திருக்கும். ஆனால், சூர்யவன்ஷி அதற்கெல்லாம் இடமே கொடுக்கவில்லை. சற்றும் அசராமல், எந்தவித நெருக்கடியையும் உணராமல் அடுத்த பந்திலேயே சிக்ஸர் விளாசினார்.
127 ரன்களை எப்படியாவது டிஃபண்ட் செய்யவேண்டும் என்ற கனவு கண்ட சூப்பர் கிங்ஸ் வீரர்களால், இந்த இளைஞனின் அதிரடிக்கு பதில் சொல்ல முடியவில்லை. பவர்பிளே முடிவதற்கு முன்னாலேயே அரைசதத்தை நிறைவு செய்தார் சூர்யவன்ஷி. அதுவும் வெறும் 15 பந்துகளில்.
எந்தவொரு பயமும் இல்லாமல், தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாமல், தன்னை நிரூபிக்கவேண்டும் என்ற நெருக்கடியையெல்லாம் ஏற்றிக்கொள்ளாமல் அதே பாணியில், அதே தைரியத்தோடு தான் இவர் விளையாடப்போகிறார் என்பதை இந்த இன்னிங்ஸ் உணர்த்தியது.
பட மூலாதாரம், Getty Images
பும்ராவுக்கும் அதே அணுகுமுறை தான்
ஏப்ரல் 7 – கவுஹாத்தியில் இரண்டாவது போட்டி. இம்முறை இன்னொரு 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக. மழையால் தாமதமாகத் தொடங்கிய போட்டி 11 ஓவர்கள் கொண்டதாகக் குறைக்கப்பட்டது. ஓவர்கள் குறைக்கப்பட்ட, மழைக்கு வாய்ப்புள்ள போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்வது இப்போதெல்லாம் கடினமான விஷயம். ஆனால், டாஸை இழந்த ராயல்ஸ் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்தப் போட்டிக்கு முன்பும் சூர்யவன்ஷி குறித்த பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஏனெனில், அவர் அதுவரை பும்ராவை எதிர்கொண்டிருக்கவில்லை. உலகின் மிகச் சிறந்த பௌலருக்கு எதிராக அவர் எப்படி செயல்படப் போகிறார், பும்ராவை சமாளிப்பாரா என்றெல்லாம் நிறைய கேள்விகள் இருந்தன. ஆனால், பும்ரா தனக்கு வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார் சூர்யவன்ஷி.
மிகச் சிறந்த நியூ பால் பௌலர்களுள் ஒருவராகக் கருதப்படும் டிரென்ட் போல்ட்டுக்கும் அதே நிலை தான். முதல் பந்திலேயே சிக்ஸர்.
14 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவர் வெளியேறியபோது அணியின் ஸ்கோர் 80/1. ஆனால், அப்போது முடிந்திருந்தது என்னவோ 5 ஓவர்கள் தான். யஷஷ்வி ஜெய்ஸ்வால் உடன் இணைந்து ஒரு மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி அந்த ஆரம்ப ஓவர்களிலேயே மும்பை இந்தியன்ஸுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார் சூர்யவன்ஷி.
அவ்விரு இளைஞர்களின் அதிரடி ஆட்டத்தால் 11 ஓவர்களில் அந்த அணி 150 ரன்கள் விளாச, அந்த பெரிய ஸ்கோர் ஏற்படுத்திய நெருக்கடியிலேயே விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது மும்பை இந்தியன்ஸ்.
சூர்யவன்ஷி வெறுமனே எல்லா பந்துகளிலும் சிக்ஸர் அடிக்க நினைப்பதில்லை. எல்லா பந்துகளுக்கும் பேட்டை சுற்றுவதில்லை. தனக்கு ஏற்ற இடத்தில் பந்து வந்துவிட்டால் யோசிக்காமல் அடித்துவிடுகிறார். கடினமான பந்தாக இருந்தால் யோசித்து ஆடுகிறார். உதாரணம், பும்ராவுக்கு எதிராக அவர் சந்தித்த அந்த முதல் ஓவர்.
அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷி, அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார். நான்காவது பந்தில் மீண்டும் ஸ்டிரைக்குக்கு வந்தவர் இன்னொரு சிக்ஸர் விளாசினார். ஆனால், அடுத்த இரண்டு பந்துகளிலும் அவர் ஆடிய விதம் வேறு. அந்த இரண்டு பந்துகளையுமே லெக் சைட் ஃபுல் டாஸாக வீசினார் பும்ரா. அதுவும் ஸ்லோயர் ஃபுல் டாஸாக. பும்ராவின் ஃபுல் டாஸ்கள் மற்ற பௌலர்களின் ஃபுல் டாஸ்கள் போல் அல்ல. அதிகம் விக்கெட்டுகளை பும்ராவுக்கு பெற்றுத் தந்த ஆபத்தான பந்துகள். அந்த 15 வயது இளைஞர் அதை சரியாகக் கணித்து அந்த இரண்டு பந்துகளிலுமே டிஃபண்ட் செய்தே ஆடினார்.
பட மூலாதாரம், Getty Images
மீண்டும் 15 பந்துகளில் அரைசதம்
ஏப்ரல் 10ஆம் தேதி, சொந்த மைதானம் அல்லாத பிற இடங்களில் தொடர்ந்து 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான போட்டி. 202 என்ற இலக்கை எதிர்நோக்கி விளையாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
பும்ராவுக்கு எதிராக இருந்தது போன்ற எதிர்பார்ப்பு இம்முறையும் ஏற்பட்டது. ஏனெனில், கடந்த ஐபிஎல் சீசனின் மிகச் சிறந்த பௌலர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட ஜாஷ் ஹேசில்வுட்டை சந்தித்தார் சூர்யவன்ஷி. இம்முறையும் வழக்கமாக நடந்த அதே விஷயம் தான். முதல் பந்திலேயே சிக்ஸர்.
புவனேஷ்வர் குமார், குருனால் பாண்டியா, டிம் டேவிட் என அனைவரின் பந்துவீச்சையும் அடித்து நொறுக்கி மறுபடியும் 15 பந்துகளிலேயே அரைசதம் அடித்தார் சூர்யவன்ஷி.
அவரது அதிரடியின் காரணமாக பவர்பிளேவில் 97 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல் வரலாற்றில் ராயல்ஸ் அணியின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் இதுதான். அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது 15 வயது இளைஞன்.
15 பந்துகளில் ஐபிஎல் தொடரில் அரைசதம் அடிப்பது அனைவராலும் சாத்தியப்படாத ஒன்று. அதிலும் இவர் 15 வயதில் செய்திருக்கிறார். 12 நாள் இடைவெளியில் இரண்டு முறை செய்திருக்கிறார்!
பட மூலாதாரம், Getty Images
தன் ஆட்டத்தில் தெளிவு கொண்டிருக்கும், தைரியமாக பெரிய பௌலர்களை சந்திக்கும் சூர்யவன்ஷி, தன் ஆட்டத்தின் மீது பெரும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, “நான் இன்னும் சற்று நேரம் விளையாடியிருந்தால் அணியின் ஸ்கோர் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்” என்றார். ஆர்சிபி போட்டிக்குப் பிறகு, “நான் கடைசி வரை களத்தில் நின்றால் போட்டியை சீக்கிரமாக முடித்துக் கொடுத்திருக்க முடியும்” என்கிறார்.
இந்த வயதிலேயே தன்னால் அணியில் பெரும் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் அவரது அதிரடிக்கு அச்சாணியாக இருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



