Home தேசிய national tamil மில்லரின் ‘மில்லியன் டாலர்’ தவறு! – ஒரு ரன்னில் வெற்றியை தவறவிட்ட டெல்லி

மில்லரின் ‘மில்லியன் டாலர்’ தவறு! – ஒரு ரன்னில் வெற்றியை தவறவிட்ட டெல்லி

9
0

SOURCE :- BBC NEWS

ஐ.பி.எல், டெல்லி, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

ஒருபுறம் டாப் ஆர்டர் பேட்டிங்கை மட்டுமே நம்பியிருக்கும் குஜராத் டைட்டன்ஸ், மறுபுறம் டாப் ஆர்டர் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் டெல்லி கேப்பிடல்ஸ்… இந்த இரண்டு அணிகளுக்குமான பலப்பரீட்சை நேற்று நடைபெற்றது.

கடந்த இரண்டு நாட்களைப் போலவே நேற்றைய ஆட்டத்திலும் மழை குறுக்கிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மழை பெய்யாத நிலையில் டாஸ் போட குஜராத் கேப்டன் சுப்மன் கில்லும் டெல்லி கேப்டன் அக்ஷர் படேலும் ஆஜரானார்கள்.

முதல் இரண்டு போட்டிகளிலும் சேஸிங் செய்து வென்றிருப்பதால் நேற்றும் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார் அக்ஷர். டெல்லி அணியில் எந்த மாற்றமுமில்லை. குஜராத் அணியில் கில் உள்ளே வந்திருப்பதால் குமார் குஷாக்ரா அணியில் இட்ம்பெறவில்லை.

முகேஷின் முதல் ஓவரில் முதல் பந்தையே டீப் மிட்விக்கெட் பக்கம் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார் சாய் சுதர்ஷன். அதே ஓவரில் தன் பங்கிற்கு டீப் பாயிண்ட் பக்கம் ஒரு பவுண்டரி தொட்டுவிட்டார் கில். அதிரடி ஆட்டமாக மாறிவிட்ட டி20 லீக்குகளில் டெக்ஸ்ட் புக் ரக ஷாட்களை துல்லியமாக அடிக்கும் பேட்ஸ்மேன்கள் அரிதாகிக்கொண்டே வருகிறார்கள். கில்லும் சுதர்ஷனும் அந்த அரியவகையைச் சேர்ந்தவர்கள்.

பழிக்குப் பழியாக தன் அடுத்த ஓவரில் நல்ல லென்த் பால் வீசி சாய் சுதர்ஷனை அவுட்டாக்கினார் முகேஷ் குமார். அவர் இந்த தொடரில் வீழ்த்தும் மூன்றாவது விக்கெட் இது. சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் அவர் மொத்தமே ஒரு விக்கெட்தான் வீழ்த்தியிருந்தார். அடுத்து ஜாஸ் பட்லர் களமிறங்கினார்.

இன்னும் ஒரு விக்கெட் போனாலும் அனுபவம் குறைந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தலையில் ஸ்கோர் ஏற்றும் பெரும்சுமை விழும்.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் சிக்ஸர்களை பறக்கவிடுவதில் மட்டுமே குறியாக இருந்தார் பட்லர். அவர் சந்தித்த முதல் 15 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் அடித்தார். 24 பந்துகளில் அரைசதம் கடந்து அவர் அவுட்டாக நான்காவது பேட்ஸ்மேனாக வாஷிங்டன் சுந்தர் வந்தார்.

கடந்த சீசனில் குஜராத் அணிக்காக நான்காவது இடத்தில் களமிறங்கிய மேற்கிந்திய வீரரான ரூதர்போர்ட். ஆறு போட்டிகளில் ஆடி 152 ஸ்ட்ரைக் ரேட்டில் 185 ரன்கள் அடித்தார். ஆனால் கடந்த ஏலத்திற்கு முன்னதாக அவரை மும்பை அணிக்கு கைமாற்றிவிட்டது குஜராத் டைட்டன்ஸ். முன்பு ஹர்திக் பாண்ட்யா, இப்போது ரூதர்போர்ட். தொடர்ச்சியாக இப்படி நல்ல வீரர்களை குஜராத் அணி நிர்வாகம் மும்பைக்கு தாரை வார்ப்பது ஏன் என அப்போதே கேள்விகள் எழுந்தன.

ஐ.பி.எல், டெல்லி, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், ‘குஜராத் அணி நிர்வாகமும் கோச் நெஹ்ராவும் வாஷிங்டன் சுந்தர் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவரை நான்காவது பேட்ஸ்மேனாக களமிறக்கி போதுமான வாய்ப்புகளை வழங்கவே இந்த முடிவு’ என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் ஹர்ஷா போக்லே. அதை உண்மையாக்கும் விதமாக நேற்று ஒரு அதிரடி ஆட்டம் ஆடினார் வாஷிங்டன் சுந்தர்.

ஒருமுனையில் கில் நிதானமாக ஆட, சுந்தரின் ஸ்ட்ரைக் ரேட்டோ 170-க்கு குறையவில்லை. 50 ரன்களைக் கடந்தபின் கில் வேகம் கூட்டி அவுட்டாக, மறுமுனையில் சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார் சுந்தர். இது அவரது முதல் ஐ.பி.எல் அரைசதம். 2017-இல் இருந்து ஐ.பி.எல் ஆடிவந்தாலும் இதுவரை எந்த சீசனிலும் 100 பந்துகள் கூட முழுமையாக ஆடியதில்லை சுந்தர்.

பெரும்பாலும் ஆறாவது, ஏழாவது வீரராகவே அவர் களமிறக்கப்பட்டதால் உருவான சிக்கல் இது. இந்தமுறை தொடர்ந்து நான்காவது வீரராக அவர் களமிறங்கும்பட்சத்தில் இன்னும் சில அரைசதங்கள் அவர் பேட்டிலிருந்து வரக்கூடும்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணியின் ஸ்கோர் 210/4. டெல்லி அணி இதை சேஸ் செய்திருந்தால் ஐ.பி.எல் தொடரில் அவர்களின் இரண்டாவது அதிகபட்ச சேஸிங் இதுவாகவே இருந்திருக்கும். ஆனால் மில்லர் தன் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத ஒரு தவறைச் செய்ததால் அந்த சேஸிங் கனவு நிராசையாகிப் போனது.

ராகுலின் ரீ – என்ட்ரி:

ஐ.பி.எல், டெல்லி, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

2020-21-இல் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார் கே.எல்.ராகுல். பின் அணி நிர்வாகத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து விலகி 2022-இல் லக்னோ அணியின் கேப்டன் ஆனார். 2024-இல் அங்கிருந்து விலகிய நிலையில் 2025-இல் டெல்லி அணியில் இடம்பெற்றார். இப்படி கேப்டனாக கே.எல் ராகுலின் ஐ.பி.எல் பயணத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பேட்ஸ்மேனாக எந்த சீசனிலும் குறை வைத்ததில்லை. 500 ரன்களுக்கு குறையாமல் ஒவ்வொரு சீஸனிலும் தன் திறமையை நிரூபிக்கிறார்.

இந்தமுறையும் அவர்மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதல் இரண்டு ஆட்டங்களில் முறையே 0, 1 என ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் அவர் நின்று ஆடினால் மட்டுமே இலக்கை எட்டிப்பிடிக்க முடியும் என்கிற நிலை. பவுண்டரி அடித்து தன் ரன் கணக்கைத் தொடங்கினார். மறுமுனையில் நிசாங்காவும் அதிரடி காட்ட, மளமளவென குவிந்தன ரன்கள். பவர்ப்ளேயின் இறுதி ஓவரில் மட்டும் 23 ரன்கள். ஸ்கோர் 63/0.

ரன்ரேட்டைக் கட்டுப்படுத்த ரஷித்தை கொண்டுவந்தார் கில். அந்த ஓவரில் வெறும் 8 ரன்கள். அந்த ஓவரில் ஏற்பட்ட ரன்ரேட் நெருக்கடி காரணமாக பிரஷித் வீசிய அடுத்த ஓவரில் பவுண்டரி அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார் நிசாங்கா. அடுத்த ஓவரிலேயே நிதிஷ் ராணா, கடந்த இரண்டு ஆட்டங்களில் டெல்லியை கரை சேர்த்த சமீர் ரிஸ்வி இருவரும் அடுத்தடுத்து வெளியேற டெல்லிக்கு நெருக்கடி முற்றியது.

மில்லருக்கு வந்த சோதனை

ஆனால் இது எந்தவகையிலும் தன்னை பாதிக்காதவாறு சீரான இடைவெளியில் பவுண்டரி அடித்து இலக்கை எட்டும் தூரத்திலேயே வைத்திருந்தார் ராகுல். 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஐ.பி.எல்லில் அவர் அடிக்கும் 41வது அரைசதம் இது. ஐந்தாவதாக களமிறங்கிய மில்லருக்கு பந்தைக் கணிப்பதில் சிரமம் இருந்தது. பீல்டிங் செய்தபோது கையில் ஏற்பட்ட காயத்தினால் நிகழ்ந்த தடுமாற்றம் இது. வேறுவழியே இல்லாமல் 12 பந்துகளை சந்தித்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் என பெவிலியன் திரும்பினார் மில்லர். அதன்பின் வந்த அக்ஷரும் வந்தவேகத்தில் அவுட். ஸ்கோர் 14 ஓவர்களில் 134/4. ஆறு ஓவர்களில் 77 ரன்கள் தேவை.

ராகுலை அவுட்டாக்கினால் மட்டுமே குஜராத் மேட்ச்சை வெல்லமுடியும் என்கிற நிலை. சிராஜின் டெத் ஓவர் எகானமி மிக மிக அதிகம் எனத் தெரிந்தும் அவரை பந்துவீச அழைத்துவந்தார் கில். சிராஜும் அசராமல் வைட் யார்க்கர்களை போட மீண்டும் மீண்டும் முயன்றார். இந்த வைட் யார்க்கர்கள் மிக சிக்கலானவை. கொஞ்சம் தவறினாலும் ஃபுல் டாஸாகவோ ஸ்லாட்டிலோ விழுந்து பேட்ஸ்மேன்கள் அடிக்க ஏதுவாய் அமைந்துவிடும். இல்லையெனில் வைட் எக்ஸ்டரா ஆகிவிடும். ஆனால் சிராஜ் எடுத்த ரிஸ்க்கிற்கு பலன் கிடைத்தது. வைட் கோட்டிற்கு அருகே விழுந்த பந்தை கவர் பக்கம் அடிக்க முயன்று பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ராகுல்.

இப்போது மீண்டும் மில்லர் இறங்கியே ஆகவேண்டிய நிலை. இறங்கிய வேகத்தில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் மில்லர். 18வது ஓவர் வரை டெல்லி அடித்திருந்த மொத்த சிக்ஸர்கள் ஐந்து. அடுத்த இரண்டு ஓவர்களில் மில்லர் மட்டுமே மூன்று சிக்ஸர்கள் அடித்து டெல்லியை வெற்றிக்கோட்டிற்கு அருகே அழைத்து வந்தார்.

பிரச்னைகளைப் பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

கடைசி இரண்டு பந்துகளில் தேவையாய் இருந்தது இரண்டே ரன்கள். 19.5வது பந்தை டீப் ஸ்கொயர் லெக் பக்கம் தட்டிவிட்டார் மில்லர். அப்போதே ஒரு ரன் எடுத்திருந்தால் ஆட்டம் சமமாகி இருக்கும். இறுதிப்பந்தில் ரன் எடுக்க முடியாமல் போனாலும் சூப்பர் ஓவர் என்கிற இரண்டாம் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.

ஆனால் ஏனோ சிங்கிள் ஓட மறுத்து குல்தீப்பை திருப்பி அனுப்பினார் மில்லர். இப்போது ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவை. பிரஷித் வீசிய ஸ்லோ ஷார்ட் பாலை தொட முடியாமல் மில்லர் பை ரன்னுக்காக ஓட கீப்பர் பட்லர் சரியாக ஸ்டம்ப்பை குறிபார்த்து எறிந்து குல்தீப்பை ரன் அவுட் செய்தார். ஒருநிமிடம் என்ன நடந்தது என களத்தில் இருந்தவர்களுக்கும் சரி, வீட்டில் இருந்தபடி பார்த்தவர்களுக்கு சரி புரியவே இல்லை. ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி என அறிவிக்கப்பட்டது.

‘Cricket is a cruel game’ என்பார் மறைந்த முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஹேன்சி க்ரோனியே. இரண்டாம் வாய்ப்பிற்காக ஏங்கி வலி தாளாமல் அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை. உண்மையில் கிரிக்கெட்டில் இரண்டாம் வாய்ப்புகள் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அதுவும் முற்றிலும் வணிகமயமாகிவிட்ட டி20 லீக்குகளில் இரண்டாம் வாய்ப்புக்கான அவகாசமே அமைவதில்லை. அப்படியிருக்கையில் மில்லரின் சிங்கிள் எடுக்க வேண்டாம் என்கிற அந்த முடிவு மில்லியன் டாலர் தவறு.

‘1986-இல் ரவி சாஸ்திரி எடுத்த ஒரு சிங்கிளால் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியை டிரா செய்தது. சில சமயங்களில் வெற்றி பெறுவதைவிட தோல்வியடையாமல் இருப்பதே முக்கியம்’ என இந்த ஆட்டத்திற்கு பின்னர் நடந்த ஜியோ ஹாட்ஸ்டார் ஷோவில் சொன்னார் கவாஸ்கர். ஒருவேளை மில்லரும் இதே மனநிலையில் இருந்திருந்தால் இப்போது டெல்லி அணி இரண்டு புள்ளிகளை தன் வசப்படுத்தியிருக்கக்கூடும்.

ரஷித் கானின் எழுச்சி

ஐ.பி.எல், டெல்லி, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

கடைசி ஓவர் த்ரில்லரான இந்த ஆட்டத்தின் நாயகன் ரஷித் கான். கிரிக்கெட்டைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும் 2023 வரை இருந்த ரஷித் கான் வேறு. அதன்பின் ஆடிய ரஷித் கான் வேறு என. 2023-ன் இறுதியில் முதுகில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக அவரால் பழைய பவுலிங் ஆக்ஷனில் பந்துவீச முடியவில்லை. வேகமாகவும் துல்லியமாகவும் வந்து இறங்கும் கூக்ளிக்களே ரஷித்தின் பிரதான ஆயுதம். ஆனால் அறுவை சிகிச்சையின் பக்கவிளைவுகள் அவரின் வேகத்தை மட்டுப்படுத்தியது. துல்லியம் தவறியது.

2023 ஐ.பி.எல்லில் 27 விக்கெட்கள் வீழ்த்திய ரஷித் அதன்பின் நடந்த இரு சீசன்களில் 27 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்கள் மட்டுமே எடுத்தார். இந்தக் காலகட்டத்தில் அவரின் எகானாமியும் ஒன்பதைத் தாண்டியது. எஸ்ஏ20, ஐ.எல்.டி20 என மற்ற லீக்களிலும் இதே நிலை தான். கொஞ்சம் கொஞ்சமாக தன் வேகத்தை மீட்டெடுத்த அவர், சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் தன் பழைய ஃபார்மை கொஞ்சமாக கண்ணில் காட்டினார். இதோ இன்று நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்திருக்கிறார்.

“Form is temporary, class is permanent” எனும் கூற்று ரஷித் கானுக்கு மிகப் பொருத்தம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU