SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், UGC
இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து மத்திய கிழக்கில் வசிக்கும் தமிழர்களுக்கு நாடு திரும்புவது என்பது சவாலான ஒன்றாக மாறிப்போனது.
குறிப்பாக மீன்பிடி தொழிலில் ஈடுபட தமிழ்நாட்டிலிருந்து இரான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற மீனவர்கள் சொந்த ஊருக்கு உடனடியாக திரும்ப முடியாமல் தவித்துவந்தனர்.
இந்த நிலையில் அவர்களை மீட்டுக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளால் தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டன.
அதில் ஒரு தரப்பினர் தற்போது இந்தியாவுக்கு திரும்பி சொந்த ஊர்களை அடைந்துள்ள நிலையில் ஒரு தரப்பினர் தற்போது சொந்த ஊருக்குத் திரும்ப காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது சுமார் 300-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்குத் திரும்ப தயாராக இருப்பதாகக் கூறுகிறார் இரானில் வேலை பார்த்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவரான விவேக்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ராஜக்கமங்கலம் என்கிற மீனவ கிராமத்தைச் சேர்ந்தவரான விவேக் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரான் சென்றிருந்தார்.
சவாலான சூழலிலும் தாக்குப்பிடித்ததாகக் கூறும் அவர் தற்போது அர்மேனியா நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சொந்த ஊருக்குத் திரும்ப காத்துக் கொண்டிருக்கிறார்.
இரானுடன் இரண்டு வாரகால போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் அங்கு சூழ்நிலை மெல்ல சீரடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் பதற்றங்கள் தணிந்தாலும் மீண்டும் அங்கு வேலைக்குச் செல்லும் எண்ணம் இல்லை என்கிறார் விவேக்.
கடந்த ஒரு மாத காலம் உயிர்ப்பயத்தைக் காண்பித்ததாக கூறும் அவர், மீனவர்களின் மனநிலை மாறிவிட்டதாகத் தெரிவிக்கிறார்.
“சொந்த ஊரில் போதிய வருமானம் இல்லை என்பதால்தான் இரான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு நாங்கள் வருகிறோம். நான் முதல் முறையாக ஆறு மாதங்களுக்கு முன்புதான் வந்தேன். இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா எனக் குடும்பத்தினர் தயங்கினர். ஆனால் வாழ்வாதாரத்திற்கான கட்டாயம் செல்ல வைத்தது. தொடக்கத்தில் நன்றாகத்தான் சென்றது,” என்றார் விவேக். .
விவேக் மற்றும் அவர் ஊரைச் சேர்ந்தவர்களின் இரானின் பந்தர் அப்பாஸ் நகரில் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களைப் போலவே தமிழ்நாட்டின் பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இரானில் மீன்பிடி வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழ்நாட்டில் காட்டிலும் இங்கு ஒரு நிலையான வருமானம் கிடைக்கும் என்கிறார் விவேக்.
மேலும் விவரித்த அவர், “படகின் உரிமையாளர்கள்தான் மீனவர்களைப் பணியமர்த்துகிறார்கள். ஒரு முறை கடலுக்குச் சென்றால் 3,4 நாட்கள் தொடங்கி 1 வாரத்துக்கும் மேல் கூட ஆகும். பிடித்த மீன்களை விற்றுவிட்டு திரும்புவோம்.
படகு உரிமையாளருடையது, மீன்பிடி சாதனங்கள் அனைத்தையும் நாங்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். செலவினங்கள் போக வருகின்ற லாபத்தில் பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
போர் தொடங்கியபோது நிலவிய சூழலை விவரிக்கையில், “தொடக்கத்தில் நாங்கள் துறைமுகத்தின் அருகிலே தங்கி இருந்தோம். ஆனால் தாக்குதல் தீவிரமானதால் படகுகளை எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்றோம், ஏனென்றால் அதுதான் பாதுகாப்பாக இருந்தது. நாங்கள் இருந்த இடத்திலிருந்து அருகிலேயே வெடிப்புச் சத்தம் கேட்டது. கடலில் இருந்த நாட்களில் கடுமையான உணவுப் பற்றாக்குறை இருந்தது. ஒருவேளை உணவு சாப்பிடும் சூழல் வந்தது. உணவுப் பொருட்கள் தீர்ந்துபோகவே மீண்டும் கரைக்குத் திரும்பினோம்.” எனத் தெரிவித்தார்.

படகின் உரிமையாளர் மற்றும் உள்ளூர் மக்கள் பெரிதும் உதவியதாக விவேக் குறிப்பிடுகிறார்.
“கரைக்குத் திரும்பிய பிறகு உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் தொலைதொடர்பு வெகுவாக பாதிக்கப்பட்டது. படகின் உரிமையாளர்தான் தூதரகத்தை தொடர்புகொள்ள எங்களுக்கு உதவினார். தூதரகத்தின் சார்பில் பேருந்து ஏற்பாடு செய்து எங்களை எல்லைக்கு அழைத்துச் சென்றனர்.”
தற்போது அர்மேனியா நாட்டில் தங்கியிருக்கும் விவேக் தன்னுடன் சுமார் 130 பேர் இருப்பதாக கூறுகிறார்.
“இரான் எல்லையை அடைந்த பிறகு அஜர்பைஜான் வழியாக அர்மேனியா வந்தடைந்தோம். புதிதாக எங்களுக்கு விசா வழங்கப்பட்டது. ஒரு விடுதியில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இங்கு வைஃபை வசதி உள்ளது. இங்கு வந்த பிறகுதான் குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடிகிறது. இரானைவிட்டு வெளியேறும் பயணம் சுமூகமாகவே இருந்தது.” என்றார்.

தற்போது இருப்பவர்கள் மேலும் 160-க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்படுவதாக தூதரக அதிகாரிகள் தங்களிடம் கூறினர் என்கிறார் விவேக்.
“இங்கு உணவுக்கு பிரச்னை இல்லையென்றாலும் இங்குள்ள வானிலை மற்றும் உணவு பலருக்கும் ஒத்துப்போகவில்லை. பலரும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போது திரும்புவோம் என்பது பற்றி எதுவும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. அடுத்த குழுவினரும் வந்த பிறகுதான் புறப்படுவதற்கான ஏற்பாடு பற்றி தகவல் கிடைக்கும் என நினைக்கிறேன். அதை எதிர்நோக்கி மட்டுமே இருக்கிறோம்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரானில் நிலைமை சீரானாலும் திரும்பி வரும் எண்ணம் இல்லை என்கிறார் விவேக்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஒரு மாத காலம் நரக வேதனையாக தான் இருந்தது. இந்த அச்சத்தில் வாழ்வதைவிட குறைந்த வருமானம் என்றாலும் சொந்த ஊரில் பிழைத்துக் கொள்வதே சிறந்தது.” என்று கூறி முடித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



