Home தேசிய national tamil புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

7
0

SOURCE :- BBC NEWS

டி20 உலகக்கோப்பை, புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மேத்யூ ஹென்றி
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 9 பிப்ரவரி 2026, 02:35 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) அதிகாரிகள் சந்தித்தனர். அவர்கள், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது தொடர்பாக விவாதித்தனர்.

லாகூரில் ஐசிசி துணை தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் செயற்குழு உறுப்பினர் முபாஷர் உஸ்மானி இருவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வியை சந்தித்தனர். வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாமும் இந்த சந்திப்பில் உடனிருந்தார். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, பாகிஸ்தான் வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி சல்மான் நசீர் வரவேற்றதாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிசிபி தெரிவித்திருந்தது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், “ஐசிசி துணை தலைவர் இம்ரான் கவாஜாவை லாகூர் விமான நிலையத்தில் பிசிபி தலைவரின் ஆலோசகர் அமீர் மிர் வரவேற்றார்.” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிவிட்டிருந்தது.

டி20 உலகக்கோப்பையில் தங்கள் அணியின் பாதுகாப்பு கருதி தாங்கள் விளையாடும் போட்டிகள் இந்தியாவுக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. அவர்களின் கோரிக்கை ஐசிசியால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியை தங்கள் அணி புறக்கணிக்கும் என, பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாஃபாஸ் ஷெரீஃப், வங்கதேசத்தை “ஆதரிப்பதற்காக” இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி அப்போட்டியை புறக்கணித்தால், அந்த அணி புள்ளிகளை இழக்க வேண்டியிருக்கும்.

அத்துடன், ஐசிசியின் தற்போதைய உரிம ஒப்பந்தங்கள் குறித்த சர்ச்சைக்கும் அது வழிவகுக்கும். தற்போதைய தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் 2027 உலகக் கோப்பைக்குப் பிறகு காலாவதியாவதால், தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை எதிர்கால ஒப்பந்தங்களைப் பாதிக்கலாம்.

டி20 உலகக்கோப்பை, புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், X/PCB

என்ன சர்ச்சை?

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக முடிவெடுத்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி எச்சரித்திருந்தது.

‘சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை பிசிபி கண்டறிய வேண்டும் என எதிர்பார்ப்பதாக’ ஐசிசி தெரிவித்திருந்தது.

‘பாகிஸ்தானின் முடிவு ‘பெரும் விளைவுகளை’ ஏற்படுத்தும் எனவும் ஐசிசி தெரிவித்திருந்தது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கியது. இந்த தொடர் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கால அட்டவணைப்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற வேண்டும்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி பாகிஸ்தான் அரசாங்கம் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்துகொள்ளாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

டி20 உலகக்கோப்பை, புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Screen Grab

எனினும், இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்பதை பாகிஸ்தான் அரசு கூறவில்லை.

டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்ததில் இருந்து இந்த சர்ச்சை தொடங்கியது. இதையடுத்து, வங்கதேச அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியை இத்தொடரில் ஐசிசி சேர்த்தது.

இந்த விவகாரத்தில் வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்தது. “பாதுகாப்பு காரணங்களுக்காக எந்தவொரு அணியும் எந்தவொரு நாட்டிலும் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவிக்கலாம் என்றால், அந்த உரிமை வங்கதேசத்திற்கும் இருக்க வேண்டும்.” என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

கடந்தாண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட்அணி மறுப்பு தெரிவித்தது, இதையடுத்து இந்திய அணியின் போட்டிகள் துபையில் நடைபெற்றன. இதைத்தான் பாகிஸ்தான் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தது.

ஐசிசி கூறியது என்ன?

டி20 உலகக்கோப்பை, புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்ட சில மணிநேரத்திலேயே, ஐசிசி இதுதொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில், பிசிபியிடமிருந்து தங்களுக்கு எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் கிடைக்கப் பெறவில்லை என்றும், பாகிஸ்தானின் முடிவு உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில், “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது தொடர்பாக தங்கள் அணிக்கு உத்தரவிட்டுள்ள பாகிஸ்தான் அரசின் முடிவை ஐசிசி கருத்தில் கொண்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பிசிபியிடமிருந்து ஐசிசிக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கப் பெறவில்லை. குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்ற அணுகுமுறை உலகளாவிய நிகழ்வின் விளையாட்டு உணர்வுக்கு முரணானது, தகுதி பெறும் அனைத்து அணிகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட போட்டி அட்டவணைப்படி விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விளையாட்டு ஒருமைப்பாடு, போட்டி, நிலைத்தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஐசிசி கிரிக்கெட் தொடர்கள் அமைந்துள்ளன. குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் பங்கேற்பது என்பது விளையாட்டு உணர்வு மற்றும் இத்தொடர்கள் மீதான நம்பிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக அமையும்.” என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை, புறக்கணிப்பு முடிவை கைவிட்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுமா? ஐசிசி பேச்சுவார்த்தை

“தேசிய கொள்கை தொடர்பான விவகாரங்களில் அரசாங்கங்களின் பங்கை ஐசிசி மதிக்கும் அதே வேளையில், இந்த முடிவு உலகளாவிய கிரிக்கெட் அல்லது பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் நலன்களுக்கு ஏற்றதாக இல்லை.”

“இந்த முடிவின் தீவிரமான மற்றும் நீண்டகால தாக்கங்களை பிசிபி பரிசீலிக்கும் என்று ஐசிசி எதிர்பார்க்கிறது, ஏனெனில் இது பிசிபி உறுப்பினராகவும் பயனாளியாகவும் இருக்கும் உலகளாவிய கிரிக்கெட் கட்டமைப்பை பாதிக்கலாம்.” என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நியாயமான தீர்வு கண்டறியப்படும் என தெரிவித்துள்ள ஐசிசி, “ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஐசிசியின் முன்னுரிமை. இந்த பொறுப்பு பிசிபி உட்பட அனைத்து உறுப்பினர் வாரியங்களுக்கும் உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை பிசிபி கண்டறியும் என ஐசிசி நம்புகிறது.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU